Published:Updated:

தவறு செய்வது தவறல்ல! - ‘தவறு’ குறித்த சரியான பார்வை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தவறு செய்வது தவறல்ல! - ‘தவறு’ குறித்த சரியான பார்வை!
தவறு செய்வது தவறல்ல! - ‘தவறு’ குறித்த சரியான பார்வை!

நாணயம் புக் செல்ஃப்

பிரீமியம் ஸ்டோரி

ல்லா காரியங்களையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் நம் ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்கிறது. எல்லா விஷயங்களையும் சரியாகச் செய்கிறவர்கள் கொண்டாடப்படும் மனிதர்களாக இருக்கிறார்கள். தவறுகளைச் செய்கிறவர்கள் தவிர்க்கப்படும் நபர்களாக இருக்கிறார்கள். ஆனால், எல்லா விஷயங்களையும் எல்லாராலும் எப்போதும் சரியாகச் செய்ய முடியுமா என்பது முக்கியமான கேள்வி.   

தவறு செய்வது தவறல்ல! - ‘தவறு’ குறித்த சரியான பார்வை!

பல விஷயங்களைச் சரியாகச் செய்வதுதான், இந்த உலகில் நாம் சிறப்பாக வாழ வழிவகை செய்யும் என்பதே நம்மில் பலருடைய எண்ணமும். சரியாகச் செய்வதற்கு எதிர்மறையானது தவறு செய்வது. தவறு செய்தல் பற்றி நம் கண்ணோட்டம் எப்படி யிருக்கிறது, தவறு குறித்த எண்ணங்களால் நாம் நொறுங்கிப்போகாமல் எவ்வாறு காத்துக்கொள்வது, தவறுகள் தரும் அனுகூலங்கள் என்னென்ன... இப்படியான பல தகவல்களைத் தருகிறது கத்ரின் ஷுல்ஸ் எழுதிய `Being Wrong’ என்ற புத்தகம்.

தவறு தரும் சோர்வு

ஒரு தவற்றைச் செய்துவிட்டால், நாம் முட்டாள் என நினைத்துக்கொள்கிறோம்; வெட்கப்பட்டு வேதனைப்படுகிறோம். தவறு என்பதை ஒரு பிரச்னையாகவே நாம் பார்க்கிறோம். சரியான விஷயங்களை நாம் செய்யும்போது உற்சாகம் பொங்கு கிறது. ஆனால், தவறாக ஒரு விஷயத்தைச் செய்யும்போது, உற்சாகம் குறைந்து, மந்தகதியை அடைந்துவிடுகிறோம். ஆக மொத்தத்தில், ஒரு காரியத்தில் நாம் செய்யும் தவறு, நம்மை இக்கட்டான மனநிலைக்குக் கொண்டுசென்று வீழ்ச்சியடையச் செய்கிறது.

தவறு செய்வது தவறல்ல! - ‘தவறு’ குறித்த சரியான பார்வை!இது ஆரம்பநிலை. தொடர்ந்து தவறுகள் செய்யும்போது என்ன ஆகிறது..? `இதுகூடத் தெரியவில்லை, நம்மால் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லையே...’ என்பதால் வரும் சோம்பேறித்தனம், மனச்சீரழிவு போன்றவற்றுக்கும் நாம் ஆளாகிவிடுகிறோம்.

தவறு செய்யத் தூண்டும் காரணிகள்

இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், நாம் ஏன் தவறு செய்கிறோம் என்பது குறித்து ஆராய்ச்சி செய்தார். கவனமின்மை, கவனச்சிதறல், ஈடுபாடு இல்லாமை, தேவையான அளவுக்குத் தயாராக இல்லாதது, நிஜமான முட்டாள்தனம், துணிவின்மை, தற்புகழ்ச்சி, மனஉணர்வுகள் சமநிலையில் இல்லாமல்போதல்,  அடிப்படைக் கருத்தியல், சமூக அல்லது இனரீதியான ஏற்றத் தாழ்வுகள், வலிய அல்லது வலிமையற்ற நிலையில் நாம் இருக்கிறோம் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுவது போன்றவையே நாம் தவறிழைப்பதற்கான காரணிகள் என்பதை அவர் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தார்.

தவறு செய்வது தவறல்ல! - ‘தவறு’ குறித்த சரியான பார்வை!

நாம் தவறிழைக்க வாய்ப்புள்ள சில விஷயங்களில் நிச்சயம் தவறு செய்தே தீருவோம். எப்படி ஒரு மனிதனுக்குப் பச்சாதாபம், உற்சாகம், தீர்க்கம், தைரியம் என்ற பல குணாதிசயங்கள் இருக்கின்றனவோ, அதேபோன்று தவறிழைக்கும் குணமும் அவனிடம் இருக்கவே செய்கிறது. எனவே, இந்தப் பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் தவறிழைப்பார்கள் என உறுதியாகச் சொல்லலாம் என்கிறார் ஆசிரியர்.

 `தவறு’ குறித்து வருந்த வேண்டாம்

இப்படித் தவறிழைப்பது, மனிதனுடன் ஒட்டிப் பிறந்த ஒரு குணமாக இருக்கும்போது, ஒரு தவற்றைச் செய்துவிட்டு நாம் ஏன் மன உளைச்சலுக்கும், சங்கடத்துக்கும் ஆளாகவேண்டும்? உலகத்தில் இருக்கும் அனைவருமே எல்லாவற்றையும் சரியாகச் செய்து கொண்டிருக்கும்போது, நாம் மட்டும் ஏதோ ஒற்றை ஆளாய் தவறு செய்ததைப்போல் நினைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

இதில் மற்றொரு முக்கிய விஷயம், ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்து முடித்தல் என்பது, ஒரு மனிதனாக நம்மைச் செப்பனிடுவதை விட, தவறாகச் செய்துவிடுதல் என்பதே நாம் யார் என்கிற உண்மையான அடையாளத்தை நமக்கு உணர்த்தும். இவ்வளவு நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கும் `தவறு’ குறித்து நாம் வருந்துவது தவறான ஒரு விஷயம்தானே!

கலாசாரமே காரணம்

இந்த வருத்தத்துக்கான காரணம் என்ன தெரியுமா? ஒருவர் தவறு செய்தால் அதைத் தூற்றும் நமது கலாசாரம்தான். ஒருபக்கம் தவற்றைத் தூற்றும் நாம், மறுபக்கம் தவறு என்பது மனித இயல்பு என்று பேசிக் கொண்டிருப்பதுதான் நகைமுரண்.

சரியாகச் செய்தபோது `நான் செய்தேன்’ என்று சொல்லி பீற்றிக்கொள்ளும் நாம், தவறு செய்யும்போது தவறு என்பது மனித இயல்பு என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ளவே முயல்கிறோம். நான் தவறு செய்துவிட்டேன் என்று நேரிடையாக ஒப்புக்கொள்வது என்பது, ஏதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலையில் வேறு வழியின்றி நடக்குமே தவிர, சாதாரணமாக யாரும் தன்னுடைய தவற்றினை ஒப்புக்கொள்வதே யில்லை.

தவறு செய்வது தவறல்ல! - ‘தவறு’ குறித்த சரியான பார்வை!

செய்த தவற்றை நாம் ஒப்புக்கொள்ளாததற்குக் காரணம் என்ன தெரியுமா? உலகமே இந்தப் பண்பை ஊக்குவிப்பதற்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். இதற்கு விதி விலக்காக விமானப் போக்குவரத்து மற்றும் உயிர்காக்கும் மருந்து உற்பத்தி போன்ற ரிஸ்க் அதிகமுள்ள துறைகளில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள நிறைய முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஏனைய துறைகளில் இதுபோன்ற முயற்சிகள் பெரிதாக எடுக்கப் படுவதில்லை என்பதே நிஜம்.

பழிபோடும் குணம்

நாம் செய்யும் தவற்றுக்குப் பிராயச்சித்தம் என்பது உலகத்தில் உள்ள எல்லா மதங்களிலும் ஏதாவது ஒருவகையில் சொல்லப் பட்டே இருக்கிறது. குற்றவாளிகளுக்கான தண்டனைகளில்கூட இன்றைக்குத் தவற்றைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப் படுகிறது.

ஆனால், நம் வாழ்வில் நாம் என்ன செய்கிறோம்? நண்பர்களுடன் ஒரு விஷயத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறோம். பாதி வாக்குவாதத்தில் நம்முடைய நிலைப்பாடு தவறு என்பது நன்றாகப் புரிந்தாலும் நாம் ஒப்புக்கொள்வோமா? எதையாவது சொல்லி வீண்வாதமே செய்வோம்.

வாழ்க்கையில் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்வதற்கான  கட்டாயச் சூழல் வந்தால் `தவறுகள் நடந்து விட்டன’ என்று மேம்போக்காகச் சொல்லிவிட்டுத் தப்பிக்கவே பார்ப்போம்.

மற்றவர்கள் தவறு செய்து நாம் அதைக் கண்டு பிடித்துவிட்டால், ‘நீதான் தவறு செய்துவிட்டாய்’ என்று கூறி அதை நிலைநிறுத்தத்தான் நாம் விவாதம் செய்வோம் இல்லையா? அதைவிட,  `நான் அப்பவே சொன்னேன். நீ கட்டாயம் தவறு செய்வாய் என்று. நடந்துவிட்டது பார்த்தாயா’ என்று நம்முடைய சரியான கணிப்புத்திறனைவேறு மெச்சிக்கொள்வோம்.

தவறு என்பது சரியானதே

நம்முடைய தவறுகள் நம்மை மாற்றுப் பார்வையைப் பார்க்க வைப்பதற்குப் பதிலாக, தவறு என்பதை நாம் மாற்றுப் பார்வைக்கு ஆட்படுத்துவதை வழக்கமாகக் கொண்டி ருக்கிறோம்.

இந்தப் புத்தகம், இந்தக் கண்ணோட்டத்தை மாற்றுவதற்காகவே எழுதப்பட்டுள்ளது. தவறுகள் என்பது நம்முடைய நேரம், பணம் மற்றும் மனதை எக்கச்சக்கப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன என்பதனாலேயே இந்தப் புத்தகம் அவசியமாகிறது.

இந்தப் புத்தகம், 30 நாளில் தவறுகள் இல்லாமல் வாழக் கற்றுக்கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகமல்ல; தவறு என்பதே தவறு எனச் சொல்லாமல், தவறு என்பது சரியானதே என்பதை விளக்கும் புத்தகம்.

மனிதன் புரியும் தவறுகள் குறித்த தெளிவான ஒரு பார்வையை ஏற்படுத்தும் இந்தப் புத்தகத்தை நாம் அனைவருமே கட்டாயம் ஒருமுறை படிக்க வேண்டும்.

- நாணயம் விகடன் டீம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு