Published:Updated:

முக்கிய புத்தகம் - முடிவெடுக்கும் விதத்தை மாற்றுங்கள் !

முக்கிய புத்தகம் - முடிவெடுக்கும் விதத்தை மாற்றுங்கள் !

முக்கிய புத்தகம் - முடிவெடுக்கும் விதத்தை மாற்றுங்கள் !

முக்கிய புத்தகம் - முடிவெடுக்கும் விதத்தை மாற்றுங்கள் !

Published:Updated:
##~##

பணத்தையும், வெற்றியையும், சாதனைகளையும் குவித்த மனிதர் ஒருவர் தனது கடைசிக் காலத்தில் மரணப்படுக்கை யில் ஒரு மருத்துவமனையில், பக்கத்தில் இருந்து பணிவிடை செய்வதற்கு ஒரு ஆள்கூட இல்லாமல் அனாதையாக கிடந்தார்.

அவருடைய டாக்டரிடம், 'நான் இத்தனை வருடம் பணத்தைத் தேடி ஓடினேன். அதற்காக பலரை மிதித்தும்/  ஏறியும் செல்லவேண்டியிருந்தது. இத்தனை பணத்தைச் சம்பாதித்தும் கடைசியில் எனக்காக ஒருவரும் இல்லையே என்று நினைத்து வருத்தப்படுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு காரணம், என் வாழ்க்கையில் சந்தித்த அனைத்து மனிதர்களையும் என் நோக்கத்தை அடைவதற்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன்.

ஆனால், சாவுப் படுக்கையில் இருக்கும் நான் தெரிந்துகொண்ட பாடம் என்ன தெரியுமா?

யார் மீது எந்தவிதமான அன்பு செலுத்துகிறோம் என்பதுதான் முக்கியமே ஒழிய, வேறொன்றுமே வாழ்க்கையில் முக்கியமில்லை’ என்று அவர் சொன்னாராம்.

'இந்தப் பாடம் அவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே முக்கிய பாடம்’ என்று ஆரம்பிக்கின்றார் 'தி நௌ எஃபெக்ட்’ என்னும் புத்தகத்தின் ஆசிரியர் எலிஷா கோல்ட்ஸ்டெய்ன்.

'எண்ணங்கள் உண்மையில்லை. பெரும்பாலான சமயங்களில் நாம் எண்ணமே உண்மையென்று நினைக்கிறோம். அதனால்தான் 'நௌ எஃபெக்ட்’ நம் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது’ என்கிறார் ஆசிரியர். இதற்கு உதாரணமாக ஆசிரியர் ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தைச் சொல்கிறார்.

முக்கிய புத்தகம் - முடிவெடுக்கும் விதத்தை மாற்றுங்கள் !

நீங்கள் ஒருநாள் காலையில் எழுகிறீர்கள். பால் வரவில்லை. அதனால் காபி இல்லை என்கிறார் மனைவி. குளித்து முடித்து கிளம்பி டிபன் சாப்பிட வந்தால் உங்களுக்குப் பிடிக்காத உப்புமா. பைக்கை எடுக்கும்போதே ஸ்டார்ட்டிங் டிரபிள். ஆபீஸிற்குச் சென்றால் உங்கள் மேலதிகாரி எக்கச்சக்க வேலையைக் கொடுத்து மதியத்துக்குள் முடிக்கச் சொல்கிறார். முடிக்க முடியாமல் திணறும்போது வந்து காய்ச்சி எடுக்கிறார். சரி, லஞ்ச் சாப்பிடப் போகலாம் என்று கிளம்பு கிறீர்கள். லிஃப்டிற்கு நிற்கும்போது உங்களுடைய ஆபீஸ் நண்பியைப் (!) பார்க்கிறீர்கள். ஹாய் என கை அசைக் கிறீர்கள். பார்க்காமல் போகிறாள்.

அப்போது நீங்கள் என்ன மனநிலையில் இருப்பீர்கள்? என்னாச்சு, ஒரு பயலும் நம்மை மதிக்க மாட்டேனென்கின்றான்!, நான் ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவனா? ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? என்று நினைப்பீர்கள் இல்லையா?  

சற்று பொறுங்கள். சிச்சுவேஷனை  கொஞ்சம் மாற்றுவோம். காலையில் எழுந்தவுடன் வழக்கத்துக்கு மாறான சூப்பர் காபியை மனைவி தருகிறார். பைக் ஒரே ஸ்டார்ட்டில் ஸ்டார்ட் ஆகிறது. ஆபீஸில் நுழைந்தவுடன் உங்கள் மேலதிகாரி உங்களைக் கூப்பிட்டு, 'நேற்றைக்கு நீங்கள் போட்ட நோட் ஒன்று பிரமாதம்’ என்று பாராட்டுகிறார். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் மதியம் லிப்டிற்கு நிற்கும்போது நீங்கள் கையசைத்தும் உங்கள் நண்பி பார்க்காமல் போகின்றாள்.

இப்போது என்ன நினைப்பீர்கள். இவளுக்கு ஏதோ ஆயிடுச்சு! பாஸ் திட்டியிருப்பார் போலிருக்கு! இவளெல்லாம் பார்க்கவில்லை என யார் கவலைப்பட்டார்கள் என்றுதானே?

நண்பி கண்டுகொள்ளாமல் போனது என்ற ஒரே நிகழ்வு சுற்றுச்சூழல் நெகட்டிவ்வாக இருந்தபோது ஒரு மாதிரியும், சுற்றுச்சூழல் பாசிட்டிவ்வாக இருந்தபோது வேறு மாதிரியும் இல்லையா? அதனால்தான் எண்ணங்கள் உண்மையில்லை. சூழலே அதனை நல்லதாகவும் கெட்டதாகவும் காட்டுகிறது. எனவே, சூழலை உணர்தல் மிக மிக அவசியம் என்றாகிறது.

'நீங்கள் தூக்கத்தில் இருந்து எப்படி எழுகிறீர்கள், எப்படி உங்கள் தனிப்பட்ட வேலைகளையும்/அலுவலகப் பணியையும் செய்கிறீர்கள், உங்களுடைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்துகிறீர்கள், எப்படி நண்பர்கள், குடும்பம், உறவினர், அலுவலக பணியாளர்கள், முகம் தெரியாதவர்கள் போன்றவரிடத்தில் பழகுகிறீர்கள் என்பதெல்லாம் ஒரு காலகட்டத்தில் ஒரு ஆட்டோமேட்டிக் சக்கரத்தினுள் (தன்னால் இயங்கும் சக்கரம்) வந்துவிடும்.

இந்த ஆட்டோமேட்டிக் (தானியங்கி) விஷயங்கள் இல்லாவிட்டால் நடைமுறை சாத்தியமில்லை என்றாலும் நாளடைவில் இது முழு தானியங்கு நிலையை அடைந்துவிட்டால் நமக்கு என்னென்ன சாய்ஸ் இருக்கிறது, எதையெல்லாம் செய்ய வாய்ப்பிருக்கிறது, என்னென்ன ஆச்சர்யமான விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கிறது என்பதை எல்லாம் நாம் பார்க்க மறந்துவிடுவோம்.

நம் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதை ஆட்டோமேட்டிக் பாதையிலிருந்து சிந்தித்த செயல்பாடு என்ற பாதைக்கு கொண்டுவந்தோமென்றால் நம்மை நாமே அறிந்துகொள்ள முடியும். ஆட்டோமேட்டிக் பாதையில் போகும்போது அது தவறான பாதையாக இருந்தால்கூட நித்தமும் நாம் அந்தப் பாதையில் போய்க்கொண்டே இருப்போம். ஒவ்வொரு முறையும் சுயநினைவுடன் சிந்தித்த செயல்பாடு என்றால் தவறான பாதைகள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் முடிவெடுக்கும் திறன் முழுக்க முழுக்க உங்கள் கையில் இருக்கும். இதனால் முடிவுகள் தேவைக்கேற்ப மாற்றப்படும். வீட்டுக் காரியங்களிலும் வேலையிலும் நல்ல முன்னேற்றத்திற்குத் தேவையான மாறுதல்களைக் கொண்டுவர முடியும்’ என்று சொல்கிறார் ஆசிரியர்.

'நௌ எஃபெக்ட்’ (நிகழ்கால விளைவு எனலாம்) என்பது, அடடா! இதுதானே வாழ்வில் முக்கியமானது என்பதை உணரச் செய்வது. நாலு கஸ்டமர்கள் நம்மைக் கேவலமாகப் புரட்டி எடுத்தபின்னர், என்னடா இது வாழ்க்கை என்ற கடுப்பில் வீடு திரும்பும்போது நம் குழந்தை நம்மை நோக்கி ஓடிவரும்போது, அட, இவர்களுக்கு நாம் எவ்வளவு முக்கியமான ஆள் என்றும் இதுதானே வாழ்வின் இன்பம் என்று தோன்றும் நிமிடம்.

நம்முடைய நெருங்கிய நண்பரின் குடும்ப உறுப்பினர் இறந்துபோகும்போது காரியங்கள் முடித்து வீட்டுக்கு வந்தபின்னர் தொடர்பில் இல்லாத நம்முடைய நெருங்கிய சொந்தங்களின் தொடர்பைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் நிமிடம்.

முக்கிய புத்தகம் - முடிவெடுக்கும் விதத்தை மாற்றுங்கள் !

அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட தினமான செப்டம்பர் 11, 2001 அன்று எல்லோரும் போனிலும் மெயிலிலும் வேண்டியவர்களுக்கு ஒன்றும் அசம்பாவிதம் இல்லையே என்று செக் செய்துகொண்ட நிமிடம்.

இவையெல்லாம்தான் நௌ எஃபெக்ட்டின் தாக்கம் வரும் நேரம்’ என்று சொல்லும் ஆசிரியர், 'எதை இலக்காக வைத்து ஓடிக்கொண்டிருக்கும் போதும் இதுபோன்ற நேரங்களில் நௌ எஃபெக்ட் நம்மை உணர்வுக்குக் கொண்டுவருகிறது. வாழ்க்கை இவ்வளவுதான் என்பது புரியும். இந்த நேரம்தான் மனிதனுக்கு முக்கியமான நேரம். இதை எப்போதாவது எமர்ஜென்சிகளின்போது மட்டுமே புரிந்துகொள்ளும் நாம் மிகவும் சுலபத்தில் மறந்துவிடுகிறோம். நௌ எபெக்ட் எப்போது நம்மை இந்த விஷயங்களை ஞாபகத்தில் நிலைநிறுத்தச் செய்வது’ என்கிறார்.

நௌ எஃபெக்ட்டை உணர்ந்து தொடர்ந்து அதைச் செயல்படுத்துவதால் நமக்கு என்னென்ன லாபங்கள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர்.

'நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுக்கும் விதமே முற்றிலுமாக மாறிவிடும். ஏனென்றால், நீங்கள் இதுவரை அனைத்து முடிவு களையுமே ஆட்டோ பைலட் வகையிலேயே எடுத்திருப்பீர்கள். ஒவ்வொரு முடிவிலும் மெக்கானிக்கலாக செயல்படாமல் இருப்பதால் அத்தனை முடிவுகளிலும் ஒரு ஜீவன் (உயிர்த் துடிப்பு) இருக்கும். இந்த உயிர்த்துடிப்பினால் உங்கள் மனதில் அதிக உத்வேகமும், உங்கள் கண்முன்னே இருக்கும் பல்வேறு வாய்ப்புகளும் வசதிகளும் ஆட்டோ பைலட் முடிவு செய்யும்போது இருப்பதைவிட உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் ப்ளெக்ஸிபிளான வகையிலும் மற்றவர்கள் எண்ணத்துக்கு மதிப்பு தரும் வகையிலும் இருக்கும். எல்லோரையும் அரவணைத்துப் போவதால் உங்கள் உணர்வுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதனாலேயே சோதனைக் காலங்களில் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். உங்கள் மூளை மிகவும் ஸ்ட்ராங்கானதாக மாறும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் நல்லுறவு வளர்வதால் நீங்கள் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும், அனைவரும் உங்களுக்கு உதவத் தயாராகவும் இருப்பார்கள்’ என்று சொல்கிறார் ஆசிரியர்.

வெற்றியுடன் மட்டுமல்லாமல் எல்லா வகையான சிறப்புகளுடனும் முழுவாழ்க்கையை அனுபவித்து வாழ நினைப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

 - நாணயம் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism