Published:Updated:

முக்கிய புத்தகம்

உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள் !

முக்கிய புத்தகம்

உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள் !

Published:Updated:
##~##

''எதிர்காலம் குறித்த முடிவுகளை அறிவை மட்டுமேகொண்டு எடுக்க முடியாது. பல சமயங்களில் எதிர்காலம் குறித்த முடிவுகளை மனோதிடத்தை அடிப்படையாக வைத்தே எடுக்கவேண்டியுள்ளது. உள்ளுணர்வு என்பதை முழுமையாக நம்பவும் முடியாது. அதேசமயத்தில், அது இல்லாமல் வாழவும் முடியாது'' என உள்ளுணர்வின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லி நம்மை அதிரவைக்கிறார் 'த பவர் ஆஃப் இன்ட்யூஷன்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கேரி கிளெய்ன். உள்ளுணர்வின் மூலம் நம் மனதிற்கு கிடைக்கும் தாங்குசக்தியின் வலிமையைக்கொண்டு நம் வேலையில் முக்கிய முடிவுகளை எடுப்பது எப்படி என்று சொல்கின்றது இந்தப் புத்தகம்.

''உள்ளுணர்வு என்பது நம்முடைய முந்தைய அனுபவங்களின் கோர்வைகளைச் செயலாக மாற்றும் முயற்சி'' என்று யதார்த்தமான ஒரு விளக்கத்தையும் ஆசிரியர் தருகின்றார். உள்ளுணர்வை நாம் முழுமையாக நம்பாவிட்டா லும், அதை ஒதுக்கித்தள்ள வேண்டியதில்லை என்கிறார் ஆசிரியர். ஏனென்றால், பல சமயங்களில் உள்ளுணர்வு என்பது ஒரு முடிவை எடுப்பதற்கான மனோ தைரியத்தைத் தருவதாக உள்ளது என்று சொல்லும் அவர், அதற்கொரு உதாரணமாக அவருடைய நண்பரின் கதையைச் சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசிரியரின் நண்பர் ஒருவர் எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பவர். அவர் வேலை பார்த்த அந்த நிறுவனத்தில் அவருடைய இந்த அனாலிசிஸ் குணம் பிரபலமாகப் பேசப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பதவி உயர்வுகளைப் பெற்று கடைசியில் ஒரு டிவிஷனுக்கு தலைவரானார் அவர். இதுவரை அவர் பார்த்த பதவி எல்லாம் முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்தவை. அவர் கொடுத்த டேட்டாவும், ஆராய்ச்சியும் முடிவெடுப்பவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. இப்போது அவரே முடிவை எடுக்கவேண்டிய பதவிக்கு வந்துவிட்டார். வருகின்ற ஒவ்வொரு பிரச்னைக்கும், வாய்ப்புக்கும் டேட்டாவைத் தேடித் தேடி ஓடி முடிவுகளைத் தள்ளிவைக்க ஆரம்பித்தார். முழு டேட்டா கிடைக்கும் வரை முடிவுகளைத் தள்ளிப்போட்டதால் அவருக்குக் கீழே வேலை பார்த்தவர்கள் எரிச்சலைடைய ஆரம்பித்தனர். ஒருவழியாக கடைசி தினத்தன்று தவறாமல் அவர் முடிவு எடுத்துவிட்டாலும், அதனால் தொழில்ரீதியாக பல பாதிப்பு ஏற்பட்டது. நிறைய வாய்ப்புகளை அந்த டிவிஷன் இழந்தது. அவருடைய டிவிஷனும் சிறப்பாகச் செயல்படவில்லை'' என்று சொல்லும் ஆசிரியர், இதையும் தாண்டி அவருடைய மனோ தைரியமின்மையை விரிவாக விளக்குகின்றார்.

முக்கிய புத்தகம்

''ரிட்டையரான பின் அவருக்கு உடல்நிலை குன்றி ப்ராஸ்டேட் கேன்சர் வந்துள்ளது என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வியாதிக்கு பல்வேறுவிதமான ட்ரீட்மென்ட்கள் இருக்கின்றன. எந்த ட்ரீட்மென்டை எடுத்துக் கொள்வது என்பதை முடிவு செய்ய இயலாமல் ஒவ்வொரு ட்ரீட்மென்ட் குறித்த தகவல் சேகரிப்பில் இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட பத்து மாத காலமாக கேன்சருக்கு உண்டான வைத்தியத்தை எடுக்காமல் தகவல் தேடுவதிலேயே தீவிரமாக இருந்துள்ளார். இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்கும்வரை அவர் முடிவை எடுக்கவேயில்லை'' என்று குறிப்பிட்டுள்ள ஆசிரியர், டேட்டாக்கள் புடைசூழ வாழ்கின்ற இன்றைய உலகில் உள்ளுணர்வை உபயோகித்து முடிவெடுப்பவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்துகொண்டே வருகின்றார்கள் என்று வருத்தப்படுகிறார்.

இப்படி முடிவெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்று ஆணித்தரமாக வாதிடுகின்றார். உள்ளுணர்வை வைத்து முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்வது சுலபமில்லை என்றாலும், அது பலவகையில் முடிவெடுப்பவரை முன்னேறவைக்கும் என்கிறார் ஆசிரியர். உதாரணத்திற்கு முடிவெடுக்க தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சேதத்தை அதிகப்படுத்தும் தொழிலில் இருக்கும் தீயணைக்கும் படைவீரர்கள் ஒவ்வொரு விபத்திலும் உள்ளுணர்வைச் சார்ந்த முடிவுகளைத்தான் பெரும்பாலும் எடுக்கின்றார்கள் என்கிறார் ஆசிரியர்.

''இந்தப் புத்தகத்தின் மூலம் உள்ளுணர்வை வைத்து ஜெயிப்பது எப்படி என்று சொல்ல வரவில்லை. ஆனால், உள்ளுணர்வின் மகத்துவத்தைச் சொல்லியிருக்கின்றேன்'' என்று கூறும் ஆசிரியர், எப்படி உள்ளுணர்வை வளர்த்துக்கொள்வது, உள்ளுணர்வு சொல்லும் விஷயங்களை எப்படி நடைமுறையில் செயலாக்கு வது, உள்ளுணர்வை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை எல்லாம் இந்தப் புத்தகத்தில் தெளிவாக விளக்குகின்றார்.

உள்ளுணர்வை வளர்க்க உதவும் பகுதியில், ''ஒரு முடிவை எடுக்கும்போது இந்த முடிவை எடுப்பதில் எது கஷ்டம், ஏற்கெனவே எடுக்கப்பட்ட இதேபோன்ற முடிவுகளில் என்னென்ன தவறு நடந்தது, இதே சூழ்நிலையில் ஓர் அனுபவஸ்தர் எப்படி முடிவெடுப்பார், அனுபவ மில்லாதவர் எப்படி முடிவெடுப்பார் என்ற விஷயங்களையும் மனதில் வைத்து செயல்பட்டால் உள்ளுணர்வின்படி முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளலாம். முடிவை எடுக்கும்முன் இந்த முடிவில் எந்த மாதிரியான விளைவுகள் இருக்கும், இந்த முடிவு எப்படிப்பட்ட தோல்விக்கு நம்மைக் கொண்டு செல்லும் என்று ப்ரீமார்ட்டம் (போஸ்ட்மார்ட்டத்தின் எதிர்ச்சொல்!) செய்து பார்க்கவேண்டும். அப்படி ப்ரீமார்ட்டம் செய்யும்போது தோல்விகளுக்கான வாய்ப்பை நீங்கள் அலசுவீர்கள். அப்போது உங்கள் உள்ளுணர்வு உங்கள் முடிவெடுக்கும் திறனுக்குத் தீனிபோடும்'' என்கிறார் ஆசிரியர்.

''ஓர் உறுதியில்லாத நிலை  உங்கள் முன்னால் வரும்போது உடனடியாக நீங்கள் பின்வரும் பட்டியலைப் போடவேண்டும். எந்தெந்த விஷயத்தில் உறுதியின்மை இருக்கின்றது?, எந்தமாதிரியான உறுதியின்மை இது?, இதை சமாளிக்க நாம் எந்தவிதமான திட்டம் வைத்திருக்கின்றோம்? என்ற மூன்றும் அடங்கிய பட்டியலைப் போடும்போது நம்முடைய உள்ளுணர்வு நமக்கு உதவ ஆரம்பிக்கும்.

கம்ப்யூட்டர்கள் உள்ளுணர்வுக்கு எதிரானவை. கம்ப்யூட்டர்கள் உள்ளுணர்வுக்கு எதிராக மூன்றுவிதமாகச்  செயல்படுகின்றது. முதலாவதாக, ஏற்கெனவே உள்ளுணர்வின்படி செயல்படுபவர்களிடம் டேட்டாக்களைக் கொடுத்து அவர்களின் உள்ளுணர்வை செயல்படவிடாமல் செய்துவிடுகிறது. இரண்டாவதாக, டேட்டாக்களை கொடுப்பதன் மூலம் புதியவர்கள் உள்ளுணர்வு எனும் கலையைக் கற்றுக்கொள்ளும் வேகத்தை மிகவும் தாமதப்படுத்துகின்றது. மூன்றாவதாக, முடிவெடுப் பதற்கான மூளையின் செயலை மட்டுப்படுத்துவதில் பெரும்பங்கை வகித்து மூளையைச்  செயலற்றதாக ஆக்குகின்றது.

இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி நீங்கள் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு உள்ளுணர்விலான முடிவு களை எடுக்கும் பாதையில் பயணித்து விட்டாலும், அதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நீங்கள் உள்ளுணர்வு சார்ந்த முடிவுகளை எடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள் எனில் மீட்டிங்குகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்; நெருக்கடி நிலைமை அடிக்கடி வராது. குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய ஆரம்பிக்கும்'' என்று உறுதியாய்ச் சொல்கின்றார் ஆசிரியர்.

தனிநபர் முடிவானாலும் சரி, அலுவலக ரீதியான முடிவுகளானாலும் சரி, பிஸினஸ் முடிவுகளை எடுப்பவர்களானாலும் சரி, அன்றாட வாழ்வில் முடிவுகளை எடுப்பவர்கள் அனைவரும் ஒருமுறை நிச்சயமாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது!

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism