Published:Updated:

உங்கள் வாழ்க்கையை எப்படி அளவிடுகிறீர்கள்?

உங்கள் வாழ்க்கையை எப்படி அளவிடுகிறீர்கள்?

பிரீமியம் ஸ்டோரி

ம் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நமக்குக் கிடைக்காமலே இருப்பது, திருப்தி என்கிற உணர்வு. ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்துக்கு மேல் அலுவலகத்தில் உழைத்தாலும் வேலையில் நமக்குத் திருப்தி இருப்பதில்லை. ஒன்றுக்கு ஒன்பது வீடு வாங்கியபிறகும் திருப்தி என்கிற எண்ணம் பலருக்கும் வருவதே இல்லை. கோடி கோடியாக பணம் சேர்த்தாலும் போதும் என்கிற திருப்தி வருவதே இல்லை.

 அதிருப்தியோடு வாழ்க்கை முழுக்க வாழ்ந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. இந்த திருப்தியை நமது வாழ்வில் எப்படி அடைவது? அதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? மிகப் பெரிய பிஸினஸ் நிறுவனங்களிடம் இருந்து இதற்கான பாடங்களை எப்படி படிக்கலாம்? என்பதைப் பற்றி எல்லாம் இந்தப் புத்தகத்தில் மிக விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் க்ளேட்டன் எம்.கிறிஸ்டென்சென்.

உங்கள் வாழ்க்கையை எப்படி அளவிடுகிறீர்கள்?

இவரது பின்னணி, ஆச்சரியம் தரக்கூடியது. பிஸினஸ், மேனேஜ்மென்ட் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர். மேனேஜ்மென்ட் துறையில் உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் ஹார்வேர்டு பிஸினஸ் ஸ்கூலில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். உலக அளவில் பெரும் பெயரோடு விளங்கும் பல நிறுவனங்கள் இவரிடம் ஆலோசனைக் கேட்டுதான் அடுத்த யுக்தியை அமைத்துக்கொண்டன. போர்ப்ஸ் பத்திரிகை

2011-ம் ஆண்டிற்கான ஐம்பது மிகச் சிறந்த சிந்தனையாளர்களைத் தேர்வு செய்ய முற்பட்டபோது, க்ளேட்டனின் பெயரைத்தான் தேர்வு செய்தது. இது மாதிரியான பல சிறப்புகள் க்ளேட்டனின் கிரீடத்தில் உண்டு. அப்படிப்பட்டவர் எழுதிய புத்தகம் என்றால் அது எப்படி சாதாரணமாக இருக்கும்?

இந்தப் புத்தகத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார் க்ளேட்டன். மகிழ்ச்சிகரமான, வெற்றிகரமான

உங்கள் வாழ்க்கையை எப்படி அளவிடுகிறீர்கள்?

நமது பணி வாழ்க்கையை ஒரு பிரிவாகவும், குடும்பம், நண்பர்கள், சமூகம் என்கிற விஷயத்தில் நாம் அடைந்த வெற்றி என்பதை இன்னொரு பிரிவாகவும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு பிரிவுகளையும் தாண்டி மூன்றாவது பிரிவில் அவர் எடுத்துச் சொன்ன விஷயம் அதிமுக்கியமானது. கலிமுத்திக் கிடக்கும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் நேர்மையான ஒரு வாழ்க்கையை நடத்த முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விக்கும் தெளிவான பதிலைச் சொல்லி இருக்கிறார்.  

உலக அளவில் பல பெரும் பிஸினஸ் நிறுவனங்களுடன் தனக்கு இருக்கும் ஆழமான அனுபவத்தை இந்த புத்தகம் முழுக்க ஆங்காங்கே பூப்போல தூவிவிட்டிருக்கிறார் க்ளேட்டன். அந்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் என்னதான் அங்கு பிரபலமாக இருந்தாலும் அமெரிக்காவில் கால்பதிக்க நினைத்தபோது தன்னுடைய யுக்தியை அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. காரணம், ஜப்பானில் அந்த நிறுவனத்தின் கற்றுவைத்திருந்த மார்க்கெட் குறித்தான படிப்பினை வேறாகவும், அமெரிக்கர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது வேறாகவும் இருந்தது. 'எமர்ஜென்ட் ஸ்ட்ராட்டஜி’ என்கிற புதிய யுக்தியை வடிவமைத்துக்கொண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று முடிவெடுத்த ஹோண்டாவிடமிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்கிறார் ஆசிரியர்.  

சுவீடன் நாட்டு ஐக்யா நிறுவனம் மிகக் குறைந்த விலையில் நாமே பொருத்திக்கொள்ளக்கூடிய ஃபர்னிச்சர்களைத் தயாரித்து விற்பதில் பெரும் வெற்றி கண்டது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து எந்த ஒரு நிறுவனமும் அதை காப்பி அடிக்கவில்லை. அதனால் சந்தையில் எந்தப் போட்டியும் இன்றி, தனிக்காட்டு ராஜாவாகவே இருந்தது. இதுவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்தான்.

பிளாக்பஸ்ட்டர் என்பது ஒரு காலத்தில் மிகப் பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்தைப் புதிதாக வந்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முந்திச்சென்று முதலிடத்தைப் பிடித்தது. காரணம், நெட்ஃப்ளிக்ஸை பிளாக்பஸ்ட்டர் நிறுவனம் ஒரு சீரியஸான போட்டியாளராக நினைக்கவில்லை. விளைவு, பிஸினஸின் சறுக்கல். திருப்திகரமான வாழ்க்கைக்கு இதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்படி பல உதாரணங்களையும் சம்பவங்களையும் புத்தகம் முழுக்கச் சொல்லும் க்ளேட்டன், கேன்சர் நோயினால் பாதிக்கப் பட்டவர். அந்த நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டடைவதில் தனது பங்களிப்பை நிறைவாகவே செய்திருக்கிறார் அவர்.

க்ளேட்டனுக்கு இது முதல் புத்தகமல்ல; த இன்னோவேட்டர்ஸ் டிலமா, த இன்னோவேட்டர்ஸ் சொல்யூஷன், சீயிங் வாட் நெக்ஸ்ட், டிஸ்ரப்டிங் க்ளாஸ், த இன்னோவேட்டர்ஸ் பிரிஸ்க்ரிப்ஷன் என பல புத்தகங்களை ஏற்கெனவே எழுதி இருக்கிறார்.

எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல, பிஸினஸ் துறையில் இருப்பவர்கள் அனைவருமே அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு