Published:Updated:

முக்கிய புத்தகம் : வெற்றிச் சூத்திரங்கள் !

முக்கிய புத்தகம் : வெற்றிச் சூத்திரங்கள் !

##~##

'ஒருவர் தன் வாழ்வில் சின்னப் பிள்ளையாக சில ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், சின்னப் பிள்ளைத்தனமாக ஆயுசு முழுக்க இருக்க முடியும்’ என்கிற 'நச்’ ஓப்பனிங்குடன் ஆரம்பிப்பதுதான் நிக்கி ஜாய் எழுதிய இந்தப் புத்தகம்.

''வெற்றி என்பது பலருக்கும் பல மாதிரியானது. ஆனால், வாழ்க்கை என்ற விளையாட்டை ஒவ்வொரு நிமிடமும் முழுஈடுபாட்டுடனும், சௌகரியத் துடனும், சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும், பாசிட்டிவ் எண்ணங்களுடனும், பிரயோஜனத் துடனும் விளையாடுவதே மிகப் பெரிய வெற்றியாகும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்'' என்று சொல்லி ஆரம்பிக்கின்றார் ஜாய். முப்பது வருடத்துக்கும் மேலாக பல வெற்றியாளர்களை  ஆராய்ந்து வெற்றிச் சூத்திரங்களைக் கண்டறிந்து சொல்லி இருக்கிறார் அவர்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்கிற எண்ணம் வேண்டும். அந்த எண்ணத்தைக் கொண்ட பின்னர் விளையாட்டில் பங்கேற்று விளையாடவும் வேண்டும். இதற்கு உங்களை தயார் செய்துகொள்ள ஒவ்வொரு நாளும் ஏழு நிமிடங்களை மட்டுமே செலவழித்து இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களாகப் படித்தீர்கள் என்றால், வெற்றி பெறுவது எப்படி என்ற கேள்விக்கு நிச்சயம் விடை சொல்வீர்கள்'' என்கிறார் ஆசிரியர்.

வெற்றி பெறுவதற்குத் தேவையான சில விஷயங்களை அற்புதமாக பட்டியல் போடுகிறார் ஆசிரியர். அதில் முதலாவதாக, வெற்றி பெற்றவர்கள் நல்ல மனமுதிர்வுடன் இருக்கிறார்கள் என்கின்றார். அது என்ன மனமுதிர்ச்சி? பின்வரும் 9 விஷயங்கள் உங்களிடம் இருந்தால் நீங்களும் நல்ல மனமுதிர்வுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

முக்கிய புத்தகம் : வெற்றிச் சூத்திரங்கள் !

ஒரு வேலையை யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் உங்களால் செவ்வனே செய்ய முடியும்; உங்களால் எதையும் யாருடைய தூண்டுகோளும் இல்லாமல் செய்ய முடியும்; பாக்கெட்டில் பணத்தை வைத்துக்கொண்டு திரியும்போதுகூட செலவழிக்காமல் இருக்க முடியும்; உங்களுக்கு எதிராக ஓர் அநீதி இழைக்கப்படும்போது நீங்கள் பழிவாங்கல் உணர்வைப் பெறாமல்  சாதாரண நிகழ்வாக அதனை எடுத்துக்கொள்ள முடியும்; எதிர்காலத்தில் இன்னின்ன விஷயங்கள் இப்படி இப்படிப் போகும் என்று கணிக்க முடியும்; விவேகத்துடன், நினைப்பதை எல்லாம் உளறிக் கொட்டாமல் தேவையான அளவுக்கு சென்சார் செய்து பேசமுடியும்; நீங்கள் செய்யும் அல்லது செய்யாமல் விடும் காரியங்களுடைய பின்விளைவுகளும், பக்க விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை முழுமையாக உங்களால் முன்னதாகவே உணரமுடியும்; தேவையான போது பழிச்சொல்லை ஏற்றுக்கொள்ள முடியும்; அனுபவத்திலிருந்து முழுமையான பாடங்களைப் படித்துக்கொள்ள முடியும்.

இரண்டாவதாக, வெற்றி பெற்றவர்கள் தங்களைத் தாங்களே 'மோட்டிவேட்’ செய்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்  ஆசிரியர்.

''சுய முயற்சியும், சுய ஊக்குவிப்புமே ஒருவரை வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும்.  ஊக்குவிப்பு என்பது மெஷின்களுக்கு செய்யப்படும் பராமரிப்புபோல, நமக்கு நாமே செய்துகொள்ளவேண்டிய  சுயபராமரிப்பு. உடம்பில் உள்ள தசைகள் கட்டுமஸ்த்-ஆக இருக்க தொடர் உடற்பயிற்சி தேவை. அதேபோல் மனமும் திடமாக இருக்க சுயஊக்குவிப்பு கட்டாயம் தேவை. ஊக்குவிப்பு என்பது வீக்கான நபர்களுக்காக அல்ல, மிகவும் கடினமான (என்னத்த செஞ்சு, என்னத்த கண்டோம் என்று சொல்லி உறைந்துபோனவர்கள்) நபர்களுக்கு'' என்று விளக்கம் தருகிறார் ஆசிரியர்.

மூன்றாவதாக, வெற்றி பெற்றவர்கள் ஏற்கெனவே இருக்கும் அனுமானங்களுக்கு அறைகூவல் விடுபவர்களாகவும், ரிஸ்க் எடுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள் என்கின்றார் ஆசிரியர். ''நள்ளிரவில் தன்னந்தனியே நடந்து போகிறீர்கள். திடீரென மின்சாரம் போகிறது. கொஞ்ச நேரத்தில் உங்கள் பின்னால் யாரோ நடப்பதுபோல் சத்தம் வருகின்றது. பயம் கூடுகின்றது! அடுத்த இரண்டு நிமிடத்தில்

முக்கிய புத்தகம் : வெற்றிச் சூத்திரங்கள் !

கரன்ட் வந்து தெருவிளக்கு எரிகிறது. திரும்பிப் பார்த்தால் யாருமில்லை. சத்தம் கேட்பதுபோல நீங்களே கற்பனை செய்துகொண்டு, பயந்திருக்கிறீர்கள். நீங்கள் உண்மை என்று நம்பியது ஒரு பொய்யை! பொய்யை நம்பியதால் தைரியத்தை இழந்தீர்கள் இல்லையா? ஆனால், வெற்றி பெற்றவர்கள் இப்படி தைரியத்தை இழந்துவிடுவதில்லை.

நான்காவதாக, வெற்றி பெற்றவர்கள் நேரத்தை அவர்களுக்காக வேலை செய்யும்படி செய்துவிடுகின்றனர். நல்ல நேரம், கெட்ட நேரம், சரியான நேரம், தவறான நேரம் என்றெல்லாம் ஒன்று வெற்றி பெற்றவர்களுக்கு இருப்பதேயில்லை. எல்லா நேரத்திலும் எப்படி செயல்படுவது என்பதை அவர்கள் நன்றாகத் தெரிந்துவைத்திருப்பதன் மூலமே வெற்றி பெறுகின்றனர். ''இருக்கிற நேரத்தில் நிறைய விஷயங்களைச் செய்து முடிக்க நினைக்காமல், சரியான செயல்களை அதற்குரிய புத்திசாலித்தனத்துடன் செய்யவேண்டும்'' என்கிறார் ஆசிரியர்.

வெற்றி பெற்றவர்கள், அடுத்தவர்களை நகர்த்திச் சென்று செயல்படவைப்பதில் கில்லாடிகளாக  இருக்கிறார்கள். இன்றே, இப்போதே என்று சொல்லி, நினைத்ததை சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.    

''வெற்றி பெற்றவர்கள் அதிகம் காமன்சென்ஸ் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நல்ல பழக்கங்கள் (மேனர்ஸ்) நிறைந்தவர்களாகவும், எப்படி தங்களை மார்க்கெட் செய்வது என்று தெரிந்தவர்களாகவும், எப்போதும் ஃப்ராம்ட்-ஆக (நினைவுவைத்து செய்தல்) எதையும் செய்பவர்களாகவும், நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்'' என்றும் சொல்கிறார் ஆசிரியர்.  

வெற்றிச் சூத்திரங்களைத் தெரிந்துகொண்டு ஜெயிக்க நினைக்கும் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

- நாணயம் டீம்.