Published:Updated:

பச்சை, மஞ்சள், நீலம்... சாக்பீஸ் தயாராகும் கதை!

பச்சை, மஞ்சள், நீலம்... சாக்பீஸ் தயாராகும் கதை!
பச்சை, மஞ்சள், நீலம்... சாக்பீஸ் தயாராகும் கதை!

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், பள்ளிகளுக்குத் தேவையான சாக்பீஸ்களைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன சாக்பீஸ் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள். தமிழகத்தில் தூத்துக்குடி, மதுரை, கும்பகோணம் மற்றும் தர்மபுரியில்தான் அதிகளவிலான சாக்பீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

தர்மபுரியில் உற்பத்தியாகும் சாக்பீஸ்களுக்கு கர்நாடகாவில் அதிகளவு வரவேற்பு உள்ளதால், சாக்பீஸ் உற்பத்தியில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.  

சாக்பீஸ் உற்பத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ள முனியப்பனைச் சந்தித்துப் பேசினோம்., ``ஐடிஐ படித்து முடித்த நான் உடல் ஊனமுற்றதால், அரசாங்க வேலை கிடைக்கும் என 15 ஆண்டுகளுக்கு முன் அரசு வேலைக்கு பல வகையிலும் முயன்றேன். ஆனால் கிடைக்கவில்லை. இனியும் சும்மா இருக்கக் கூடாது என்றுதான் சாக்பீஸ் தயாரிப்பில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று, போதுமான அளவுக்கு வியாபாரம் செய்து வருகிறேன். 

பச்சை, மஞ்சள், நீலம்... சாக்பீஸ் தயாராகும் கதை!

சாக்பீஸ் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள் உப்பளங்களிலிருந்து கிடைக்கும் ஜிப்சம் என்பதால், அதை தூத்துக்குடியிலிருந்து இறக்குமதி செய்கிறோம். ஜிப்சத்தை நீருடன் கலந்து அச்சில் வார்த்து எடுக்கும்போது நீள் வடிவில் சாக்பீஸ் தயாராகிறது. அச்சில் பதிக்கும்போது ஒட்டாமல் இருக்க, முந்திரி எண்ணெய்யை அச்சில் தடவுகிறோம். கலர் சாக்பீஸ் தேவையென்றால், பவுடரில் சேர்க்கும் நீருடன் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் என கலர் பேஸ்ட் கலக்கி, அச்சில் வார்த்து எடுத்த சாக்பீஸ்களை வெயிலில் இரண்டு நாள் காயவைத்தால், சாக்பீஸ் தயாராகிவிடும்.

மூன்று வகையான அட்டைப்பெட்டிகளில் 100, 120, 140 என்ற எண்ணிக்கைகொண்ட சாக்பீஸ் பெட்டிகளை விற்பனைக்குக் கொண்டு செல்கிறோம். இதன் விலை 15 முதல் 19 ரூபாய் வரை இருக்கும். 140 சாக்பீஸ் கொண்ட பெட்டியில் மட்டும் வெரைட்டி கலர் சாக்பீஸ்களைக்கொண்டிருக்கும் இந்தப் பெட்டியின் விலை, 29 ரூபாய்'' என்றார்.

பச்சை, மஞ்சள், நீலம்... சாக்பீஸ் தயாராகும் கதை!

முனியப்பனிடம் சாக்பீஸ் மார்க்கெட் நிலவரம் கேட்டதற்கு...

``தமிழ்நாட்டில் அரசுத் தரப்பில் எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. தலைமை ஆசிரியர்களே கொள்முதல் செய்வதால் முறையான நிலையான ஆர்டர் கிடைப்பதில்லை. நான் தர்மபுரி மாவட்டத்துக்கு மட்டும் விற்பனை செய்கிறேன். என் மொத்த மார்க்கெட்டெல்லாம் கர்நாடகாதான். தற்போது கர்நாடகா முழுவதும் சாக்பீஸ் சப்ளை செய்கிறேன். கர்நாடகாவில் நிலையான ஒரு மார்க்கெட் கிடைத்ததற்கு, நம் ஊர் சாக்பீஸின் தரம்தான் காரணம்.''    

பச்சை, மஞ்சள், நீலம்... சாக்பீஸ் தயாராகும் கதை!

சாக்பீஸ் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் தண்டபாணியிடம் பேசினோம்.

``இந்த சாக்பீஸ் தயாரிக்கும் வேலையை அஞ்சு வருஷமா செய்றேன். ஒரு நாளைக்கு 60,000 சாக்பீஸ் நான் மட்டுமே தயாரிக்கிறேன்! இதுக்கு 250 கிலோ ஜிப்சம் தேவைப்படுது. 50 கிலோ ஜிப்சம் சாக்பீஸ் தயாரிச்சா, 150 ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு 750 ரூபாய் கூலி கிடைக்கும்'' என்றார்.

சாக்பீஸ் உற்பத்தியைத் தொழில் நிறுவனமாக நடத்திவரும் முனியப்பனின் எதிர்காலத் திட்டம் டஸ்ட் (தூசி) இல்லாத சாக்பீஸ் உற்பத்தி செய்துவதுதான்.

``ஆசிரியர்கள் பலரும், டஸ்ட் இல்லாத சாக்பீஸ் உற்பத்தி செய்து தருமாறு கேட்கிறார்கள். ஆனால், டஸ்ட் இல்லாத சாக்பீஸ் உற்பத்தி செய்யும் மெஷின் 25 லட்சம் ரூபாய். அந்த மெஷின் வாங்க வேண்டும் என்று வங்கியில் லோன் கேட்டேன். அதற்காக என் வங்கிப் புத்தகத்தையெல்லாம் கொண்டுபோய்க் காட்டினேன். `இதெல்லாம் ஒரு தொழிலா?' என்று கேட்டு, லோன் கொடுக்க வங்கி மேலாளர் மறுத்துவிட்டார்'' என வருத்தத்தோடு தெரிவித்தார் முனியப்பன்.