Published:Updated:

முக்கிய புத்தகம் - நீங்களும் 'தல’ ஆகணுமா?

முக்கிய புத்தகம் - நீங்களும் 'தல’ ஆகணுமா?

##~##

பிரகாஷ் ஐயர் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம்தான் 'தி சீக்ரெட் ஆஃப் லீடர்ஷிப்’. இதில் அவர் தலைவர்களை ஒரு 'டீ பேக்’குடன் ஒப்பிட்டு, அதற்கான எட்டு காரணங்களையும் எடுத்து வைக்கிறார். அவர் சொல்லும் அந்த எட்டு காரணங்கள் சுவாரஸ்யமானவை.

முதலாவதாக, 'டீ பேக்’ என்னதான் அழகாக இருந்தாலும் அதன் உள்ளே உள்ள தேயிலையின் தரம் டீயின் சுவைக்கு எப்படி முக்கியமோ, அதுபோல தலைவர்களின் புறத்தோற்றத்தைவிட அவர்களிடம் இருக்கக்கூடிய 'நம்பிக்கை’ மற்றும் 'மனோபாவம்’தான் முக்கியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டாவதாக, 'டீ’யின் உண்மையான சுவை அதை சுடுதண்ணீரில் போட்டால்தான் கிடைக்கும். அதுபோல, ஓர் உன்னதத் தலைவரின் சிறப்பியல்புகள் கஷ்டமான காலகட்டத்தில்தான் வெளிப்படும்.

மூன்றாவதாக, சிறந்த தலைவராக இருக்கக் கூடியவர்கள் சவால்களைச் சளைக்காமல் எதிர்கொள்வார்கள். 'டீ பேக்’கை சுடுதண்ணீரில் போட்டால்தான் நல்ல டீ கிடைக்கும்.  அதுபோல, தலைவர்கள் பலவிதமான சவால்களைச் சந்தித்தால்தான் தலைவர் என்கிற பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

தான் வாழ்க்கையில் சந்தித்த, படித்த, அனுபவித்த, உணர்ந்த பல விஷயங்களை 250 பக்கங்களில் 60 குட்டி, குட்டிக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார். கிம்பர்லி கிளார்க் என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்நூலாசிரியர், ஏற்கெனவே 'தி ஹாபிட் ஆஃப் வின்னிங்’ என்கிற புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். இவருடைய முதல் புத்தகமும் சரி, இரண்டாவது புத்தகமும் சரி, பிரமாதமாக விற்பனை ஆகியிருக்கிறது.

முக்கிய புத்தகம் - நீங்களும் 'தல’ ஆகணுமா?

இப்புத்தகத்துக்கு முன்னுரை இந்தியக் கிரிக்கெட்டின் கேப்டனாக பல ஆண்டுகள் இருந்த  'பெருஞ்சுவர்’ ராகுல் டிராவிட். நமக்கு கதை கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதறிந்து ஒவ்வொரு கட்டுரையையும் கதை போலவே சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. படிப்பதற்கு எளிதாக இருந்தாலும் ஆழமான விஷயங்களை அனுபவத்தின் அடிப்படையில் கூறியிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. ஒவ்வொரு கட்டுரை/கதையைப் படிக்கும்போதும் 'அட, இது நம்ம வாழ்க்கையில்கூட நடந்திருக்கிறதே’ என நினைக்கத் தூண்டுகிறது.

நீங்கள் நல்ல தலைவராக வேண்டுமென்றால், கண்டிப்பாக ஆராய்ச்சி செய்து பி.ஹெச்டி பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர். அதெப்படி எல்லோராலும் பி.ஹெச்டி பட்டம் வாங்க முடியுமா, வேடிக்கையாக இருக்கே என்று நீங்கள் கேட்கலாம். ஆசிரியர் சொல்லும் பி.ஹெச்டி, “Passion, Hunger, Discipline’அதாவது, கட்டுக்கடங்காத உணர்ச்சியுடன்கூடிய வெறியும், ஒழுக்கமும் இருந்தால் போதும், உலகம் உங்கள் கையில்!

முக்கிய புத்தகம் - நீங்களும் 'தல’ ஆகணுமா?

மார்ட்டின் லூதர் கிங், 'ஒரு மனிதனை தெருப் பெருக்குபவன் என்று கூப்பிட வேண்டு மென்றால் அவன் மைக்கலேஞ்சலோ எவ்வளவு சிரத்தை எடுத்து பெயின்டிங் செய்வாரோ, அதுபோல சிரத்தையுடன் தெருவைப் பெருக்க வேண்டும். அதைப் பார்ப்பவர்கள் 'இங்கே ஒரு சிறந்த தெருப் பெருக்குபவன் இருக்கிறான், எவ்வளவு சிரத்தையெடுத்து தனது வேலையைச் செய்திருக்கிறான் பார்’ என்று சொல்லவேண்டும்'' என்கிறார்.

நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது எல்லாமே. பிரச்னை என்று ஒன்றை நினைத்தால் அது பிரச்னைதான். நீங்கள் ஒருவரை முரடனாகப் பார்த்தால், அவர் நல்லவராக இருந்தாலும் முரடனாகத்தான் காட்சியளிப்பார். ஆக, நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது நம் பார்வையை!

முக்கிய புத்தகம் - நீங்களும் 'தல’ ஆகணுமா?

எந்தவொரு பிரச்னைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்கலாம். அவைகள் ஒன்றுக்கொன்று முரணாகக் கூட இருக்கும். அதில் உங்களுக்கு அல்லது சூழ்நிலைக்கு சாதகமாக எது இருக்கிறது என்பதைத் தேர்ந்தெடுத்து அதன்படி நடக்கவேண்டும். வாழ்க்கையில் மிக அரிதாகவே ஒரேயரு சரியான விடை இருக்கும்.

இந்தப் புத்தகத்தை எழுதிய பிரகாஷ் ஐயர் ஒரு தீவிரமான கிரிக்கெட் விரும்பி (யார்தான் இல்லை என்கிறீர்களா?!) என்பதால், அவ்வப்போது கிரிக்கெட் ஜாம்பவான்களின் தலைமை குணாதிசயங்களும் இப்புத்தகமெங்கும் அங்கங்கு 'தலை’ காட்டுகிறது. ஒரு சின்ன சந்து கிடைத்தாலும் அதில் சிந்து பாடுவதற்கான வாய்ப்பைத் தவறவிடாதவர் ஆஸ்திரேலியா அணியின் கேட்பன் ரிக்கி பாண்டிங். ஒரு சின்ன இடைவெளி (Gap) கிடைத்தாலும் அதற்கிடையில் பந்தை ஓடவிட்டு, ஒரு ரன்னை எடுத்துவிடுவார். ஃபீல்டர்களைத் தடை என்று நினைக்காமல், இடைவெளி என்று நினைக்கும் சிந்தனை நிச்சயம் வெற்றி தரும் என்கிறார்.

அமெரிக்காவின் மிகச் சிறந்த ஜனாதிபதி எனப் புகழப்படும் ஆபிரஹாம் லிங்கன், பல தோல்விகளைக் கண்டவர். சட்டக் கல்லூரியில் சேர நினைத்தார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. வணிகம் செய்ய கடன் வாங்கி அது சரியாக நடக்காததால் 'மஞ்சக் கடுதாசி’ கொடுத்தார். வேலை பார்த்தபோது அந்த வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டார். எட்டுமுறை பல்வேறு தேர்தல்களில் தோல்வி கண்டார்.

ஆனால், அவர் தனது முயற்சிகளை கைவிட்டாரா என்றால் அதுதான் இல்லை. அடி விழ விழ, தனது முயற்சியையும் அதிகரித்தார். இறுதியாக, அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். பட்டங்களையும், பதவிகளையும் நினைத்து தலைக்கனம் இல்லாமல் பணிவாக இருங்கள் அனைத்தும் உங்களுக்கு அடி பணியும்!

கோபமாக இருந்தாலும் வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும். வார்த்தை கள் தடித்தால் அது நிரந்தர வடுவை ஏற்படுத்திவிடும். தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது என வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.  

முக்கிய புத்தகம் - நீங்களும் 'தல’ ஆகணுமா?

பிறக்கும்போதே யாரும் தலைவர்களாகப் பிறப் பதில்லை; அவர்கள் உருவாக்கப் படுகிறார்கள் அல்லது உருவா கிறார்கள். ஆசிரியரைப் பொறுத்தவரை, அனைவருமே தலைவர்கள், எப்படியென்றால் எல்லோருமே தங்களின் வாழ்க்கையை 'லீடு’ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

புத்தகத்தை ஆசிரியர் ஜான் மேக்ஸ்வெல்லின் மேற்கோளான 'நம்பிக்கையில்லாதவன் காற்றை குறை சொல்வான்; நம்பிக்கையுள்ளவன் மாற்றத்தை எதிர்பார்ப்பான்; தலைவன் என்பவன் படகின் பாய்மரத்தை சரிசெய்து தொடர்ந்து பயணிப்பான்'' என்பதோடு முடிக்கிறார்.

தலைமைப் பண்பின் ரகசியம் சொல்லும் இப்புத்தகத்தைப் படித்தால் யார் வேண்டுமா னாலும் 'தல’ ஆகலாம்!  

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)