Published:Updated:

செளக்கியமாக வாழ 5 வழிகள் !

Vikatan Correspondent
##~##

''சௌக்கியமாக வாழ்வது என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் புரியாமலேயே வாழ்கின்றோம் நாம். சிலர், நிறைய வெற்றி பெற்று, சொத்துபத்துகளோடு இருப்பது என்று நினைக்கிறார்கள். சிலர், கட்டுமஸ்தான உடலுடன் நோய்நொடியில்லாமல் வாழ்வது என்று நினைக்கிறார்கள். இந்த இரண்டுமே சௌக்கியமில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டுமே குறியாக வைத்து செயல்பட ஆரம்பித்தால் நம் வாழ்வில் குழப்பமும் தோல்வியும்தான் மிஞ்சும்'' என்று ஆரம்பிக்கின்றார்கள் 'வெல்பீயிங்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்களான டாம் ராத் மற்றும் ஜேம்ஸ் கே. ஹார்டர்.

''சௌக்கியம் என்பது நாம் அனுதினமும் எந்த விஷயங்களைப் பிரியப்பட்டு செய்கின்றோம், மற்றவர்களுடன் நம்முடைய பழக்கவழக்கங்கள் எப்படியிருக்கின்றது, நம்முடைய சொத்துசுகங்கள் எந்த அளவுக்கு பத்திரமாக இருக்கின்றது, நம்முடைய உடல்நிலை எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கின்றது, நாம் வாழும் சமுதாயத்திற்கு நாம் எந்த அளவு உபயோகமான விஷயங்களை திருப்பித் தந்துள்ளோம் என்ற ஐந்து விஷயங்களின் சரியான விகிதத்திலான கலவையாகத்தான் இருக்கின்றது. எந்த அளவுக்கு இவை ஐந்தும் ஒன்றுக்கொன்று இணையாக செயல்படுகின்றதோ, அந்த அளவுக்குதான் நம்முடைய சௌக்கியமும் தழைத்தோங்குகின்றது'' என்றும் சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

தொழில்/வேலை ரீதியிலான நலம் (கேரியர் வெல்பீயிங்), நட்புவட்டார ரீதியான நலம் (சோஷியல் வெல்பீயிங்), பணரீதியான நலம் (ஃபைனான்ஷியல் வெல்பீயிங்), உடல்ரீதியான நலம் (பிஸிக்கல் வெல்பீயிங்), நாம் வாழும் சமுதாயத்தின் நலம் (கம்யூனிட்டி வெல்பீயிங்) என்ற ஐந்து பெரும் பிரிவுகளை இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளனர்.

செளக்கியமாக வாழ 5 வழிகள் !

உங்களுக்குப் பிடித்த வேலையைத்தான் செய்கின்றீர்களா என்ற கேள்விக்கு இருபது சதவிகிதம்பேர்தான் 'ஆம்’ என்ற பதிலைச் சொல்கின்றனர். வேலையும் சௌக்கியமும் ஒன்றையன்று மிகவும் சார்ந்தது என்று கூறுகின்ற ஆசிரியர்கள், மனைவி இறந்த துக்கத்திலிருந்துகூட ஒருவர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியே வந்துவிடுகின்றார். ஆனால், வேலையை இழந்து நீண்டநாட்கள் இருந்தால் அந்த துக்கத்திலிருந்து ஒரு மனிதரால் வெளிவர மிக நீண்டநாட்களாகின்றது என்று ஆய்வுகள் சொல்கிறது என்கின்றனர்.

பிடிக்காத வேலையைச் செய்வது, பள்ளியில் ஒரு பிடிக்காத சப்ஜெக்ட் அல்லது ஆசிரியரின் வகுப்பில் உட்கார்ந்திருக்கிற மாதிரி. அப்போது உருவாகிற டென்ஷன் மாதிரி, பிடிக்காத வேலையைச் செய்யும்போது உருவாகின்றது என்றும், தொடர்ந்து பிடிக்காத வேலையைச் செய்யும்போது அது நம்முடைய நலனை (சௌக்கியத்தை) பெருமளவில் பாதிக்கும் என்றும் சொல்கின்றனர். நல்ல பாஸ், ஒரு நல்ல கைதேர்ந்த டாக்டருக்குச் சமம் என்றும் சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

'உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத சந்தோஷமான நிமிஷங்களைச் சொல்லுங்கள்’ என்று உங்களை யாராவது கேட்டால் நீங்கள் எதைச் சொல்வீர்கள். எதைச் சொன்னாலும் அந்த நிகழ்வில் நீங்கள் மட்டுமே தனியரு மனிதனாக இருக்கமாட்டீர்கள். உங்கள் தாய், தந்தை, நண்பன், காதலி, மனைவி, மகள் என யாராவது ஒருவரோ, பலரோ அந்த நிகழ்வில் உங்களுடன் இருந்திருப்பார்கள். நல்ல நிகழ்வைவிடுங்கள், கெட்ட நிகழ்விலும் இப்படித்தான். ஆக, நாம் யாரும் தனிமரமில்லை. எனவே, ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது நம்முடைய நெருங்கிய நபர்களுடன் மனம் விட்டு பேசி பழகுவது நம்முடைய நாளை முழுஎனர்ஜியுடன் வைத்திருக்க உதவும் என்கின்றனர்.

அடுத்தபடியாக, பணம். சௌக்கியத்தை பணம் கொண்டு வாங்க முடியுமா என்று ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்ததில், ஒருவர் பணத்தை தனக்காகச் செலவு செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட அடுத்தவர்களுக்காக செலவு செய்யும்போது அதிக மகிழ்ச்சி கிடைக்கின்றது என்று கண்டறிந் துள்ளனர். ''பற்றாக்குறை இல்லாத நிலைமையை வைத்திருப்பது நம் சௌக்கியத்தை அதிகரிக்கும்.  அடுத்தவர்களுடைய நலம் பேணுவதற்காக செய்யப்படும் செலவுகள் மிகுந்த திருப்தியை உண்டு பண்ணி சௌக்கியத்தை அதிகரிக்கும்'' என்கின்றனர் ஆசிரியர்கள்.

அடுத்தபடியாக, உடல்ரீதியான சௌக்கியம். உங்கள் டாக்டரிடம் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பிற்கு சென்றால் முதலில் கேட்பது, உங்கள் தாய், தந்தை போன்றவர்களுக்கு ஏதும் சுகர், பிரஷர், கேன்சர் போன்றவை இருந்துள்ளதா? என்ற கேள்வியைத்தான். ஏனென்றால், டாக்டர் உங்களுடைய மரபணுக்கள் எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்ள விரும்புகின்றார். ஒருவேளை  உங்கள் மூதாதையருக்கு இந்த வியாதிகள் இருந்தால் உங்கள் மரபணுக்கள் அந்த சங்கதியைக் கொண்டிருக்கும். அப்போது என்ன செய்வது? என் அப்பாவுக்கு இருந்த சர்க்கரை வியாதி எனக்கு கட்டாயம் வரும் என்று சொல்லி வாழாமல், உங்கள் மரபணுவை அமைதிப்படுத்தத் தேவையான விஷயங்களை செய்யவேண்டும். சாப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம் என பல்வேறு சௌக்கியத்திற்கான விஷயங்கள் குறித்து நிறைய விஷயங்களைக் கொடுத்துள்ளனர் ஆசிரியர்கள்.

இறுதியாக, நாம் வாழும் சமுதாயத்தில் நம்முடைய சௌக்கியம் குறித்து சொல்கின்றனர். ''நீங்கள் சாப்பிடும் உணவை நீங்கள்தான் முடிவு செய்கின்றீர்கள்! பணம் உங்கள் பாக்கெட்டிலா அல்லது கடன் குறித்த உறுத்தல் உங்கள் மனதிற்குள்ளா என்று முடிவெடுப்பதும் நீங்களேதான்! உங்களுடைய வேலைகளுக்கு இடையேகூட பல்வேறு உடல்நலம் தரும் பயிற்சிகளைச் செய்யமுடியும் என்பதை நீங்களே சுலபத்தில் அறிந்து, கடைப்பிடிக்கும் முடிவை எடுப்பதும் நீங்கள்தான்! சமுதாயத்திற்கு இதை செய்வேன் என முடிவெடுக்கவேண்டியதும் நீங்கள்தான்! எனவே, சௌக்கியமாக வாழ்வது என்பது உங்கள் கையில் மட்டுமே உள்ளது'' என்று முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.

சௌக்கியமாக வாழ ஆசைப்படும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.

நாணயம் டீம்.