Published:Updated:

முக்கிய புத்தகம்; எளிமையாக வாழ்வது எப்படி?

முக்கிய புத்தகம்; எளிமையாக வாழ்வது எப்படி?

பிரீமியம் ஸ்டோரி
##~##

இந்த வாரம் நாம் அறிமுகப் படுத்தும் புத்தகம் ஜேனட் லர்ஸ் எழுதிய 'எளிமையாக வாழ்வது எப்படி’ (த சிம்பிள் லிவிங் கைடு) என்கிற புத்தகத்தைத்தான். திட்டமிட்டு எளிமையாக வாழ்வது எப்படி என்பதை மிகவும் சூப்பராக விளக்கியுள்ளது இந்தப் புத்தகம்.  

 பத்து, பன்னிரண்டு மணி நேரம் உழைப்பதன் மூலம் என்னத்தைக் காண்கிறீர்கள். வாழ்வில் பாதியை ஆபீஸிலேயே தொலைத்துவிடுகிறீர்கள். இதைத் தவிர, ஏதாவது பிரயோஜனம் உண்டா என்றால் வேறேதும் இல்லை. ஒரு ஆழமான வாழ்க்கையை வாழ்வது என்பது தான் சிறந்தது. ஆழமான வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

நெருங்கிய மனிதர்களுடன் நல்ல தொடர்புடன் இருப்பது, பிடித்த இடங்கள், பிடித்தப் பொருட்களுடன் நேரத்தைச் செலவிடுவதுதான் ஆழமான வாழ்க்கை. அதுதான் உங்களுக்காக நீங்கள் வாழும் உன்னதமான வாழ்க்கை என்று சொல்கிறார் ஆசிரியர்.

அப்படி ஒரு ஆழமான, மனதுக்குப் பிடித்த, வாழ்க்கையின் முழு எனர்ஜியையும் பயன்படுத்தக் கூடியதொரு வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் எனில் ரொம்பவுமே ஃப்ரெஷ்ஷாகவும், நேர்மையாகவும், வாழ்க்கையில் ஒரு பிடிப்புடனும் துடிப்புடனும் இருப்பீர்கள். எளிமையான வாழ்விற்குத் தயாராகிவிட்டீர்கள் என்றால், நீங்கள் அனைவரையும் தெரிந்துகொண்டு உளமார விரும்ப ஆரம்பிப்பீர்கள் என்கிறார் ஆசிரியர்.

முக்கிய புத்தகம்; எளிமையாக வாழ்வது எப்படி?

''எளிமை என்பது ஒரு பொருள் அல்ல, அது ஒரு பாதை. எளிமையை எப்படி அடைவது என்பதைப் பட்டியல்போட்டுச் சொல்ல முடியாது. எளிமையாக வாழ சரியானதொரு வழியும் கிடையாது. கார் வேண்டாம். கல்லூரிப் படிப்பு வேண்டாம் என்று சொல்வதிலோ, எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதிலோ எளிமையில்லை.

உங்கள் மனதில் எப்படி முடிவெடுக்கிறீர்களோ, அந்த முறையில்தான் எளிமை இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்லும் வகைகளை முழுவதுமாக தீர்மானிக்கும் ஸ்டைலில்தான் எளிமை இருக்கிறது. முழுமையாக நிதானித்து, முழுயோசனையுடன், முழு ஈடுபாட்டுடன், வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள். அனுபவித்து வாழ்வீர்கள். அப்படியில்லாமல் அரக்கப்பரக்க பல ஆசைகளுடன் பல விஷயங்களில் தலையை விட்டு வாழ்வது, வாழ்வதுபோல தெரியாது. இம்சையில் சிக்கியதைப்போலவே தெரியும்'' என்கிறார் ஆசிரியர்.

எளிமைக்கு முதல் படி என்பது லொடலொடப் பேச்சையும், தாவித் திரியும் மனதையும் அமைதிப்படுத்துவதுதான். வாரத்திற்கு நாற்பது முதல் அறுபது மணி வரையிலும் வேலை செய்தால் நமக்குள்ளே  இருக்கும் சக்தி என்ன சொல்கிறது என்பதைக் கேட்பதற்கு வழியும் நேரமும் இருக்காது. வேலை விட்டு வெளியே வருவதே எட்டு மணிக்கு, ஒரு அப்பாயின்மென்டில் இருந்து அடுத்த அப்பாயின்மென்டில் தொடர்ந்து விழுதல் என எல்லா வேலைகளையும் முடித்து வீட்டில் நுழைந்தவுடன் டிவி முன்னால் உட்காருதல் போன்றவற்றைச் செய்யும் நமக்கு எளிமையாக வாழ்வதற்கு எங்கே நேரம் இருக்கிறது?

எளிமை என்பது ஒரு செயலைச் செய்யும்போது டக்கென நிறுத்தி இதை நாம் எதற்காகச் செய்கிறோம் என்று கேட்டுக்கொள்ள முடிவதில் இருக்கிறது. இது எனக்கு சரியா, நமக்கு சரியா? என்று கேட்டு சரியில்லை என்றால் இதைச் செய்ய முடியாது என்று சொல்ல முடியும்படி வாழ்வதுதான் எளிமை என்கிறார் ஆசிரியர்.

உணவு, உடை, வீடு என்பவை மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறார் ஆசிரியர். அதேபோல் சம்பாத்தியத்திற்கு ஒரு வேலையும் முக்கியம் என்றாலும், இவை எல்லாவற்றிலும் எது குறைந்தபட்சம், எது அதிகபட்சம், நமக்கு எது நமக்கு சரி என்பதைத்  தீர்மானிப்பதில்தான் எளிமை இருக்கிறது. எவ்வளவு பிசியாக இருக்கிறீர்கள் என்பதல்ல முக்கியம்! எதில் பிசியாக இருக்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம் என்கிறார் ஆசிரியர்.

எளிமையான வாழ்க்கை வாழவேண்டும் என்றால் நம்முடைய நேரத்தை நாம் சரிவர

முக்கிய புத்தகம்; எளிமையாக வாழ்வது எப்படி?

பயன்படுத்தவேண்டும் என்று சொல்லும் ஆசிரியர் நேரப் பஞ்சம் மனிதர்களை எப்படி வாட்டி வதைக்கிறது என்பதையும் 'நேரப் பஞ்சம்’ என்ற வியாதிக்கு மனிதன் எப்படி ஒரு அடிமை ஆகிறான் என்பதையும் சுவையாகவே விளக்கியுள்ளார்.

முடியாத வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து ஆபீஸையே கட்டிக்கொண்டு அழுவது என்பது எளிமையான வாழ்க்கைக்கு முதல் எதிரி என்று சொல்லும் ஆசிரியர், என்றைக்கெல்லாம் ஒன்பது மணிக்கு ஆபீஸில் நுழைந்த நீங்கள் இரவு ஏழு மணிக்கு மேல் அலுவலகத்தில் இருக்கிறீர்களோ அன்றைக்கெல்லாம் எதற்காக இப்படி இருக்கிறோம் என்று சற்று சிந்தியுங்கள் என்கின்றார்.

வீட்டில் சிறு தோட்டம் போடவேண்டும் என்று ஆசை! அதற்கு நேரமே இல்லை என்று சொல்பவர்கள் எதற்காக புதிது புதிதாய் வேலைகளை ஏற்றுக்கொள்கின்றனர்? எதிர்காலத்தில் முன்னேற உதவும் என்று நினைத்துக்கொண்டு சனி, ஞாயிறுகளில் மட்டுமே நடக்கும் புதிது புதிதான வகுப்புகளில் சேர்ந்துகொண்டு பின்னர் ஏன் அலுத்துக் கொள்கின்றனர் என்று கேட்கிறார் ஆசிரியர்.

அது எப்படி சார் சாத்தியம்! வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா? பணம் சம்பாதிக்க வேண்டாமா? தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு நிறைய வேலை செய்யவேண்டாம் என்று நினைத்தீர்கள் என்றால் செலவைச் சுருக்கிக் கொள்ளுங்கள். செலவு குறைந்தால் நிறையப் பணம் தேவைப்படாது! வேலையும் குறையும். உங்களுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய நேரமும் கிடைக்கும். கொஞ்சம் வாழவும் செய்யலாம் என்கிறார் ஆசிரியர் ஜேனட்.

போதுமென்ற மனம் என்பதுதான் மனித வாழ்வில் சென்றடைய முடியாத எல்லை என்று சொல்லும் ஜேனட், போதுமென்ற மனமே ஒருவர் எளிமையான வாழ்க்கை வாழ்கின்றாரா இல்லையா என்பதற்கான சான்று என்கின்றார். சும்மா வாழ்க்கையை ஆட்டோ பைலட்டில் போட்டுவிட்டு என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்று சலித்துக்கொள்வதைவிட, ஆட்டோபைலட்டிலிருந்து மாற்றி நம்கைக்கு கொண்டு வந்து வாழ்ந்து பார்த்தால்தான் நாம் எடுத்த பிறவியை வாழ்ந்து முடித்தோம் என்றிருக்கும்.

எனக்கு ஒரு பெரிய கார் வேண்டும், என் மகன் டாக்டராகணும், எனக்குப் புரொமோஷன் வேணும், எனக்கு ஒரு லவ்வர் வேண்டும் என்று எதிர்காலத்தைப் பற்றியே கவலைப்பட்டுத் திரியாமல் இன்று ஓட்டும் பைக்கை ரசித்து ஓட்டியும், ஆசை மகனுடன் நீண்ட நேரம் விளையாடியும்/ஊரைச் சுற்றிக் காண்பித்தும், பார்க்கும் வேலையை ரசித்து சிறப்பாகச் செய்தும், தன்னை விரும்பும் தாய் - தந்தை - அண்ணன் - தம்பி உறவை பலப்படுத்தியும் வாழ்வதுதான் எளிமையாய் வாழ்வது. ஏக்கத்துடனேயே திரிவது எளிமையான வாழ்க்கை இல்லை என்று அடித்துச் சொல்லும் ஆசிரியர், எளிமையான வாழ்க்கை என்னவென்று தெளிவாகவும் அதை அடைவதற்கான பல வழிகளை விளக்கமாகவும் சொல்கிறார்.

அரக்கப்பரக்கத் திரிந்து வாழும் இன்றைய சூழ்நிலையில் அட இதுபோன்ற வாழ்க்கையும் வாழலாம் போலிருக்கின்றதே என்று ஆச்சரியப்படவைக்கும் புத்தகம் இது.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

- நாணயம் டீம்

 அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை!

 கிட்டத்தட்ட எண்பது நாடுகளுடன் நம் நாட்டுக்கு வர்த்தகப் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். சீனா, சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா, ஈராக், குவைத், கத்தார், வெனிசூலா, நைஜீரியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய பத்து நாடுகளுடன் நமக்கு அதிக வர்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த 2012-13-ல் மட்டும் நாம் 491.9 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருக்கிறோம். ஆனால், 300.3 டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி செய்திருக்கிறோம். இப்படியே போனா வர்த்தகப் பற்றாக்குறை எப்படிங்க குறையும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு