Published:Updated:

வெற்றிக்கு வழிவகுக்கும் கமிட்மென்ட் !

வெற்றிக்கு வழிவகுக்கும் கமிட்மென்ட் !

பிரீமியம் ஸ்டோரி

அறிமுகம்

##~##

ஈடுபாடு (கமிட்மென்ட்) என்பதுதான் எந்த ஒரு பிஸினஸிற்கும் உயிர்நாடி. ஒரு பிஸினஸ் தயாரிக்கும் பொருட்கள், வழங்கும் சேவைகள், அதில் புழங்கும் மனிதர்கள், அதன் வாடிக்கையாளர்கள், அதன் கலாசாரம், அதன் பிராண்ட் போன்ற பல்வேறு விஷயங்களிலும் நபர்களிடமும் இந்த கமிட்மென்ட் தேவை. வெவ்வேறு நபர்களிடம் இருந்து வெளிப்படும் கமிட்மென்ட் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாகச் சேர்ந்து ஒரு பிஸினஸை பெரிய அளவில் ஜெயிக்க வைக்கிறது?  

இது எல்லோருக்கும் தெரிந்தாலும், ஒரு பிஸினஸில் பங்கேற்கும் (முதலாளி முதல் சப்ளையர் வரை) இந்த கமிட்மென்டை ஊக்குவிப்பது எது என்பதுதான் பெரிய கேள்விக்குறியே. ஏனென்றால், கமிட்மென்ட் என்பது மனமாரச் செய்யவேண்டியது. ஒரு பிஸினஸில் ஒவ்வொருவரும் தன்னுடைய பங்களிப்பை மனமாரச் செய்யவேண்டுமென்றால், நீங்கள் என்னென்ன விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்வதே ஜான் ஜேன்ஸ்ச் எழுதியுள்ள 'த கமிட்மென்ட் இன்ஜின்’.

வெற்றிக்கு வழிவகுக்கும் கமிட்மென்ட் !

வாழ்க்கையில் கமிட்மென்டை கொண்டுவர முதலில் தெளிவுவேண்டும் என்று அட்டகாசமாக ஆரம்பிக்கின்றார் ஆசிரியர். 'குழப்பமான பிஸினஸ் சூழலில் தெளிவை எப்படி வெளிக்கொணர்வது, பிஸினஸில் செய்யப்படும் ஒவ்வொரு தனிச் செயல்பாட்டிலும் (ஆக்ஷன்), கூட்டுச் செயல்பாட்டிலும் (இன்டராக்ஷன்) எப்படி கமிட்மென்டை உருவாக்கி உரம் போட்டு வளர்ப்பது என்ற டெக்னிக்கை அறிவது பிஸினஸிற்கு மிக அவசியம்’ என்கின்றார் ஆசிரியர்.

ஒரு சிறு விதையைப் போட்டு, செடியை நாள்பட பராமரித்து வளர்த்து, மரமாக்கி பலனடைகிற மாதிரி, கமிட்மென்டையும் சிறு விதையைப் போட்டு அது வேரூன்றி வளரும்போது நன்கு பராமரிக்கவேண்டும் என்று சொல்கின்றார் ஆசிரியர்.

'எல்லோரும் கமிட்மென்டுடன் எல்லா வேலையையும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. பிஸினஸின் ஓனராகிய நீங்கள் மட்டுமே கமிட்மென்டோடு இருந்தால் போதாது. உங்களது ஐடியாக்கள், உங்களது மதிப்பீடுகள் (வேல்யூஸ்), நீங்கள் தயாரிக்கும் பொருட்கள், உங்களது சேவைகள், உங்கள் தொழில் சார்ந்த அனைவரையும் நீங்கள் நடத்தும் முறை மற்றும் தொழில் நடைபெறும் முறை மற்றும் சூழ்நிலை போன்ற எல்லாமே உங்கள் கமிட்மென்டை அத்தனைபேரிடமும் உண்டுபண்ண மிகவும் உகந்ததாக இருக்கவேண்டும்.

'என் வீடு வாசலையெல்லாம் அடமானம் வைத்து பிஸினஸ் பண்ணுகின்றேன். அதனால் நான் அதிகம்  கமிட்மென்ட் வைத்திருக்கின்றேன்’ எனச் சொல்லும் பலரைப் பார்த்திருக்கிறோம். வீடு வாசலை வைத்ததால் வேறு வழியில்லாமல் அவர்கள் கமிட்மென்டுடன் இருக்கின்றார்கள். இந்த வகை நபர்களில் பலரும்கூட அவர்கள் காலையில் படுக்கையைவிட்டு எழுந்துகொள்ளத்தான் அந்தக் கமிட்மென்ட் உதவுகின்றதே தவிர, அதற்கப்புறம் அது பல சமயங்களில் உதவுவதில்லை என்று சொல்கின்றார் ஆசிரியர். உண்மையில் அதிக கமிட்மென்டுடன் செய்யப்படும் தொழில்கள் அந்த கமிட்மென்ட் அலைகளை பரவச் செய்து அந்தத் தொழிலில் சம்பந்தப்பட்ட அனைவரின் பற்றையும் (லாயல்டி) வளர்க்கின்றது.

இந்தப் புத்தகம் கமிட்மென்டின் குணாதிசயம், உங்களுக்கு கமிட்மென்ட் இருக்கின்றதா அல்லது அதை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்பதையும், எப்படி தொடர் கமிட்மென்டுடன் கூடிய பிஸினஸ்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் தெளிவாகச் செய்து வெற்றியடைகின்றன என்பதையும் விளக்குவதாக உள்ளது.

வெற்றிக்கு வழிவகுக்கும் கமிட்மென்ட் !

பிஸினஸில் நார்மலாக நடக்கிறது என்பது நன்றாக நடப்பது அல்ல என்று புது அர்த்தம் சொல்கின்றார் ஆசிரியர். நார்மல் என்றால் பிரச்னை அதிகமாகவும், ஒன்றுடன் ஒன்று சேராமலும் இருப்பதே. நார்மல் என்பது பிரச்னைகள் ஒன்றிணைந்த கூடாரம் என்று சொல்லும் ஆசிரியர், சிறப்பாக கமிட்மென்டுடன் நடக்கும் பிஸினஸே, பிஸினஸின் உயரிய நிலை என்று சொல்கின்றார்.

ஒவ்வொரு பிஸினஸிலும் ஒவ்வொரு ஆபரேஷனும் ஆராய்ந்து செய்யப்படவேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், இதற்கு முக்கியமான மூன்று விஷயங்கள் தேவை என்கின்றார். ஒன்று தெளிவு, இரண்டு பண்பட்ட கலாசாரம், மூன்றாவது சமுதாயம். பிஸினஸின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெளிவான போக்கையும், அதன் சைஸுக்கேற்ற நல்லதொரு கலாசாரத்தைத் தோற்றுவித்து வளர்த்தலும், கஸ்டமர் மட்டுமல்லாது தொழிலாளர்கள், சப்ளையர்கள், அட்வைஸர்கள், போட்டியாளர்கள் எனப் பல்வேறு நபர்களைக்கொண்ட சமுதாயத்தின் பலனை நினைத்து அத்தனை விஷயங்களைத் திட்டமிடுதலும் கமிட்மென்டை வேரூன்றி வளரச் செய்யும் என்று எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

தொழிலில் வெற்றிபெற நினைக்கும் தொழிலதிபர்களும்/தொழில் முனைவோர்களும், தொழில் குறித்த முடிவெடுக்கும் பதவி நிலையில் இருக்கும் மேனேஜர்களும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

                                          - நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு