தொடர்கள்
Published:Updated:

வின்னிங் இன்னிங்ஸ் - 4

வின்னிங் இன்னிங்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
வின்னிங் இன்னிங்ஸ் - 4

பாசிட்டிவ் பகுதிபரிசல் கிருஷ்ணா

‘‘A rose on time is more valuable than a $1,000 gift that’s too late.”

​- Jim Rohn

வெற்றிகரமான ஒரு தொழிலதிபர் ஆக, வறுமை பழகியிருக்க வேண்டும்; பணம் இருக்க வேண்டும்; அனுபவம் வேண்டும்; முனைப்பு வேண்டும், இவை எல்லாவற்றையும் தாண்டி, உங்களுக்குள் அப்படி  ஒரு தொழிலதிபர் இருக்கிறார் என்பதை நீங்களே உணரவேண்டும், `மேனகா கார்ட்ஸ்’ சங்கரலிங்கம் உணர்ந்ததைப்போல.

திருநெல்வேலி விஜயநாராயணம் - சங்கனாங்குளம்தான் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். பள்ளிப்படிப்பெலாம் அங்குதான். 1967-ல் பி.எஸ்ஸி., அக்ரி படிக்க கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கிறார். சீட் கிடைக்கவில்லை. ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில், திசையன்விளையில் உள்ள டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்ந்தார். தினமும் கடுமையான சைக்கிள் பயணம்!  அப்போதெல்லாம் அடுப்பு மூட்ட, காய்ந்த விறகுகளுக்கு கிராக்கி இருந்தது. திசையன்விளையில் நன்கு காய்ந்த விறகுகள் கிடைக்கும். அங்கிருந்து ஒரு ரூபாய்க்கு, ஒரு கட்டு எடுத்து வந்து, இவரது ஊரில் 25 பைசா அதிகம் வைத்து விற்றார். ஒரு கட்டு ஐந்து கட்டானது. இவருடைய விறகுக் கட்டுகளுக்காக மக்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். விறகு விற்பனையோடு பஞ்சர் கடையும் ஆரம்பிக்கிறார்! சாதா சங்கரலிங்கம், பிஸினஸ்மேன் சங்கரலிங்கமாக உருவானது அப்படித்தான்!

வின்னிங் இன்னிங்ஸ் - 4

அடுத்த வருடமும் கோவைக்குச் சென்று விண்ணப்பிக்கிறார். மீண்டும் சீட் கிடைக்கவில்லை. ஆனால், கோவையின் மீது  அளவில்லா ஓர் ஈர்ப்பு  ஏற்படுகிறது. 

 மீண்டும் ஊருக்குத் திரும்பியவருக்கு, கோவைக்குச் சென்று வேலை  தேடி செட்டில் ஆகவேண்டும் என்ற ஆசை விஸ்வரூபமெடுக்கிறது. வீட்டில் சொல்ல தைரியமில்லை. 1968-ம் ஆண்டில் `பெரிய ஆளா ஆனபிறகுதான் திரும்பி வருவேன்’ என்று எழுதிவைத்துவிட்டு 300 ரூபாய் பணத்தோடு வீட்டைவிட்டு வெளியேறுகிறார். ரயில் எந்த ஊருக்குப் போனாலும், அங்குதான் எதிர்காலம் எனத் தீர்மானித்து டிக்கெட் எடுக்கிறார். அப்போதுதான் தெரிகிறது, அது கோவை செல்லும் ரயில்!

கோவையில் இறங்கி தினமும் ஒரு திசையில் அலைந்து வேலை தேடுகிறார். ஒரு ஹோட்டலில் வேலை கிடைக்கிறது. 50 ரூபாய் சம்பளம். சில மாதங்களில் ஹோட்டலில் நைட் டியூட்டி மாற்றிக்கொண்டு, பகலில் வேறு வேலை தேடுகிறார்.

1969-ம் ஆண்டில் கலைக்கதிர் அச்சகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் `புக்ஸ் வேர்ல்டு’ கடையில் பைண்டிங் வேலை கிடைக்கிறது. தினமும் 3 ரூபாய் சம்பளம்.  முருகானந்தம்தான் இவரது வாழ்வில் பலவற்றில் உடன் நின்றவர். அவரே, பால் கம்பெனி ஒன்றில் வேலை வாங்கித்தருகிறார். ‘சிந்தாமணி அச்சகம்’ எனும் பிரின்டிங் பிரஸ் ஒன்றில் சேர்த்துவிடுகிறார். வேலை மட்டுமல்ல.. இவரது ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் கல்வி தடையாகக்கூடாது என்று,     முருகானந்தமே, கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.காம் படிக்க வைக்கிறார். கல்லூரி விடுமுறையில் சங்கரலிங்கத்தை, சென்னைத் தரமணியில் பிரின்டிங் டெக்னாலஜியும் படிக்கவைக்கிறார்.

பள்ளிக்காலத்திலேயே நாடகங்களில் நடித்த  சங்கரலிங்கத்துக்குள் ஒரு நடிகனும் உண்டு. நடிப்பார்வம் மீண்டும் துளிர்விட, கோவையில் நடந்த 40 நாள் நாடக விழாவில் நடிக்கிறார் சங்கரலிங்கம்.  `அன்னக்கிளி’ படத்தைப் பாராட்டி நண்பர்களோடு சேர்ந்து, பஞ்சு அருணாசலத்தை அழைத்துப் பாராட்டு விழா எடுக்கிறார். அந்த விழாவில் நாடகம் ஒன்றையும் நடித்து அரங்கேற்ற, சங்கரலிங்கத்தின் நடிப்பைப் பஞ்சு அருணாசலம் பாராட்டுகிறார். பஞ்சு அருணாசலத்தின் நண்பர் ஒருவர், சங்கரலிங்கத்தைச் சென்னைக்கு அழைக்கிறார். பிஸினஸ்மேன் ஆசை இரண்டாம் பட்சமாகி, நடிகராகும் ஆசை வேகமெடுக்கிறது. 1976-ம் ஆண்டின் இறுதியில் சென்னை செல்கிறார். அங்கே ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலை செய்துகொண்டே சினிமா வாய்ப்பு தேடுகிறார்.

`உதிரிப்பூக்கள்’, `கவிக்குயில்’ போன்ற படங்களில் நடிக்கிறார். கூடவே  இரண்டு படங்களில்  செகண்ட் ஹீரோ!  1979, டிசம்பர் வரை காத்திருக்கிறார். அந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகவே இல்லை. சினிமா ஆசை முற்றுப்பெறுகிறது! 

1980  ஏப்ரலில் திருமணம் முடித்து சென்னை வந்து, கோடம்பாக்கத்தில் உள்ள நண்பரிடம் ஸ்கிரீன் பிரின்டிங் தொழில் ஆரம்பிக்க இடம் தேடுவதாகச் சொல்கிறார். அந்த நண்பர், அவரது இடத்துக்கு முன் இருந்த சிறிய இடத்தில் ``இங்கே ஆரம்பித்துக்கொள்!’’ என அனுமதி அளிக்கிறார்.

சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்த நாள்களில் பாம்குரோவ் ஹோட்டலுக்குப் போவதுண்டு. அங்கே இருந்த `மேனகா ரெஸ்டாரன்ட்’ என்ற பெயரும், அந்த எழுத்துகளும் மனதில் பதிந்திருக்க, `மேனகா கார்ட்ஸ்’ என்ற பெயரிலேயே நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். `விஸ்வாமித்திரரையே மயக்கிய பெயர். கஸ்டமரை மயக்காதா?’

விசிட்டிங் கார்டு, லெட்டர் ஹெட்,  சினிமா பூஜை களுக்கான இன்வி டேஷன் எனத்தொழிலைத் தொடங்குகிறார். இரண்டே பணியாளர்கள்!     

அப்போதெல்லாம், பிரின்டிங் பிரஸ்ஸில் சொன்ன நேரத்துக்கு டெலிவரி கொடுப்பது என்பது அபூர்வம். அதை உடைத்தார் சங்கரலிங்கம். ஆன் டைம் டெலிவரி, தரம், க்ரியேட்டிவிட்டி இந்த மூன்று விஷயங்களை உறுதியாகக் கடைப்பிடித்தார். மேனகா கார்ட்ஸின் முதல்  20 வருடங்களில் நிறுவனம் குறித்த ஒரு விளம்பரமும் எந்த ஊடகத்திலும் வந்ததில்லை.  மேனகா கார்ட்ஸின் விளம்பரமாக இருந்தவர்கள், அதனுடைய வாடிக்கை யாளர்கள்தாம்.

பஞ்சு அருணாசலம், எஸ்பி.முத்துராமன், இளையராஜா என லெட்டர் பேடு ஆர்டர்கள் வருகின்றன. ஆரம்பித்த காலகட்டத்தில் ஒருமுறை 10,000 ரூபாய் வங்கிக்கடன் கேட்கச் சென்றவருக்கு, `கார்டு பிரின்டிங்லாம் `இண்டஸ்ட்ரி’ங்கிற லிஸ்ட்லேயே இல்லையே’ என மறுக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் திருமண கார்டுகளுக்குப் பின்னால் `Menaka Cards’ என பிரின்ட் செய்ய ஆரம்பித்தார். பிறகு, வங்கி அதிகாரிகளே `கடன் வேண்டுமா?’ எனக் கேட்கும் அளவுக்கு முன்னேற்றம்!

இவர் 1986-ம் ஆண்டில் தன் ஷோருமை முழுக்க முழுக்க கார்டு டிசைன்கள் டிஸ்பிளே ஆகும்படி மாற்றியமைத்தார்.  இப்படி ஒரு ஷோரும் இந்தியாவிலேயே அதுதான் முதல்முறை! 

வின்னிங் இன்னிங்ஸ் - 4

2000-க்குப் பிறகு டீலர்ஷிப் விடத் தீர்மானித்தது, இவராக எடுத்த முடிவு அல்ல. இவரிடம் வாடிக்கையாளராக வந்த பலரும் கேட்டுக் கேட்டு, டீலர்ஷிப் தொடங்கப்பட்டது. அதுவரை சென்னையில் மட்டுமே ‘மேனகா கார்ட்ஸ்’ இருந்தது. இன்று அமெரிக்கா, கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, இலங்கை உட்பட 60 இடங்களில் மேனகா கார்ட்ஸுக்கு டீலர்கள் இருக்கிறார்கள்.

சிறுவயதில் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு அப்பாவுடன் சைக்கிளில் கடந்து சென்ற அதே இடத்தில், இப்போது கார்டு பிரின்டிங் ஃபேக்டரியை அமைத்திருக்கிறார். உலகத்தில் எந்த மூலையிலிருந்து ஆர்டர் வந்தாலும், பிரின்டிங் அங்கேதான். ஒரே இடத்தில் அச்சானால் தரம் உறுதி செய்யப்படும் என்பதால் இதைப் பின்பற்றுகிறார் சங்கரலிங்கம்.

கடன் கொடுப்பதில்லை ,என்ன ஆனாலும் விற்பனை ஆள்களை அனுப்பி ஆர்டர் எடுப்பதில்லை, 100 சதவிகிதம் பில்லிங் என்பதையெல்லாம் ஆரம்பத்தி லிருந்தே கடைப்பிடிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு கார்டையும் சோதனை செய்துபார்த்துத்தான் கொடுக்க வேண்டும் என்பது சங்கரலிங்கமும், இப்போது பொறுப்பில் இருக்கும் அவர் மகன் சரவண பிரகாஷும் ஊழியர்களுக்கு வைத்துள்ள விதி.
கார்டில் ஒரு சின்னக் குறை இருந்தாலும், அதற்கான பணத்தை வாங்க மாட்டார். ``நுகர்வோர் பார்வையில் அது குறையாகத் தெரியா விட்டாலும், எனக்கு அது தெரியுமே!’’ என்கிறார்.

நிர்ணயிக்கப்பட்ட விலை, 100 சதவிகிதம் முன்பணம், சாம்பிள்ஸ் எடுத்துப்போக அனுமதியில்லை என்றும் விதிகள் வைத்திருக்கிறார்!  ``விக்கத்தானே வெச்சிருக்கீங்க... சாம்பிள் கொடுத்து விட்டா என்ன?” என்று கேட்ட `துக்ளக்’ சோவிடம் இவர் சொன்னது, ``ஆயிரம் கார்டுல உங்களுக்குப் பிடிச்ச கார்டு இருக்கும். ஆனா, நீங்க அனுப்பின ஆள் எடுத்து வரதுல அது இருக்கும்னு என்ன நிச்சயம்?”
அதன் பிறகு, கடைக்கு மூன்று முறை வந்து பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் சோ.

ஒரு கார்டு வாங்கினால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கும் முன், எங்கே அடித்த கார்டு எனப் பின்னால் திருப்பிப் பார்க்க வைத்தன, மேனகா கார்ட்ஸ் சங்கரலிங்கத்தின் உத்திகளும் உழைப்பும். உங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கும் எந்த உழைப்பும் வீண்போவதில்லை.

சங்கரலிங்கத்தின் பிசினஸ்மொழிகள்

* எந்தத் தொழிலையும் மனதாரக் காதலித்து நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்தால், 100 சதவிகிதம்  வளர்ச்சி  நிச்சயம். அந்த வளர்ச்சி  தரும் மனமகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. 

விற்பனைக்காக பிராண்டு என்பதைவிடவும், பிராண்டுக்காக விற்பனை என்பதே நிலைத்து நிற்கும். 

* வியாபாரத்தில் `வெற்றியடைந்தேன்’ என்று சொல்லாதீர்கள். `வளர்ச்சியடைந்தேன்’ என்றே சொல்லுங்கள்.