ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

முக்கிய புத்தகம் - கூர்மையாகச் சிந்தியுங்கள் !

முக்கிய புத்தகம் - கூர்மையாகச் சிந்தியுங்கள் !

##~##

புத்திசாலித்தனமும் கூர்மையான யோசனையும் ஒன்றல்ல என்று ஆரம்பிக்கின்றார் 'ஸ்மார்ட் திங்கிங்’ (கூர்மையான சிந்தனை)' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்ட் மார்க்மேன். 1993-ல் அவர் பள்ளியில் படிக்கும்போது பகுதிநேர வேலையாக வீட்டை சுத்தம் செய்யும் வேலையைச் செய்தாராம். வீட்டைச் சுத்தம் செய்ய வேக்யும் கிளீனரை உபயோகிப்பாராம்.

அந்தக் காலத்தில் வேக்யும் கிளீனரில் தூசிகளைச் சேகரிக்க நுண்ணிய ஓட்டைகளுள்ள ஒரு பை இருக்கும். வேக்யும் கினீனரால் காற்றின் அழுத்தத்தில் இழுக்கப்படும் தூசி அந்தப் பையில் நின்றுவிடும். காற்று அந்தப் பையைத் தாண்டி வெளியேறிவிடும். நிறைய தூசியை இழுத்தீர்கள் என்றால், பையில் உள்ள ஓட்டைகள் அடிக்கடி அடைபடும். ஊசி, பின் போன்றவை உள்ளே சென்றால் ஓட்டை ஏற்பட்டு மிக நுண்ணிய தூசிகள் வெளியே போய்விடும். சுத்தம் செய்யும் நபருக்கு தலைமுதல் கால்வரை தூசி அபிஷேகம்தான். மார்க்மேனுக்கும் ஒவ்வொரு முறையும் இந்த தூசி அபிஷேகம் நடக்குமாம். வேலையை முடித்து வீட்டிற்குச் சென்ற பின்னர் ஒவ்வொருமுறையும் குளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக்கொண்டிருந்தார் மார்க்மேன். ஆனால் அவரைப்போலவே கிளீன் செய்த ஜேம்ஸ் டைசன் இந்த அழுக்கிலிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசித்து தூசியை  கலெக்ட் செய்ய சென்ட்ரிப்யூகல் முறையை உபயோகித்ததால், இன்று ஆண்டொன்றுக்கு நூறு மில்லியன் டாலர் லாபத்தை அள்ளுகிறார் என்ற உதாரணத்துடனேயே ஆரம்பிக்கின்றார் ஆசிரியர்.

முக்கிய புத்தகம் - கூர்மையாகச் சிந்தியுங்கள் !

அடுத்து, ஜேம்ஸ் டைசனை ஆசிரியர் தன்னுடைய வகுப்புத்தோழன் பில் என்பவனுடன் ஒப்பீடு செய்கின்றார். பில் ஒரு பிறவி புத்திசாலி. ஐக்யூ டெஸ்ட்களில் பின்னியெடுப்பான்.  அனைவரிடமும் ஜோக்கடித்து ஃப்ரெண்ட்லியாய் இருப்பான். ஆனாலும், எந்த வகுப்புமே அவனுக்கு ஆர்வத்தைத் தூண்டாது. படிப்பது ஒரு கடமை என்று நினைத்து அதை செவ்வனே செய்வான். கண்ணில் பொறிபறக்க அன்னைக்கு ஒரு சப்ஜெக்ட் வாத்தியார் நடத்தினாரு பாரு சூப்பராய் இருந்துச்சு என்று ஒரு நாளும் சொன்னதில்லை அவன். புத்திசாலித்தனம் என்பது அவனிடம் பெர்ஃபெக்ட்டாய் இருந்தது.  எந்த ஒரு காம்ப்பெட்டிட்டிவ் எக்ஸாம் எழுதினாலும் அவனுடைய ஸ்கோர் மிக உயர்வானதாய் இருந்தது. ஸ்கூலில் படிக்கும்போதே எனக்கு மூளையின் செயல்பாடு குறித்த பாடங்களின் மீது காதல் மலர்ந்தது. பிற்காலத்தில் நான் அதில் ஸ்பெஷலிஸ்ட் ஆனேன். ஆனால், பில்லுக்கோ எந்தவிதமான அதீத ஈடுபாடும் எந்தப் பாடத்திலும் வரவில்லை. ஆனால் கடைசியில் அவன் ஜி.ஆர்.இ. பரீட்சை எழுதி அதிலும் சூப்பரான ஸ்கோரைப் பெற்றான். அவன் வாழ்நாளில் எழுதிய பரீட்சையில் எல்லாம் அமோக வெற்றிபெற்ற அவனால் அவனுடைய புத்திசாலித்தனத்திற்கு ஈடான சாதனை எதையுமே செய்ய முடியவில்லை. அவன் செய்த சாதனையெல்லாம் மார்க்கில் தான். புத்திசாலித்தனம் (கூர்மையான அறிவு) என்பது பிறவியிலேயே கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம்.  அந்த அறிவை பில் எந்த ஒரு புதிய பிரச்னையைச் சமாளிப்பதற்கோ, சரி செய்வதற்கோ உபயோகிக்கவேயில்லை என்கின்றார் ஆசிரியர். அதனால்தான் டைசனும் பில்லும் இருவேறு துருவங்களாக உலகில் உலவுகின்றனர். கூர்மையான அறிவு வேறு! கூர்மையான சிந்தனைத் திறன் வேறு என்று ஆணித்தரமாகச் சொல்லும் ஆசிரியர் அதை நிரூபிப்பதற்காக 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கின்றார்.

லூயிஸ் டெர்மென் என்பவர் ஐக்யூதான் வாழ்க்கை என்பதில் நிறைய நம்பிக்கையுடைய ஒரு சைக்காலஜிஸ்ட். இவர் குறிப்பிட்ட சில குழந்தைகளை மாதிரியாக எடுத்து அவர்களுக்கு ஐக்யூ டெஸ்ட் வைத்து அதில் அதிக ஸ்கோர் எடுப்பவர்களுக்கு அவர்களுடைய கல்வி, மற்றும் கேரியர் முன்னேற்றம் எப்படி இருக்கின்றது என்று பார்த்திருக்கின்றார். அவர் செலக்ட் செய்த குழந்தைகளில் அதிக ஐக்யூ ஸ்கோர் எடுத்தவர்களை டெர்மைட்ஸ் (டெர்மெனின் ஆட்கள்) என்று பெயரிட்டு தொடர்ந்து டெர்மைட்ஸ்களின் வாழ்க்கையைக் கண்காணித்துள்ளார். அந்தக் குழந்தைகள் வளர்ந்து படித்து வேலைக்குப் போய் அதில் சிலர் சாதனையாளராகவும் ஆனார்கள். டெர்மெனின் டெஸ்ட்டில் குறைந்த ஸ்கோர் எடுத்த வில்லியம் ஷாக்லி என்ற பையன் (டெர்மைட்ஸ் லிஸ்டிற்கு தகுதி பெறாத மாணவன்) பிஸிக்ஸ் படித்து அதில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்து நோபல் பரிசையும் பெற்றாராம். அறிவியல் ரீதியாகவே கூர்மையான சிந்தனைத் திறன் என்பது பிறவி இயல்புகளில் ஒன்று இல்லை. கூர்மையான சிந்தனைத் திறனை ஒருவரால் திட்டம்போட்டு தொடர் பழக்கமாக்கி (ஹாபிட்) அதன்படி வளர்க்க முடியும் என்று நிரூபிக்கப் பட்டிருப்பதாக ஆசிரியர் கூறுகின்றார்.

முக்கிய புத்தகம் - கூர்மையாகச் சிந்தியுங்கள் !

பல விஷயங்கள் வாழ்க்கையில் ஒரு வகையில் தொடர் பழக்கமாகிவிடுகின்றது. உதாரணத்திற்கு, இன்றைக்கு ஒரு பள்ளிக்குச் செல்லுங்கள். பள்ளியில் இருக்கும் ஒரு வகுப்பறையில் சென்று அமருங்கள். கொஞ்ச நேரத்தில் தானாகவே உங்களுக்கு யாராவது வந்து லெக்சர் கொடுப்பார்கள் என்ற எண்ணம் வந்துவிடும். ஏனென்றால், அதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் தொடர்ந்து நீண்டநாள் பழக்கப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றீர்கள். கூர்மையான சிந்தனை என்பது ஹாபிட் ஆக்கப்படவேண்டும். ஹாபிட் என்பது மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை ஒரேமாதிரியாகச் செய்வதால் (ரெப்பட்டிஷன்) வருவது. பள்ளி வகுப்பறையில் என்றைக்கோ உட்கார்ந்து பாடம் கேட்ட நீங்கள் 20 வருடம் கழித்து உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போகும்போது வகுப்பறையில் உட்காரவைத்தால் கூட யாராவது கிளாஸ் எடுப்பார்களா என நினைக்க ஆரம்பித்துவிடுகின்றீர்கள் இல்லையா? அதுதான் ரெப்பட்டிஷனின் மகிமை. மீண்டும் மீண்டும் நீங்கள் கூரான சிந்தனையைச் செய்ய முயல்வதால் அந்த இயல்பை உங்களால் வேகமாக வளர்க்க முடியும் என்கின்றார் ஆசிரியர்.

ஒரு புதிய ஊருக்கு வேலைக்குச் செல்கின்றீர்கள். புதுவீடு பார்த்து குடியேறிவிட்டீர்கள். ஆபீஸில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு நாற்சந்தி உள்ளது. ஒரு முனையில் ஒரு பெரிய கோயிலும், எதிர்முனையில் (குறுக்கு எதிர்முனை) ஒரு பெரிய ஓட்டலும் உள்ளது. உங்கள் வீட்டிற்கு கோயில் முனையில் இடதுபுறம் செல்லவேண்டும். முதல் இரண்டு நாட்கள் அந்த இடம் வரும்போது கொஞ்சம் நிதானிப்பீர்கள். பின்னர் சுலபமாக உங்களுக்குப் பழகிவிடும். இதே கோயிலும், ஓட்டலும் இல்லாமல் தொடர் கட்டடங்களாக இருந்தால் என்னவாகும். பழகுவதற்கு

கொஞ்சநாளாகும். கோயிலும் ஓட்டலும் மிகவும் பளிச் என்று தெரிபவை. நம்முடைய எண்ணத்தைக் கவரும் குணம் கொண்டவை. அதனால் சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகின்றது.  அதேசமயம், தொடர் கட்டடங்கள் நம்முடைய கவனத்தை ஈர்ப்பதில்லை. அதனால் பழக்கப்பட்டுக்கொள்ள நாளாகி தடுமாற்றம் தொடர்கின்றது. இதனால்தான் செய்யும் தொழிலில்/வேலையில் ஈடுபாட்டை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே ஸ்மார்ட்டான திங்கிங்கை நம்மால் பழக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்கின்றார் ஆசிரியர்.

இறுதியாக எப்படி ஸ்மார்ட்டான திங்கிங் கல்ச்சரை ஒருவர் வளர்த்துக்கொள்ள முடியும் என்று பின்வரும் ஐடியாக்களைத் தருகின்றார் ஆசிரியர். நல்ல சிந்தனை குறித்து நன்றாகச் சிந்தியுங்கள். ஸ்மார்ட்டான சிந்தனை தரும் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். மற்றவரின் ஐடியாக்களைக் செவிகொடுத்து கேளுங்கள். விளக்கமாகப் பேசிப் பழகுங்கள், அதுவும் அடிக்கொருதரம். உங்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் முத்தான மூன்று ஐடியாக்கள் என்னென்ன என்று சிந்தித்து லிஸ்ட் செய்துகொள்ளுங்கள். உங்களால் ஹேண்டில் செய்யப்படும் எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள். நீங்கள் கையாளும் விஷயங்களை லேபிள் (பெயரிடுதல்) செய்துகொள்ளுங்கள். ஒரேநேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்வதைத் தவிருங்கள். தொடர்ந்து இப்படிச் செய்வது ஸ்மார்ட் திங்கிங்கிற்கு எதிரானது. நாம் என்பதற்கு இடையே நான் என்ற வார்த்தையைக் கொண்டுவருவதைத் தவிருங்கள். இந்த ஒவ்வொரு ஐடியாவிற்கும் பல்வேறுவிதமாக உதாரணங்களைத் தந்து அவற்றை புரிந்துகொள்வதை மிகவும் எளிமையாக் கியுள்ளார். வாழ்வில் ஸ்மார்ட்டான வெற்றிபெற நினைக்கும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.