Published:Updated:

``என் சொத்துகளை மகனுக்குக் கொடுத்து ஏமாந்துவிட்டேன்!" - ரேமண்ட்ஸ் முன்னாள் தலைவர் விஜய்பட் சிங்கானியா

கருத்து வேறுபாடு, குடும்பப் பகை காரணமாக அந்த வீட்டிலிருந்து விஜய்பட் சிங்கானியா வெளியேற்றப்பட்டு, 7 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு ஒரு வீட்டில் தற்போது வசித்துவருகிறார். ஒரு காலத்தில் இந்தியாவிலுள்ள பணக்காரர்களில் ஒருவராக விளங்கிய விஜய்பட், வாடகை வீட்டுக்கு வந்ததோடில்லாமல் அந்த வாடகையையும் கொடுக்கமுடியாமல் சிரமப்பட்டார்.

``என் சொத்துகளை மகனுக்குக் கொடுத்து ஏமாந்துவிட்டேன்!" - ரேமண்ட்ஸ் முன்னாள் தலைவர் விஜய்பட் சிங்கானியா
``என் சொத்துகளை மகனுக்குக் கொடுத்து ஏமாந்துவிட்டேன்!" - ரேமண்ட்ஸ் முன்னாள் தலைவர் விஜய்பட் சிங்கானியா

``என் மகனின் உணர்வுபூர்வமான மிரட்டல் காரணமாக, என் சொத்துகளை மகனுக்குக் கைமாற்றி ஏமாந்துவிட்டேன்'' என்று வருந்துகிறார் ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜய்பட் சிங்கானியா. 1925-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரேமண்ட்ஸ் நிறுவனம், தனது நூறாவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த நிறுவனத்தின் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பகைமை காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக அவ்வப்போது செய்திகளில் அடிபட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜய்பட் சிங்கானியாவுக்கும் தற்போது தலைவராக இருக்கும் அவரது மகன் கெளதம் ஹரி சிங்கானியாவுக்கும் இடையிலான சொத்துத் தகராறுதான் அனைத்துக்கும் காரணம்.

சிறிய டெக்ஸ்டைல்ஸ் ஷோரூமாக இருந்த ரேமண்ட்ஸ் நிறுவனத்தை, உலகின் `நம்பர் 1' கம்பளி ஆடைத் தயாரிப்பு நிறுவனமாக உயர்த்தியவர் விஜய்பட் சிங்கானியா. வயது மூப்பின் காரணமாக தனது 78-வது வயதில், 2015-ம் ஆண்டில் தன் வசம் இருந்த 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது நிறுவனப் பங்குகள் அனைத்தையும் தனது ஒரே மகன் கெளதம் ஹரி சிங்கானியா வசம் ஒப்படைத்தார். தற்போது 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை மகன் நிர்வகித்துவருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடைப்பட்ட பிரச்னையில் தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான ஜே.கே.ஹவுஸ் என்ற 36 மாடிக் கட்டடமும் முக்கியக் காரணமாக உள்ளது. இந்தக் கட்டடம் முதன்முதலில் 1960-ம் ஆண்டில் 14 மாடிகளுடன் கட்டப்பட்டது. பிறகு, அந்த அடுக்குமாடிக் கட்டடம் புனரமைக்கப்பட்டு 36 மாடிக் கட்டடமாக உயர்த்தப்பட்டது. முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி வீடான ஆன்டிலியா, இந்தியாவின் மிக உயரமான தனியார் வீடு என்ற பெருமைபெற்றது. அதற்கு அடுத்த உயரமான தனியார் வீடு ஜே.கே. ஹவுஸ். இந்த வீட்டில் சிங்கானியா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர் தனித்தனியாக வசித்துவந்தனர். 

கருத்துவேறுபாடு, குடும்பப் பகை காரணமாக அந்த வீட்டிலிருந்து விஜய்பட் சிங்கானியா வெளியேற்றப்பட்டார். தற்போது அவர், 7 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு ஒரு வீட்டில் வசித்துவருகிறார். ஒருகாலத்தில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒருவராக விளங்கிய விஜய்பட், வாடகை வீட்டுக்கு வந்ததோடு அல்லாமல் அந்த வாடகையையும் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டார். அதன் பிறகு, தனது மகன் மீதே வழக்குத் தொடுத்த விஜய்பட், தனது வீட்டுக்கான வாடகையை ரேமண்ட்ஸ் நிறுவனம் செலுத்தவேண்டும் என்றும், ஜே.கே.ஹவுஸில் தனக்கும் உரிய உரிமை வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார். தனது சொத்துகளை மகனை நம்பிக் கைமாற்றியதிலிருந்தே தான் புறக்கணிக்கப்படுவதாகவும், பெற்றோர்கள் தங்களது சேமிப்பு முழுவதையும் பிள்ளைகளுக்குக் கொடுப்பது தவறு என்ற உண்மையை அனைவருக்கும் எடுத்துரைப்பேன் என்றும் கூறினார்.

விஜய்பட் சிங்கானியா வெறும் தொழிலதிபராக மட்டுமன்றி, விளையாட்டு வீரராகவும், சாகச வீரராகவும் திகழ்ந்தார். தனது 67-வது வயதில் 70,000 அடி உயரத்துக்கு ராட்சத பலூனில் விண்ணில் பறந்து உலக சாதனை படைத்தார். அவர் பறந்து சென்ற உயரம், கிட்டத்தட்ட ஆக்சிஜன் மிகக் குறைவாக இருக்கும் தொலைவாகும். ஏற்கெனவே 64,997 அடி உயரத்துக்குப் பறந்து அமெரிக்க வீரர் படைத்திருந்த சாதனையை முறியடித்தார். இவரது தொழில் திறமையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தன் மகன் மீதான வழக்கு குறித்து அவர் கூறுகையில், ``என் மகன் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்துகொள்வான் என்ற நம்பிக்கையில்தான் அவனை முதலில் நீதிமன்றத்துக்கு இழுக்கவில்லை. ஆனால், தற்போது பேராசை பிடித்தவனாக இருப்பதால் வேறுவழியின்றி நீதிமன்றப் படி ஏறவேண்டியுள்ளது" என்றார். மேலும், 2007-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில், `பிள்ளைகள் பெற்றோரின் தேவையைப் பூர்த்திசெய்யாவிட்டால், பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்துகளைத் திரும்பப் பெறலாம்' என்று உள்ளது. அதன்படிதான் தன் மகனுக்கு அன்பளிப்பாக வழங்கிய தனது சொத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறப்போவதாகவும் கூறினார். தன் மகனிடம் இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைத்தது தனது முட்டாள்தனத்தின் உச்சம் என ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தன் தந்தையைப் பற்றி அவரின் மகன் கெளதம் சிங்கானியா கூறும்போது, ``ஒரு மகனாக நான் செயல்படுவதற்கும் ஒரு நிறுவனத்தின் தலைவராகச் செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு நிர்வாகக் குழு உறுப்பினராக, அவரது முறைகேடான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது" என்றார்.

ரேமண்ட்ஸ் நிறுவனம், கடந்த 2018, இரண்டாவது காலாண்டில் 50 சதவிகித லாபத்தைக் காட்டியிருந்தது. சமீபத்தில் எத்தியோப்பியாவில் பெரிய தொழிற்கூடத்தைத் தொடங்கியுள்ளது. உலகில் உள்ள 55 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. இப்படி பிரபல நிறுவனத்தின் தலைமையில் நடந்துவரும் மோதல்கள் வருத்தமளிப்பதாக உள்ளது. ரேமண்ட்ஸ் உடை என்றாலே தனி கெளரவம் பிறக்கும். ஆனால், அந்த நிறுவனத்தின் தலைமையில் நடக்கும் நிகழ்வுகளோ..!