நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

நாணயம் லைப்ரரி : தொழிலதிபர் கனவுகள்... மாயத் தோற்றங்களும் நிஜ பின்னணிகளும்!

நாணயம் லைப்ரரி : தொழிலதிபர் கனவுகள்... மாயத் தோற்றங்களும் நிஜ பின்னணிகளும்!

 இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது பமேலா ஸ்லிம் எழுதிய ‘எஸ்கேப் ஃப்ரம் கியூபிக்கிள் நேஷன்’ என்னும் புத்தகத்தை. இணையத்தில் தொழில் முனைவோர் குறித்த எக்கச்சக்கமான விளம்பரங்கள் இருக்கின்றன.  உதாரணத்துக்கு, சில சாம்பிள்கள்.

நானும் கஷ்டப்பட்டு கரடுமுரடான ஒரு அதிகாரி யிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். வேலையை விட்டேன். இதோ என் போட்டோ. ஜாலியாய் என் சொகுசுக் கப்பலில் நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கும்போது எடுக்கப்பட்டது என்று சொல்கிறது ஒன்று.

மற்றொன்றோ, நான் ஒரு ஃபைலிங் கிளார்க்காக இருந்தேன். 399 டாலர் செலவு செய்து தொழில்முனைவோருக்கான பன்னிரண்டு பயிற்சி சிடிக்களை வாங்கினேன். இப்போது பாருங்கள், என் நகத்துக்கு நெய்ல் பாலிஷ் போட ஓர் ஆளை வேலைக்கு வைத்திருக்கிறேன். இப்பத்தான் என்னோட முன்னாள் மேனேஜர் போனில் அழைத்து, மேடம் நான் உங்கள் நிறுவனத்திலேயே மீண்டும் வேலைக்கு வந்துவிடுகிறேன் என்று கெஞ்சிக் கேட்டுவிட்டு போனை வைத்தார் என்று சொல்கிறது.

வேறொருவர், இதோ பாருங்கள், என் கப்பல் மாதிரியான காரை. என் புத்தம் புது பங்களாவின் முன்னால் நிற்கிறது. காரும் பங்களாவும் மட்டுமா பெரியது. என் பேங்க் பேலன்ஸ் எல்லாவற்றையும்விட பெரியது என்கிறார்.

நாணயம் லைப்ரரி : தொழிலதிபர் கனவுகள்... மாயத் தோற்றங்களும் நிஜ பின்னணிகளும்!

இவர்களைப் போல நீங்கள் ஆகவேண்டுமா? முதல் காரியமாக, வேலையை விட்டுவிட்டு,  தொழிலதிபராகுங்கள் என்ற சங்கை ஊது ஊது என்று விளம்பரங்களின் மூலம் ஊதுகிறார்கள்.

‘‘நானும் வேலையை விட்டுவிட்டு தொழில் ஆரம்பித்த தொழில் அதிபர்தான்’’ என்று சொல்லும் ஆசிரியர், ‘‘உண்மைக்குப் புறம்பான இந்த விளம்பரங்களைப் பார்த்தால், வேலைக்குப் போகிறவர்களை கிண்டலடிப்பதைப்போலவே இருக்கிறது. இந்த விளம்பரங்கள் எல்லாம் ஒரு மாய உலகைச் சித்திரிக்கின்றனவே தவிர, உள்ளதை உள்ளபடி சொல்வதேயில்லை. நான் என் தொழில் அனுபவத்தைச் சொல்லவேண்டும் என்றால் எப்படி சொல்ல வேண்டியிருக்கும் தெரியுமா?’’ என்று தொழில் முனைவதின் இன்னொரு பக்கத்தைச் சொல்லி நம்மை அதிரவைக்கிறார் ஆசிரியர்.

முதல் ஸீன்: காலை ஐந்து மணி. நான் ஏர்போர்ட்டில் இருக்கிறேன். மூன்று மாத கர்ப்பிணியான எனக்கு தொடர்ந்து குமட்டிக் கொண்டு வாந்தி வந்துகொண்டேயிருக்கிறது. என்ன செய்ய? சொந்தத் தொழில் ஆயிற்றே! எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு என் வாடிக்கையாளரைப் பார்க்க இன்னும் சற்று நேரத்தில் விமானம் ஏறப்போகிறேன்.

இரண்டாவது ஸீன்: காலை மூன்று மணி. நேற்று மாலையில் இருந்து ஏழு காபி குடித்தாகிவிட்டது. இரவு முழுவதும் தூக்கம் முழித்து, வேர்டு டாக்குமென்ட்டில் டைப் செய்தாகிவிட்டது. காலையில் நடக்க இருக்கும் மீட்டிங்குக்கு பிரின்ட்-அவுட் மட்டும் கடை திறந்தவுடன் எடுத்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம்.

மூன்றாவது ஸீன்:  இப்போது நான் ஒரு பெரிய கம்பெனியின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரியின் முன் டீல் நல்லபடியாக நடக்க வேண்டுமே என நெஞ்சு நிறைய பயத்தோடு, அதேசமயம் அதை வெளிக்காட்டிக் கொள்ளா மல், தைரியமாய் பேசிக்கொண்டிருக்கிறேன்.யதார்த்தம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

நாணயம் லைப்ரரி : தொழிலதிபர் கனவுகள்... மாயத் தோற்றங்களும் நிஜ பின்னணிகளும்!

`‘தொழில்முனைவோரானால் சம்பாதிக்க லாம். சந்தோஷமாய் இருக்கலாம் என்பதெல் லாம் சரிதான். ஆனால், சந்தோஷமெல்லாம் சம்பாதித்த பின்னால்தான். ஒரே இரவில் சினிமா மாதிரி பணக்காரனெல்லாம் ஆகமுடியாது. அதுபோன்ற மேஜிக் டெக்னிக் என்றெல்லாம் ஒன்றுமேயில்லை’’ என்கிறார் ஆசிரியர்.

உங்களுக்குப் பிடித்த உருப்படியாக நாலு காசு பார்க்கும் அளவுக்கு செய்ய முடிகிற ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பதற்கே நீண்டகாலம் ஆகும். அப்புறம் அந்தத் துறையில் அறிவு, திறமை அனுபவம் என்பதை   வளர்த்துக்கொள்ள தொழிலின் மீதும், பணத்தின் மீதும் மீளாக்காதல் இருக்க வேண்டும். அப்போதுதான் சோறு தண்ணியில்லாமல் வேலை பார்த்து திறமையை வளர்க்க முடியும். அதுக்கப்புறம் நீங்கள் ஆபீஸ், பில்டிங், கஸ்டமர், ரசிகர்கள், வக்கீல்கள் மற்றும் மென்டார்களைத்

நாணயம் லைப்ரரி : தொழிலதிபர் கனவுகள்... மாயத் தோற்றங்களும் நிஜ பின்னணிகளும்!

தயார்படுத்திக் கொள்வதற்கு நீண்ட நாட்களும் அதீத பொறுமையும் வேண்டியிருக்கும்.

‘‘அதனால், சும்மா கண்ணைக் கவரும் விளம்பரங்களை மட்டுமே பார்த்துக்கொண்டு தொழிலதிபர் கனவுகளை வளர்த்துக்கொண்டு திரியாதீர்கள். இன்னும் குறிப்பாய்ச் சொல்ல வேண்டும் எனில், பார்க்கிற வேலையை வெறுத்துத் தள்ளுவது மட்டுமே ஒரு பிசினஸ் பிளானாகாது’’ என்று நச்சென்று சொல்கிறார் ஆசிரியர்.

ஒரு தொழில் அதிபராக மொத்த அமெரிக்காவையும் வலம் வந்தபோது ஆசிரியர் கண்ட ஒரு ஆச்சர்யமான விஷயத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். வேலை பார்ப்பதற்கு உலகத்தின் தலைசிறந்த கம்பெனி என்று சொல்லப்படும் கம்பெனிகளில் பணிபுரிபவர்கள்கூட ரகசியமாய் இந்த வேலையை விட்டுவிட்டு எதையாவது சொந்தமா பண்ணணும் என்ற ஐடியாவுடனேயே இருந்தார்களாம். இப்படிப்பட்ட சிறந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் கொஞ்சம் பேர் ஆசிரியரிடமே சொந்தமா ஏதாவது பண்ணலாமென்று பார்க்கிறேன். எங்கே ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. எப்படி நீங்க இப்படியானீர்கள் என்று கேட்டார்களாம்.

‘‘எக்கச்சக்கமான புத்தகங்கள், கூகுளில் தேடினால், ஏறக்குறைய 7 கோடியே 75  லட்சம் லிங்குகள் என புதியதாக தொழில் ஆரம்பிப்பது மற்றும் தொழில்முனைவோர் பற்றிய தகவல்கள் இருந்தும் ஏன் இவர்களால் ஆரம்பிக்க முடியவில்லை?’’ என்று ஆச்சர்யப் பட்டாராம் ஆசிரியர்.
‘‘இந்தச் சூழ்நிலையில்தான் நான் ஒரு பிளாக்கை ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அந்த பிளாக்குக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, இறுதியில் மிகச் சிறந்த பல தொழிலதிபர்களுடைய பழக்கம் கிடைத்தது. அவர்களை இன்டர்வியூ செய்து பிளாக்கில் எழுதினேன். கடந்த மூன்று வருடங்களில் இதுபோன்ற தலைசிறந்த தொழில் அதிபர்களிடம் பேசித் தெரிந்து கொண்ட விஷயங்களைத்தான் தொகுத்து இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளேன்’’ என்கிறார் ஆசிரியர்.

ஒரு வேலையில் இருக்கும்போது தொழில் செய்வது என்பது வெகு சுலபமான வேலையாகத் தெரியும். புது ஐடியா, புது சந்தை, புது பிசினஸ் பிளான் எல்லாம் வெகுசுலபத்தில் முடியக்கூடியதாய்த் தெரியும். ஆனால், வேலையை விட்டுவிட்டு வெளியேறிய பின் நிஜ உலகில் அதுவே மிகவும் கடுமையான விஷயமாக மாறிவிடும். அதிலும் பணத்துக்காக பிடிக்காத வேலையை தொழிலாகச் செய்தீர்கள் என்றால், வாழ்க்கையே நரகம்தான்’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘மிக மிக முக்கியமான கேள்விகளுக்கு நீங்கள் பதிலைத் தயார் செய்யவேண்டும் என்கிறார் ஆசிரியர். என்ன செய்யப் போகிறீர்கள், ஏன் செய்யப் போகிறீர்கள், எப்படி செய்யப் போகிறீர்கள், எங்கே செய்யப்போகிறீர்கள், யாருடன் சேர்ந்து யாருக்காகச் செய்யப் போகிறீர்கள்? இந்த எளிமையான கேள்விகளுக்கு தெளிவான பதிலை முதலில் தெரிந்துவைத்திருந்தால்தான், நீங்கள் என்ன செய்வீர்கள், என்ன செய்ய மாட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்கிறார். இயற்கையான ஈடுபாடு + திறமை மற்றும் தகுதி + உங்களுக்குத் தேவையானதை தரும் பிசினஸ் மாடல் + தொழில் செய்வதற்கு தகுதியான ஒரு சந்தை மற்றும் பிளான் என்ற எல்லாம் சேர்ந்ததுதான் நல்லதொரு பிசினஸ் ஐடியாவாக மாறும்’’ என்கிறார் ஆசிரியர்.

வேலையிலிருந்து விலகி தொழில்முனை வோராக மாறியபின் சந்திக்க ேவண்டிய சிரமங்கள் குறித்து எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர். யாரை நம்புவதென்றே தெரிய வில்லையே என்று தோன்றுவது தொழில் முனைவோரான பின்னர் வரும் முதல் சந்தேகம் என்றும், ஒரு பயபுள்ள ஹெல்ப் பண்ண மாட்டேன் என்கிறான் என்று சொல்வதும், என் எண்ணத்துக்கு ஏற்றாற்போல் யாருமே கிடைக்க மாட்டேங்கிறாங்கப்பா என்று புலம்பும் நிலைமையெல்லாம் கட்டாயம் வரும்’’  என்கிறார்  ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : தொழிலதிபர் கனவுகள்... மாயத் தோற்றங்களும் நிஜ பின்னணிகளும்!

‘‘தொழிலில் முதலில் ஆளைத் தேடுங்கள். அப்புறம் ஆஸ்தி என்று சொல்கிறார்களே, ஏன் என்று நீங்கள் கேட்கலாம். தொழில் முனையும்போது வரும் பிரச்னைகளிலிருந்து  வெளியேவர ஆள்வேண்டும். உங்கள் நேரத்தைச் சேமிக்க, பணம் புரட்ட, அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள மற்றும்  பல இடத்தில் உங்களை அறிமுகம் செய்துவைக்க ஆள்வேண்டும். உங்கள் பிசினஸைப் பற்றி நாலு இடத்தில் நல்லவிதமாய்ச் சொல்ல ஆள்வேண்டும். இப்படி ஆட்களின் தேவை தொழில்முனையும்போது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது’’ என்கிறார் ஆசிரியர். எந்த வகையான ஆட்களைகூட வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்.  பணத்துக்காக திட்டமிடல், இன்ஷூரன்ஸின் அவசியம் போன்ற இரண்டையும் ஆணித்தரமாக விளக்குகிறார் ஆசிரியர்.

‘‘என்னதான் சூப்பர் பிசினஸ் ஐடியாவை வைத்திருந்தாலும் வேலையை விட்டுவிட்டு தொழில்முனைவோராக மாறும் வேளையில் குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றியும் இருப்பவர் களை தொழிலில் ஈடுபடுவது நல்லதுக்காகத்தான் என்று சொல்லிப்புரிய வைப்பது மிகமிக கடினமான விஷயம்’’ என்கிறார் ஆசிரியர்.

இப்படி படிப்படியாக திட்டங்களைத் தீட்டி, கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து, பணத்தை தயார் செய்த பின்னர் எந்தச் சூழலில் வேலையை விடவேண்டும் என்பதையும் விலாவாரியாக தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர். தொழில் முனைவோராக மாறாத வரை தொழில் முனைவு என்றால் என்ன என்பதை எந்த மனிதனாலும் புரிந்துகொள்ள முடியாது என்று சொல்லும் ஆசிரியர், திட்டங்களைத் தீட்டி சரிவர செயல்பட்டால் நிச்சயம் வெற்றிகிட்டும் என்று சொல்லி முடிக்கிறார்.

நம்மில் பலரும் ஆசைப் படுவது ஒரு சுதந்திரமான தொழில் முனைவோராய் வாழ்வதைத்தானே! அதனால் இந்தப் புத்தகத்தை வாங்கி படித்து பயனடைந்து எதிர்கால சந்ததியி னருக்காக பத்திரப்படுத்தி வைக்கலாம்.

-நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)