Published:Updated:

புரொமோஷன் ரகசியம் !

புரொமோஷன் ரகசியம் !

புரொமோஷன் ரகசியம் !

புரொமோஷன் ரகசியம் !

Published:Updated:
##~##

'அலுவலகத்தில் ஒருவருக்கு புரொமோஷன் (பதவி உயர்வு) என்பது எதை அளவீடாக வைத்து தரப்படுகிறது? கடந்த காலத்தில் ஒருவர் தனது வேலையில் காட்டிய திறமை என்று நீங்கள் சொன்னால் அது மிக மிகத் தவறான விடை. இப்போதெல்லாம் பழைய பெர்பார்மென்ஸை வைத்து புரொமோஷன்கள் தரப்படுவதில்லை. எதிர்காலத்தில் ஒருவருடைய பெர்பார்மென்ஸ் எப்படியிருக்கும் என்பதைக் கணித்துத் தருவதன் மூலம் ஒவ்வொரு புரொமோஷனையும் ஒரு முதலீடாகவே நிறுவனங்கள் பார்க்கின்றன’ என்று நெத்தியடியாக ஆரம்பிக்கிறார் 'ஹூ கெட்ஸ் புரொமோட்டட் ஹூ டஸின்'ட் அண்ட் வொய்’ (யாருக்கு பதவி உயர்வு கிடைக்கின்றது, யாருக்கு கிடைக்காமல் போகிறது, ஏன்) என்ற புத்தகத்தின் ஆசிரியர் டொனால்டு ஆஷர்.

ஒரு தொழிலைச் செய்வதற்கு நீங்கள் இதுவரை எந்த அளவிற்கு உதவியாக இருந்தீர்கள் என உங்கள் பாஸ் ஒருநாளும் பார்க்கப் போவதில்லை. இனிவரும் காலத்தில் எந்த அளவிற்கு அவருடைய குறிக்கோள்களை அடைய உதவியாக இருப்பீர்கள் என்றுதான் பார்ப்பார் என்று தெளிவுபடச் சொல்கின்றார் ஆஷர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புரொமோஷன் ரகசியம் !

நீங்கள் தற்போது இருக்கும் பதவியில் மிகவும் திறம்படவும் மதிப்பு மிக்கவராகவும் இருந்தால் உங்களுக்கு புரொமோஷன் கிடைப்பது சந்தேகமே என்று அதிரடியாகச் சொல்லும்  ஆசிரியர் அதற்கான காரணங்களையும் விளக்குகின்றார்.

பொதுவாக, அலுவலகத்தில் ஏற்கெனவே வேலையில் இருப்பவருக்கு புரொமோஷன் தரப்பட்டால் இரண்டு வேலைகளில் மாறுதல் வரும். ஒன்று, புரொமோஷன் கிடைத்தவர் பதவி ஏற்கும் பணியிடத்தில். மற்றொன்று, அவர் ஏற்கெனவே வகித்த பதவியில். அதேசமயம், ஒருவருக்கு புரொமோஷன் தருவதற்கு பதில்,  வெளியிலிருந்து ஒருவரை புதிதாக அந்த வேலைக்கு எடுத்துவிட்டால் என்னவாகும்? ஒரே ஒரு வேலையில்தான் மாறுதல் வரும். அதாவது, புதிதாகச் சேர்ந்தவரைப் பற்றி நிர்வாகம் கவலைப்பட்டால் போதுமானது.

நீங்கள் இப்போதிருக்கும் வேலையில் கில்லாடியாகவும், உங்களிடத்தில் பணிபுரிபவருக்கு சிறந்த லீடராகவும், அந்தப் பதவிக்குத் தேவையான ரகசிய தாத்பரியங்கள் அத்தனையையும் தெரிந்தவராகவும் இருந்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு குறைவுதான் என்கின்றார் ஆசிரியர். குறிப்பாக, தற்சமயம் நீங்கள் பார்க்கும் வேலையில் இருந்து உங்களை மாற்றினால் கம்பெனி எதிர்கொள்கிற பிரச்னைகளைவிட, நீங்கள் எதிர்பார்க்கும் புரொமோஷனில் இருக்கும் பதவிக்கு ஒரு புதியவர்  வேலைக்கு எடுக்கப்பட்டால் கம்பெனி எதிர்கொள்ளும் பிரச்னை குறைவு என்கிறபட்சத்தில் உங்களுக்கு புரொமோஷன் கிடைக்க வாய்ப்பேயில்லை என்கின்றார் ஆசிரியர்.

புரொமோஷனுக்கான வாய்ப்பு வரப்போகிறது என்று எதிர்பார்க்கும் போதே நீங்கள் உங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை சுலபமாக மற்றொருவருக்குத் தந்துவிட்டு போகுமளவிற்கு தெளிவாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் பதவியுயர்வு பெற்றால் உங்கள் பதவிக்கு யார் என்ற கேள்விக்கு சரியான பதிலை நீங்களே கண்டுபிடித்து, அவருக்குப் பயிற்சியும் தந்திருக்கவேண்டும் என்கின்றார் ஆசிரியர்.  

புரொமோஷன் ரகசியம் !

மேலும், எந்த ஒரு பதவியிலும் நீங்கள் இட்டு நிரப்ப முடியாத (இர்ரீப்ளேசபிள்) நபராக ஆகவே கூடாது.  அப்படி ஆகிவிட்டால் அதுவே உங்கள் புரொமோஷனுக்கு முட்டுக்கட்டையாகிவிடும் என்கிறார். உங்கள் உயரதிகாரியின் கண்ணில் தென்பட்டுக்கொண்டேயிருந்தால்தான் உங்களுக்கு புரொமோஷன் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும் என்ற கருத்துக்கு பல்வேறு உதாரணங்களைக் கொடுத்துள்ளார்.

உங்கள் பாஸ் நல்ல பெயருடன் திகழ்வதை உறுதிசெய்யும் ஒவ்வொரு கணமும் உங்கள் புரொமோஷன் உறுதியாகின்றது. உங்கள் பாஸிற்கு புரொமோஷன் கிடைத்தால் உங்கள் புரொமோஷனும் உறுதி என்று அடித்துச் சொல்கின்றார் ஆசிரியர். இதற்காக நீங்களே எல்லா வேலைகளையும் செய்து முடித்திருந்தாலும், அந்த வேலைக்கான கிரெடிட்டை பாஸுக்காக விட்டுத்தரவேண்டும். பாஸைப் பற்றி ஒருபோதும் கிசுகிசு பேசக்கூடாது. பாஸிற்கு எந்தெந்த செய்திகள் தெரிந்திருக்கவேண்டுமோ, அந்த விஷயங்களை உடனடியாகத் தெரியப் படுத்துங்கள். பாஸை ஒருபோதும் அதிர வைக்காதீர்கள். பாஸின் முன் ஒரு பிரச்னையைக் கொண்டுசெல்லும்போது அதற்குண்டான பல்வேறு சொல்யூஷன்களையும் கொண்டுசெல்லுங்கள். ஏனென்றால் பாஸின் வளர்ச்சிதான் உங்களை வளரவைக்கும்.  

எல்லாவற்றுக்கும் மேலாக, முடிந்தால் ஒரு சூப்பர் ஸ்டார் பாஸின் பின்னால் நின்றுகொள்ளுங்கள். அவர் வேகமாகப் பதவியில் உயரும் போது அவரின் பின்னால் நிற்கும் நீங்களும் பதவி உயர்வு பெறுவது நிச்சயம் என்று ஆசிரியர் சொல்லும் அட்வைஸ் 'நச்’ ரகம்.

புரொமோஷனுக்கு காத்திருக்கும் அனுபவஸ்தர்களும், புதிதாக வேலைக்குச் சேர்பவர்களும் நிச்சயமாகப் படித்து பலன் பெறவேண்டிய புத்தகம் இது.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism