Published:Updated:

நாணயம் லைப்ரரி: வேலையில் நெருக்கடிகள்... தப்பிக்கும் வழிகள்!

நாணயம் லைப்ரரி: வேலையில் நெருக்கடிகள்... தப்பிக்கும் வழிகள்!

நாணயம் லைப்ரரி: வேலையில் நெருக்கடிகள்... தப்பிக்கும் வழிகள்!

நாணயம் லைப்ரரி: வேலையில் நெருக்கடிகள்... தப்பிக்கும் வழிகள்!

Published:Updated:

புத்தகத்தின் பெயர்: மிட்-கேரியர் கிரைசிஸ் (Mid-career Crisis)
 
ஆசிரியர்: பார்த்தசாரதி பாசு

பதிப்பாளர்: HarperCollins India

நீங்கள் கல்லூரியில் படித்த காலத்தைச் சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். உங்களுடன் படித்தவர்கள், உங்கள் அளவுக்கே படிக்கும் திறனுடையவர்கள், உங்களுடன் ஒரே நிறுவனத்தில் ஒரே மாதிரியான வேலைக்குச் சேர்ந்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு பத்து, பதினைந்து வருடம் கழித்து இவர்களைத் திரும்பிப் பார்த்தால், சிலர் வேலையில் வேகவேகமாக முன்னேற்றம் கண்டு மேலே மேலே போயிருப்பார்கள். சிலரோ அதே பழைய பொறுப்புகளோடு பழைய பதவியிலேயே ஒட்டிக்கொண்டு இருப்பார்கள். எப்படி ஒரே மாதிரியான படிப்பைப் படித்து, ஒரே பதவியில் முதன்முதலாகக் கால்பதித்தவர்களில் சிலர் உயர உயரப் பறக்கவும், சிலர் இருந்த இடத்திலேயே இருக்கவும் செய்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டறிவது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்.

நாணயம் லைப்ரரி: வேலையில் நெருக்கடிகள்... தப்பிக்கும் வழிகள்!

அதிகமான அறிவுத்திறனா? சாமர்த்தியமா? வெறுமனே அதிர்ஷ்டமா? எது சிலரை உயர உயர செல்ல வைக்கிறது. இதுபோன்று முன்னேறாதவர்கள் அதை உணரும்போது அவர்கள் மனதில் தோன்றும் குழப்பமான கேள்விகள் பல.

இருக்கும் இடத்திலேயே இருப்பதா? வேலையை விட்டு விட்டு வேறு பக்கம் போவதா? நாம் தலைவனா அல்லது தொண்டனா? வேலையில் இருந்துகொண்டே பிசினஸ் எதையாவது தொடங்குவதா? என்கிற மாதிரியான கேள்விகளும் குழப்பங்களும் நம் மனதில் வந்த நிமிடமே நம் தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்து, ஒருவிதமான மனநெருக்கடியை நம்முள்ளே கொண்டுவந்துவிடும். இதைத்தான் ‘மிட்-கேரியர் கிரைசிஸ்' என்கிறோம்.

இந்த கிரைசிஸில் விழாமல் இருப்பது எப்படி? விழுந்து விட்டால் தப்பிப்பது எப்படி என்பதைச் சொல்லும் 'மிட்-கேரியர் கிரைசிஸ்'   என்கிற  புத்தகத்தைத்தான் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துகிறோம்.

இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணத்தை சுவையாகச் சொல்லியுள்ளார் ஆசிரியரான பார்த்தசாரதி பாசு. முதல் 13 வருடங்கள் வேலை பார்த்தபின்னர் நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல குடும்பம் என எல்லாமே நன்றாக இருந்தபோதிலும் எதையோ தொலைத்துவிட்டமாதிரியே அவர் நினைத்தாராம்.  கூடப் படித்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர் நிலைமையை  சூப்பர் என்றோ மோசம் என்றோ சொல்ல முடியாதாம். ஆனாலும் ஒரு மனக்கிலேசம் இருந்தது. தன்னை சந்திக்கிறவர்களிடம் எல்லாம் தன் கதையைச்  சொல்லி,  என் நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்பேன். சிலர் விருப்பத்துடனும், இன்னும் சிலர் விருப்பம் இல்லாமலும் என் கதையைக் கேட்பார்கள். என் கதையைப் பொறுமையாய் கேட்டபின்னர் பலரும் பலவிதமான ஆறுதல்களைச் சொன்னார்களே தவிர, ஏன் இந்த நிலை எனக்கு வந்தது என்பதைப் பற்றி ஒருவரும்  சரியான காரணம் எதையும் சொல்லவில்லையாம்.

