Published:Updated:

நீங்கள் சராசரியா, சாதிக்கப் பிறந்தவரா..?

நீங்கள் சராசரியா, சாதிக்கப் பிறந்தவரா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

இப்படி எத்தனை நாள்தான் நான் இந்த வேலையிலேயே இருக்கப்போகிறேன். எதையாவது சாதிக்கணுமுன்னு நினைச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சவன் கடைசியில இப்படி குடும்பம் பிள்ளைக்குட்டின்னு சிக்கலில சிக்கிக்கிட்டு தவிக்கிறேன்;

எந்த விஷயத்துலயும் முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்தா, நான் உடனே என்னோட நண்பர்கள் பலரைக் கலந்துக்கிறேன். அவங்க பல மாதிரியான ஐடியாக்களைத் தந்து என்னை செயல்படவிடாம செஞ்சுடுறாங்க;  

முடியாதுன்னு சொல்லவேண்டிய இடத்துல சரின்னு சொல்லிட்டு வர்றதே எனக்குப் பிழைப்பா போயிடுச்சு!

மேற்கண்ட ஸ்டேட்மென்ட்களில் நீங்கள் எதையாவது ஒன்றைச் சொல்பவராயிருந்தால் செரில் ரிச்சர்ட்சன் எழுதிய 'ஸ்டாண்டு அப்  ஃபார் யுவர் லைஃப்’ என்கிற இந்தப் புத்தகத்தை நீங்கள் கட்டாயம் படித்தாகவேண்டும்.

பெற்றோர், வீட்டிலிருக்கும் மனைவி, அலுவலகப் பணியாளர், பிசினஸ் ஓனர், நடிகர், மாணவர் என அனைவருமே பின்வரும் கேள்விகளைத் தங்களுக்குத் தாங்களே அவ்வப்போது கேட்டுக்கொண்டே செயல்படுகிறார்கள் என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் செரில்.

என்னை யாரும் சுயநலவாதி என்று நினைத்துவிடாதபடி எப்படி என் தேவைகளை நானே சாதுர்யமாகப் பூர்த்தி செய்துகொள்வது? மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்ற தைரியத்தை எங்கிருந்து பெறுவது?, என்னை துணிந்து முன்னேற விடாமல் தடுக்கும் எண்ணங்களில் இருந்து எப்படி வெளிவருவது?, முன்னேற்றத்துக்கான துடிப்பை (மோட்டிவேஷன்) எப்படி அதிகரித்தும், முன்னேற்றத்தை அழிக்கும் செயல்பாடு களை ஒரேயடியாக நீக்கியும் வாழக் கற்றுக்கொள்வது? நமக்குப் பிடித்த வாழ்க்கை எது என்பதையும்; அதற்கான பாதை எது என்பதையும் எப்படி கண்டுபிடிப்பது?

இந்தக் கேள்விகளுக்கு விடையைக் கண்டுபிடித்துவிட்டால் நாம் ஒரு மகிழ்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழமுடியும் என்கிறார் ஆசிரியர். நீங்கள் யார்?, உங்கள் மனதுக்கும் உங்களுக்கும் தொடர்பு முழுமையாக இருக்கிறதா? அல்லது மனதை மறைத்து நடிக்கும் சூழலில் இருக்கிறீர்களா? குறிப்பாக, நீங்கள் நினைப்பதை நடத்த முடிகிறதா? அல்லது மற்றவர்கள் நினைப்பதை உங்களிடம் நடத்திவிட்டுப் போகிறார்களா? வெளிவேஷம் போடாமல் மனதில் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லப் பழகுங்கள். நீங்கள் யார் என்பது தெளிவாகும்.

வீணான விஷயங்களைத் தவிர்த்து உங்கள் மனம் சொல்லும் முன்னேற்றமான விஷயங்களைச் செய்ய ஆரம்பியுங்கள். காலை ஒன்பது மணி முதல் ஐந்து மணி வரை ஓடியாடி அத்தனை வேலைகளையும் பார்த்தபின்பும் பாஸ் வீட்டுக்குப் போகும் வரை கம்பெனியில் இருக்கவேண்டும் என்பதற்காக கம்ப்யூட்டரைப் பார்த்த படியே வெட்டியாகப் பொழுதை ஓட்டுகிறீர்களா? இதிலிருந்து மாறுங்கள்.

நீங்கள் சராசரியா, சாதிக்கப் பிறந்தவரா..?

பயத்தையும் அடக்கிவாசித்தலையும் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி மூளை மற்றும் மனதின் முழுபலத்தைப் பிரயோகிக்க கற்றுக்கொள்ளுங்கள். சொல் மற்றும் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள்’ என்கிறார் ஆசிரியர்.

இந்த நிலைகளைத் தாண்டுவது ஒன்றும் சுலபமான விஷயமில்லை. ஆனாலும், நன்கு முயற்சி எடுத்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்பதில் ஐயமேதுமில்லை என்கிறார் ஆசிரியர்.

உங்களைச் சுற்றியிருக்கும் நபர்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கான வழிகளில் அதிக பங்கெடுக்கிறார்கள் என்று சொல்லும் ஆசிரியர், சுற்றியிருக்கும் நபர்களில் யார் உங்களுக்கு மிக அருகே இருக்கத் தகுதியானவர் என்ற அளவுகோலுக்கான சில கேள்விகளையும் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார்.

உங்களுடைய கஷ்டமான தருணங்களில் யார் உங்கள் அருகாமையில் இருந்து உதவினார்கள்? உங்களைப் பற்றிய கசப்பான உண்மையை அன்புடனும் உண்மையான கரிசனத்துடனும் சொன்னவர்கள் யார் யார்?, மற்றவர்களைப் பற்றி புறஞ்சொல்லாமல் இருக்கிறவர்கள் யார் யார்?, நீங்கள் செய்யப் போவதாகச் சொல்லும் செயல்களை செய்யவில்லை என்றால் இதில் யார் யாருக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும்?, இதில் யாரை நீங்கள் மிக மிகப் பாதுகாப்பான நபர் என்று கருதுகிறீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை வைத்து உங்கள் நட்பு வட்டத்திலிருக்கும் நபர்களில் யார் உங்களுக்கு மிக அருகில் இருக்க லாயக்கானவர்? யார் யார் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலான சூழலைத் தருவார்கள்? என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என்கிறார் ஆசிரியர்.

நினைப்பு, சொல், செயல் இந்த மூன்றிலும் முழுமையான மற்றும் நேர்த்தியான செயல்பாடு களை உங்களால் செய்ய முடியாவிட்டால் உங்கள் பவரை நீங்கள் முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றே அர்த்தம் என்று சொல்லும் ஆசிரியர், உங்கள் பவரை நீங்கள் முழுமையாக உபயோகிக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள 15 கேள்விகளுக்கு உங்களைப் பதிலளிக்கச் சொல்லி, அந்தப் பதிலிலிருந்து நீங்களே உங்களுடைய நிலைமையைப் புரிந்து கொள்ளும் வசதியையும் புத்தகத்தில் தந்துள்ளார்.

சிறுபிள்ளை பருவத்தில் இருந்தே நாம் அவமானத்திற்கு பயந்து வாழ்கிறோம். நம் செயலில் தவறு நடந்தால் தம்பி, தங்கைகளின் முன்னே அப்பா திட்டுகிறார். வகுப்பில் தப்பு நடந்தால் மற்ற மாணவர்கள் முன்னால் ஆசிரியர் திட்டுகிறார். சாதாரண கிண்டல்கள்கூட நம் மனதில் ஆழப்பதிந்து தவறு வருகிற எதையும், அசிங்கப்படக்கூடிய எந்த நிலையையும் அடைந்துவிடக்கூடாது என்பதை நம் ஒவ்வொரு செயலிலும் ஊர்ஜிதம் செய்ய முற்படுகிறோம். அப்புறம் எங்கே நமக்காக நாம் வாழ்வது? அடுத்தவர்களுக்காக மட்டுமே அவர்களுடைய எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் வண்ணமே சிறப்பாக (!) வாழப் பழகிக்கொள்கிறோம்.

ஒரு கலந்தாய்வின்போது ஒரு மிகப் பெரிய வாடிக்கையாளர் அவருடைய பள்ளி நண்பர்கள் பத்து வயதில் அவருக்கிருந்த தொந்தியைக் செமத்தியாக கிண்டல் செய்ய அன்றிலிருந்து இன்று வரை வெற்றிகரமாக தொழில் செய்து வந்தபோதும், மனதுக்குள் நம் உடல் ஒரு அமைப்புக்குள் இல்லை என்ற குறையுடனேயே வாழ்ந்து வருவதாகச் சொன்னதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

சிறுவயதில் வெளி உலகம் செய்யும் கிண்டல்கள் நம் மனதில் பதிந்து நம்மை நாமே ஆயுள் முழுவதும் கிண்டல் செய்துகொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்று சொல்லும் ஆசிரியர், இந்த அவமானங்களுக்கு துணிந்து அவற்றைத் தாண்டி செயல்படுவது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் வழிவகை களைச் சொல்லியுள்ளார்.

'உங்கள் குழந்தைகளையும் இந்த வழியில் செயல்படுத்த முயற்சிகளைச் செய்யுங்கள்’ என்கிறார் ஆசிரியர்.

'தவறு செய்யாமல் ஒருபோதும் மன்னிப்புக் கேட்காதே. தைரியசாலியாய் செயல்படு. தன்னடக்கமாக இருப்பதை நிறையவே குறை. உன்னைப் பற்றியும் உனக்குத் தெரிந்ததைப் பற்றியும் கொஞ்சம் பெருமையாகவே எப்போதும் நினைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்புடனே வாழ்ந்து பழகு. எதற்கும் எதிலும் முயற்சியைக் கைவிடாதே. இவையெல்லாம்  நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டிய அறிவுரைகள்’ என்று சொல்லி முடிக்கிறார் செரில் ரிச்சர்ட்சன்.

நான் சராசரியான ஆள் இல்லை. சாதிக்கப் பிறந்தவன் என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்கும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

15 நிறுவனங்களுக்கு தடா!

பங்குச் சந்தையின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 15 நிறுவனங்களின் வர்த்தகத்தை செப்டம்பர் 18-ம் தேதியுடன் நிறுத்த முடிவு செய்துள்ளது பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். டன்லப், அக்கு ரேட் இன்ஃப்ராஸ்ட்ரக்ஷர், ஏசியன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஷர் அண்ட் புராஜக்ட்ஸ், பாஃப்னா ஸ்பின்னிங் மில்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ், கன்கரன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்ஷர், கஞ்சன் இன்டர்நேஷனல், ஓசியன் இண்டஸ்ட்ரீஸ், போலார் பார்மா இந்தியா, சாக் ஆர்.ஆர். இன்ஃப்ரா, சாங்கின் மீடியா, டெலிகனோர் குளோபல், விகாஷ் மெட்டல் அண்ட் பவர், ராஜிவ்லோஷன் ஆயில் எக்ஸ்ட்ராக்ஷன் மற்றும் வெல்பேக் பேப்பர்ஸ் அண்ட் கன்டெய்னர்ஸ் ஆகியவையே தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள். செப்டம்பர்

10-ம் தேதிக்குள் விதிமுறைகளைப் பின்பற்றி னால் இந்த தடையைத் தவிர்க்கலாம் எனவும் எச்சரித்துள்ளது. முதலீட்டாளர்கள் உஷார்!

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு