நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது?

வாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது?
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது?

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : எனர்ஜி அடிக்ட் (Energy Addict)

ஆசிரியர் : ஜான் கோர்டன்

பதிப்பகம் :  TarcherPerigee

ந்த உலகம் ஆற்றல் உள்ளவர்களுக்கே சொந்தமானது. ஆனால், இந்த ஆற்றலை எங்கே இருந்து பெறுவது என்பதற்கான 101 வழிகளை ஜான் கோர்டன் எழுதிய ‘எனர்ஜி அடிக்ட்’ என்னும் புத்தகம், நமக்கு அழகாக எடுத்துச் சொல்கிறது.    

வாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது?

‘‘ஒரு கூட்டத்தில் நீங்கள் மிகுந்த ஆற்றல் கொண்ட யாரையாவது பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால், ஒன்றிரண்டு பேரை நாம் அடையாளம் காட்டுவோம். ஏனென்றால், ஒருவர் கொண்டுள்ள ஆற்றல் என்பதை அவருடைய வார்த்தைகள் மற்றும் உற்சாகத்தை வைத்து நாம் நம்முடைய கண்ணால் சுலபமாக  அடையாளம் கண்டுகொள்ளமுடியும். ஒரு சிலரால் மட்டுமே கடினமான காரியத்தைக்கூட லாவகமாகச் செய்ய முடிவதற்குக் காரணம், பிறவியிலேயே அவர்கள் அதிக எனர்ஜி கொண்டவர்களாக இருப்பதால் அல்ல. எனர்ஜி என்பது நம்முடைய எண்ணம், நாம் கேட்கும் விஷயங்களின் தன்மை, நாம் படிக்கும் விஷயம், நாம் கேட்கும் வார்த்தைகள் போன்றவற்றிலேயே இருக்கிறது. எனர்ஜி என்பதை திட்டமிடுதலின் மூலம் பெறமுடியும் என்பதே உண்மையான நிலை’’ என்கிறார் ஆசிரியர்.

நாம் நினைப்பதைப் போல் பிறவியிலேயே நாம் எனர்ஜி குறைவானவர்களாகப் பிறந்திருந்தாலுமே, நம்மால் அதிக எனர்ஜியை பெற்றுக்கொள்வதன் மூலம் ஒரு சிறந்த ஆற்றல் வாய்ந்த நபராக உருவெடுக்க முடியும் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜான். அதற்கு நீங்கள் ஒரு ஆற்றலுக்கான அடிமையாக (Energy Addict) ஆக மாறவேண்டும் என்கிறார். இது என்ன புதுசா... என்று கேட்கிறீர்களா?

‘‘பாசிடிட்டிவ் எனர்ஜியைப் பெறுவதற்கான அடிமையாகிவிட்டால், உங்களுடைய எனர்ஜி லெவலை அதிகரித்துக்கொண்டே போகலாம். அதிக அளவிலான எனர்ஜி என்பது அதிக அளவிலான ஆக்கப்பூர்வமான செயல்திறனைக் கொண்டு திகழ்வதற்கு வழிவகை செய்யும்.

எனர்ஜி அடிக்‌ஷன் கொண்டவர்கள் பல இடங்களிலிருந்து தங்களுக்குத் தேவையான பாசிட்டிவ் எனர்ஜியைப்  பெற்றுக் கொள்ளும் திறனைப் பெற்றுள்ளனர். மேலும், எங்கே அந்த எனர்ஜியைப் பெற முடியும் என்பதை அறிந்து கொள்வதில் திறமையானவர் களாகவும் இருக்கின்றனர்’’ என்கிறார் ஜான்.

எப்படி ஒருவரால் எனர்ஜியை அதிகப்படுத்த முடியும் என்கிறீர்களா? ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஒரு நிதி ஆலோசகர் ஆயிரம் ரூபாய் முதலீட்டை ஐயாயிரம் ரூபாயாக மாற்றும் அதே சமயத்தில், மற்றொரு நிதி ஆலோசகர் ஆயிரம் ரூபாய் முதலீட்டை இரண்டாயிரம் ரூபாயாக மட்டுமே மாற்றுகிறார். இதேபோல், அதிகத் திறன் கொண்ட எனர்ஜி அடிக்ட்டாக இருக்கும் நபர்கள், தாங்கள் பெறும் ஒரு குறிப்பிட்ட அளவு எனர்ஜியை மற்றவர்களைவிட பலமடங்கு அதிகமாக்கிக்கொள்ளும் கலையைக் கற்றறிந்தவர்களாக இருக்கின்றனர் என்கிறார் ஜான்.

வாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது?



அதிக எனர்ஜியைப் பெற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்த எனர்ஜி அடிக்ட்கள் அத்துடன் நின்றுவிடுவதில்லை. அவர்கள் உபயோகித்த எனர்ஜியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் பல செயல்களையும் செய்கின்றனர். அவர்கள் பல விஷயங்களைத் தங்களைச் சுற்றியிருக்கும் உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்கள், வாழும் பகுதியில் இருப்பவர்கள் போன்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களையும் வளம் பெறச் செய்து தொடர்ந்து அவர்களிடமிருந்து எனர்ஜியைப்  பெற்றுக்கொள்ளும் வண்ணம் செயல்படுகின்றனர்.

எனர்ஜி என்றால் என்ன என்பதை விளக்கிப் புரிய வைப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் என்றாலும், எனர்ஜி பற்றி நம்மால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.  நாம் உண்ணும் உணவு, செடிகளுக்கு சூரிய ஒளி, காருக்கு பெட்ரோல் போன்றதுதான் எனர்ஜி.

சில இடங்களை நினைத்தவுடன் நமக்கு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. சில இடங்களுக்குச் சென்றாலே நம்முடைய உற்சாகம் குறைகிறது. ‘பார்ட்டியா? அந்த ரெஸ்டாரென்டுக்குப் போகலாம்’ என்ற உற்சாகம் தோன்றுகிறது. ‘இது அவ்வளவு சரியில்லை. அந்த ரெஸ்ட்ராரென்ட்டின் ரேஞ்சே வேற’ என்கிறோம் இல்லையா? இதெல்லாம் எனர்ஜி மாறுதல் களால் தோன்றுவதுதான்.

அதேபோல், சிலரைச் சந்தித்தாலும், சில இடங்களுக்குச் சென்றாலும், நாம் பாசிட்டிவ் அதிர்வை உணர்கிறோம். அதற்கு எதிர்மறையாக சில இடங்களுக்குச் சென்றால் நெகட்டிவ் அதிர்வுகளை உணர்கிறோம். இதுவும் எனர்ஜி லெவல் மாறுதல்களினால் மட்டுமே என்கிறார் ஆசிரியர்.

அதிலும் சிலர் நம்முடைய எனர்ஜியை மொத்தமாக உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் வல்லமை கொண்டிருப்பார்கள். அவர்களை எல்லாம் எனர்ஜி காட்டேரிகள் என்று சலித்துக்கொள்கிறார் ஆசிரியர். கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், இந்த எனர்ஜி காட்டேரிகள் நம்மிடக்கும் இருக்கும் உற்சாகத்தை எப்படி உறிஞ்சி எடுக்கின்றன என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும். மாறாக, சிலருடன் உரையாடுவது, சிலர் பேச்சைக் கேட்பது, இசையைக் கேட்பது போன்ற செயல்களைச் செய்யும்போது நம்முடைய எனர்ஜி லெவல் தானாக உயர்வதை நாம் தெளிவாக உணரமுடியும். விளையாட்டு மைதானத்தில் கூக்குரலிட்டு சப்தம்போட்டு தங்களுடைய குழுவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் ரசிகர்கள், அவர்களுடைய எனர்ஜியை அவர்களின் குழுவுக்கு மாற்றுகின்றனர் என்கிறார் ஆசிரியர்.

எனர்ஜி என்பது உடல், பொருள் மற்றும் ஆன்மா (ஆவி) என்ற மூன்றுக்கும் தேவைப்படும் ஒரு விஷயமாகும். இந்த மூன்றிலும் எனர்ஜியை அதிகப்படுத்துவது எப்படி என்பது இந்தப் புத்தகத்தில் மூன்று பெரும் பிரிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்முன், நீங்கள் உங்களையே ஒரு எனர்ஜி ஆடிட் (தணிக்கை) செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி, எப்படி அந்த எனர்ஜி தணிக்கை செய்வது என்பதையும் விளக்குகிறார்.

உடலுக்கான எனர்ஜியை அதிகப்படுத்தும் பிரிவில் (39 உள்பிரிவுகள்) உங்கள் உடலை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்பதில் ஆரம்பித்து, உடலுக்கு முழுமையான உணவை அளிப்பது, காலையில் அதிகமாக உண்பது, காபி குடிப்பதைக் குறைப்பது, எனர்ஜியை அதிகரித்துக்கொள்வதற்கான இடைவேளைகளை எடுத்துக்கொள்வது, தொழில்நுட்பத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது  போன்ற பல விஷயங்களைச் சொல்கிறார் ஜான்.

இரண்டாவது பிரிவில் மனதின் சக்தியை (38 உள்பிரிவுகள்) அதிகரிப் பதற்கான வழிகளைச் சொல்லும் ஆசிரியர், எனர்ஜி  காட்டேரிகளை சமாளிப்பது எப்படி, எனர்ஜியானது எப்படி செயலுக்கான பலனைத் தரும் வகையில் மாற்றுவது, நமக்குள் இருக்கும் சக்தியை எப்படி நம்புவது, எப்படி அதை உலகுக்குக் காட்டுவது, வலிகளும், வருத்தங்களையும் ஏன் பரிசாக  நாம் கருதவேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களைத் தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர்.

மூன்றாவது பிரிவில் (19 உள்பிரிவுகள்) எனர்ஜியை பெற்றுக்கொள்ளும் நபராக மாறுவது எப்படி, எனர்ஜியை எப்படிப் பரிசளிப்பது, அதிர்ஷ்டம் மற்றும் கருணையின் மகத்துவத்தை உணர்ந்துகொள்வது, வாழ்க்கை உணர்த்தும் பாடங்களை எப்படிச் செவ்வனே உணர்வது, வாழ்க்கைக்கு எப்படி அறைகூவல் விடுப்பது, நம்பிக்கை எனும் ஆழ்கடலில் மூழ்கிப் பயனடைவது எப்படி என்பது போன்ற பல்வேறு விஷயங்களைச் சுவையான உதாரணங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர்.

இறுதியாக எனர்ஜியின் விதைகளை அனைவரின் மனதிலும் விதைக்கச் சொல்லும் ஆசிரியர், அதன் பலன்கள் ஒரு செடிக்கான விதையை விதைத்துப் பலன் பெறுவதுபோல நேரடியாக இருக்காது. ஆனால், என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு இடத்தில் நாம் போட்ட எனர்ஜி விதையின் பலனை நாம் அடைந்தே தீருவோம் என்கிறார் ஆசிரியர். அதேபோல், தொடர்ந்து உங்களின் அருகில் எனர்ஜி அடிக்ட்களை வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச்  சொல்லும் ஆசிரியர், அவர்களே நம்முடைய எனர்ஜி குறையாமல் இருப்பதற்கு உதவும் பேக்-அப் (back-up) போன்றவர்கள் என்கிறார்.

நாம் ஆற்றலுடன் செயல்படவேண்டிய காலமிது. நாம் ஆற்றல் குறையாமல் இருக்க செய்யவேண்டிய விஷயங்களைத் தெளிவாக எடுத்துச்சொல்லும் இந்தப் புத்தகத்தை முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் ஒருமுறை படிக்கலாம்!

 - நாணயம் விகடன் டீம்

வாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது?

ருச்சி சோயாவை வாங்கும் பதஞ்சலி!

தி
வால் நிறுவனமாக இருக்கும் ருச்சி சோயாவை ரூ.4 ஆயிரம் கோடிக்கு வாங்கத் தயாராகி வருகிறது பாபா ராம்தேவ் தலைமை யிலான பதஞ்சலி. சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ருச்சி சோயா   ரூ.12 ஆயிரம் கோடி கடனைக் கட்ட முடியாமல் தவித்து வருகிறது. ருச்சி சோயாவுடன் ஏற்கெனவே பதஞ்சலி ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. இந்த நிலையில், ருச்சி சோயா நிறுவனத்தை முழுமையாக வாங்க பதஞ்சலி முயற்சி செய்துவருகிறது. அதானி வில்மர், இமாமி அக்ரோ டெக் மற்றும் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனங் களும் ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க போட்டி போட்டு வருகின்றன. யாருக்குக் கிடைக்குமோ ருச்சி சோயா..?