வாழ்க்கை என்றால் ஏற்றம், இறக்கம், வேகம், அசையாமை போன்றவை இருக்குமப்பா என்றே பலரும் சொன்னார்கள். இந்த ஆறுதல்கள் சில நாட்கள் மனத்தை ஆறவைக்கும். பின்னர் மீண்டும் மனதில் புகை கிளம்ப ஆரம்பிக்கும். இதற்கு, தான் கண்டுபிடித்த பதிலை இந்தப் புத்தகத்தில் சொல்லும் ஆசிரியர், அது எல்லோருக்கும் நிச்சயம் உதவியாய் இருக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறார்.

நாணயம் லைப்ரரி: வேலையில் நெருக்கடிகள்... தப்பிக்கும் வழிகள்!

நம்முடைய கார்ப்பரேட் வேலையை ஐந்து நிலைகளாகப் பிரிக்கலாம். படிப்புக்குப்பின் வேலைக்குச் சேர்வது முதல் நிலை. இந்த நிலையில் வானத்தை வில்லாய் வளைக்கப்போகிறேன் என்ற நினைப்பு உள்ள  இந்த நிலையில் எல்லாமே பாசிட்டிவ்வாய் தெரியும்.

இரண்டாவது நிலை என்பது வேலைக்குப் போய் கழிக்கும் ஒரு சில ஆண்டுகள். நிறையப் புதுவிஷயங்களைப் பார்ப்பதால், மனது குதூகலமாகவும் வாழ்க்கை சூப்பராகவும் போகும்.

மூன்றாவது நிலை என்பது மிட் கேரியருக்குள் காலை பதிக்கும் வருடங்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் பணிக்கும், படிப்புக்கும் ஏற்றாற்போல், குறிப்பாக, வேலைக்குச் சேர்ந்து 8 முதல் 18 வருடங்களுக்குள் வரும் நிலையாகும்.

இந்த வருடங்களில் நிறைய அனுபவத்தையும், நிறைய வெற்றி/தோல்விகளையும் சந்தித்திருப்பீர்கள். சிலர் வேகமான முன்னேற்றத்தையும், சிலர் மந்தமான முன்னேற்றத்தை யும் கண்டிருப்பார்கள். சிலர் அவர்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி இருப்பார்கள். சிலர் அடையாளம் என்ற சுவடே இல்லாமல் இருப்பார்கள். சிலர் இந்த இரண்டு எல்லைக்கும் நடுவே இருப்பார்கள்.

இந்த நிலையில்தான் சிலர் பெரிய குழுக்களை நிர்வகித்துக் கொண்டும், அடிக்கடி நிர்வாக உயர்மட்டத்தில் தொடர்பிலும் இருப்பார்கள். இவர்கள்தான் நிறுவனத்தின் முதுகெலும்பு என்று நிர்வாகத்தினர் உணரவும் உணர்த்தவும்படுவார்கள். இவர்களுடைய ஆலோசனைகள், கருத்துக்கள் மதிக்கப்படும். புதியவர்கள் இவர்களுடைய வழிகாட்டுதலைக் கேட்டு நடப்பார்கள். சீனியர்களோ புதிய ஸ்ட்ராடஜிகளைச் செயல்படுத்த இவர்களையே பயன்படுத்திக் கொள்வார்கள். 

இந்த நிலையை அடைந்தவர் களைப் பார்க்கும்போதுதான் அந்த நிலைக்கு எப்படிச் செல்வது என்ற கேள்வி அதனை அடையாதவர்கள் மனதில் தோன்றும். இந்தக் கேள்வி தோன்றிய மறு நிமிடமே வாழ்க்கை அஸ்தமிக்க ஆரம்பித்ததைப் போல் தோன்றும்.

சாதாரணமாக நாம் செய்யும் அன்றாட வேலைகளில்கூட தடுமாற்றம் வர ஆரம்பித்துவிடும். நம்மை அறியாமல் குணம் மற்றும் மனப்போக்கு மாற ஆரம்பித்து விடும். நிறைய சமயங்களில் நாம் செயல்படும்விதத்தை வைத்து, அந்த ஆளை ‘அவாய்டு பண்ணுங்க’ என்று மற்றவர்கள் ரகசியமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்குப் போய்விடும். இந்த நிலை முற்றி கடைசியாய் நம் வேலைக்கே உலை வைத்துவிடும் அளவுக்குக் கிரைசிஸாய் வேகமெடுக்க ஆரம்பிக்கும்.

நாணயம் லைப்ரரி: வேலையில் நெருக்கடிகள்... தப்பிக்கும் வழிகள்!

இங்கேதான், நாம் போகும் பாதை சரியில்லை என்பது நமக்குப் புரிய ஆரம்பிக்கும். இதில் கிரைசிஸ் என்பது வேலைக்குப் போகுதல், பதவி உயர்வு மறுத்தல்/பதவியைக் குறைத்தல், வேறு ஊருக்கு மாறுதல் போன்றவற்றைக் கொண்டுவரும் நிலையைக் குறிப்பதாகும்.
நான்காவது நிலை என்பது கேரியரின் கடைசி 10  வருடங்களுக்குள் நுழையும் நிலை. நம்மால் எது முடியும், எது முடியாது என்பது தெளிவாக நமக்குத் தெரிந்துவிட்ட நிலை இது. எதையும் சாதிக்க முடியாது என்பது சிலருக்கு தெளிவாகத் தெரிந்துவிடும். மிட்- கேரியர் கிரைசிஸை வெற்றிகரமாகத் தாண்ட முடியாதவர்களுக்கு (வேலை இழப்பு நேர்ந்தவர்களுக்கு) இது நரக நிலை. புது இடத்துக்கு வேலைக்குப் போய் அங்கே அனுசரித்து இருப்பது, வியாபாரம் ஆரம்பித்து அதில் உள்ள சவால்களைச் சந்திப்பது போன்றவை இவர்களுக்கு இருக்கும்.

ஐந்தாவது நிலை என்பது ஓய்வுக்காலத்துக்கு அருகே இருக்கும் ஆண்டுகள். இந்த நிலையில் நம் கையில் நம் வாழ்வின் ரிப்போர்ட் கார்டே இருக்கும். சந்தோஷமாகவோ, வருத்தமாகவோ, நாம் எங்கே எந்த எண்ணத்துடன் வாழ்க்கையை ஆரம்பித்தோம் என்பதை சௌகரியமாக மறந்து வாழும் நிலை இது.

இந்த ஐந்து நிலைகளில் நாம் கவலைகொண்டு சமாளிக்க வேண்டிய நிலை என்பது மூன்றாவது நிலை. இந்த நிலையில்தான், ‘என்கிட்ட இல்லாதது அவர்கிட்ட என்ன இருக்கு; நாம் தலைவனா, தொண்டனா?' எனக் கேள்வி தோன்றும் நிலை.

‘எங்கிட்ட எல்லாம் இருக்கு! ஆனா என்னை இந்த நிர்வாகம் அங்கீகரிக்க மாட்டேன்' என இந்த நிலையில் புலம்பித் திரிவோம். இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டியது இன்றைய வெற்றி என்பது இறுதியில்லை. இன்றைய தோல்வி என்பது மரணமில்லை. தொடர்ந்து முயற்சிசெய்யும் துணிச்சலே நமக்குத் தேவையானது என்பதைத்தான்.

மிட்கேரியர் கிரைசிஸ் குறித்துப் பல்வேறு விஷயங்களைத் தடாலடியாக இந்தப் புத்தகத்தில் போட்டு உடைக்கும் ஆசிரியர், அதைத் தவிர்க்க நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதைப்  பற்றியும் விவரித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் எல்லா பிரச்னைக்கும் என்னிடம் தீர்வு இருக்கிறது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அப்படி இருந்தால், எதற்காக உங்கள் நிறுவனம் ஏராளமானோரை வேலைக்கு வைத்திருக்க வேண்டும் என்று கிண்டலடிக்கிறார்.

அதிலும் எல்லா விஷயமும் எல்லா நேரத்திலும் எனக்குத் தெரியும் என்ற நினைப்பு இருக்கிறதே, அதுபோன்ற மோசமான எண்ணம் எதுவுமில்லை என்கிறார். வெறுமனே கருத்துக்களை மட்டும் சொல்லாமல், பல்வேறு வெற்றிகரமான உயரதிகாரிகளின்  அனுபவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக எழுதி வாங்கி இணைத்துள்ளார் ஆசிரியர்.

வேலைக்குப் போகும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

-நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)