Published:Updated:

நாணயம் லைப்ரரி: நீங்கள் குப்பை வண்டியா?

நாணயம் லைப்ரரி: நீங்கள் குப்பை வண்டியா?

புத்தகத்தின் பெயர்: த லா ஆஃப் த கார்பேஜ் ட்ரக் (The Law of the Garbage Truck)

ஆசிரியர்: டேவிட் ஜே போலே (David J.Pollay)

பதிப்பாளர்: Sterling Pub Co Inc

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்து வது டேவிட் ஜே போலே எழுதிய ‘த லா ஆஃப் த கார்பேஜ் ட்ரக்’ எனும் குப்பை வண்டி சொல்லும் சேதி குறித்த புத்தகத்தை.

பல நேரங்களில் உங்கள் மீது மற்றவர்கள் அவர்களுடைய கோபத்தையோ, அலட்சி யத்தையோ, கர்வத்தையோ, அசிரத்தையான நடத்தையையோ கொட்டி உங்களுடைய நாளையே பாழ் செய்து விடுகிறார்கள் இல்லையா?

நாணயம் லைப்ரரி: நீங்கள் குப்பை வண்டியா?

அதேபோல் நீங்களும் அடிக்கடி சிலர் மீது மேலே சொன்னவற்றைக் கொட்டித் தீர்த்து அவர்களை நிலைகுலையச் செய்துவிடுகிறீர்கள் இல்லையா?

இந்தப் புத்தகத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், எப்படி அடுத்தவர்கள் இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளை நம் மீது கொட்டாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்பது பற்றித்தான்.  இந்த  புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்வதன் மூலம் நாம் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியுடனும் திகழ முடியும்.

அதேபோல் இந்தப் புத்தகத்தைப் படித்து அடுத்தவர்களுக்கு இந்த இடைஞ்சலைத் தராமல் இருப்பதன் மூலம் எப்படி நம்முடைய உறவுகளைப் பேணிக்காத்தும், வியாபாரத்தினை விருத்தி செய்தும் வாழமுடியும் என்று தெரிந்துகொள்ளலாம் என்கிறார் ஆசிரியர்.

``பொதுவாக, மனிதர்களில் பெரும்பாலானோர் குப்பை வண்டிகளே. மனக்குப்பைகளைச் சுமந்து செல்லும் இவர்களின் வண்டி குப்பையினால் நிரம்பிய பின்னர் அதை எங்காவது கொண்டுபோய்க் கொட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். நீங்கள் கொஞ்சம் இடம் கொடுத்தீர்கள் என்றால், அதை உங்களிடத்தில் லாவகமாய்க் கொட்டிச் சென்று விடுவார்கள்.

அப்படி யாரும் கொட்டிவிட்டால் கோபப்படாதீர்கள். கேஷுவலாய்ச் சிரியுங்கள். கையை ஆட்டி நல்லா இருப்பா என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து நகருங்கள். நீங்கள் அதிக சந்தோஷமடைவீர்கள்'' என்கிறார் ஆசிரியர்.

நியூயார்க் நகரத்தில் ஒரு டாக்சியில் சென்று கொண் டிருக்கும்போது ஒரு மோசமான காரோட்டும் நபர் எதிரே வந்து கிட்டத்தட்ட விபத்து என்ற நிலைமையை உருவாக்கிவிட்டு, ஆசிரியர் சென்ற காரின்  டிரைவரை சகட்டுமேனிக்கு திட்ட ஆரம்பித்து விட்டாராம்.
ஆனால், ஆசிரியர் சென்ற  காரின் டிரைவரோ சிரித்துக்கொண்டே, ‘சரி சார். விடுங்க' என்று சிரித்துகொண்டே பதில் சொல்லி அனுப்பி வைத்தாராம். ‘என்னப்பா இது; அவர் தப்பா வந்தார். உன் திறமையில் நீ தப்பித்தாய். அந்த ஆள் கத்துறான். நீ சிரிக்கிறே' என்று கேட்டாராம் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: நீங்கள் குப்பை வண்டியா?

‘அட விடுங்க சார். சிலபேர் குப்பை வண்டி மாதிரி சார். கோபம், குமுறல், ஏமாற்றம் எல்லாவற்றையும் சுமந்துகொண்டு திரிவார்கள். இப்படி ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை உங்கள் மீது கொட்டுவார்கள். இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது' என்றாராம்.

இந்தவித மனநிலையே மனிதனுக்குச் சிறந்தது என்று சொல்லும் ஆசிரியர் இதுகுறித்த எட்டு விதிகளை இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார்.

முதலாவதாக, இதுபோன்ற அடுத்தவர்களுடைய குப்பை வண்டிகள் உங்கள் மீது குப்பையைக் கொட்டும் வாய்ப்பை அளித்துவிடாதீர்கள். அவர்களை எதிர்கொள்ளும் போதே குப்பையை உங்கள் மீது கொட்டிவிடாமல் உங்களைக் கடந்துபோகுமாறு செய்துவிடுங் கள் என்கின்றார்.

 அப்படிச் செய்துவிட்டால், நீங்கள் பேசாமல் உங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்யமுடியும். அப்படிச் செய்யாமல் அவர்கள் உங்கள் மீது குப்பையைக் கொட்டிவிட்டால் அதனால் ஏற்படும் நெகட்டிவ் எண்ணங்களில் இருந்து வெளியே வரவே நீண்ட நேரம் பிடிக்கும். அதனாலேயே நம்முடைய உற்பத்தித் திறன்  குறைய வாய்ப்புள்ளது என்கிறார்.

இரண்டாவதாக, உங்களுடைய குப்பை வண்டி உங்கள் மீது குப்பையைக் கொட்டிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர். குப்பை என்றாலே பழைய தேவையற்ற பொருட்கள்தானே!

தேவையற்ற பழைய நினைவுகள் அடங்கியதுதான் இந்தக் குப்பைகள். இந்தத் தேவையற்ற நினைவுகளை நம்மீது நாமே கொட்டிக் கொள்வதன் மூலம் நிறைய நெகட்டிவ் எண்ணங்களே நம்மிடம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ஆசிரியர்.

இந்த வகை நெகட்டிவ் எண்ணங்கள் கடந்த காலத்தைப் பாதித்தவை இல்லையா? அதை நம் மீது நிகழ்காலத்தில் நாமே கொட்டிக்கொள்வதன் மூலம் அவை நிகழ்காலத்தைப் பாதிக்க நாமே வாய்ப்பளித்து விடுகிறோம். அது மட்டுமா அதை நிகழ்காலத் தில் இவற்றை அசைபோடுவதன் மூலம் நம்முடைய எதிர்காலம் குறித்த எண்ணங்கள்கூட நெகட்டிவ்வாகவே மாறிவிடும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார் ஆசிரியர்.

மூன்றாவதாக ஆசிரியர் சொல்வது, மற்றொருவருடைய குப்பைவண்டியாக மாறி விடாதீர்கள் என்பதை. தப்பித் தவறி ஒருவர் அவருடைய குப்பையை உங்கள் மீது கொட்டி விட்டாலுமே நீங்கள் விஸ்வரூபம் எடுத்து அவர் மீது குப்பையை வாரித் தூற்றாதீர்கள். மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கை உடையவராக இருங்கள் என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: நீங்கள் குப்பை வண்டியா?

நான்காவதாக ஆசிரியர் சொல்வது, ஏனைய குப்பை வண்டிகளைக் கொஞ்சம் மாற்ற உதவுங்கள் என்பதை. அவர்களிடத்தில் இருக்கும் சிறப்புக் குணாதிசியங்களைக் கண்டறிவதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தி நட்பு பாராட்டி வளம் பெறச் செய்யலாம் என்கிறார் ஆசிரியர்.

ஐந்தாவதாக, குப்பை வண்டிகள் அல்லாத மனிதர்களை ஊக்குவியுங்கள் என்பதைத்தான். இதுபோன்ற நபர்களிடத்திலேயே உங்கள் நேரத்தையும் நாட்களையும் செலவிடாமல் இருப்பதே நல்லது என்பதை.

 குப்பைவண்டிகள் நடுவே இருந்து குப்பைகளை ஏற்றுக்கொண்டு குப்பை வண்டியாய் மாறாமல் இருப்பது மிகமிக நல்லது இல்லையா? என்கிறார் ஆசிரியர். குப்பை வண்டி அல்லாதவர்களை ஊக்குவித்து அவர்களிடத்து நேரம் செலவிடுதலே நல்லது என்கிறார் ஆசிரியர்.
ஆறாவதாக, ஒரு நல்ல நன்றியறிதலுடன் நீங்கள் வாழ பழகிவிட்டீர்கள் என்றால் நீங்கள் குப்பையை உருவாக்கவும் மாட்டீர்கள். குப்பை உங்களை நோக்கி வரவும் செய்யாது. இந்த வகை வாழ்க்கை வாழ்வது என்பது உலகத்தில் இந்த வகைக் குப்பையைக் குறைக்க மிக மிக உதவும் என்பதை மறவாதீர்கள் என்கிறார்.

ஏழாவதாக, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவருமே நீங்கள் நன்றியறிதலுடன் கூடிய ஒரு நபர் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நடந்துகொள்ளுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் இதனைப் புரிந்துகொண்டால் என்னவாகும் தெரியுமா? நீங்கள் குப்பை வண்டிகள் வராத இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்கிறார் ஆசிரியர்.

எட்டாவதாக, நீங்கள் குப்பை வண்டிகள் வராத இடத்தில் இருப்பதைப் போலவே நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலும் சிறந்ததையே கொடுத்து சிறந்ததையே எதிர்பார்த்து இருந்தீர்கள் என்றால், நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் அனைவருமே உற்சாகத்துடன் செயல் படுவார்கள்.

அவர்களுடைய முழுத் திறனையும் வெளிப்படுத்தும் வண்ணம் செயலாற்றி உங்களைச் சுற்றி ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்குவார்கள் என்கிறார் ஆசிரியர்.

எவ்வளவு குப்பையை நீங்கள் பெறுகிறீர்கள் (மற்றவர்கள் கொண்டு வந்து கொட்டுவதன் மூலம்), எவ்வளவு குப்பையை நீங்கள் அடுத்தவர்கள் மீது கொட்டுகிறீர்கள் என்பதை அளவீடு செய்யத்தேவையான கேள்விகள் அடங்கிய தொகுப்பையும் ஆசிரியர் புத்தகத்தில் தந்துள்ளார்.

டாக்சி டிரைவர்களுக்கு ஒரு ஊரில் எல்லா இடமும் தெரியும். அதேபோல் அவர்களுக்கு எல்லா விதமான மனிதர்களையும் எல்லாவிதமான சூழ்நிலை களிலும் (நல்லது, கெட்டது, அவசரம், நிதானம் போன்ற பல்வேறு வாழ்க்கை சூழ்நிலை களிலும்) தெரியும். ஒவ்வொரு முறை டாக்சியில் செல்லும் போதும் அந்த டிரைவரிடம் பேசினால் ஒரு புதுவிஷயத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

எதிராளி எகிறியபோது, சிரித்துக் கையசைத்து குப்பை வண்டி சொல்லும் சேதி என்ற புத்தகத்தை எழுத வைத்த டாக்சி டிரைவருக்கு நன்றி சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

போட்டா போட்டியும், அதிவேகமும் நிறைந்துள்ள இன்றைய வாழ்க்கையில் அனைவரும் படித்து நடைமுறைப்படுத்தவேண்டிய நடைமுறைகளைக் கொண்டிருக்கும் புத்தகம் இது.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

அடுத்த கட்டுரைக்கு