தரமே மந்திரம்

To succeed, jump as quickly at opportunities as you do at conclusions.

-Benjamin Franklin​


மார்க்கெட்டில் ஒரு விஷயம் புதிதாக வருகிறதென்றால், அது நம் வேலைக்கு ஆபத்து விளைவிக்கும் என்று பயப்படுவது ஒருவகை. அதை ஒரு வாய்ப்பாக பாவித்து, நமக்கு என்ன எதிர்காலம் இருக்கிறதென்று பார்ப்பது இன்னொரு வகை. நல்லதொரு நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்று இருந்த இராம. செல்லப்பன், அப்படித்தான் எல்லோரும் பயந்து கொண்டிருந்த ஒரு விஷயத்தில், தனக்கான வாய்ப்பிருப்பதைக் கண்டார்.

​சேலம் மாவட்டம் சங்ககிரிதான் இராம. செல்லப்பனின் சொந்த ஊர். விவசாயக்குடும்பம்.  12வது வரை அரசுப்பள்ளிப் படிப்பை முடித்து சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக்கில், எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படித்தார். பிறகு கோவை ராமகிருஷ்ணா ஸ்டீல் நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை கிடைத்தது.

அங்கே பணிபுரிந்துகொண்டிருந்தபோது, மேலும் படிக்கும் ஆர்வத்தினால் கோவை, சி.ஐ.டி. கல்லூரியில் பி.இ - இன்ஜினீயரிங் படித்தார். வேலை பார்த்துக்கொண்டே படித்தது, அவருக்குப் பெரும் ப்ளஸ்ஸாக இருந்தது. மற்ற மாணவர்களைவிட, பாடத்தை வெகு சுலபமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பல்கலைக்கழக அளவில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றார்.

வின்னிங் இன்னிங்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எட்டாண்டுகள் அந்த நிறுவனத்தில் பணி. மேலும் அடைய நினைக்கிற வளர்ச்சிக்கு, சென்னைதான் சரியான ஊர் என்ற எண்ணம் வரவே, கோவையிலிருந்து சென்னை வந்தார். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், சிறு வயதில் அப்பா விதைத்த பிசினஸ் எண்ணம் விஸ்வரூபமெடுக்கிறது. படித்தது எலெக்ட்ரானிக்ஸ். மாநிலத்திலேயே டாப்பர். ஆனால் பார்க்கும் வேலை, ஆட்டோமொபைல். படித்ததை, சொந்த வாழ்வில்  சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்கிற எண்ணமும் வருகிறது.

மின்னணு சாதனங்களுக்கான வடிவமைப்பைத் தனியாகச் செய்து கொடுக்கிறார். நல்ல வரவேற்பு. 1984-85ல் அசோக் லேலண்ட் பணியிலிருந்து விலகுகிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எலெக்ட்ரானிக் பொருள்களை வடிவமைக்கும்போது எல்லாமே எண்கள்தானே! ஆகவே ‘நியூமரிக் இன்ஜினீயர்ஸ்’ என்று பெயர் வைக்கிறார்.

கணினி யுகத்தின் ஆரம்பம்.  ‘கம்ப்யூட்டர் வந்தா நமக்கெல்லாம் வேலை போயிடும்’ என்ற பேச்சுதான் அப்போதெல்லாம் இருந்தது. ‘ஆக, இனி கம்ப்யூட்டர்தான் இந்த உலகை, நம் வாழ்வைப் பெருமளவில் இனி ஆளப்போகிறது’ என்று உணர்ந்தார் இராம. செல்லப்பன்.

அப்படியானால், கணினிக்கு முக்கியமான தேவை என்னவாக இருக்குமென்ற கேள்வி எழுந்தது. ‘மின்சாரம் தடைபட்டா, அதுவரைக்கும் வேலை செஞ்சதெல்லாம் அழிஞ்சுடும்’ என்று கேள்விப்படுகிறார். ஆக, தடையில்லா மின்சாரம்தான் கம்ப்யூட்டருக்குத் தேவை.

அப்படி உருவானதுதான், தடையற்ற மின்சாரம் தரும் UPS தயாரிக்கும் யோசனை.  ஆனால், அப்படி ஒரு விஷயம் இராம. செல்லப்பன் படித்த பாடப்புத்தகங்களில்கூட இல்லை. அவரும், இந்தத் தொழில் தொடங்க இவருடன் பயணிக்கத் தயாராக இருந்த ஐந்து நண்பர்களுமாக சென்னை ஐஐடி, பெங்களூர் இண்டியன் இன்ஸ்டிட்யூட்  ஆஃப் சயின்ஸ் என்று நூலகங்களைத் தேடிப்போய் பல புத்தங்களைப் படித்து, அதுபற்றிக் கற்றுக்கொள்கிறார்கள்.

அப்படித்தான் 1985 ஜூன் மாதம்  முதன்முதல் யு.பி.எஸ் உருவானது. சதர்ன் எக்ஸ்ப்ளோசிவ் நிறுவனத்துக்கு அதைக் கொடுத்தார்.

மத்திய அரசின் மின்னணுத் துறைச் செயலராக இருந்த விட்டல், இவரது நிறுவன விழாவில் சொன்ன ஒரு விஷயத்தை நினைவுகூர்கிறார் இராம. செல்லப்பன்: “ ‘நீங்கள் உருவாக்கும் பொருளில் தரமிருந்தால், வாடிக்கையாளர்கள் உங்களிடம் வருவார்கள். தரம் இல்லையென்றால், அந்தப் பொருள் உங்களிடம் திரும்ப வரும்.’ இதுதான் அவர் சொன்னது. நான் உருவாக்கும் பொருளின் தரம் குறித்துதான் என் முழுக் கவனமும் இருக்கும். தரத்தில் நம்பிக்கை வைத்தால், அது வாடிக்கையாளர்களை உங்களிடம் கொண்டுவரும்” என்கிறார்.

முதன்முதலில் தயாரித்த அந்த யு.பி.எஸ், 16 வருடங்கள் தங்குதடையின்றிச் செயல்பட்டது என்பதே தரத்தின்மீது இவர் காட்டும் அக்கறைக்குச் சாட்சி. அதனாலேயே கம்ப்யூட்டர் பயன்படுத்திக்கொண்டிருந்த பல நிறுவனங்கள், இவருக்கு வாடிக்கையாளராகிறார்கள். விளம்பரம் கொடுக்காமலே வாடிக்கையாளர்கள் பெருக, அந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்.

படிப்படியாக பிரைவேட் லிமிடெட், பப்ளிக் லிமிடெட் என்று வளர்ந்து, 1996ல் ஐ.பி.ஓ வெளியிட்டார்கள். 2003ல் இலங்கையில் தொடங்கி, சிங்கப்பூர், மொரீஷியஸ், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா என்று பல இடங்களில் கிளைகள்.

வின்னிங் இன்னிங்ஸ்

2012. இப்போது யு.பி.எஸ் என்பதன் தேவையைத் தாண்டி, லேப்டாப்கள் எக்கச்சக்கமாக மார்க்கெட்டில் புழங்குகின்றன. 500 கோடிக்கும் மேல் டர்ன் ஓவர் என்ற நிலையில் நிறுவனம் இருக்க, அடுத்து இன்னொன்றில் காலடி எடுத்து வைக்கும் எண்ணம் வருகிறது இராம. செல்லப்பனுக்கு.
இனி எதிர்காலம் மாற்று எரிசக்திக்குத்தான் என்பதை உணர்ந்துதான் இதில் கால்பதிக்க நினைக்கிறார். மிகச்சரியாக, பிரபல நிறுவனமான Legrand இவர்களது நிறுவனத்தை வாங்கிக்கொள்ள விழைகிறார்கள். அப்படியே பிராண்ட், டெக்னாலஜி, பிஸினஸை அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். கொடுத்த அதே தினத்தில்  SWELECT என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்குகிறார். Solar Wind Electronics என்பதிலிருந்து வந்ததுதான் Swelect.

   மே 2012ல் ஆரம்பித்த நிறுவனத்தை இவருடைய அனுபவமும் உழைப்பும் வளர்ச்சிப் பாதையில் செலுத்துகிறது. 2013ல் பெங்களூரில் ஒரு சோலார் டெக்னாலஜி நிறுவனத்தை வாங்கி முழுக்க மாற்றி ‘ஸ்டேட் ஆஃப் ஆர்ட்’ தொழிற்சாலையாக மாற்றுகிறார். 100 மெகாவாட் திறனுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன அங்கே தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள்.

“ஒரு தொழில் ஆரம்பித்தால், அதைச் சார்ந்த எல்லா வேலைகளுக்கும் நீங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டால், முழுத்தரத்துக்கும் நீங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியும். அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்கும் உங்களுக்குமான பிணைப்பு இன்னும் வலுப்பெறும்” என்பது இராம. செல்லப்பன் சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட். அதனாலேயே, சேலத்தில் ஏற்கெனவே இருந்த தொழிற்சாலையை சோலார் பேனல் நிறுவத்தேவையான  அனைத்து உப சாதனங்களும் உற்பத்தியாகிற இடமாக மேம்படுத்துகிறார். 

 இந்திய அளவில் ரூஃப் டாப் சோலார் மின்சக்தி அமைப்பவர்களில் ஸ்வெலெக்ட்தான் நம்பர் 1. ஒரு கிலோ வாட்டில் தொடங்கி, பல  மெகா வாட் வரை,  4500க்கும் மேற்பட்ட ரூஃப் டாப் சோலார் நிறுவியிருக்கிறார்கள். கோவையில் மூன்று இரும்பு வார்ப்படத் தொழிற்சாலைகள்  ஆரம்பித்து அதிலும் டாப்பராக இருக்கிறது ஸ்வெலெக்ட்.  முறையான பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் கிடைப்பதுதான் சவாலாக இருந்தது. எனவே, பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியுடன் (MCET) இணைந்து ‘சோலார் ஸ்கில் டெவலப்மென்ட்’டுக்கான பாடத்திட்டம் உருவாக்கியிருக்கிறார்கள். வீட்டில் சோலார் பேனல் அமைத்தால், உருவாகும் மின்சாரத்தை அரசுக்கு நீங்கள் விற்கலாம். ஆனால், நீங்கள் வெளியூர் போய்விட்டால், ‘நெட் யூனிட்’டைக் கணக்கிடும் மீட்டர்கள் அரசால் முழுமையாக வழங்கப்படவில்லை.  அரசின் கொள்கைகள் காகித அளவில் இருந்தாலும், சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது இராம. செல்லப்பனின் ஆதங்கம்.

“முதல் பிசினஸான தடையற்ற மின்சாரம், மக்களின் தேவையாக இருந்தது. எங்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வந்தார்கள். சோலாரைப் பொறுத்தவரை, வேறு வழியிலும் மின்சாரம் கிடைக்குமென்பதால் நாங்கள் வாடிக்கையாளர்களைத் தேடிப் போகவேண்டும். எதுவாக இருந்தாலும் தேவையைப் புரியவைத்து, தரத்தோடு கொடுத்தால் சந்தையில் நாம் நம்பர் ஒன்னாக இருக்கலாம்” என்கிறார் இராம. செல்லப்பன்.

இராம. செல்லப்பனின் பிசினெஸ் மொழிகள்

* வாடிக்கையாளர்தான் உங்கள் அரசர். அவர்களுக்குக் கொடுக்கும் பொருளை தரத்துடன் கொடுத்தால், அவர்கள் உங்களை அரசராக்குவார்கள்.

*  உங்கள் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களின் சப்ளையர்களுக்கு உரிய நேரத்தில் பணம் கொடுத்து அவர்களை மாற்றாமல் வைத்துகொள்வது அவசியம். மூலப்பொருள்களை மாற்றிக்கொண்டே இருந்தால், தரத்தில் நிலையின்மை ஏற்படும். அது தொழிலை பாதிக்கும்.

* உங்கள் ஊழியர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நல்ல வேலைச் சூழலும், நல்ல சம்பளமும் மட்டுமே. ஒருவகையில்  பார்த்தால், நாம் அவர்களை வேலையில் வைத்திருக்கவில்லை. அவர்கள்தான் நம்மை இந்த வேலையில் வைத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism