Published:Updated:

புதிய வேலைவாய்ப்புகள்... உருவாகாமல் போனதற்கு என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதிய வேலைவாய்ப்புகள்... உருவாகாமல் போனதற்கு என்ன காரணம்?
புதிய வேலைவாய்ப்புகள்... உருவாகாமல் போனதற்கு என்ன காரணம்?

நாணயம் புக் செல்ஃப்சித்தார்த்தன் சுந்தரம்

பிரீமியம் ஸ்டோரி

ன்றைக்குத் தேர்தல் களத்தில் அனைத்துத் தரப்பினராலும் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் வேலைவாய்ப்பு. இந்தியாவில் அதிகமானோர் அவர்களுக்குப் பொருத்தமற்ற வேலை யிலும் குறைவான சம்பளத்திலும் வேலை செய்து வருவதுடன், அதிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு களும் இல்லாமல் இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டிய நிலையில், சில லட்சம் வேலைகளே உருவாக்கப்பட்டது. புதிய வேலைகளை உருவாக்குவதில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் தவறிவிட்டது என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.  

புதிய வேலைவாய்ப்புகள்... உருவாகாமல் போனதற்கு என்ன காரணம்?

இன்றைக்கு இருக்கிற வேலை வாய்ப்பு தொடர்பான பிரச்னை பற்றி மட்டும் பேசாமல், 2025-ம் ஆண்டில் நாம் எதிர்கொள்ள உள்ள நெருக்கடி குறித்தும் விரிவாக, பலதரப்பட்ட ஆதாரங்கள் மற்றும் உதாரணங்களுடன் எழுதப்பட்டு சரியான சமயத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம்தான் `ஜாபோனாமிக்ஸ்.’ இதை எழுதியிருப் பவர் பிரபல மூத்த வணிகப் பத்திரிகையாளர் கெளதம் தாஸ்.

என்னென்ன தடைகள்?

இந்தியப் பொருளாதாரம் சுமார் 7% வளர்ந்து வந்தாலும் வேலை உருவாக்கம் என்பது மிகவும் குறைவாக இருப்பதுடன், பலரும் பொருத்தமற்ற வேலையில் சேர்ந்து விருப்பமின்றி, வேறு வழி யில்லாமல் அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது உற்பத்தித்திறன் மற்றும் திறமைகள் சார்ந்த பிரச்னை களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.  

அரசின் நிபந்தனைதான் காரணமா?

நூலாசிரியர் இந்தப் புத்தகத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். அதில் முதல் பகுதி, வேலைக்கான தேவை குறித்ததாகும். போதுமான வேலைகள் இல்லாதது ஏன்?

புதிய வேலைவாய்ப்புகள்... உருவாகாமல் போனதற்கு என்ன காரணம்?

இதற்குக் காலங்காலமாக சொல்லப் பட்டு வரும் ஒரு முக்கியமான காரணம், நமது நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகள், நிபந்தனைகள், சட்டங்கள் என்பதுடன், புதிய தொழில் நுட்பத்தினால் உற்பத்தித் திறனில் ஏற்பட்டுவரும் மேம்பாடு (குறைவான வேலையாள்கள், அதிக உற்பத்தித்திறன்), உலகமயமாக்கல் சுணக்கத்தால் பாதிக்கப்படும் ஏற்றுமதி ஆகியவையும் காரணங்களாக இருப்பதாக ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இதற்கு ஓர் உதாரணமாக, பெங்களூருவில் இயங்கிவரும் எஸ்.எல்.என் டெக்னாலஜி என்கிற நிறுவனத்தைக் குறிப்பிடுகிறார். ஆயிரம் நபர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய அளவுக்குச் சாத்தியமுள்ள இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 80 பேர் மட்டுமே! 

இந்த நிறுவனம் பாதுகாப்புத் துறைக்கும், விண்வெளித் துறைக்கும் தேவையான பொருள்களைத் தயாரித்து வருகிறது. தொழிற் சாலை விரிவாக்கத்துக்காக இந்த நிறுவனம் வாங்கிய இடத்தில் அதைக் கட்ட முடியவில்லை. ஏனெனில், அதற்குப் பக்கத்தில் கோவில் ஒன்று இருப்பதால், அந்தப் பகுதியைச் சுற்றி வசித்துவரும் மக்கள் தொழிற்சாலை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்த, அவர்களை சமாதானப் படுத்துவதற்காக தங்களது நிலத்தில் ஒரு பகுதியை நிறுவனம் `நன்கொடை’யாக வழங்கி, பிரச்னைக்கு முடிவுகண்டாலும் அதற்கென்று செலவழிக்கப் பட்ட நேரத்தில் பல ஆர்டர்களை அந்த நிறுவனம் இழக்க நேரிட்டது. விளைவு, இன்றைக்கும் அது சிறிய நிறுவனமாகவே இயங்கி வருகிறது.

இதுபோல, கர்நாடக அரசு நலிவுற்றிருந்த சர்க்கரை ஆலை ஒன்றைப் புதுப்பிக்கையில் அங்கிருந்த சிவசக்தி சர்க்கரை ஆலை பாதிப்புக்குள்ளானது. காரணம், இரண்டு சர்க்கரை ஆலைகளுக்கும் இடையே குறைந்த பட்சம் 15 கி.மீ தூரம் இருக்க வேண்ண்டுமென்கிற சட்டம் நந்தியாகக் குறுக்கே நிற்கிறது.  

புதிய வேலைவாய்ப்புகள்... உருவாகாமல் போனதற்கு என்ன காரணம்?

இன்னோர் உதாரணம், 33 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் பி.பி.ஓ துறையில் சிறிது சிறிதாக அறிமுகமாகிவரும் ரோபோட்டுகள். பல மனிதர்கள் செய்யக்கூடிய வேலைகளை சில இயந்திரங்கள் செய்ய ஆரம்பித்திருப்பதால், வேலைவாய்ப்பில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டி ருப்பதாகக் கூறுவதுடன், விவசாயம் பார்த்து நொடித்துப் போனவர்கள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்குச் செல்வதும் இன்னொரு காரணம் எனக் குறிப்பிடுகிறார்.

பணியாளர் சிக்கல்

இரண்டாவது பகுதியில், பணியாள்களின் வருகை (supply of labour) எப்படியிருக்கிறது என விவரிக்கையில், தொழிலாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்னையுடன் மிகவும் மோசமான கல்வி, இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் அவர்களின் இடத்துக்கே செல்ல விரும்புவது ஆகியவையும் தகுதியான பணியாளர் கள் கிடைப்பதில் இருக்கும் சிரமங்களாக இருக்கின்றன என்கிறார்.

உயராத வருமானம்

மூன்றாவது பகுதியில், சிஸ்கோ நிறுவனத் தலைமை அதிகாரி, `உலகத்தில் வேலைக்கான சிறந்த உத்திகளை – திறன் மேம்பாடு, ஸ்டார்ட்அப் இயக்கம், ஸ்மார்ட் சிட்டிஸ், நகர்ப்புறத்துடன் இணைப்பில் இருப்பது (connectivity) ஆகிய விஷயங்களில்  இந்தியா சிறந்துவிளங்குவதாகவும், அரசின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் இதை முன்னெடுத்துச் செல்லவேண்டும்’ என்றும் கூறுவதுடன் ஆரம்பமாகிறது. இந்தப் பகுதியின் சாராம்சம் என்னவெனில், தொழில்முனைவோர் மேம்பாடு, இடம்பெயர்ந்து வரும் பணியாளர்கள்/தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை இருப்பிட வசதி, திறன் மேம்பாடு மற்றும் பணி யாளர்கள் சட்டங்களில் செய்ய வேண்டிய மறுபரிசீலனை போன்றவையாகும். 

புதிய வேலைவாய்ப்புகள்... உருவாகாமல் போனதற்கு என்ன காரணம்?

திருப்பூர், குருக்ராம் போன்ற பகுதிகளில் நிலவிவரும் தொழில் துறை நிலைமை குறித்தும் எழுதியிருக்கிறார். தொழிலாளர் பிரச்னையால் மேற்கு வங்கத்திலிருந்து திருப்பூர் நோக்கி நன்கு பயிற்சி பெற்ற 59 தொழிலாளர்கள் வருகிறார்கள். அதில் ஒருவரான ரஸ்மிதா ரூ.7,500 சம்பளத்தில் வேலையில் சேர்கிறார். பத்து வருடங்களில் தனது சம்பளம் பத்து மடங்காக அதிகரிக்கும் என்பது அவரது கனவாக இருக்கிறது. ஆனால், சிறிது காலத்துக்குப்பின் அவர் வேலையை விட்டுவிட்டு டெய்லரிங் தொழில் ஆரம்பிக்கிறார். டெய்லரிங் தொழிலில் இரண்டு பேரை வேலைக்கு அமர்த்துகிறார். தொழிலை விரிவுபடுத்த நினைக்கிறார். ஆனால், கடன் கிடைக்கவில்லை, வெளியில் 36% வட்டியில் கடன் வாங்கித் தொழிலை விரிவாக்க அவர் விரும்பவில்லை. ஆக, அவர் பணியாளாக இருந்து முதலாளியாக உயர்ந்தாலும் அவரது வருமானம் குறைவாகவே இருக்கிறது; வாழ்க்கையும் போராட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது. 

இதற்கு நேர்மாறாக, கணவன் – மனைவியால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமான கோவையைச் சேர்ந்த பிரிகால் (Pricol) நிறுவனம், இன்றைக்கு 5000 பேருக்கு வேலை கொடுக்கக்கூடிய நிறுவனமாகப் பிரமாண்ட வளர்ச்சி அடைந்தி ருக்கிறது. இதற்குக் காரணமாக அவர்கள், `குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்களிடம் சில பொறுப்பு களைத் தைரியமாக கையளிக்க வேண்டும், தொழில் என்றால் ரிஸ்க் எடுக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தயங்கினால் வளர்ச்சி என்பது மிகவும் கடினம்’ என்கிறார்கள்.

இதுதவிர, ஃப்ரீலான்ஸ் பணியாளர்கள், ஓலா, ஊபர் போன்ற செயலியை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனங்களில் அவ்வப்போது டிரைவராகப் பணியாற்றுவது, அர்பன்க்ளாப், சீரோஸ் (Sheroes) நிறுவனங்களில் ப்ளம்பர், அழகுக்கலை நிபுணர்களாகப் பணிபுரிவது என நிரந்தர வேலையில்லாமல் தேவைப்படும்போது அல்லது தேவையிருக்கும்போது தற்காலிக வேலை சார்ந்த பொருளாதாரத்தையும் (on demand gig economy) ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் பலர் பலனடைந்தாலும், நிரந்தர வருவாய், சமூகப் பாதுகாப்பு, வேலைக்கேற்ற சம்பளத்தைப் பணியாளர்களால் நிர்ணயிக்க முடியாத குறை என சில பிரச்னைகளும் இருக்கின்றன.

அதிகரிக்கும் இடைவெளி

அரசால் நன்கு சம்பளம் தரக்கூடிய வேலைவாய்ப்புகளை ஏன் உருவாக்க முடியவில்லை, இந்திய நிறுவனங்களினால் ஏன் அதிக வேலைகளை உருவாக்க முடியவில்லை, சிறிய நிறுவனங் கள் தொடர்ந்து சிறிதாகவே இருப்பதற்கான காரணங்கள் என்ன என சில முக்கியமான கேள்விகளை எழுப்பி, அதற்கான சில காரணங்களைக் குறிப்பிட்டிருந்தாலும் வேலை யில்லாமை, வேலை இருந்தாலும் சரியான வேலையில் இல்லாமல் இருப்பது என இருப்ப வருக்கும் இல்லாதவருக்கான இடைவெளி அதிகரிக்கும்போது சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகள் உருவாகும் என எச்சரிக்கும் ஆசிரியர், அதைத் தடுப்பதற்கான சில வழிமுறை  களையும் சொல்லி இருக்கிறார்.

நம் நாடு எதிர்கொண்டிருக்கும் சிரமமான பிரச்னையான வேலைவாய்ப்பு குறித்து செறிவான புள்ளிவிவரங்களைப் பகுத்தாய்ந்து, மேற்கோள்கள், உதாரணங்கள்மூலம் சரியான தருணத்தில் எளிதான மொழிநடையில் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தை, நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை கொண்டவர்கள் அனைவரும் ஒருமுறை படிக்கலாம்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு