Published:Updated:

முக்கிய புத்தகம் : சரியான முடிவெடு! கொண்டாடு!

முக்கிய புத்தகம் : சரியான முடிவெடு! கொண்டாடு!

முக்கிய புத்தகம் : சரியான முடிவெடு! கொண்டாடு!

முக்கிய புத்தகம் : சரியான முடிவெடு! கொண்டாடு!

Published:Updated:
##~##
எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் வாழ்வின் மிக முக்கியமான விஷயம், நான் எடுத்த அந்த முடிவுதான் என்னை இந்நிலைக்கு உயர்த்தியது! நான் எடுத்த அந்த முடிவுதான் என்னை நடுரோட்டுக்குக் கொண்டுவந்தது என்று முன்னவர்கள் மீடியாவிலும், பின்னவர்கள் நம்மிடம் பெர்சனலாகவும் சொல்லக் கேட்கிறோம். அதனாலேயே முடிவெடுக்கும் கலை எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம்மில் பெரும்பாலானோர் முடிவெடுப்பதற்கு தடுமாறுவதைப் பார்க்கிறோம். ஓட்டலில் மெனுகார்டைப் பார்த்து ஆர்டர் சொல்வது போன்ற சுலபமான முடிவுகளிலிருந்து, சொற்ப சம்பளத்தையும் அதிக சௌகரியத்தையும் தரும் (நினைத்தால் போகலாம், நினைத்தால் வரலாம் என்ற முழுக்க முழுக்க நமக்கு வளைந்து கொடுக்கும் தன்மை) வேலையை விட்டுவிட்டு, ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர்ஸ் நிறைந்த சேலஞ்சிங்கான வேலை ஒன்றுக்கு மாறிச் செல்வதற்கான கடினமான முடிவு வரை எந்த முடிவையுமே எடுப்பதில் எப்படித் திறமையாக செயல்படுவது என்பதைப் பற்றிச் சொல்லும் 'தி ரைட் டிசிஷன் எவ்ரி டைம்’ என்ற லுடா கோபெய்கினா என்ற பெண்மணி எழுதிய புத்தகத்தைத்தான் இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதிலெல்லாம் புத்தகம் எழுதி அறிவுரை சொல்றது சுலபம். ஆனால், நிஜத்தில் முடிவெடுப்பது சிரமம் என்று சிலர் சொல்லலாம். இந்தப் புத்தகம் குறித்த எண்ணம் வந்த சூழலைச் ஆசிரியர் சொல்லும்போதே ஆசிரியரின் அனுபவம் புரிந்துவிடும். ''சோவியத் யூனியனில் சௌகரியமான ஒரு பல்கலைக்கழக வேலை, குவார்டர்ஸ் போன்றவற்றை விட்டுவிட்டு தனியாக ஒரு கர்ப்பிணியாக, கையில் தொண்ணூறு டாலர் பணத்துடனும், பையில் நாற்பது பவுண்ட் லக்கேஜுடனும் வெளிநாட்டுக்கு கிளம்ப நினைக்கும்போது சௌகரியத்துக்கு அடிமையாக இருப்பதா? அல்லது கடுமையான பிரச்னைகளைச் சந்திக்க வாய்ப்பிருக்கும், ஆனால் சுதந்திரம் தரும் வேலையை  நோக்கி சிறகடித்து வெளிநாட்டுக்குப் பறப்பதா? என்ற கடினமான முடிவெடுக்கும் சூழ்நிலையில்தான் இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பின்னர்தான் மூளையை ஃபோகஸாக யோசிக்க வைத்து முடிவெடுப்பது என்ற கலை குறித்து சீரிய ஆய்வில் இறங்கி னேன்'' என்கிறார் ஆசிரியர்.

முக்கிய புத்தகம் : சரியான முடிவெடு! கொண்டாடு!

வாழ்வில் இரண்டு பாதைப் பிரிவுகளைச் சந்திக்கும்போதெல்லாம் எந்தப் பாதையில் பயணிப்பது என்ற கேள்விக்கு நாம் விடைதேடுகின்றோம். உடல், மூளை, மனம், விருப்பம் போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே நாம் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. எப்படி இந்த அத்தனை விஷயங்களையும் கருத்தில்கொண்டு சரியான முடிவை வேகமாக எடுப்பது என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்கின்றார் ஆசிரியர். ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியின் சி.இ.ஓ. ஜாக்வெல்ச் போன்றவர்கள் முடிவெடுக்கும் விதத்தை அவர்களுடன் வேலை பார்த்ததன் மூலம் நேரடியாகப் பார்த்த அனுபவம்கொண்ட இவர், பல மில்லியன் டாலர் சம்பந்தப்பட்ட முடிவுகளை ரொம்பவுமே அலட்டிக்கொள்ளாமல், கையில் இருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு  தைரியத்தோடு முடிவெடுத்தைப் பார்த்ததை ஆச்சரியமாகச் சொல்கின்றார்.

முக்கிய முடிவுகளை சுலபமாக எடுக்க உடல், மூளை, மனம், விருப்பம் என்ற அனைத்தையும் ஒரு லேசர் பீம்போல நேர்கோட்டில் செலுத்தக் கற்றுக்கொண்டால் போதுமானது என்று ஆரம்பிக்கின்றார் ஆசிரியர். முடிவெடுக்கும் கலையில், தெளிவு (கிளாரிட்டி) என்பதை தலையாய விஷயமாகச் சொல்லும் ஆசிரியர், எதிர்காலத்தில் இதுஇது இப்படித்தான் நடக்கும் என்பதை, முடிவெடுக்கும் கலையை முழுமையாகப் புரிந்துகொண்டவர்களால் மட்டுமே தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது என்கின்றார். ஏனென்றால், முடிவு என்பதே தெளிவு என்பதை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்றும் சொல்கின்றார்.

''சரியான முடிவு என்பது மூளையும் மனதும் சங்கமித்துச் சொல்லும் பாதை. வேலை பார்க்கும் இடத்தில் பலர் சில முடிவுகளை அவர்களுடைய மனது, இது நடப்பில் சாத்திய மில்லை என்பது தெளிவாகச் சொன்னபோதும், பாஸ் மனதைக் குளிரவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூளையை மட்டுமே உபயோகித்து சொல்லி பின்னால் அவஸ்தைப்படுவதை நாம் அவ்வப்போது பார்க்கத்தானே செய்கின்றோம். உங்களுடைய மனதில் ஒன்று சரியென்று பட்டால்தான் அதைச் சரியாகச் செய்து முடிக்க முடியும்'' என்கின்றார் ஆசிரியர்.

முடிவெடுப்பதில் கில்லாடிகள் பலரும், தெளிவில்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை என்கின்றார்களாம். ஒரு டீம் லீடர் எந்த அளவுக்கு ஒரு ஈடுபாட்டுடன் செயல்படுகிறார் என்பதை வைத்தே அந்த டீமின் டார்கெட் முடிக்கப்படுமா, முடிக்கப்படாதா? என்று கண்டுபிடித்துவிடலாம் என்கின்றார் ஆசிரியர். ஏனென்றால் டார்கெட்டில் மனத்தெளிவும், நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே டீம் லீடர் இது சாத்தியம் என்ற எண்ணத்தில் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வார். இல்லாவிட்டால் ஏனோதானோ என்றுதான் இருப்பார் என்கின்றார் ஆசிரியர்.

அதுசரி, தெளிவை எப்படிப் பெறுவது என்கின்றீர்கள்தானே? தெளிவு என்ற நிகழ்வு நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நடக்கவேண்டுமென்றால் உடல்ரீதியாக ரிலாக்ஸ்டாகவும், மனரீதியாக சந்தோஷமாகவும், பாசிட்டிவ் எண்ணத்துடனும், பயமில்லா நிலையிலும், ஏக்கம் ஏதுமில்லாமலும் நாம் இருக்கவேண்டும் என்கின்றார் ஆசிரியர்.

இதையெல்லாம் தாண்டி நிகழ்காலத்தில் நாம் வாழவேண்டும். மிக முக்கியமாக கையில் இருக்கும் பிரச்னையை கூர்ந்துநோக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்கின்றார்.

முக்கிய புத்தகம் : சரியான முடிவெடு! கொண்டாடு!

இதெல்லாம் மட்டும் போதாதாம். நாம் முழுமையான அதிகாரத்துடனும், சக்தியுடனும், வெற்றிகளுடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டுமாம். அப்போதுதான்  

வெற்றிகளைத்தரும் முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தேவையான தெளிவு என்ற நிகழ்வு நமக்கு அடிக்கடி ஒவ்வொரு முடிவெடுக்கும் வேளையிலும் நிகழுமாம்.

ஒருபோதும் எந்த விஷயத்திலும் தெளிவாக இருக்க முடியலையே என்கின்றீர்களா? தெளிவிற்கு தடை போடும் ஐந்து விஷயங்களை ஆசிரியர் தந்துள்ளார். ஒரு செயலின் நோக்கம் என்ன என்றே தெரியாமல் இருத்தல், அதில் உள்ள இக்கட்டுகளும் நிர்ப்பந்தங்களும் என்ன என்று தெரியாமல் இருத்தல், மனரீதியான விஷயங்களான பயம், குற்ற உணர்ச்சி, மனஉளைச்சல் போன்றவற்றை கையாளத் தெரியாமை, தொலைநோக்குப் பார்வையின்மை, கையில் இருக்கும் வழிகளில் எதைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய இயலாமை என்ற ஐந்தும்தான் முடிவெடுப்பதில் தெளிவு பெறுவதற்கான முக்கியத் தடைகள் என்கின்றார் ஆசிரியர்.

இந்தத் தடைகளுக்கு உதாரணங்களைத் தந்துள்ள ஆசிரியர் நீங்கள் கடைசியாக முடிவெடுக்கத் தடுமாறியபோது என்னென்ன பிரச்னைகளைச் சந்தித்தீர்கள் என்பதை இவற்றுடன் ஒப்பீடு செய்துகொள்ளச் சொல்கிறார்.

கடைசியாக நீங்கள் முடிவெடுத்தபோது தெளிவிற்கு தடையாக இருந்தவை என்ன என 115 சி.இ.ஓ.-களிடம் கேட்டபோது, 30 சதவிகிதம் செயலின் நோக்கம் என்ன என்றே தெரியாமல் இருத்தல், 25 சதவிகிதம் அதில் உள்ள இக்கட்டுகளும் நிர்ப்பந்தங்களும் என்ன என்று தெரியாமல் இருத்தல், 17 சதவிகிதம் மனரீதியான விஷயங்களான பயம், குற்ற உணர்ச்சி, மன உளைச்சல் போன்றவற்றை கையாளத் தெரியாமை, 15 சதவிகிதம் தொலைநோக்குப் பார்வையின்மை, 13 சதவிகிதம் கையில் இருக்கும் வழிகளில் எதைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய இயலாமை எனக் கூறியுள்ளனர்.

உங்களுடைய சுயமுயற்சியால் தெளிவு நிலையை நோக்கி வேகமாகச் செல்ல முடியும் என்று சொல்லும் ஆசிரியர் அதற்குரிய வழிமுறை களை அழகாகச் சொல்லியுள்ளார். தவறான பாதையில் எவ்வளவு வேகமாக ஓடினாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று ஆணி அடித்ததைப்போல கூறும் ஆசிரியர், என்ன செய்ய வேண்டும், அதில் என்ன பிரச்னை வரும், எந்த வகை முடிவு வேண்டும் மற்றும் என்னென்ன முடிவு சாத்தியம் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் முடிவெடுப்பதில் அர்த்தமில்லை என்கின்றார். கடைசியாக, முடிவெடுப்பதில் இருக்கும் கடினத்தன்மையை பெருமளவில் குறைத்துக்கொள்வதற்கான டிப்ஸ்கள் பலவற்றையும் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

வாழ்க்கையோ, கம்பெனியோ முடிவுகள் பலவற்றை எடுக்கும் சூழ்நிலையில், நாம் அனைவருமே ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்தே வருகிறோம். நாம் எடுக்கும் முடிவுகள்தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. எனவே, அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.

- நாணயம் டீம்.