Published:Updated:

வேலைப்பளுவை குறைக்கும் டெக்னிக்!

வேலைப்பளுவை குறைக்கும் டெக்னிக்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

'தி பவர் ஆஃப் டூயிங் லெஸ்’ என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?  என்பதை எடுத்த எடுப்பிலேயே விளக்கமாகச் சொல்லிவிடுகிறார் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஃபெர்குஸ் ஓ'கானல்.

எப்போதும் மலைபோல் வேலையைக் குவித்துவைத்துக்கொண்டு நேரமில்லாமல் அல்லாடினீர்கள் என்றால், உங்களுடைய நேரமின்மைக்கு நல்ல மருந்தை இந்தப் புத்தகம் கொடுக்கும். அதிகாலையில் ஆபீஸிற்கு வந்து வேலையை ஆரம்பித்து இரவு பத்து மணிவரையிலும் ஆபீஸில் இருந்து வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் போகும் போதும்கூட இன்னும் நிறைய வேலை இருக்குதே என்கிற கவலையுடன் செல்லும் நீங்கள், இந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் நீங்கள் ஆபீஸிற்கு டாணென்று நேரத்துக்கு வந்து நேரத்துக்கு வீட்டுக்குப் போக ஆரம்பிப்பீர்கள். நாள் முழுக்க ஒரு நிமிஷம்கூட எனக்கு ஃப்ரீயாக இருக்க முடியவில்லை என்று புலம்புபவராக இருந்தீர்கள் என்றால், உங்களுக்குத் தேவையான அளவுக்கு நேரம் கிடைக்கும்.

பன்னிரண்டு முதல் பதிமூன்று மணி நேரம் வேலை பார்க்கும் இடத்தில் செலவிடுபவர்களின் மனதில் எப்போதும் ஓர் எண்ணம் இருக்கும். அது, உலகத்தில் இருக்கிற அத்தனை மணித்துளிகளும் (நிமிடங்களும்) நமக்கே சொந்தம் என்று நினைத்துகொண்டு செயல்படுவதுதான் அது என்கிறார். அதனாலேயே ஆபீஸில் அடிக்கடி நண்பருடன் காபி சாப்பிடுவதற்குப் போவதும், கதையடிப்பது, அடுத்த டிப்பார்ட்மென்டில் இருப்பவருடைய குடும்ப சண்டைக் கதையைக் கேட்டு அதற்கு தீர்வு சொல்வதுமாய்த் திரிகிறோம்.

ஆபீஸிற்குள் எட்டு மணி நேரம் மட்டுமே இருக்க முடியும் என்ற கண்டிஷன் இருக்கிற ஆபீஸாக இருந்தால் என்னவாகும்? வெட்டி வேலை அனைத்தையும் கட் செய்துவிட்டு விறுவிறுவென வேலையை முடிப்போமில்லையா? என்கிறார் ஆசிரியர். வாழ்வதற்காக நாம் வேலை பார்க்கிறோம் என்பதிலிருந்து வாழ்க்கையை வேலை தின்று கொண்டிருக்கும் சூழலுக்கே நாம் வந்துவிட்டோம்.

வேலைப்பளுவை குறைக்கும் டெக்னிக்!

எவ்வளவு நேரமென்றாலும் ஆபீஸில் இருக்கலாம், குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஆபீஸில் இருக்கலாம் என்கிற இரண்டு சூழலிலும் வேலை பார்ப்பவரின் வேலைப் பளு எப்படி இருக்கும் என்பதை அழகாகப் பட்டியலிடுகிறார். இன்றைய நாள் முழுவதும் இருக்கிறது என்பார் முன்னவர். அய்யோ, இன்று ஒரு நாள்தான் இருக்கிறது என்பார் பின்னவர். முன்னவருக்கு வேலையைத் தாண்டி வாழ்க்கை என்பதே இருக்காது.

பின்னவருக்கு வேலையைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கும். ஒருநாளில் என்னென்ன செய்யப்போகிறோம் என்ற திட்டமேதும் முன்னவரிடம் இருக்காது. பின்னவரோ ஒவ்வொரு மணிநேரத்துக்கும் சரியான திட்டங்களை வகுத்து வைத்திருப்பார்.

முன்னவரிடம் முக்கியமான வேலை, முக்கியமில்லாத வேலை என்ற பாகுபாடே இருக்காது. பின்னவரோ, எதை முதலில் முடிக்கவேண்டும் எதை அடுத்து முடிக்க வேண்டும் என்ற பக்கா லிஸ்ட்டை கையில் வைத்திருப்பார். முன்னவர் தொடர்ந்து நேரத்தை வீணாக்குவார். பின்னவரோ மிகக் குறைந்த அளவே நேரத்தை வீணாக்குவார். முன்னவருடைய உடல்நிலை மோசமாக இருக்கும். பின்னவர் ஃபிட்டாக இருப்பார்.

முன்னவர் எதைச் செய்தாலும் மலையைக்கட்டி இழுத்த எஃபெக்ட் இருக்கும். பின்னவரோ எத்தனை கஷ்டமான காரியங்களைச் செய்தாலும் இலகுவாகச் செய்வதைப்போல் இருக்கும். முன்னவர் மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பார். பின்னவரோ மன அழுத்தம்  என்றால் என்ன என்று கேட்பார்! என்கிறார் ஆசிரியர்.

நேர மேலாண்மை குறித்த பயிற்சி மற்றும் புத்தகங்களைக் கடுமையாகச் சாடும் ஆசிரியர், அமேசான் இணையதளத்தில் டைம் மேனேஜ்மென்ட் என்று தேடினால் 1,04,207 அயிட்டங்கள் (புத்தகங்கள், சிடிக்கள், வீடியோக்கள் என பலவகையில்) கிடைக்கும். இவ்வளவு புத்தகங்கள், கோர்ஸ்கள், வீடியோக்கள் என இருந்த போதிலும் நேர மேலாண்மையில் மக்கள் கைதேர்ந்தவர்களாக இல்லை என்ற கேள்வியை எழுப்புகிறார்.  டைம் மேனேஜ்மென்ட் கோர்ஸ்களும் புத்தகங்களும் தனக்குள்ளே ஒரு திட்டத்துடன் ஓடும் மனிதன் தன்னுடைய செயல்பாட்டை சரிசெய்துகொள்ள உதவும் முக்கிய விஷயம். ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு சிறப்பாகச் செயல்படவேண்டும் என்கிற எண்ணமே இருப்ப தில்லையே! அப்புறம் எப்படி டைம் மேனேஜ்மென்ட் என்ற ஒரு விஷயம் நமக்கு உதவும்?

சிறப்பாகச் செயல்பட நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் பின்வருவனவற்றை செய்யவேண்டும். தான் செய்யவேண்டிய வேலைகளை சிறந்த சிந்தனை செய்து பிரித்து கட்டாயம் செய்யவேண்டியது, செய்ய விருப்பப்படுவது, செய்ய எரிச்சல் அடைவது, நிஜமான ஆசை மற்றும் ஆவலுடன் செய்ய விருப்பப்படுவது என்ற வேலைகளின் பட்டியலைப் போட்டேயாக வேண்டும் என்று சொல்கிறார்.

புத்தகத்தைப் படிப்பவர்களை இந்தப் பட்டியலைப்போட்டுப் பார்க்கச் சொல்லும் ஆசிரியர், பொதுவாக நாம் என்ன செய்கிறோம் என்றால் செய்ய விருப்பப்படுவது மற்றும் நிஜமான ஆசை மற்றும் ஆவலுடன் செய்ய விருப்பப்படுவதைச் செய்யத் தவறிவிட்டு, கட்டாயம் செய்யவேண்டியது மற்றும் செய்ய எரிச்சல் அடைவது என்ற விஷயத்தை மட்டுமே செய்து முடிக்கிறோம் என்கிறார்.

செய்ய வேண்டிய வேலைகளை முக்கியத்துவம் தந்து வரிசைப்படுத்துவதன் அவசியத்தைச் சொல்லும் ஆசிரியர், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடுங்கள். இந்தப் பட்டியலில் எதையாவது ஒன்றைதான் நான் இன்று செய்ய முடியும் என்றால், எதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று நினைத்து, அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். இப்போது உங்கள் கையில் மிக அவசியமாகச் செய்ய வேண்டிய ஒரு விஷயம் வந்துவிட்டது.

மீதமிருக்கும் காரியங்களையும் இப்படி ஒரு கடுமையான கண்டிஷனுடன் தேர்வு செய்தால், குறைவான அளவு வேலையை நிறைவுடன் உங்களால் செய்ய முடியும். முக்கியத்துவம் அதிகம் உள்ளது முதலில் உங்கள் கையில் வந்து விடுவதால் மீண்டும் மீண்டும் எது முக்கியம் என்று தேர்வு செய்யும்போது, தேவையில்லாத விஷயங்கள் எது என்று சுலபமாகப் புரிந்துவிடும் என்று சொல்கிறார்.

இதுபோன்ற பல உத்திகளைச் சொல்லி இவற்றையெல்லாம் பின்பற்றினால் நீங்கள் குறைவான வேலையைச் செய்தபோதிலும் அதீதமான பலன்களைப் பெற முடியும் என்று சொல்கிறார் ஆசிரியர்.

நாம் எல்லோருமே வேலைப்பளுவில் சிக்கித் தவிக்கவே செய்கிறோம். முக்கிய வேலைகளைக் கண்டறிந்துகொள்ள பல டெக்னிக்குகளை சொல்லும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நம் வாழ்க்கையை இலகுவாக வாழப் பழகிக்கொள்ள முடியும்!

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு