Published:Updated:

முக்கிய புத்தகம் - எல்லோரும் விரும்பும் மனிதராகுங்கள்!

முக்கிய புத்தகம் - எல்லோரும் விரும்பும் மனிதராகுங்கள்!

முக்கிய புத்தகம் - எல்லோரும் விரும்பும் மனிதராகுங்கள்!

முக்கிய புத்தகம் - எல்லோரும் விரும்பும் மனிதராகுங்கள்!

Published:Updated:
##~##

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் புத்தகம், அடுத்தவர்களுக்குப் பிடித்தவர்களாக இருப்பது எப்படி? என்பதை விலாவாரியாக எடுத்துச் சொல்கிறது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்தப் புத்தகத்தைத் தொடங்குகிறார் புத்தகத்தின் ஆசிரியர் டிம் சாண்டர்ஸ்.

ஊரே விரும்பும் ரேடியோ ஜாக்கி மிக்கி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் வெறுத்து ஒதுக்கப்படும் மனிதனாகிவிட்டான். என்ன காரணம் என்று டிம் சாண்டர்ஸிடம் வந்து கேட்டார் மிக்கி. இந்தக் கேள்விக்கு பதிலைக் கண்டுபிடிக்க நான்கு வழிகளைச் சொன்னாராம் டிம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களிடம் (மனைவி/மகன்/ரேடியோ ஸ்டேஷனில் உடன் பணிபுரிபவர்கள் போன்றவர்கள்) எப்படி பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா?

உங்கள் புரமோஷனல் போட்டோவை ஒரு நிமிடம் நிதானமாக உற்றுப் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் அடுத்தவர்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று பார்க்காதீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.

அடுத்தவர்கள் உங்களைத் தள்ளிவைக்கும் விதத்தில் நடந்துகொண்டதற்கு என்ன காரணம் என்று பாருங்கள்.

முக்கிய புத்தகம் - எல்லோரும் விரும்பும் மனிதராகுங்கள்!

மிக்கி எப்போதுமே நம்மைப் பேசவிடவே மாட்டான். பிரயோஜனமாக  எதையும் சொல்ல மாட்டான். எல்லாவற்றையுமே நக்கலும் நையாண்டியும் கிண்டலுமாகத்தான் பேசுவான். நாம் பேசி முடிப்பதற்கு முன்னரே அவன் பதில் சொல்ல ஆரம்பித்துவிடுவான். இப்படிப்பட்ட மூர்க்கமான ஒரு குணாதிசயத்தைக் கொண்டவனை ஒதுக்கிவைக்காமல் மடியில் வைத்துக் கொஞ்சவா செய்வார்கள் உற்றார் உறவினர்கள்!

''இனி உன்னை அடுத்தவர்களுக்குப் பிடிக்கவேண்டுமென்றால் நீ அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு தரவேண்டும். நீ ரேடியோ ஜாக்கியானபிறகு உன்னுடைய ஒரிஜினாலிட்டியைத் தொலைத்துவிட்டு வேலைக்காகச் செய்யும் நையாண்டியை நிஜவாழ்க்கையிலும் செய்ய முயற்சிக்கிறாய்! நீ காதலித்து திருமணம் செய்துகொண்ட உன் மனைவியே அதை விரும்பமாட்டார். எப்போதும் உற்றார் உறவினரிடம் உண்மையான மிக்கியாய் இரு'' என்று அறிவுரை சொல்லியுள்ளார் டிம்.  இந்த அறிவுரைகளைக் கேட்டு மிக்கி நடக்க ஆரம்பித்தவுடன் அவருடைய வாழ்க்கையில் மாறுதல்கள் வந்தது என்று கேள்விப்பட்டபின்னர்தான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணமே வந்தது என்கிறார் ஆசிரியர்.

பிடித்தமானவர்களாக இருப்பது எப்படி? என்பது பற்றி விரிவாக எழுதியுள்ள ஆசிரியர் அனைவருக்கும் பிடித்தமானவராகத் திகழ பல்வேறு வழிகளை இதில் சொல்லியுள்ளார். நீங்கள் சாமானியனாக இருந்தீர்கள் என்றால் நீங்கள் பிடித்தமானவர் என்பதை அளக்க உதவும் அளவுகோலில் மேலேயும் இருக்க மாட்டீர்கள்; கீழேயும் இருக்க மாட்டீர்கள் என்று சொல்லும் டிம் அதற்கான காரணத்தையும் சொல்லியுள்ளார்.

பிடித்தமானவராக இருக்கும் நபர்களுக்கு இருக்கும் சௌகரியங்களைப் பட்டியலிடும் ஆசிரியர், அலுவலகத்தில் பாப்புலராக அனைவருக்கும் பிடித்தவராக இருக்கும் நபர்களே நம்பிக்கைகொள்வதற்கும், சீரியஸான வேலையை நம்பித் தருவதற்கும், கஷ்டப்பட்டு வேலை செய்பவராக கருதப்படுவதற்கும், சம்பளம் மற்றும் பதவி உயர்விற்கும், ஏன் வேறு கம்பெனிக்கு அப்ளை செய்து போகும்போது, அங்கிருந்து ரெபரெல்கள் வரும்போது நாலு நல்ல வார்த்தைச் சொல்லப்படுவதற்கும் ஏதுவானவராக இருக்கிறார்.

பிடித்தமானவர்கள் பாப்புலராக இல்லாத போது அவர் கொஞ்சம் அகங்காரம் பிடித்தவ ராகவும், சுயநலக்காரராகவுமே மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படுகிறார். ஒரு நாளில் ஒரு மனிதர் செய்யும் பல வேலைகளில் லைக் கபிலிட்டி (பிடித்தமானதன்மை) எந்த அளவுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளைக் கொண்டுவருகிறது என்பதை விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

நீங்கள் சொல்வதை மற்றவர்கள் காதுகொடுத்துக் கேட்கவேண்டுமென்றால் முதலில் உங்களை நம்பவேண்டும். ஒவ்வொரு போட்டிச் சூழ்நிலையிலும் பிடித்தமானவர்களே வெல்கிறார்கள். ஏனென்றால் பிடித்தவர்களையே மற்றவர்கள் நம்புகிறார்கள். மனிதர்களைச் சுற்றி அவர்களைப் பிடித்தவர்களே வியாபித்திருக்கிறார்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மை மற்றவர்கள் விரும்பவேண்டும் என்றே நினைக்கின்றனர். ஆபீஸானாலும் சரி, சொந்தபந்தங்களானாலும் சரி, பிடித்தமாயிருக்கும் குணமே உறவுகளை ஒட்டியிருக்கச் செய்கிறது. எந்தப் பிரச்னை யானாலும் சரி பிடித்தமாயிருக்கும் நபருக்கு உதவியும், தீர்வும் உடனுக்குடன் கிடைக்கவே செய்கிறது என்கின்றார் டிம்.

எந்த அளவுக்குப் பிடித்தமாக இருக்கும் குணம் உதவுகிறதோ, அதே அளவு பிடித்தமாக இல்லாமல் போவது எதிர்மறை விளைவுகளையும் கொண்டு வருகிறது என்று சொல்லும் ஆசிரியர் பல்வேறு உதாரணங் களுடன் இதனை விளக்கியுள்ளார்.

டாக்டர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அவர்களுக்குப் பிடித்தமான வகையில் நடந்து கொள்ளும் நோயாளிகளுக்கு மட்டுமே டாக்டர்கள் அவர்களுடைய பெர்சனல் தொலைபேசி எண்ணைத் தருவதாக கண்டறிந்துள்ளனர்.

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் லைக்கபிள் பெற்றோர்களாக இருந்தால் குழந்தைக்கு சிறந்த கவனிப்பு டாக்டரிடம் இருந்து கிடைக்கின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள். முரட்டுப் பெற்றோர்களைக்கொண்ட குழந்தைகளுக்கு சட்டப்படியும், தொழில் தர்மப்படியுமான கவனிப்பு மட்டுமே கிடைப்பதாக கண்டறிந் துள்ளனர் ஆய்வாளர்கள். அதேபோல் கிளினிக்கில் லைக்கபிள் பேஷன்ட்களுக்கு அதிக நேரத்தை டாக்டர்கள் செலவிடுகின்றனர் என்றும் கண்டறிந்துள்ளனர்.

லைக்கபிளாக மாறுவதற்குத் தேவையான குணாதிசயங்கள் என்னென்ன என்பதையும் தெளிவாக விளக்கியுளார் ஆசிரியர். 'ப்ரெண்ட்லினெஸ்’ என்பதை மிகவும் முக்கிய குணமாகச் சொல்லும் ஆசிரியர் ஒருபோதும் 'ப்ரெண்ட்லி’யாக இருப்பதை இழக்கக்கூடாது. 'ப்ரெண்டிலி மைண்ட் செட்’டை எப்போதும் வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். 'ப்ரெண்ட்லினெஸ்’ஸைக் கொண்டிருந்து, வளர்த்தால் மட்டும் போதாது அதை வெளிக்காட்டவும் தெரியவேண்டும் என்கிறார். அமைதியாக இருப்பது 'ப்ரெண்ட்லினெஸ்’ஸுக்கு எதிரி என்று சொல்லும் ஆசிரியர், நீங்கள் பேசும் தொனியும் மிக முக்கியம் என்கின்றார். நீங்கள் பேசும் தொனியைக் கொஞ்சம் டேப்பிலோ/கம்ப்யூட்டரிலோ ரெக்கார்டு செய்து கேட்டுப்பாருங்கள். உங்கள் தொனியில் 'ப்ரெண்ட்லினெஸ்’ இருக்கிறதா என்பது உங்களுக்கே புலப்பட்டுவிடும். வொண்டர்ஃபுல், எக்ஸலென்ட், ஆஹா, பியூட்டிஃபுல், பெர்ஃபெக்ட் போன்ற வார்த்தைகள் 'ப்ரெண்ட்லினெஸ்’ஸை வளர்க்கும் உரம் போன்றது என்கிறார் டிம். ப்ளீஸும் தேங்க்ஸும் இந்த வகையைச் சேர்ந்ததல்ல. 'கேன் யூ ப்ளீஸ் டூ திஸ்’ என மிரட்டும் தொனியில்கூட கேட்கலாமே என்கிறார் ஆசிரியர்.

கடைசியாக டிம் சொல்வது சுற்றிலும் இருப்பவர்களிடத்தில் உண்மையாக இருங்கள் என்பதைத்தான். உண்மையாக இருக்கவேண்டுமென்றால் பழைசை மறக்காதீர்கள்/மறைக்காதீர்கள். நீங்கள் வெற்றி பெறும்போது அந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுடன் அந்த வெற்றியைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் செயலை ஒருபோதும் பொய்யாகப் பெரிதுபடுத்திச் சொல்லாதீர்கள். இது எனக்குத் தெரியாது என்று உங்களுக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றிச் சொல்லிப் பழகுங்கள். வாக்குறுதிகளைத் தரும்போது முடிந்தவற்றுக்கு மட்டுமே தருவது நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அனைவருக்கும் பிடித்தவராய்த் திகழ்வீர்கள் என்று சொல்லி முடிக்கிறார் டிம் சாண்டர்ஸ். எல்லோருக்கும் பிடித்தவராக இருந்து வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்கள் படிக்கவேண்டிய புத்தகம் இது.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

- நாணயம் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism