Published:Updated:

முக்கிய புத்தகம் - முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் படிக்கட்டுகள் !

நாணயம் டீம்.

முக்கிய புத்தகம் - முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் படிக்கட்டுகள் !

நாணயம் டீம்.

Published:Updated:

அறிமுகம்

##~##

ஒரு மனிதனின் பயணம் அவனுடைய அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற மூன்று தேவைகளில் ஆரம்பித்து மேல்நோக்கிப் பயணித்து ஞானநிலையை அடைகிறது என்று சொல்வது மாஸ்லோ தியரி. அதாவது, இரண்டுவேளை சாப்பிடாமல் கடுமையான பசியில் இருக்கும் ஒருவர், முதலில் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று பார்ப்பதை விடுத்து, அந்தநேரத்தில் முகம் தெரியாத ஒருவனுக்கு உதவ முன்வரமாட்டார். தனக்கு மிஞ்சிதானே தர்மம் என்கிறீர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சம் யோசனை செய்து பார்த்தால் நிறையபேர் இந்த வரிசைக்கிரமத்தில் பயணிப்ப தில்லை என்று ஆரம்பிக்கிறார்கள் 'விஸ்டம் மீட்ஸ் பேஷன்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்களான டான் மில்லர் மற்றும் ஜேரட் அங்கஸா. மதர் தெரசாவில் ஆரம்பித்து நெல்சன் மண்டேலா வரை பல்வேறு உதாரணங்களை இந்தக் கருத்துக்கு உதாரணமாக சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒவ்வொரு புது வருடப் பிறப்பன்றும் நாம் தவறாமல் ஏதாவது ஒரு பெரிய இலக்குகளை நிர்ணயிக்கிறோம். ஆனால், அதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை பெரும்பாலானோர் தொடர்வதில்லை. பணம், பெயர் புகழோடு வாழ ஆசைப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவற்றை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபாடு காட்டுவ தில்லை.

''இன்று நம் கண்ணுக்கு தத்தம் துறையில் வெற்றி பெற்றவர்களாகத் தெரியும் பலரும் ஒருநாள் மிகச் சாதாரணமான ஒரு வேலையைச் செய்துவந்தவர்கள்தான். படிப்படியான முயற்சியினால்தான் முன்னேறி வெற்றி பெற்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்'' என்கின்றனர் ஆசிரியர்கள். இதற்கு பல உதாரண மனிதர்களைக் காண்பிக்கும் ஆசிரியர்கள், இன்றைக்கு பெரிய செலிபிரிட்டியான மடோனாகூட டீன்ஏஜில் டன்கின் டோனட்ஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்தான் என்பதை நினைவுபடுத்து கின்றனர். டெல் கம்ப்யூட்டரை நிறுவிய மைக்கேல் டெல் ஒரு சைனீஸ் ரெஸ்டாரன்டில் பத்துப்பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாராம் இளவயதில்!

முக்கிய புத்தகம் - முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் படிக்கட்டுகள் !

''இன்றைக்குப் பார்க்கும் வேலையை முழுமனதுடன் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். இந்த வேலைகூட உங்களுடைய வளமான எதிர்காலத்துக்கு அடிகோலுவதாக இருக்கக்கூடும்'' என்று சொல்லும் ஆசிரியர்கள், நான் ரொம்பச் சின்ன மனிதன் என்று புலம்புபவர்களிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறார்கள்.

* போன மாதத்தில் நீங்கள் உங்கள் சின்ன வாழ்க்கையைப் பெரிதாக்கிக்கொள்ள என்ன முயற்சியை எடுத்தீர்கள்?

* உங்களுக்கு நல்ல வேலையையோ அல்லது நல்ல பிஸினஸ் வாய்ப்பையோ தரும் ஒரு நாலு அல்லது ஐந்து ஐடியாக்களை யோசித்தீர்களா?

* எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாருக்காவது செய்த மூன்று உதவிகள் என்னென்ன?

* நீங்கள் உங்கள் அறிவையும், திறமையையும், புத்திசாலித்தனத்தையும், மனோதிடத்தையும் வளர்த்துக்கொள்ள உதவுவதற்காகப் படித்த அல்லது கேட்ட புத்தகங்கள் எத்தனை?

* எத்தனை மணி நேரம் நீங்கள் தெளிவான சிந்தனைக்காகப் பேச்சில்லாமல் (அமைதியாக) இருந்தீர்கள்? இதற்கு முன்னர் செய்திராதச் செயல்களில் இரண்டு அல்லது மூன்று செயல்கள் எதையும் செய்தீர்களா?

* செமினார்கள், வொர்க் ஷாப்புகள், கச்சேரிகள் போன்ற அனுபவத்தைத் தரும் விஷயங் கள் எதற்கும் சென்றீர்களா?

* உங்களுக்கு மிக முக்கிய மான நபர்களுடன், உறவை மேம்படுத்திக்கொள்ள உதவும் காரியம் எதையாவது நீங்கள் செய்தீர்களா?

''இந்த ஏழு கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் ஏதும் இல்லை யென்றால் நீங்கள் ரொம்பச் சாதாரணமான வாழ்வை வாழ்ந்து வருவது உறுதி'' என்கின்றனர் ஆசிரியர்கள்.

''முதலில் சின்ன வாழ்வு வாழ்கின்றோம் என்ற எண்ணம் மாறவேண்டும். அதற்கு மேற்சொன்ன செயல்களைச் செய்யவேண்டும்'' என்று சொல்லும் ஆசிரியர்கள் நார்மன் வின்சென்ட் பீலேயின் கதையைச் சொல்கின்றார்கள்.

சிறுவயது முதலே எனக்கு மூளையே இல்லை, ஒன்றுக்கும் உதவாதவன் நான், உலகத்தில் நான் ஒரு தூசு என்று நினைத்தே வந்தாராம் பீலே. இவருடைய இந்த ஆழ்மன நினைப்பு அவரைப் பார்க்கும் நபர்களும் இந்த ஆள் வேலைக்கு ஆகாதவர் என்று நினைக்கத் தூண்டியதாம். அவருடைய பேராசிரியர் ஒருவர், நீ ஏன்டா இப்படி மனோதைரியம் இல்லாதவனா இருக்கே! என்று திட்டினாராம். இதையே சீரியஸாக எடுத்துக்கொண்டதால்தான் உலக அளவில் இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையான 'த பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

தொழில் செய்பவருக்கும் வேலை செய்பவருக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை உணர்த்த ஆசிரியர்கள் ஒரு சுவையான கதையைச் சொல்கிறார்கள். ''ஒரு காபிக்கொட்டை வியாபாரி சேம்பிள்களை கொள்முதல் செய்து பக்கத்தில் இருக்கும் சந்தைக்கு ஒரு கழுதை மீது ஏற்றிச் செல்கின்றார். கழுதை பின்தொடர்ந்து வர ஒரு கேரட் ஒன்றை காட்டி கூட்டிச் செல்கின்றார். கேரட் தின்பதற்கு ஆசைப்பட்டு, கழுதை அவரைப் பின் தொடர்ந்து காபிக்கொட்டை சேம்பிள் மூட்டைகளைச் சுமந்த வண்ணம் செல்கின்றது. சந்தைக்குச் சென்றபின்னர் வியாபாரி பெரியதொரு டீலைக் குளோஸ் செய்யலாம். அல்லது சுமாரானதொரு டீலைக் குளோஸ் செய்யலாம். பெரிய டீலைக் குளோஸ் செய்தால் கைநிறைய காசு. சுமாரான டீல் எனில் கொஞ்சம் காசையும் நிறைய அனுபவத்தையும் சேர்க்கிறார்.  

பெரிய டீலோ, சின்ன டீலோ கழுதைக்குக் கிடைப்பது என்னவோ, கேரட் மட்டும்தான். அதைத் தின்றபின் அடுத்த நாள் பொதி சுமக்க அது தயாராக இருக்கின்றது. வேலைக்குப் போகின்றவர்கள் தங்களுடைய நேரத்தைப் பொருளாக்கி விற்கின்றார்கள். அவர்கள் கையில் இருக்கும் ஸ்டாக் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டுமே. திடீரென ஒருநாள், ''இந்த வருடம் ஐயாயிரம் மணி நேரம் எக்ஸ்ட்ரா நீங்கள் வேலை செய்யவேண்டும்; வேலை செய்தால் அதற்கான கூலி தந்துவிடுகிறேன்'' என்று சொன்னால் உங்களால் அந்த ஐயாயிரம் மணி நேரத்தை சப்ளை செய்ய முடியாது. தினம்  ஒரு மணி நேரம் என எக்ஸ்ட்ராவாக வேலை பார்த்தாலும்கூட கிட்டத்தட்ட 12 வருடம் வேலை பார்த்தால்தான் அந்த எக்ஸ்ட்ரா ஐயாயிரம் மணி நேரம் வேலை பார்க்க முடியும். அதேநேரம் ஒரு தொழிலைச் செய்பவர், உதாரணத்திற்கு காபிக்கொட்டை சப்ளை செய்பவர், எவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்தாலும் அதை வேறெங் கிருந்தாவது வாங்கி சப்ளை செய்து லாபம் பார்க்க முடியும். என்ன, நினைத்துப் பார்த்தாலே கடுப்பாக இருக்கிறதில்லையா?'' என்று வெறுப்பேற்றுகின்றார்கள் ஆசிரியர்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி ஆசிரியர்கள் பணம் மற்றும் அறிவைப் பெற பின்வரும் பத்து படிநிலைகளைச் சொல்லியுள்ளனர்.

1) படிக்கவேண்டியது பத்து முக்கிய புத்தகங்கள் (பட்டியலையும் தந்துள்ளனர்),

2) கலந்துகொள்ளவேண்டிய மூன்று அல்லது நான்கு முக்கிய செமினார்கள்,

3) சந்தா செலுத்தி வாங்கவேண்டிய இரண்டு முக்கிய புத்தகங்கள்,

4) வாரந்தோறும் படிக்கவேண்டிய/கேட்க வேண்டிய இன்டர்நெட் ப்ளாக்குகள்/பாட்காஸ்ட்கள்,

5) சோஷியல் நெட்வொர்க் கம்யூனிட்டியில் சேருதல்,

6) மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளுதல்,

7) இந்த வருடம் ஒரு புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ளுதல்,

8) உங்களுடைய பேச்சு மற்றும் பிரசென்டேஷன் ஸ்கில்லை வளர்த்துக்கொள்ளுதல்,

9) உடல்ரீதியான தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள பிட்னஸ் திட்டங்களை செயலாக்குதல்,

10) வருடத்துக்கு இரண்டு முறையாவது முன்பின் தெரியாத ஊருக்குப் பயணித்தல்.

இந்தப் படிநிலைகளைத் திட்டமிட்டு செய்து வந்தால் நீங்கள் முன்னேறுவது நிச்சயம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

எல்லாம் சரி, இதையெல்லாம் செய்தும் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்கின்ற சிலரும் இருப்பார்கள்தானே? அவர்கள் செய்யவேண்டிய ஐந்து முக்கிய விஷயங்களைச் சொல்லி இந்தப் புத்தகத்தை முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.

முன்னேறத் துடிக்கும் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism