Published:Updated:

சூப்பர் லாபம் தரும் சூட்சுமங்கள்!

கே.நீரஜா, டைரக்டர், பி.எஸ்.ஜி. இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ்(பி) லிட்

பிரீமியம் ஸ்டோரி
##~##

எல்லோருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பொருளாதாரத்தின் அடிப்படையே லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான். லாப நோக்கே மனிதர்களை கடின உழைப்பிற்குக் கொண்டு செல்கின்றது. லாப நோக்கே மனிதர்களை ரிஸ்க் எடுக்க வைக்கிறது. லாப நோக்கம் மட்டுமே உலகத்தில் பல்வேறுவிதமான வளர்ச்சிகளையும் கொண்டு வந்துள்ளது.

இப்படி லாப நோக்கமே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தப் படுவதால்தான் பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கின்றது. சந்தையில் சாதாரண லாபம் பார்ப்பது உங்களுடைய எண்ணமாக இல்லாவிட்டாலோ அல்லது மற்ற சராசரி முதலீட்டாளர்களைவிட அதிகப்படியான லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் கொண்டிருந்தாலோ நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் ஹோவர்ட் மார்க்ஸ் எழுதிய இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கின்றார்.

டிரெண்டை ஃபாலோ செய்பவர்களாகத்தான் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் இருக்கின்றார்கள். ஆனால், வெற்றிகரமான முதலீட்டாளர்களோ டிரெண்டை ஒருபோதும் ஃபாலோ செய்வதேயில்லை என்று தெளிவாகச் சொல்கின்றார். வெற்றிகரமான முதலீட்டாளர்கள் ரிஸ்க்கை கையாளுவதில் திறமை மிகுந்தவர்களாக இருக்கின்றார்கள் என்கிறார் அவர்.

சூப்பர் லாபம் தரும் சூட்சுமங்கள்!

ரிஸ்க் என்பது குறித்த ஒரு அருமையான விளக்கமும் தருகின்றார். ரிஸ்க் என்பது மறைந்து கிடக்கும் விஷயம். யாராலும் அதனை அளவிட முடியாது. ரிஸ்க்கை பார்த்தவர்கள் கிடையாது. ஆனால், நஷ்டத்தைப் பார்த்தவர்கள் பலர் உண்டு. ரிஸ்க் நஷ்டம் இல்லை. ரிஸ்க் ஒரு கெடுதலைச் சந்திக்கும்போதுதான் நஷ்டம் உண்டாகின்றது. ரிஸ்க் ஒரு கெடுதலைச் சந்திக்கும் வரை ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. ரிஸ்க் இல்லாத போர்ட்ஃபோலியோவே உலகத்தில் கிடையாது என்கிறார்.

எல்லாம் ஒழுங்காய்ப் போகின்றவரை ரிஸ்க் போர்ட்ஃபோலியோவினுள் இருந்தபோதும் நஷ்டம் வருவதில்லை. ஏதாவது நெகட்டிவ்-ஆக நடந்தால் மட்டுமே போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ரிஸ்க் நஷ்டத்தைக்கொண்டு வந்துவிடுகிறது. எனவே, நஷ்டமே பார்க்காத முதலீட்டாளர் ரிஸ்க்கை முழுமையாக அகற்றியவர் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்கின்றார். என்ன ரிஸ்க் இருக்கின்றது என்று தெரியாமலே ஒரு ஷேரில் முதலீடு செய்வதுதான் மிகப் பெரிய தவறு என்கின்றார்.

சுலபமான ஒரு உதாரணத்தின் மூலம் ரிஸ்க்கைப் புரிந்துகொள்ள வைக்கிறார் ஹோவர்ட் மார்க்ஸ். ஆயுள் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் நிச்சயம் ஒருநாள் இறந்துபோவார்கள் என்பது தெரியும். ஆனாலும், ஆயுள் காப்பீட்டை அவை தொடர்ந்து வழங்கிக்கொண்டுதான் வருகின்றன. பாலிசி எடுக்கும் முன்னர் டாக்டர்களை வைத்து பாலிசிதாரரை பரிசோதனை செய்கின்றது. பல்வேறுவிதமான வயது, தொழில், ஊரில் இருப்பவர்களை ஒரு குரூப்பாகச் சேர்த்து கணக்குவைத்துக்கொள்கிறது. இவ்வாறு பல்வேறுவிதங்களில் பாலிசிதாரர்களுக்கு உறுதியாக வரப்போகும் மரணம் எனும் ரிஸ்க்கை மேனேஜ் செய்கின்றது என்கின்றார் அவர்.

சூப்பர் லாபம் தரும் சூட்சுமங்கள்!

பெரும் இறக்கங்களும், நிறைய வாலட்டைலிட்டியும் அவ்வப்போது சந்தையில் வந்து போகும் என்பதை எதிர்பார்த்தே முதலீடு செய்யவேண்டும் என்கிறார். நீண்ட நாட்களுக்குப் பெரிய இறக்கமோ, வாலட்டைலிட்டியோ இல்லாது போனால் மிகவும் ஜாக்கிரதையாக சந்தையில் செயல்பட ஆரம்பிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றார் அவர்.

ரிஸ்க்கை கன்ட்ரோல் செய்வதுதான் நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் சிறந்த வழி. ரிஸ்க்கைத் தவிர்க்க நினைப்பது ரிட்டர்னை தவிர்க்க நினைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.

சந்தையில் ஓல்டு (வயதான) இன்வெஸ்டர்களைப் பார்ப்பீர்கள். சந்தையில் போல்டு (தீவிர தைரியமிக்க) இன்வெஸ்டர்களைப் பார்ப்பீர்கள். ஆனால், ஓல்டான போல்டு இன்வெஸ்டரைப் பார்க்க முடியாது என்ற பஞ்ச் டயலாக்கைச் சொல்வதன் மூலம் சந்தையில் வெற்றி பெற பதற்றமில்லாத அதீத நிதானம் தேவை என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லியிருக்கின்றார்.

மொத்தத்தில் முதலீட்டில் சூப்பர் லாபம் பார்க்க மொத்தம் இருபது மிக முக்கிய விஷயங்களை இந்தப் புத்தகத்தில் ஹோவர்ட் மார்க்ஸ் கூறியுள்ளார். இந்த இருபது விஷயங்களும் நிஜமாகவே முக்கியமானவைதான். ஹோவர்ட் மார்க்ஸ் 'ஓக் ட்ரீ கேப்பிட்டல்’ என்ற கம்பெனியின் தலைவர். அந்த கம்பெனியின் வாடிக்கையாளர்களுக்கு அவர் அனுப்பிய இன்வெஸ்ட்மென்ட் பிலாசபி குறித்த தகவல்களின் (மெமோக்கள்) தொகுப்பாக இந்தப் புத்தகம் இருந்தபோதிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு இது நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு