Published:Updated:

வாழ்க்கையை மாற்றும் சக்தி !

வாழ்க்கையை மாற்றும் சக்தி !

பிரீமியம் ஸ்டோரி

 முக்கிய புத்தகம்

##~##

'வாழ்க்கையே போரடிக்குது; எதிலும் கான்சன்ட்ரேட் பண்ண முடியலை; நம்ம தகுதிக்கு இதெல்லாம் எட்டாக்கனி; இந்த போட்டியிலெல்லாம் இருந்து ஒதுங்கி இருக்கிறதுதான் பெட்டர்’ என்று சொல்லி ஒரு சாமான்யனாக வாழும் மனிதர்களுக்கு எள்ளளவும் வருத்தப்படாமல் சவுக்கடி தருவதற்காகவே எழுதப்பட்ட புத்தகம் இது என்று சொல்லி ஆரம்பிக்கிறது ப்ரெண்டன் புர்சர்டு எழுதிய 'த சார்ஜ்’ என்கிற புத்தகம்.

நீங்கள் ஒரேமுறை வாழும் வாழ்க்கையில் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள் என்ற வாதத்தை வைக்கும் ஆசிரியர், எதையும் எதிர்கொள்வதற்கு எனர்ஜி தேவைப்படுகின்றது; அந்த எனர்ஜியை ஒரு பேட்டரியை சார்ஜ் செய்வதைப்போல் உங்கள் மனதிலும் சார்ஜ் செய்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் புத்தகத்தில் சொல்கின்றார்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியானபோதும் வாழ்க்கையை ஓர் உற்சாகத்துடன், அதிக ஈடுபாட்டுடன், அதிக உற்பத்தித்திறனுடன் வாழ முடிவதில்லை. ஒருசில நேரங்களில் நம்முடைய மனதின் எதிர்பார்ப்புக்கே நம்மால் ஈடுகொடுத்து செயல்பட முடிவதில்லை என்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, ஏன் ஒரு வருடத்தை நாம் பல விஷயங்கள் செய்து முடிக்கவேண்டும், வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தோடும் சூளுரைகளோடும் ஆரம்பிக்கின்றோம். ஆனால், அவற்றை முழுமையாகச் செய்துமுடிக்க முடியாமல் ஓர் ஏக்கத்தினோடே நாட்களையும், வாரங்களையும், மாதங்களையும் ஏன் வருடங்களையும் கடந்து வந்துவிடுகின்றோம். முழுமையாக நினைத்ததை முடிக்கின்ற வாழ்க்கையை வாழ உதவும் மனநிலையைப் பெற நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய பத்து எளிமையான வழிகளை புர்சர்டு இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார்.

வாழ்க்கையை மாற்றும் சக்தி !

நம் மூளையையும் மனதையும் 'சார்ஜ்’ செய்தபிறகு அதிலிருந்து கிடைக்கும் சக்தியை வைத்து நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது எப்படி என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம். புர்சர்டு மனித வாழ்க்கையை சுவாரஸ்யமான மூன்று வகையாகப் பிரிக்கின்றார். முதலாவதாக, கூண்டு வாழ்க்கை (கேஜ்ட் லைஃப்). இந்த வகை வாழ்க்கையை வாழ்பவர்கள் நான் அப்படியிருந்தேன், இப்படியிருந்தேன் என்று பழைமை போற்றியோ அல்லது சூழ்நிலையால் அடுத்தவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக மட்டுமோ வாழ்பவர்கள்.

இரண்டாவதாக, சௌகரியமான வாழ்க்கை (கம்ஃபர்டபிள் லைஃப்). நம்மில் பெரும்பாலானோர் இந்த வகை வாழ்க்கையைத்தான் வாழ்கின்றோம். வீடு, வாசல், மனைவி, குழந்தை, பைக், கார் போன்ற அனைத்தையும் கொண்ட வாழ்க்கை இது. ரொம்ப ரிஸ்க் எடுக்காமல் பாஸை, மனைவியை, பக்கத்து வீட்டுக்காரரை அனுசரித்து வாழும் முறை இது. இவர்களுக்கு அவ்வப்போது ஒரே ஒரு பிரச்னை மட்டும் வந்துவந்து போகும். என் திறமைக்கு நான் இந்த வாழ்க்கைதானா வாழணும்? நான் எங்கேயோ இருக்க வேண்டியவன்! என்ற நினைப்புதான் அது.

''கூண்டு வாழ்க்கைக்கும் சௌகரிய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. கூண்டில் எல்லாம் கிடைக்கின்றது. ஆனால், கூண்டிற்குள் இருப்பதால்தான். சௌகரிய வாழ்க்கையிலும் எல்லாம் கிடைக்கின்றது. இங்கே நாம் செய்துகொள்ளும் அட்ஜஸ்ட்மென்ட்தான் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் சௌகரியக் கூண்டாகின்றது'' என்கின்றார் ஆசிரியர்.

வாழ்க்கையை மாற்றும் சக்தி !

கூண்டில் வாழுபவர்களும், சௌகரியத்தில் வாழ்பவர்களும் தங்கள் துறையில் சிறப்பாகச் செயல்படுவதற்கான அனைத்துத் திறமையையும் எட்டும்போது வாழ ஏங்கும் நிலைதான் மூன்றாவது வாழ்க்கை நிலையான சார்ஜ்டு லைஃப் (சக்திமிக்க வாழ்க்கை).

கூண்டு வாழ்க்கைக்குள் செல்பவன் என்னால் வாழ முடியுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டபோது கூண்டுக்குள் போகும் வாழ்வைத் தேர்ந்தெடுக்கின்றான். நாளடைவில் திறமை வளரும்போது வாழ்க்கை போரடிக்க ஆரம்பிக்கின்றது. சௌகரிய வாழ்க்கை வாழ்பவன், என்னால் இந்தப் புதிய விஷயத்தைச் செய்து சாதிக்க முடியுமா? நான் இதைச் செய்தால் உலகம் ஒப்புக்கொள்ளுமா? இருக்கும் சௌகரியத்தையும் இழந்துவிடுவோமோ என்று பயந்து புதிய விஷயங்களைச் செய்யாமல் அடக்கி வாசிக்க ஆரம்பிக்கின்றான். தொடர்ந்து அடக்கி வாசிக்கும்போது வாழ்க்கை போரடிக்கின்றது.

சக்தி மிகுந்த வாழ்க்கையை (சார்ஜ்டு லைஃப்) வாழ்பவன் என் திறமைக்கும் தகுதிக்கும் சமமான வாழ்க்கையைத்தான் நான் வாழ்கின்றேனா? மற்றவர்களுக்கு ஓர் உதாரணமான வாழ்க்கையைத்தான் இப்போது வாழ்ந்து வருகின்றேனா? என்ற கேள்விகளைக் கேட்டு வாழ்கின்றான். அதனால் அவனுடைய வாழ்க்கை எப்போதுமே போரடிப்பதில்லை. தினமும் ஒரே மாதிரி நடக்கும் காரியங்களில் அவன் சிக்குவதில்லை. எப்போதும் முன்னேற்றம், எதிலும் முன்னேற்றம் என்ற கொள்கையை கொண்டிருப்பதால் புதிதுபுதிதாக பல விஷயங்களைச் செய்கின்றான். ஒரு நிறைவான வாழ்வை வாழ்கின்றான்.

கூண்டு வாழ்க்கை வாழ்பவருக்கும், சௌகரிய வாழ்க்கை வாழ்பவருக்கும் சக்தி மிகுந்த வாழ்க்கை என்பது ஓர் எட்டாக்கனியாகவே எப்போதும் தோன்றும். வானத்தில் இருக்கும் நட்சத்திரம்போல் இருக்கும். சார்ஜ்டு லைஃப் வாழ்பவருக்கோ நட்சத்திரத்தைத் தாண்டி, அடுத்த கோளிலும் கால் வைக்க முடியும் என்ற நம்பிக்கையும் முயற்சியும் இருக்கும்.

இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறதே! சரி, நான் சார்ஜ்டு லைஃப் வாழவேண்டும், எப்படி என்னை மாற்றிக்கொள்வது என்று கேட்கின்றீர்களா? அந்தத் தூண்டுதலுக்கான பத்து வழிமுறைகளைத்தான் புர்சர்டு இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார்.

இந்தப் பத்து தூண்டுதல்களை அடிப்படைத் தூண்டுதல்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான தூண்டுதல்கள் என்ற இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளார் ஆசிரியர். ஆளுமை, தகுதி, முழுமையான முயற்சி, அக்கறைத்தன்மை, நட்புறவு என்ற ஐந்தையும் அடிப்படைத் தூண்டுதல்களாகவும், மாற்றத்தை விரும்புதல், போட்டிகளை எதிர்கொள்ளல், புதுமைகளைச் சிந்தித்தல், உபகாரம் செய்தல், விழிப்பு உணர்வு என்ற ஐந்தையும் முன்னேற்றத்திற்கான தூண்டுதல்களாகவும் சொல்லியுள்ளார்.

இந்த ஒவ்வொரு தூண்டுதல்களையும் எப்படிப் பெறுவது, செயல்படுத்துவது என்பதற்கு மூன்று வழிகளையும் எளிமையான உதாரணத்துடன் கொடுத்துள்ளார். இந்தப் பத்து விஷயங்களையும் முற்றிலுமாக உணர்ந்து செயலாக்குவது என்பது நமக்கும் ஆசிரியருக்குமே பூரணமாக இயலாத காரியம் என்று சொல்லும் ஆசிரியர், இந்தப் பத்து விஷயங்களைப் பற்றிப் புரிந்துகொண்டு இவற்றில் எதையாவது ஒன்றை சிறிதளவு கையகப்படுத்தினாலும்கூட நம்முடைய வாழ்க்கைப் பயணம் கொஞ்சம் வேகமாக முன்னோக்கி ஓட ஆரம்பித்துவிடும் என்று உறுதி கூறுகின்றார்.

''நம்முடைய அன்றாட வாழ்க்கையை வாழும்போது ஏதாவது ஒன்று சுலபமானதாக இருந்ததென்றால் அது நம்மை சார்ஜ்டு லைஃப்பை நோக்கி செல்லவிடாமல் தடுக்கும் விஷயமாக இருக்கும். சார்ஜ்டு லைஃப்பை வாழ விரும்புபவர் செய்யும் செயல்களில் சுலபம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது'' என்று கூறும் ஆசிரியர் ஒருபடி மேலே போய், ''இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது உங்களுக்கு இதில் சொல்லப்பட்டிருப்பது ஏதாவது சுலபமாகத் தெரிந்தால் அது உங்களை சார்ஜ்டு லைஃப்பை நோக்கிச் செல்வதற்கு தடையைப் போட்டுவிடலாம்'' என்று எச்சரிக்கின்றார்.  

''சார்ஜ்டு லைஃப் என்பது உங்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை இந்த நிமிடமே மறந்துவிடுங்கள். இந்த நொடியிலிருந்து உலகத்தை புதுமாதிரியான யுக்திகளுடன் எதிர்கொள்வேன் என்று சூளுரைத்து செயல்பட்டு வெற்றியையும் சந்தோஷத்தையும் பெறுங்கள். உங்களுடைய ஒவ்வொரு நாளைத் திட்டமிடுவதும், அந்த நாட்களுக்குத் தேவையான தூண்டுதல்களைப் பெற்று செயலாக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது. முழுமையான சார்ஜுடன் ஒவ்வொரு நாளையும் துவக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்'' என்று முடிக்கின்றார் ஆசிரியர்.

சாதிக்க நினைக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை நிச்சயமாக படிக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு