Published:Updated:

முக்கிய புத்தகம்

வெற்றிக்கு வழி காட்டும் புதுமை !

முக்கிய புத்தகம்

வெற்றிக்கு வழி காட்டும் புதுமை !

Published:Updated:

அறிமுகம்

 சித்தார்த்தன் சுந்தரம்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவின் டக் ஸ்கூல்ஸ் சென்டர் ஃபார் குளோபல் லீடர்ஷிப் துறையில் பேராசிரியராகப் பணிபுரிபவரும், ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேலான நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருப்பவரும், புதுமை மற்றும் லீடர்ஷிப் சம்பந்தமாக உலகம் தழுவிய அளவில் உரையாற்றி வருபவருமான விஜய் கோவிந்தராஜனின் புதிய புத்தகமான 'ஹவ் ஸ்டெல்லா சேவ்டு தி ஃபார்ம்’-ஐத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

எத்துறையாக இருந்தாலும் புதுமைகளை பரிசோதித்துப் பார்க்கும்போது எதிர்ப்புகள் இருக்கவே செய்யும். அதை எதிர்கொண்டு வெற்றி காண்பதில்தான் நிறுவனத் தலைமையின் திறமை இருக்கிறது என்கிற முக்கியமான கருத்தைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

மனிதர்கள் நடத்தும் நிறுவனங்களுக்குப் பதிலாக, மிருகங்கள் நடத்தும் பண்ணையை உதாரணமாகக் கொண்டு ஈசாப் கதைகள்போல நீதிக் கதை (Parable) வடிவில் படங்களுடன் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம், எளிய நடையில் விறுவிறுப்பாகச் செல்கிறது.  

வின்ட்சர் என்கிற பண்ணையின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தத் தொடங்குகிறது டேர்ட்ரி என்கிற குதிரை. இந்தப் பண்ணையில் கம்பளி, பால் மற்றும் தானியங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

முக்கிய புத்தகம்

ஸ்டெல்லா என்கிற ஆடு தனது படிப்பை முடித்து விட்டு பெரு நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, வின்ட்சர் பண்ணைக்குத் திரும்புகிறது. அந்தநேரத்தில் வின்ட்சர் பண்ணை நிர்வாகம், கடும்போட்டி நிலவும் இந்தத் தொழிலில் நீடித்து இருக்கவும், வெற்றிகரமாகச் செயல்படவேண்டுமெனில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வருகிறது. அதன்படி, 'மாபெரும் யோசனைத் தேடல்’ என்கிற போட்டியை நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களான ஆடு, மாடு, குதிரை போன்றவைகளுக்கு அறிவிக்கிறது.

சில நாட்களில் நிர்வாகம் பல புதிய யோசனைகளை அவர்களிடமிருந்து பெறுகிறது. அவற்றில் சிறந்ததாக ஸ்டெல்லா பரிந்துரைத்த அல்பெக்கா வகை ஆடுகளின் ரோமங்களைக்கொண்டு உயர்தர கம்பளி பொருட்களைத் தயாரிப்பது என்கிற யோசனை தேர்வு செய்யப்படுகிறது. இது தேர்வு செய்யப் படுவதற்கு முக்கிய காரணம், குறைந்த முதலீடு இருந்தால்போதும் என்பதால்தான். ஆனால், செயல்படுத்த ஆரம்பித்தவுடன் செலவு எகிறுகிறது.

இந்த யோசனைக்கு சமீபத்தில் சி.ஓ.ஓ.-ஆக பணி உயர்வு பெற்ற காளை (Bull) எதிர்ப்பு தெரிவிக்கிறது. தற்போது உற்பத்தியாகும் பொருட்களையே திறம்பட சந்தைப்படுத்தினால் போதும்; இப்போதிருக்கும் நிதி நிலையில் அதிகம் முதலீடு செய்து, புதிய பொருளை அறிமுகப்படுத்தவேண்டாம் என்பது அதன் கருத்து.

ஆனால், டேர்ட்ரி அதனிடம் நாம் ஏன் புதிய பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டுமென்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துக் கூறுகிறது. அதற்குப்பிறகு அங்கு வேலை செய்துவரும் மிஸ்டர் மாவரிக் (மாவ்) என்கிற குதிரைக்கு அந்தப் புதிய பொருள் சார்ந்த துறைக்கான தலைமைப் பொறுப்பு தரப்படுகிறது. அதற்குப்பிறகு மாவ் எதிர்கொள்ளும் பிரச்னைகளை டேர்ட்ரியின் உதவியுடன் எப்படி சமாளிக்கிறது என கதை தொடர்கிறது.

பிஸினஸ் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் சூட்சுமங்களை, எல்லோரும் எளிதில் புரிந்துகொள்கிற மாதிரி உருவக் கதை போல இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பான அம்சம். புதுமையை அறிமுகப்படுத்தி வெற்றிகாண 7 முக்கிய பாடங்களை  கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள். அந்த 7 பாடங்கள்:  

1. யோசனை என்பது ஆரம்பம்தான்.

2. தலைவர்தான் பொறுப்பு என்றில்லாமல் அவருடன் சேர்ந்து செயல்பட கடமை உணர்ச்சி கொண்ட ஒரு குழுவை உருவாக்கவேண்டும்.

3. தற்சமயம் செயல்பட்டுவரும் நிர்வாகச் செயல்பாட்டிற்கு அப்பாற்பட்ட செயல் முறைகளை புதிய குழுவிற்குத் தரவேண்டும்.

4. பழைய மற்றும் புதிய குழுக்களுக்கு இடையே ஏற்படும் முரண்பாடுகளை யாருக்கும் பாதகம் வராமல் திறம்பட சமாளிக்கவேண்டும்.

5. புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தும் போது, லாபத்தைவிட கற்றுக்கொள்ளலுக்கு முதலிடம் அளிக்கவேண்டும் (Learning First, Profit Next).

6. புதிய பொருட்கள் அல்லது செயல்முறை களை நடைமுறைக்குக் கொண்டுவர அதிக செலவாகும்பட்சத்தில், அவை சம்பந்தப்பட்ட தகவல்களைத் தெளிவாக ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

7. புதுமைக்குத் தலைமை வகிப்பவரின் செயல்பாட்டை மற்றவர்களின் செயல்பாட்டை மதிப்பிடுவதுபோல மதிப்பிடாமல், பரிசோதனை முயற்சியை அவர் கட்டுப்பாடாகச் செய்கிறாரா என்கிற வகையில் மதிப்பீடு செய்யவேண்டும்.

தொழில் துறையில் வெற்றி காண்பதற்கு புதுமை அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்தப் புத்தகத்தை பிஸினஸ்மேன் அனைவரும் படிக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism