Published:Updated:

உங்களுக்கு நேரம் செலவா, முதலீடா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உங்களுக்கு நேரம் செலவா, முதலீடா?
உங்களுக்கு நேரம் செலவா, முதலீடா?

நாணயம் புக் செல்ஃப்

பிரீமியம் ஸ்டோரி

புத்தகத்தின் பெயர்: இக்கரையா? அக்கரையா?

ஆசிரியர்: ஈ.பி.திருமலை

பதிப்பகம்: Jaico Publishing House

வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள நம் மனதுக்குள் நம்பிக்கை விதைகளைத் தூவக்கூடிய சில சுய முன்னேற்ற புத்தகங்களில் ஈ.பி.திருமலை எழுதிய ‘இக்கரையா? அக்கரையா?’ என்கிற புத்தகம் குறிப்பிடத்தக்கது. அந்தப் புத்தகத்திலிருந்து நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒருபகுதி இனி... 

ஒரு மிகப்பெரிய செல்வந்தர், இறக்கும் தருவாயில், தன் மூன்று மகன்களையும் அழைத்து, ஒரு போட்டி நடத்தப்போவதாகவும், அந்த போட்டியில் வெற்றி பெறுகின்ற ஒருவருக்கே தனது எல்லா செல்வத்தையும் அளிக்கப்போவதாகவும் வாக்களித்தார்.

ஒரு இருள் நிறைந்த அறையிலே ‘உங்களுக்குப் பிடித்தவற்றை நிரப்ப லாம்’ என்று போட்டியைத் துவக்கினார். முதல் மகன், அந்த அறையிலே அப்பாவிற்குப் பிடித்த விலையுயர்ந்த ஆபரணங்கள், துணிமணிகள், தின் பண்டங்கள் முதலியவற்றை நிரப்பினான். செல்வந்தர் திருப்தியாகவில்லை.

அடுத்ததாக வந்த இரண்டாவது மகன், அறை முழுவதையும் நிரப்பினால்தான் தந்தைக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்து, அறை முழுவதும் வைக்கோலை அடைத்துவிட்டு அப்பாவை ஆவலோடு பார்த்தான். செல்வந்தர் திருப்தியடையவில்லை.

உங்களுக்கு நேரம் செலவா, முதலீடா?

மூன்றாவது மகன் இருள் நிறைந்த அறை யிலிருந்து எல்லாவற்றையும் முற்றிலும் அகற்றி விட்டு, அறை நடுவே ஓர் அகல்விளக்கை மட்டும் ஏற்றி வைத்தான். இருள் மறைந்து ஒளி படர்ந்தது. தந்தையின் மனம் மகிழ்ந்தது. ‘அல்லவை தேய அறம் பெருகும்’ என்பது எல்லோருக்கும் விளங்கியது.

இறைவன் என்ற தந்தை 24 மணி நேரம் என்ற விலைமதிக்க முடியாத அன்பளிப்பை ஒவ்வொரு நாளும் பிரதிபலன் கருதாமல் மனிதர்களின் மேம்பாட்டிற்காக அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத்துபவரின் சித்தத்தைப் பொறுத்தே வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ நிகழ்கின்றது. ஒரு சிலரோ முதல் மகனைப்போல, பொன்னைப் பற்றியும், பொருளைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும், விலைவாசியின் ஏற்ற இறக்கத்தைப் பற்றியும், உணவு, உடை, உல்லாசம் என்பதைப் பற்றியும் பெரும்பாலான நேரங்களில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

வேறு சிலரோ, இரண்டாவது மகனைப்போல, சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியோ, உலக அளவில் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேடு பற்றியோ, அரசியலில் ஏற்படும் அன்றாட மாற்றங்களைப் பற்றியோ, கடந்த காலத்தில் நடந்துமுடிந்த தேவையில்லாத நிகழ்வுகள், அனுபவங்கள் பற்றியோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், மூன்றாம் மகனைப் போன்று எண்ணிக்கையில் வெகுசிலர் மட்டும்தான் வாழ்க்கையில் அடைந்தே தீரவேண்டும் என்ற மிகப்பெரிய குறிக்கோளை மட்டும் எண்ணத்தில் பதித்து, அந்த இதய தீபம் ஒளி விடுவதற்காக தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்யும் எண்ணத்தோடு, ஒவ்வொரு நாளையும் திட்டமிடுவார்கள், செயல்படுவார்கள். கருதிய நோக்கம் கைகூடும் வரை உற்சாகம் குறையாமல், தொடர்ந்து உழைப்பார்கள். ஒவ்வொரு நொடியையும், பொன்னைப்போல பார்த்துப் பார்த்து பயன்படுத்துவார்கள்.

வாழ்க்கையில் கோழியா, பருந்தா?

கோழி எப்போதும் கூட்டம் கூட்டமாக வசிக்கும். மண்ணிலே அகப்படுகின்ற பூச்சிப்புழுவை எல்லாம் கொத்தித் தின்னும். குப்பைக் கூளங்களிலே வாசம் செய்யும். அது பறந்து சென்று, கூரைமீது அமர்ந்துகொள்வதைப் பெரும் சாதனையாக நினைத்துக்கொள்ளும். ஆனால், பருந்து மற்ற பறவைகளுடன் கலந்து விடாமல், மிக உயரத்தில் தனியாகப் பறந்து, தன் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கும்.

பருந்துக்கு இலக்கும், பார்வைக் கூர்மையும் தனித்து இயங்கும் மனோபாவமும் இயற்கையில் அமைந்துவிட்டது. அது இரை தேடும்போதுகூட உயரத்தில் இருந்துகொண்டு, தன் கூரிய கண்களால் பூமியில் இருக்கும் ஒரு பாம்பை கொத்திச் சென்று விடும். கோழியும், பருந்தும், பறவையினத்தைச் சேர்ந்த தென்றாலும், அதன் சேர்க்கையும், நோக்கமும் மாறுபட்டது, வேறுபட்டது.

உங்களுக்கு நேரம் செலவா, முதலீடா?

அதைப்போல்தான் உலகத்தில், 80 சதவிகித மக்கள் ஒரேமாதிரியான வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், வித்தியாசமான 20 சதவிகித மக்கள் மட்டும் வித்தியாசமான வேலை களைச் செய்கிறார்கள். வித்தியாசமான சிலருடன் மட்டுமே பழகுகிறார்கள்.

நீங்கள் வாழ்க்கையில் உங்கள் லட்சியத்தை அடைய விரும்புகிறீர்களா, வாழ்க்கை வளமாகவும் நலமாகவும் அமைய வேண் டுமா? அப்படியானால், வித்தியாசமான வேலைகள் செய்கின்ற 20 சதவிகித மக்களைப் போல, நாமும் ஒருவர் என்று நம்ப வேண்டும். அந்த 20 சதவிகித மக்களின் பழக்கவழக்கங்கள், குணாதிசயங்கள், மனோபாவங்கள் போன்றவற்றை நாம் எப்படி வளர்த்துக்கொள்வது எனச் சிந்திக்க வேண்டும்.

சாதாரண வாழ்க்கையின் எதிரி, சிறந்த வாழ்க்கை என்பார்கள். ஒரு சாதாரண மனிதனுக்கும், சிறந்த மனிதனுக்கும் இடையே உள்ள வித்தியாசம், நேரத்தைச் செலவிடு கிறார்களா அல்லது முதலீடு செய்கிறார்களா என்பதைப் பொறுத்தே அமைகிறது.

நாம் இப்போது செய்துகொண்டிருக்கிற வேலையையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், நமக்கு இப்போது கிடைக்கும் பலன் மட்டும்தான் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும். நாம் பாதையை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாம் பயணம் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்துவிடுவோம்.

நம்மில் பலர் அடிக்கடி எடுத்ததற்கெல்லாம் “நான் மிகவும் பிஸி, பிஸி என்று ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக் கலாம். ஒரு தொழிலதிபர் தன் தொழிலாளியைப் பார்த்து, “நீ எப்போதும் பிஸி என்று சொல்கிறாயே, எந்த விஷயத்தில் பிஸியாக இருக்கிறாய், நீ பிஸியாக இருப்பதனால் எத்தனைப் பேர் பலனடைகிறார்கள்?” என்று கேட்டவுடன் திடுக்கிட்ட தொழிலாளி, “எனக்கு நேரமே போத வில்லை, அதனால்தான் கூறினேன்” என்றான்.

வாழ்க்கை என்பது ஒரு வழிப்பயணம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் நின்றுக்கொண்டு, “எங்கள் ஊருக்கு டிக்கெட் கொடு” என்று கேட்டால், கொடுப்பார்களா? டிக்கெட் கொடுப்பதற்கு முன்பாக ஒரு படிவத்தைக்கொடுத்து, பயணியின் பெயர், வயது, ஆணா / பெண்ணா அல்லது குழந்தையா, எந்த ஊருக்குச் செல்ல வேண்டும், எந்த தேதி, எந்த நேரம், எந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டும், எந்த வகுப்பில் பயணம் செய்ய வேண்டும் என்ற தகவல்களை யெல்லாம் தெரிந்துகொண்டபின், ரயில்வே பட்டியலில் பார்த்து இடமிருந்தால்தான் பணம் பெற்றுக்கொள்வார்கள். அதற்குப்பின்பே பயணச்சீட்டுக் கொடுப்பார்கள்.

ஒரு சாதாரண பயணத்திற்கே இத்தனைக் கேள்விகள் என்றால், வாழ்க்கை என்ற நீண்ட, நெடிய ஒரே வழிப் பயணத்திற்கு எத்தனை கேள்விகள் கேட்க வேண்டும், எத்தனை மைல் கற்களை கடக்க வேண்டும்? சாதாரண பயணத்திலாவது திரும்ப வரும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், வாழ்க்கை என்கிற நெடும் பயணத் தில் திரும்பிவர முடியுமா? அதனால் தான் விலை மதிக்க முடியாத நேரத்தைப் பற்றிய நிர்வாகம் மிகமிக அவசியம், அவசரமும் கூட.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர், நடமாடும் தகவல் மையமாக உடனுக்குடன் அலைபேசி மூலமாகவும், தொலை பேசி மூலமாகவும், தகவல்களைப் பெற்றுக்கொண்டும், கொடுத்துக் கொண்டும், இரவு பகல் தெரியாமல் ஓயாமல் இயங்கிக்கொண்டு வருகிறார்கள். சம்பந்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், 24 மணி நேரமும் இயந்திரம்போல் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். படிப்பதற்கோ, உறவுகளை மேம்படுத்துவதற்கோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கோ, வந்தவர் களை வரவேற்பதற்கோ, இன்முகமாகப் பேசுவதற்கோ நேர மில்லாமல் தவிக்கும் சிலரைப் பார்த் திருக்கலாம். இதைத் துணிச்சலாக எதிர்நோக்குகின்ற மனோபாவம் வளர்த்துக்கொள்ளாத சூழ்நிலையில் குற்றவுணர்வுகளுடன் தன்னைக் குடும்பத்திலிருந்து விலக்கிக் கொண்டு, தேவையில்லாத சூழல் களில் தங்களை மறைத்துக்கொள் கிறார்கள். ஆக, செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாவிட்டாலும், செய்ய வேண்டாத வேலைகளைச் செய்வதாலும் நேரம் விரயமாகிறது.

நண்பர் ஒருவர் நேரம் போத வில்லை என்பவர்களைப் பார்த்து, நகைச்சுவையாக, ‘போதாத நேரம்’ என்று சொல்வார். பயன்படுத்தப் படாத நேரங்கள் எல்லாம் போதாத நேரங்கள்தானே!

வெற்றியாளர்களின் நேர நிர்வாகம்

சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலின் நிர்வாக இயக்குநர், தன்னுடைய மொபைல் போனை உபயோகப்படுத்தும் முறை எல்லோரையும் வியக்க வைக்கும் ஓர் அற்புதம். அவர் எப்போது யார் போன் செய்தாலும் எடுக்கவேமாட்டார். உடனடியாக கால் செய்தவருக்கு மரியாதை நிமித்தமாக குறுஞ் செய்தி மூலமாக, தான் அலுவலக வேலையில் இருப்பதால், விரைவில் தொடர்புகொள்வதாக ஒரு செய்தி அனுப்புவார். மறக்காமல் மாலையில் 3 மணியிலிருந்து 4 மணிக்குள்ளாக அத்தனை அழைப்புகளையும் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசுவார். அவர் செய்கின்ற பணியைச் செம்மையாகச் செய்வதற்கு சுற்றுப்புறச் சூழ்நிலை ஒரு தடை இல்லை என்பதையும், நேரத்தையும், சக்தியையும் எப்படிச் சேமித்துப் பாதுகாப்பது என்பதைப் பற்றியும் ஒரு நடைமுறைப் பயிற்சியை அவரிடம் கற்றுக்கொள்ளலாம்.

போன் அடித்தவுடன் எடுக்கவேண்டும் என்றும்,  உடனுக்குடன் பேச வேண்டும் என்றும், என்னென்ன பேச வேண்டும் என்பது பற்றி யாரும் நமக்கு சொல்லித் தரத் தேவை யில்லை. உதாரணமாக, நாம் விமானத்தில் பயணப்படுகிற போது, யாராக இருந்தாலும் பயணப்படுகிற நேரத்தில், மொபைலைப் பயன்படுத்தக்கூடாது. மற்றவர்கள் கட்டளைக்குக் கட்டுப்படுகின்ற நாம், நம் லட்சியங்களை அடைவதற்காக, ஏன் சில கட்டளைகளைப் பின்பற்றக்கூடாது?

நேரத்தைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் குழம்புகிறவர்கள்  மேற்கண்ட விஷயங்களை மனதில் இருத்திக்கொண்டால், ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்து சாதிக்க முடியும்! 

நேரத்தை ஏன் மதிக்க வேண்டும்?

நண்பர் ஒருவர் யார் வீட்டிற்குச் செல்வதாக இருந்தாலும், அவர்களிடம் அனுமதி பெற்றே செல்வார். காரணம், பரபரப்பான உலகத்தில் நம்மைப்போல பிறரும் நிறைய செயல்களைக் கிடைத்த குறுகிய காலத்தில் செய்துவருகிறார்கள். நாம் அனுமதி பெறாமல் சென்று ஒருவரிடம் பேசுகிறபோது, ஏற்கெனவே வேறொருவருடன் அவர் பேசிக்கொண்டிருக்கலாம். அல்லது வேறு நிகழ்ச்சிக்காக அவர் குடும்பத்தினருடன் புறப்பட ஆயத்தமாக இருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், நாம் அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்தால், அவர்கள் நம்மை முழு மனதுடன் வரவேற்க முடியுமா? வரவேற்க முடியாத சூழ்நிலைகளில், அவர்கள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்? நாம் எவ்வளவு வருத்தப்படுவோம்? பிரச்னைகள் முன்தள்ளப்படும், உறவுகள் பின்தள்ளப்படும். இதற்கெல்லாம் காரணம், நேரத்தைச் சரியாக நிர்வாகம் செய்யாததுதான். இது ஒரு பெரிய குற்றமல்ல; ஆனால், இதை விரைவில் சரிசெய்துதான் ஆக வேண்டும். நேரத்தை நாம் மதிக்காவிட்டால், நேரம் நம்மை மதிக்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு