Published:Updated:

நினைப்பதே நடக்கும்!

நினைப்பதே நடக்கும்!

##~##

சமீபத்தில் வெளியான புத்தகங்களில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிற புத்தகம் மேனேஜ்மென்ட் குருவும் கொய்செரா நிறுவனத்தை நிறுவியவருமான கஷியோ இனமோரி என்ற ஜப்பானியர் எழுதிய 'எ காம்பஸ் டு ஃபுல்ஃபில்மென்ட்’. உங்கள் வாழ்க்கை மற்றும் தொழிலில் இறையுணர்வையும் எப்படி இணைப்பது என்பதை விளக்கமாகவே இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொன்ன ஆசிரியர், வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் பல வழிகளையும் சொல்லி இருக்கிறார்.    

அது என்ன வாழ்வின் அர்த்தம்? சுயநல எண்ணங்கள் உள்ளடக்கிய உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஆரம்பித்து பைக், கார், வீடு, 50 இன்ச் எல்ஈடி டிவி, பேங்க் பேலன்ஸ் எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிவையுங்கள். இவற்றையெல்லாம் நீங்கள் இந்த உலகுக்கு வரும்போது கொண்டுவரவில்லை. வரும்போது கொண்டுவந்தது உங்கள் ஆன்மாவை மட்டும்தானே. அதை வளப்படுத்தி எடுத்துச் செல்லத்தான் நீங்கள் இந்த உலகத்திற்கு வந்துவிட்டு, இப்போது லேட்டஸ்ட் கேட்ஜெட்களின் பின்னால் ஓடுகிறீர்களே! நாளைக்கே உயிரை விட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் ஆண்ட்ராய்டு போன் உங்களுடன் வருமா? வராது இல்லையா! என்கிறார் ஆசிரியர்.

ஆன்மாவை வளப்படுத்த வந்துள்ளோம் எனில் எதற்கு இத்தனை கஷ்டங்கள் என்று கேட்கிறீர்களா? கஷ்டங்களே ஆன்மாவை சுத்தம் செய்து பக்குவப்படுத்தும் டூல்கள் என்கிறார் ஆசிரியர். நிறைய திறமையானவர்கள் வாழ்வில் ஜெயிப்பதில்லை. கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், அவர்களுடைய திறமைக்கு ஏற்ற நல்லொழுக்கங்கள் அவர்களிடத்தில் இருப்பதில்லை. பிசினஸிலும் அதுதான் என்று சொல்லும் ஆசிரியர், வியாபார நுணுக்கங்கள் தெரிந்த பலர் முன்னேற்றம் காணாமல் இருப்பதும் நியாயம் தவறிய அவர்களுடைய எண்ணம் மற்றும் நடவடிக்கைகளினால்தான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆசிரியர்.

நினைப்பதே நடக்கும்!

வாழ்க்கையில் வெற்றி என்பது மனப்பான்மை, திறமை மற்றும் முயற்சி என்ற மூன்றையும் பெருக்கினால் வரும் விடையேயாகும். நாம் நினைப்பதே நமக்கு நடக்கும் என்கிற தப்பான எண்ணத்துடன் நாம் சில விஷயங்களைச் செய்யும்போது அதில் எதிர்படுபவர்களும் நமக்குத் தப்பான விஷயங்களையேச் செய்ய முற்படுவார்கள். எனவே, தப்பான எண்ணங்களை நம்முடைய மூளையிலிருந்து ஒட்டுமொத்தமாக எடுத்துவிட வேண்டும்.

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்ற கொள்கையே தவறு என்று வாதிடும் ஆசிரியர், நினைப்பதுதான் நடக்கிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்கிறார். முதல் முதலாக இந்தப் புத்தக ஆசிரியர் ஞானோதயத்தைப் பெற்ற நிகழ்ச்சியை சுவையாக விவரிக்கிறார்.

கொனோஸ்கி மட்டுஷிட்டா என்ற ஜப்பானிய மேனேஜ்மென்ட் குருவின் மீட்டிங் ஒன்றில்தான் தன்னுடைய அகக்கண் திறந்தது என்கிறார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மட்டுஷிட்டா, இயற்கை நமக்கு பூமியைத் தந்து மழையையும் தந்துள்ளது. மழைக் காலத்தில் நாம் முயற்சி இல்லாமல் இருந்துவிட்டால் அனைத்து மழைநீரும் ஆற்றில் கலந்து பின்னர் ஓடிப்போய் கடலில் சேர்ந்துவிடுகிறது. அப்படிச் செய்யும்போது நம்முடைய வாழ்க்கைக்கு நாம் மீண்டும் மழையை எதிர்பார்த்தே காத்திருக்க வேண்டியுள்ளது. அதே நாம் புத்திசாலித்தனமாக ஆற்றின் நடுவே அணைகளைக் கட்டி வைத்தோமேயானால் மழையின் கன்ட்ரோலில் நாம் இல்லை. மழை தந்த பலனை நாம் கொஞ்சம் கன்ட்ரோலில் வைத்துக்கொள்ள முடிகிறது. அதைப்போலவே நிறுவனங்களும் நல்ல காலங்களில் பணம், பொருள், ஆட்கள் போன்றவற்றைச் சேமித்துவைத்தால் தேவைப்படும்போது அதை உபயோகித்துப் பயனடையலாம் என்கிறார்.

இந்தக் கருத்தை மட்டுஷிட்டா சொல்லி முடித்தவுடன், அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்த சிறிய பிசினஸ் செய்பவர்கள் எல்லாம் எரிச்சலானார்களாம். ஒருவர் எழுந்து, 'அது எப்படி அணை கட்டுறது? கொஞ்சம் சொன்னால் பரவாயில்லை’ என்றாராம். சற்று நேரம் யோசித்து மவுனம் காத்த மட்டுஷிட்டா, 'எனக்கும் தெரியவில்லை. ஆனாலும், அணை கட்ட வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது’ என்றாராம். இந்த பதிலை பலரும் எரிச்சலடைய, ஆனால் ஆசிரியரோ அந்தப் பதில்தான் அவரை தீர்க்கமாக யோசிக்க வைத்தது என்று சொல்கிறார்.

'வாழ்க்கை நமது எண்ணங்களால் ஆனதெனில் நம் எண்ணம் ஏதாவது ஒன்றில் நிலைக்கவேண்டும். அப்போதுதான் அந்த 'எண்ணம் விதையாக மாறி மண்ணில் ஊன்றப்பட்டு செடியாகி, மரமாகி, பூத்து காய்த்து பலனை அளிக்கும்.  அரைகுறை ஆசைகள் உதவவே உதவாது. முழுமையான ஆசையே முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். முடியாததைச் செய்ய நினைத்தால் அந்த ஐடியாவின் மீது பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையையும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து நீங்கள் எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். உங்கள் கனவை நனவாக்க முதலில் கனவு புளூபிரின்ட் லெவலில் காணப்பட ஆரம்பித்து, அழகிய ஆப்செட் வண்ணத்தில் டெவலப் செய்யப்பட்டு, படத்தில் நிஜத்தைப் பிரதிபலிக்கும் லெவல் வரை கொண்டுவரப்பட்டால் மட்டுமே நிழல் நிஜமாகும். அந்த அளவுக்கு முயற்சியும், ஈடுபாடும் இருந்தால் மட்டுமே கனவு நனவாகும்.  வெறும் கனவு கண்டு பயனில்லை’ என்கிறார் ஆசிரியர்.

இதெல்லாம் நன்றாக இருப்பவர்களுக்கு. அவனவன் அன்றாடப் பிழைப்புக்கே வழியில்லாமல்  இருக்கிறான். இதில் நோய்நொடி என்று வேறு வந்து உலுக்குகிறது. தொட்டது துலங்கமாட்டேன் என்கிறது என்று புலம்புகிறீர்களா? 'என் கதையைக் கேளுங்கள்’ என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

ஹைஸ்கூல் என்ட்ரன்ஸ் டெஸ்ட்டில் ஃபெயிலானாராம் அவர். அந்தக் கவலை முடியுமுன்னேயே அவருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டதாம். அவர் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் காசநோயைக் குணப்படுத்த முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளால் விடியாமூஞ்சிகளாக தங்களைப் பற்றி நினைத்துக்கொண்டு இருப்பவர்களும்கூட தெளிவான சிந்தனைகளாலும் தெளிந்த மற்றும் தொடர்ந்த நடவடிக்கைகளாலும் என்னைப் போல் வெற்றி பெறமுடியும் என்கிறார்.

மூளை என்பது ஒரு காந்தம். அந்த காந்தம் எதை இழுக்கவேண்டும் என்று நினைக்கிறதோ, அதை இழுக்கும் வல்லமை பெற்றது. நல்லதை இழுக்க வேண்டும் என்று நினைத்தால் அதை இழுத்துப்போடும்; கெட்டதை இழுக்க வேண்டும் என்று நினைத்தால் அதையும் இழுத்துப்போட்டுவிடும். அதனால்தான் நினைப்பது சரியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்கிறார்.

பல சமயங்களில் தொழில்ரீதியாக முடிவெடுக்க முடியாத முட்டுச்சந்துகளில் சென்று சிக்கிக்கொள்ளும்போது இங்கதாம்ப்பா புது அத்தியாயம் ஆரம்பிக்கப்போகிறது என்று தெரிந்துகொண்டு, கொஞ்சம் நம்முடைய சூழ்நிலையைத் தீர்க்கமாகப் பார்த்து, காதுகளைத் தீட்டி சூழ்நிலைகள் சொல்லும் செய்திகளைக் கேட்கவேண்டும். விஞ்ஞான உலகில் இந்த ஐடியா கொஞ்சம் வேறுமாதிரியாகத் தோன்றினாலும் அனுபவரீதியாகப் பார்த்தால் இதுதான் புதுஅத்தியாயங்களை பல நிறுவனங்களில் துவக்குகிறது என்கின்றார் ஆசிரியர்.

முன்னேற நினைக்கும் எல்லோரும் படிக்கவேண்டிய முக்கிய புத்தகம் இது.

                        - நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

 ஃபிளாக்பெர்ரியை வாங்கும் இந்தியர்!

செல்போன் விரும்பிகளிடம் முன்பு பிரபலமாக இருந்த ஃபிளாக்பெர்ரி லிமிடெட் நிறுவனத்தை  கனடாவைச் சேர்ந்த ஃபேர்பாக்ஸ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஃபிளாக்பெர்ரி நிறுவனம் அறிவித்துள்ளது. ஹைதராபாத்தில் பிறந்து சென்னை ஐ.ஐ.டி.-ல் படித்த பிரேம் வாஸ்டா என்பவர் கிட்டத்தட்ட 4.7 பில்லியன் டாலர் தந்து இந்த நிறுவனத்தை வாங்கப் போகிறார். கனடாவில் பல ஆண்டு காலமாக வசித்துவரும் இவர், கனடா நாட்டு வாரன் பஃபெட் என்று புகழப்படுகிறவர். அட, நம்ம காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு