நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்!

கொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : டிராப் தி பால் (Drop the Ball)

ஆசிரியர் : டிஃபனி டுபூ (Tiffany Dufu)

பதிப்பகம் : Penguin

நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணா..? வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு, அலுவலகத்துக்கும் பரபரவெனக் கிளம்பி ஓடுபவரா..?  எல்லாவற்றையும் நீங்கள் இழுத்துப் போட்டுக்கொண்டு, ‘‘எல்லாம் வேலையையும் நான்தான் செய்யணுமா?’’ என்று வருத்தப்படு கிறவரா? உங்களுக்காகத்தான் டிஃபனி டுபூ என்னும் பெண் எழுத்தாளர் எழுதிய ‘டிராப் தி பால்’ என்னும் புத்தகம்.

“ஆங்கில அகராதியில் ‘டிராப் தி பால்’ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவையோ, நடவடிக்கையையோ எடுக்காமல் இருப்பதால் நடக்கும் தவறு என்று அர்த்தம். இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, ‘டிராப் தி பால்’ என்றால், நடப்பில் சாத்தியமாகாத எதிர்பார்ப்புகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, குடும்பத்தில் மற்றவர்களின் உதவியைப் பெற்று, நம் எல்லைகளை அடையும் அதே நேரத்தில் குடும்ப உறவுகளையும் மேம்படுத்திச் செல்லுதல் என்பதேயாகும்” என்கிறார் புத்தக ஆசிரியை.

கொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்!

“நல்ல குடும்பத் தலைவியாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதேசமயம், வேலையில் முன்னேற வேண்டும் என்ற விஷயமும் எனக்குப் பிடிக்கும். ஆனால், இந்த இரண்டு விஷயங்களும் எதிரும்புதிருமானவை. இதை என் மகன் பிறந்து, மகப்பேறுக்கான விடுமுறை முடிந்து அலுவலகம் செல்லும்போதுதான் புரிந்துகொண்டேன். முதல் நாளிலேயே வீடு மற்றும் பணியிடம் என்ற இரண்டிலும் வெற்றிபெற்று விடலாம் என்கிற என் எண்ணம் முற்றிலுமாக அழிந்துவிடுமோ என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாத சிரமம், அலுவலகத்தில் முதல்நாளே எனக்காகக் காத்திருந்த வேலைச் சுமை, பதிலளிக்க வேண்டிய மெயில்கள், வாங்க வேண்டிய மளிகைச் சாமான்கள், செய்து முடிக்க வேண்டிய வீட்டு வேலைகள்... என நினைத்தாலே தலைசுற்ற ஆரம்பித்தது. 

வேலைக்கு உதவி செய்ய ஒருவரை வைத்துக்கொள்ளலாம் என்றால், அது ஒன்றும் சுலப மில்லை. என்னைப்போல் மத்திய தரக் குடும்பம் சார்ந்த, சேமிப்புக் காக வேலைக்குப் போகும் பெண் களுக்கு அது கட்டுப்படியாது. எங்கள் இருவரின் சம்பளம் குடித்தனம் நடத்தவும், பிள்ளையைப் படிக்கவைக்கவும், ஓய்வுக்காலத்திற்காகச் சேமிக்கவும்,  பெற்றவர்களுக்கு அவ்வப்போது ஏதாவது உதவி செய்யவும், என்னுடைய கல்விக் கடனை அடைக்கவுமே போதுமானதாக இருக்கிறது என்பதை நினைத்தவுடனேயே, நம் வாழ்வில் தான் எத்தகைய சவால்கள் என்கிற எண்ணத்தில், கண்களில் தானாகக் கண்ணீர் வர ஆரம்பித்து விடும்.

கொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்!


முதல் நாளன்று அலுவலகத்திலி ருந்து திரும்பி, படுக்கைக்குச் சென்றேன். என்னுடைய கணவர் அன்று இரவு பத்து மணிக்கு வீடு திரும்பினார். வந்தவுடன் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்த்தார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. நானும் அவரும் ஒரே வாழ்க்கைப் பாதையில்தான்  பயணிக்கிறோம். அவர்  ஜாலியாக இருக்கிறார். நான்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்து கஷ்டப் படுகிறேன். இதற்கெல்லாம் தீர்வு எதுவும் கிடையாதா என்று கோபம் வந்தது. வேலையை விட்டுவிடலாம் என்றால், வருமானம் பெரிய  அளவில் அடிவாங்கும். இது  தனிநபர் பிரச்னையல்ல. பொதுப் பிரச்னை. இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தேன். இந்தப் பிரச்னையைச் சமாளிக்க பல வழிகள் உள்ளன என்பதைப் புரிந்துகொண்டேன். அவற்றை விளக்கமாக எடுத்துச் சொல்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்” என்கிறார் ஆசிரியை.

பள்ளிப்பருவம் முடிந்தவுடன் வேலை மற்றும் திருமணம் என்று பந்தங்களில் இணைந்த ஆசிரியை, தானும் தன்னுடைய கணவரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதைச் சொல்கிறார்.

“எங்களை நாங்களே நன்கு புரிந்துகொண்டவர்களாகத்தான் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம். வாழ்க்கை, கொள்கை, சம்பாத்தியம் எனப் பலவற்றைப் பற்றியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எக்கச் சக்கமாய் பேசுவோம். முதலில் நான் பட்டப்படிப்பை முடிக்க, அதன்பிறகு என் கணவர் எம்.பி.ஏ முடித்தார். என் கணவர் எம்.பி.ஏ படித்து முடிக்கும் வரை குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்று ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

எம்.பி.ஏ முடித்தபிறகு கணவருக்கு நியூயார்க் நகரில் ஒரு பெரிய இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. என்னதான் என் கணவராக இருந்தாலும், என் மனதில் ஒரு பொறாமை வரவே செய்தது. பெரிய நிறுவனம் பெரிய வேலை என்றால், நான் சிறிய வேலையைப் பார்த்துக்கொண்டு குழந்தையையும், குடும்பத்தையும் சுமக்கவேண்டும்.

சரி, எதுவாக இருந்தாலும் என் கணவரின் முன்னேற்றம்தான் என் குடும்பத்தின் முன்னேற்றம் என்று முடிவு செய்தேன். அந்த நேரத்தில்தான் என் மகன் பிறந்தான். என் கணவரின் கரியர் கொடிகட்டிப் பறந்தது. ஆனால், என் மகனே என் கரியருக்குத் தடையாகிப்போனான். ‘இது நியாயமா?’ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

‘சூப்பர் மார்க்கெட் சென்று வாங்கிவரும் சாமான்களை அடுக்கி வைக்க உதவி செய்யட்டுமா?’ என்று என் கணவர் கேட்பதில்லை. எனக்கோ, கொஞ்சம் உதவி செய்தால் நன்றாக இருக்குமே என்று கேட்கத் தோன்றியது. ஆனால், கேட்கவில்லை. கற்பனையில் வேலையைப் பகிர்ந்தளிக்க நினைத்தேனே தவிர, நடப்பில் இல்லை. மேலும், வீட்டை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என எல்லாப் பெண்களும் நினைக்கிற மாதிரி நானும் நினைத்து அதிக வேலைகளைச் செய்தேன்.  

வேலைக்குச் செல்லும் பெண்களே கொஞ்சம் சிந்தியுங்கள். ‘என் வீட்டுக்காரருக்கு இந்த வீடு, மளிகைச் சாமான்கள், குழந்தை, வீட்டுப் பாடம் போன்ற வேலைகளெல்லாம் சரிப்பட்டு வராது. நான் பக்கத்தில் இருந்துதான் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு அவருக்கு நேரம் ஏது, குழந்தைகளுக்கு எது நல்லது என்பதெல்லாம் அவருக்குச் சுத்தமாகத் தெரியாது என்பது போன்ற சாக்குப்போக்குகள் சொல்லி, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதை விட்டொழியுங்கள். இதுமாதிரி பல சாக்குபோக்குகளைச் சொல்லித்தான் நாம் வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறோம்’’ என்று சொல்லும் இந்தப் புத்தக ஆசிரியை, இன்றைய பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களைச் (Go-Tos) சொல்கிறார். உடல்நலம் காக்க உடற்பயிற்சி செய்வது, நண்பர்களை அதிகரித்துக்கொள்ள நெட்வொர்க்கிங் செய்வது, நம்மைப்பற்றி நாலு பேருக்குத் தெரியவைக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது, நம்மை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள நன்கு தூங்குவது போன்றவைகளே அவை.

“வீட்டுப் பொறுப்பு என்னும் பந்து கையைவிட்டு நழுவிக் கீழே விழுந்துவிடாமல், மற்றொருவரிடம் பத்திரமாக வைத்துக்கொள்ளச் சொல்லித்தரும் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டீர்களென்றால், வாழ்வில் நீங்கள் நினைத்த அத்தனை விஷயங்களையும் சாதிக்கலாம்’’ என்று முடிக்கிறார் ஆசிரியை.

பணியிடத்தில் ஆண், பெண் இருபாலரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என நினைக்கும் நாம், வீட்டில் அதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறோமா என்கிற சிந்தனையை நமக்குள் ஏற்படுத்தும் புத்தகம் இது. நடுத்தரக் குடும்பத்துப் பெண் ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். சுயசரிதை வடிவில் எழுதப்பட்டு, பல நிஜவாழ்க்கை அனுபவங்களையும் அதிலிருந்து பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய  படிப்பினைகளையும் எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகத்தை, முன்னேறத் துடிக்கும் பெண்கள் அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்

குடும்பமா, வேலையா..?

ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் படித்துமுடித்த பெண்களிடத்தில், வேலை குறித்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டபோது, திருமணமான 42% பேர் குடும்பத்தைக் கவனிப்பதற்காக வேலையை விடப்போவதாகச் சொல்லியிருந்தனர். அவர்களில் 30 வயதைத் தொட்ட பெண்களில் பாதிப்பேர், அதிக வருமானம் தரும் கடினமான வேலையிலிருந்து குறைந்த சம்பளம் அளிக்கும் இலகுவான வேலைக்கு மாறியிருப்பதாகச் சொல்லியிருந்தனர். அதில் 9% பேர் குடும்பத்துக்காகப் பதவி உயர்வைத் துறந்ததாகக் கூறியிருந்தனர். வார்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் 1992-ல் படித்த பெண்களிடம் செய்யப்பட்ட ஆய்வில், 80% பேர் குழந்தை பெற்றுக்கொள்ள உத்தேசித்திருப்பதாகச் சொல்லி யிருந்தனர். ஆனால், 2012-ல் அதே மாதிரியான ஆய்வுக் கேள்விக்கு 42% பேரே குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாகக் கூறியிருந்தனர். அமெரிக்க கார்ப்பரேட் உலகில் உயர்ந்த பதவியை எட்டிய பெண்களில் 49% பேர், குழந்தை பெற்றுக்கொள்ளவேயில்லை.