Published:Updated:

வெற்றிக்கு வித்திடும் உணர்வுகள் !

வெற்றிக்கு வித்திடும் உணர்வுகள் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

மிகப் பெரிய கடைக்குள் நுழைகிறோம். பல ஆயிரம் பொருட்கள் நமக்கு முன்பு கொட்டிக்கிடக்கிறது. இதில் எதை வாங்குவது, எதை வாங்காமல் விடுவது என்பதில் நமக்கு ஆயிரத்தெட்டு கேள்விகள், குழப்பங்கள். விலையைப்பார், டிசைனைப்பார், இது உனக்குத் தேவையா என்று பார், தரம் நன்றாக இருக்கிறதா என்று பார் என நமது மூளை தொடர்ந்து நமக்கு கட்டளை இட்டுக்கொண்டே இருக்கும். அதையெல்லாம் நாம் கேட்போமா? டிசைன் நல்லா இருக்கு. விலையைப் பார்க்காம வாங்கிட வேண்டியதுதான் என்று முடிவெடுக்கிறோம். இதைத்தான் எமோஷனாமிக்ஸ் என்கிறார் இந்த புத்தகத்தை எழுதிய டேன் ஹில்.

வியாபார உலகில் பொருட்களை வாங்குவதில் நம் மூளையைவிட நமது மனம், நம் அறிவைவிட நமது உணர்வு  எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறது? இந்த மனதை, உணர்வுகளை சரியாகப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்தினால் பிஸினஸில் எப்படி ஜெயிக்கலாம் என விலாவாரியாக எடுத்துச் சொல்கிறது இந்த புத்தகம். இந்த புத்தகத்தை எழுதிய டேன் ஹில் சாதாரண ஆளல்ல, பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் நடத்தைப் பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தவர். சென்சோரி லாஜிக் என்கிற நிறுவனத்தை நடத்திவரும் இவர், மக்களின் மனதைக் கொள்ளை கொள்வதற்கு ஒரு பொருள் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிற யோசனை தருகிறவர்.

வெற்றிக்கு வித்திடும் உணர்வுகள் !

மிக்கி மவுஸ் என்கிற உலகப் புகழ் பெற்ற கதாபாத்திரத்தை உருவாக்கிய வால்ட்டிஸ்னியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரியும். தர்க்கரீதியாகச் சிந்தித்து முடிவு செய்யும் ஒரு பிஸினஸை தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வால்ட் டிஸ்னியால் முடியவில்லை.  ஆனால், மனிதனுக்குள் பொதிந்துகிடக்கும் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் சிரிக்க வைப்பதில் அவர் சிகரம் தொட்டார். அதுவே அவரை ஜெயிக்கவும் வைத்தது.

வெற்றிக்கு வித்திடும் உணர்வுகள் !

பிஸினஸில் அவர் ஜெயிக்க ஜெயிக்க, மிக்கி மவுஸின் சந்தோஷமான முகம் இன்னும் பிரகாசமானது. உணர்வுகளைத் தூண்டினால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதுதான் வால்ட் டிஸ்னியின் பிஸினஸ் ரகசியம் என்கிறார் டேன் ஹில்.

அறிவைவிட அசாத்தியமான சக்தி கொண்டவை உணர்வுகள் என்பதற்கு சில ஆராய்ச்சி முடிவுகளை தருகிறார் புத்தக ஆசிரியர். அந்த முடிவுகள் சுவாரஸ்யமானவை. கிட்டத்தட்ட 55 சதவிகிதம் அளவுக்கு நமது முகம் நம் மனதைப் பிரதிபலிக்கிறது. நம்முடைய குரலும் கிட்டத்தட்ட 38 சதவிகிதம் அளவுக்கு நம் மனதையே பிரதிபலிக்கிறது. எனவே, சரியான வார்த்தைகளை நாம் சொல்லவில்லை என்றாலும் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை முகம் உடனே காட்டிவிடும். (கடையில் நான்கு சேலைகளை நம் முன் போடும் கடைக்காரர் ஒரு சேலையில் மட்டும் நம் கவனம் செல்வதை பார்ப்பார். அந்த சேலையையோ அல்லது அது மாதிரியான சேலைகளையோ நமக்கு காட்டி, கட்டாயம் ஒரு சேலையையாவது வாங்க நம்மைத் தூண்டுவார்!)

மூளையில் உதிக்கும் சிந்தனையைவிட மனதில் தோன்றும் உணர்வுகள் ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பயணம் செய்யும். ஒரு பொருளை பார்த்தவுடன், வேண்டும் அல்லது வேண்டாம் என்கிற நமது விருப்பத்தை அடுத்த நொடியே நம் முகம் காட்டிவிடும். இந்த உணர்வுதான் செயலுக்கு அடித்தளமாக அமைக்கிறது. இந்த உணர்வுக்கு ஆதரவாக மூளையும் செயல்படும்பட்சத்தில் அந்த செயல் முழுமை அடைகிறது. இந்த செயல்பாட்டின் இடையில் மூளை என்னதான் சொன்னாலும் நம் மனம் நினைத்ததையே கடைசியில் நாம் தேர்வு செய்வோம். (அந்த டிசைன் நல்லாயில்லே; அந்த சட்டையை வாங்காதே என்று பக்கத்தில் இருப்பவர் சொன்னாலும், எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு என்று அடம்பிடித்து ஒரு பொருளை வாங்க வைப்பதே உணர்வின் தூண்டுதலால் ஏற்படும் முடிவுதான்!)

வெற்றிக்கு வித்திடும் உணர்வுகள் !

உலகப் புகழ்பெற்ற பிராண்டுகள் நம் மனதை கொள்ளைகொள்வதற்கு காரணம், அவை எழுப்பும் உணர்வுகள்தான். எந்த பிராண்ட் மனிதர்களிடம் உணர்வுகளை எழுப்பவில்லையோ, அது நிச்சயம் ஜெயிக்காது. (ஒரே பொருளாக இருக்கும் இரண்டு பிராண்டுகளில் ஒன்று பிய்த்துக்கொண்டு போகும்! இன்னொன்று சுமாராகவே விற்பனை ஆகும்! காரணம், அந்த பிராண்டுகளால்  வாடிக்கையாளர்களிடம் எழுப்பப்படும் உணர்வுதான்!)

ஒரு வாடிக்கையாளரின் மனதைக் கவர்ந்து, வாங்கும் உணர்வைத் தூண்ட ஒரு பொருளில் எதிலெல்லாம் மாற்றம் செய்யலாம்? வடிவமைப்பு, விளம்பரம், விற்பனை, விற்பனைச் சேவை, வாடிக்கையாளர்களை மதித்து நடப்பது, பிராண்டிங் என எல்லாவற்றிலும் வாடிக்கையாளர்களை வாங்கத் தூண்டும் வகையில் உணர்வுகளை எழுப்பலாம் என்று சொல்லும் டேன் ஹில், இதற்கு உதவியாக இருக்கும் உளவியல் டெக்னிக்குகள் பற்றியும் இந்த புத்தகத்தில் விவரமாக சொல்கிறார்.

பிஸினஸை தொடங்க இருப்பவர்கள், ஏற்கெனவே பிஸினஸ் நடத்துபவர்கள், ஏம்.பி.ஏ. மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு