Published:Updated:

முக்கிய புத்தகம் - முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் !

முக்கிய புத்தகம் - முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் !

முக்கிய புத்தகம் - முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் !

முக்கிய புத்தகம் - முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் !

Published:Updated:
##~##

'நீங்கள் ஏன் காசு, பணம் இல்லாமல், சுறுசுறுப்பும் இல்லாமல், உடல்உறுதியும் இல்லாமல் இருக்கிறீர்கள்? எப்படி ஸ்மார்ட்டாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வசதியாகவும் இருப்பது?' புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தாலே படிக்கவேண்டும் என்பதுபோல தோன்றவில்லையா?  சும்மா சொல்லக்கூடாது, புத்தகத்தின் ஆசிரியர் ராண்டி கேஜ் இந்த புத்தகத்தை சுவாரஸ்யமாகவே எழுதி இருக்கிறார்.

ஆனால், ஒரு சிறு எச்சரிக்கை. சினிமாவுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட் தருவதுபோல், இந்தப் புத்தகத்தில் நிறைய இடங்களில் சிறுவர்கள் படித்து ஜீரணித்துக்கொள்ள முடியாத விஷயங்கள் இருக்கின்றன.  எனவே, குழந்தைகளுக்கு இதைப் படிக்கத் தரலாமா, வேண்டாமா என்பதைப் பெற்றோர்கள் சுயமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியரே சொல்லி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான கருத்துக்களை முன்வைத்துள்ளார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். எப்படி நம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள் நம்முடைய மூளையை மழுங்கடிக்கிறது என்று சொல்கிறார். நாமாகவே நம்மைக் கையாலாகாதவன் என்று நினைத்துக்கொண்டு எப்படி நம் முன்னேற்றத்திற்குத் தடையைப் போட்டுக்கொள்கிறோம் என்று தெளிவாக விளக்குகிறார். நம் மனதில் இருக்கும் பயங்கள் எப்படி நம் வாழ்வில் நிகழ்வுகளாகிவிடுகின்றன என்பதை அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைவைத்து தெளிவாக விளக்கியுள்ளார்.

முக்கிய புத்தகம் - முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் !

சிறுவயதிலிருந்தே கேஜ் பயந்த சுபாவம் கொண்டவர். தன்னிடம் இருக்கும் பணத்தை யாராவது  கொள்ளையடித்து போய்விடுவார்களோ என்று நினைத்து பயப்படுவாராம். ஒருநாள் இரவு வீட்டுக்குத் திரும்பும்போது, துப்பாக்கி முனையில் அவரிடமிருந்த பணத்தைக் கொள்ளை அடித்ததோடு, வயிற்றில் சுட்டுவிட்டும் போய்விட்டார்களாம் சில கொள்ளையர்கள். கெட்டது நடந்துவிடும் என்று நம்பி நம்பியே கெட்டது நடந்தது எனக்கு என்று சொல்லும் ஆசிரியர், எப்படி நாம் வாழும் சூழல் நம்மை சில கட்டுக்கோப்புகளுக்குள் போட்டு அடக்கி முன்னேற்றத்தைத் தடை செய்கிறது என்று எளிமையாக விளக்கியுள்ளார்.

''சூழல் என்றவுடன் என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள். குடும்பம், நட்பு, வழிபாட்டுத் தலங்கள், அரசாங்கம் போன்றவை எப்படி உங்கள் முன்னேற்றத்தைக் கட்டிப்போடுகிறது'' என்று விளக்கியுள்ளார் ஆசிரியர். நம்மைச் சுற்றி இருக்கும் இவையெல்லாம் நம்மை கஷ்டகாலத்தில் காப்பாற்றும் என்று நினைத்திருக்க இவையெல்லாம் எப்படி நம்மை கஷ்டத்தில் கொண்டுபோய்விடும்'' என்பதைச் சொல்லியுள்ளார் ஆசிரியர். மேலே சொன்னவைக்கெல்லாம் உங்கள் மேல் அன்பில்லை என்றில்லை. எல்லோரும் உங்கள் மீது அன்பை வைத்து உங்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பவர்களே! ஆனாலும், இவர்களின் கூட்டுச்செயல்பாடுகள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு எதிராக கொண்டு சென்றுவிடும் என்கின்றார் ஆசிரியர்.

ஏனென்றால் குடும்பம், நட்பு, வழிபாட்டுத்தலங்கள், அரசாங்கம் போன்றவை உங்களை பல விஷயங்களில் மூளைச் சலவை செய்துவிடும். புதுமுயற்சிகளை எடுக்கவிடாமலும் தள்ளிப்போடவும் செய்யும். நிறைய பிரயோஜனமில்லாத வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் வைத்து உங்களைக் கட்டிப்போட்டுவிடும் என்கின்றார் ஆசிரியர். இந்த நம்பிக்கை, பழக்கவழக்கம் எல்லாம் ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் மாதிரி என்று சொல்லும் ஆசிரியர், அவை எப்படி வேகமாகப் பெருகி முன்னேற்றத்திற்கான வழிகளை அடைத்துவிடும் என்றும் சொல்லியுள்ளார்.

அதிலும், பணம் மற்றும் வெற்றியைப் பற்றி நம்மைச் சுற்றியிருக்கும் வழக்கங்கள் இருக்கின்றதே, அவை மிகவும் அலாதியானது என்கிறார் ஆசிரியர். பணம் என்பது மோசமான ஒன்று, பணக்காரர்கள் பாவம் செய்பவர்கள், மனசாட்சியை விற்காமல் பணக்காரராக முடியாது, பணக்காரர்கள் பொய் சொல்வார்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், பணம் நல்லவர்களைக்கூட கெடுத்துவிடும் என பலபோதனை களை நடுத்தர வர்க்கத்தினரில் பலர் சொல்வதைக்  கேட்கிறோம். இவை போதாதா முன்னேற்றத்தைத் தடை செய்ய என்கின்றார் ஆசிரியர்.

ப்ளாக் பஸ்டர் சினிமாக்கள் எப்படி நம்மை முடக்குகின்றன என்பதற்கு டைட்டானிக் சினிமாவினை ஒரு முன் உதாரணாமாகச் சொல்லியுள்ள ஆசிரியர், அதிலுள்ள பல காட்சிகள் பணத்திற்கு எதிரான கருத்துகளை நம் மனதில் எப்படி பதிய வைக்கிறது என்றும் விளக்கியுள்ளார்.

அரசாங்கம் உங்களை வெற்றி அடைவ திலிருந்து எப்படித் தடுக்கின்றது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார். அரசாங்கத்துடன் ஒரு குடிமகனாக ஒவ்வொருமுறை நீங்கள் டீல் செய்யும்போதும் அதிலுள்ள லஞ்ச லாவண்யங்களை உணருகிறீர்கள். ஒரு சாதாரண மனிதனாக சின்னச் சின்ன விஷயங்களுக்குப் போகும்போதே இப்படி இருக்கின்றதே, ஒரு தொழிலதிபராகச் சென்று காரியம் சாதிக்க நினைத்தால் என்னவாகும் என்ற பயம் உங்கள் மனதில் தொற்றிக்கொள்ளும் என்கின்றார் ஆசிரியர்.

அரசாங்கத்துக்கு எப்போதுமே இல்லாதவனைத்தான் பிடிக்கும். இருக்கிறவனைப் பிடிக்காது. அவனிடம் இருந்து பணம் கறக்கவே முயற்சிக்கும். இல்லாதவன் இருந்தால்தானே அவனை வைத்து பவருக்கு வரமுடியும் என்று கிண்டலடிக்கின்றார் ஆசிரியர்.

அடுத்தபடியாக உங்கள் பெற்றோர்/நண்பர்/ஆசிரியர் போன்ற நீங்கள் அதிக நேரத்தைச் செலவிடும் நபர்கள். இவர்கள் செய்யும் பாதிப்பு மிக அதிகம் என்று ஆணித்தரமாகச் சொல்லும் ஆசிரியர் அதற்கான விளக்கத்தையும் தந்துள்ளார். உங்கள் அப்பா, உங்களை ஒரு நல்ல வேலைக்குப் போகும்படி வற்புறுத்துவார். உங்கள் ஆசிரியர்களும், கவுன்சிலர்களும் உன்னால் முடிந்ததைச் செய்ய ஆசைப்படு என்று குறுக்கே பாய்வார்கள். நண்பர்களோ, 'எதுக்குடா இருக்கறதை விட்டுட்டு பறக்கறதைப் பிடிக்க ஆசைப்பட்றே’ என்று உற்சாகத்தைக் குறைப்பார்கள் என்கின்றார்.

இவர்கள் இப்படி சொல்வதனால், உங்கள் மூளை மழுங்கடிக்கப்பட்டு புதுமுயற்சிகளை எடுக்க யோசிப்பீர்கள் என்கின்றார் ஆசிரியர். இப்படிச் சுற்றிச் சுற்றி எல்லோரும் உங்கள் மனதை மழுங்கடிக்க உங்களுடைய மூளை மட்டும் சம்பாதிக்கணும், சம்பாதிக்கணும் என்று கிடந்து அலையும். இந்தப் போராட்டத்தை எப்படி வெல்வது என்று இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார் கேஜ்.

வசதியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ நீங்கள் சென்றடைய நினைக்கும் இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும் விஷயங்களை மட்டுமே நீங்கள் செய்யவேண்டும். உங்களுக்கு எது சரியென்றுபடுகிறதோ, அதைச் செய்யவேண்டும். உங்களுக்கு நியாயம் என்று எது தெரிகிறதோ அதன்படியே நடக்கவேண்டும். இந்த மூன்றையும் செய்யாவிட்டால் நீங்கள் முன்னேற வாய்ப்பே இல்லை. இந்த மூன்று விஷயங்களையும் எப்படிச் செய்வது என்பதை இந்தப் புத்தகத்தில் விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

சுற்றுப்புற சூழல் உருவாக்கும் தடைகளைத் தகர்த்து முன்னேற நினைக்கும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.

                    - நாணயம் டீம்.