Published:Updated:

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

Published:Updated:
##~##

• புத்தகத்தின் பெயர்: வாட் ஹேப்பி பீப்பிள் நோ

(what happy people know)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஆசிரியர்கள்: கேமரன் ஸ்டாத், டான் பேக்கர்

(Cameron Stauth , Dan Baker)

• பதிப்பாளர்: St.Martin's Griffin

பணக்காரர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என நாம் நினைக் கிறோம். பணம் இல்லாததுதான் நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சி குறைவுக்குக் காரணம் என்றும் நாம் நினைக்கிறோம். ஏனென்றால், நமக்கு மகிழ்ச்சி என்றால் என்னவென்று தெரியவில்லை. பணம்தான் மகிழ்ச்சியென்று தவறாக நினைக்கிறோம். பணம்

வந்துவிட்டால், நான் சந்தோஷமாக இருப்பேன் என்று சவால்கூட விடுவீர்கள்.

''மனக்கிளர்ச்சியையும் (எமோஷன்) மனோநிலையையும் (மூட்) மகிழ்ச்சி என்று நீங்கள் கருதுவதாலேயே இப்படி சவால்விடுகிறீர்கள். மனோநிலை என்பது  உடலில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றத்தால் வருவது. மனக்கிளர்ச்சி என்பது கணத்தில் தோன்றி மறைகிற ஒரு நிலை. ஆனால், மகிழ்ச்சியோ ஒரு வாழும்முறை. அது ஒன்றும் ஒரு பூந்தோட்டத்தில் உங்கள் காதலியுடன் டூயட் பாடும் தருணமல்ல. வாழ்நாள் முழுவதுமாக மகிழ்ச்சியுடன் வாழ்வது ஒரு வாழ்க்கைமுறை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பணம் மகிழ்ச்சியுடன் கைகோத்து உங்களுடன் வந்து ஒருபோதும் சேர்ந்துகொள்வதில்லை'' என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கேமரன் ஸ்டாத். இவர் எழுதிய 'வாட் ஹேப்பி பீப்பிள் நோ’ என்கிற புத்தகம்தான் இந்தவார அறிமுகம்.

பணம் இருக்கிறது; ஆனால், மகிழ்ச்சி இல்லை என்ற குறையுடன் தன்னிடம் வந்த ஒரு மில்லியனரைப் பார்த்துக் கேட்ட கேள்விகளையும், அதற்கு அந்த மில்லியனர் அளித்தப் பதில்களையும் ஆசிரியர் சுவையாக விளக்குகிறார். முதலில் அந்த மில்லியனர், ''நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு வளர்ந்து முன்னேறியவன். என் மகன் கல்லூரிக்குச் செல்ல ஃபெராரி கார் கேட்கிறான். நானோ ஒரு சாதாரண காரைத் வாங்கித் தருவதாகச் சொன்னேன். என் மனைவி அவனுக்கு முழு ஆதரவு கொடுக்கிறாள்'' என்றாராம்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

''இதற்குமேல் நீங்கள் உங்கள் பெர்சனல் கதையைச் சொல்லவேண்டாம். உங்கள் மனதில் நீங்காத பயம் இருக்கிறது. எத்தனை மில்லியன் டாலர் சம்பாதித்தபோதும் உங்கள் அம்மா, அப்பா, மனைவி, மகன் போன்றவர்களைப் பற்றிய கருத்துக்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. சமூகத்தில் அதிக பணத்துடன் மரியாதைக்குரிய பெரிய மனிதனாக வாழும் நீங்கள், இன்னும் மூளையின் ஒரு பகுதியில் அன்றாடம் பிழைப்பதற்கு வழியில்லாமல் போய்விடுமோ என்ற பயத்துடனேயே வாழ்கிறீர்கள்'' என்றாராம் ஆசிரியர்.

முதலில் இதை மறுத்த அந்த மில்லியனரோ கொஞ்சம் யோசித்தபின்னர், 'ஆமாம், நான் கொஞ்சம் பயத்துடன்தான் செயல்படுகிறேன். ஆனால், அந்தப் பயம்தான் என்னை முன்னணித் தொழில் அதிபராக இருக்க வைக்கிறது'' என்றாராம்.  

''இந்தப் பயம் என்ற வசனத்தை நான் ஆயிரமா யிரம்முறை பல்வேறு தொழில்முனைவோரிடம் இருந்து கேட்டுள்ளேன். ஒருநாளும் இதை ஒரு சரியான காரணமாக ஒப்புக்கொள்ள மாட்டேன்'' என்று சொல்கிறார் ஆசிரியர்.

''சரி, உங்களுடைய மகிழ்ச்சியைக் கெடுக்கும் பெரிய பிரச்னைதான் என்ன?'' என்று கேட்டாராம் ஆசிரியர். மில்லியனரோ, ''நான் சம்பாதித்ததைக் காப்பாற்றுவதுதான்'' என்றாராம். இந்தப் பதிலையும் பல மில்லியனர்கள் தன்னிடத்தில் கூறியுள்ளதாகச் சொல்கிறார் ஆசிரியர். இந்தச் சம்பாத்தியத்தையும் சம்பாத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையுடனும் கூடிய ஏக்கம் பலரின் மகிழ்ச்சியைக் கொல்கிறது என்கிறார் ஆசிரியர். மேலும், எவ்வளவு பணம் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்ற நினைப்பு மகிழ்ச்சியைக் கொன்றுவிடும் என்கிறார். இதுதான் வெற்றியின் தோல்வி என்றும் வர்ணிக்கிறார்.

பின்னர், ''நீங்கள் அடிக்கடி கோபப்படுவீர்களா?'' என்று அந்த மில்லியனரிடம் கேட்டதுக்கு, ''கோபப்படாவிட்டால் இவ்வளவு பெரிய நிறுவனத்தை ஒருநாளும் நடத்த முடியாது. கோபப்படாவிட்டால் குடும்பத்தைக்கூட நடத்த முடியாது'' என்றாராம் மில்லியனர்.

''நீங்கள் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட்டா?'' என்ற கேள்விக்கு ''அப்படி இருக்கவே முயல்கிறேன்'' என்றாராம் மில்லியனர். ''நீங்கள் ஆப்டிமிஸ்ட்டா? பெசிமிஸ்ட்டா?'' என்ற கேள்விக்கு ''நீங்கள் மோசமான முடிவுக்கு தயாராகிவிட்டால் பின்னால் வருத்தப்படவேண்டியிருக்காதே?'' என்றாராம் மில்லியனர். ''எப்போதும் ஏதாவது ஏக்கத்துடன் இருப்பீர்களா?'' என்றதற்கு, ''அதுதானே சார், நாங்கள் எப்போதும் இருக்கும் ஏரியா!'' என்றாராம். ''நீங்கள்  யாரிடமும் மனம்விட்டுப் பழகாமல் தனிமைப்பட்டு இருப்பீர்களோ?'' என்றாராம் ஆசிரியர். ''நிச்சயமாக. இவ்வளவு பெரிய கம்பெனியின் சேர்மன் நான். என்னிடம் யார் மனம்விட்டுப் பேசுவார்கள்?'' என்றாராம் மில்லியனர். ''அப்பப்ப கொஞ்சம் மனம் சோர்ந்து போவீர்களா?'' என்று கேட்டதுக்கு, ''இப்ப கொஞ்சகாலமாகவே'' என்றாராம் மில்லியனர்.  

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

இந்த உரையாடலை புத்தகத்தில் தந்துள்ள ஆசிரியர், ''பயமே இந்த மில்லியனரின் பிரதான பிரச்னை. பயம்தான் அவருக்கு கோபத்தைத் தருகிறது. பயமே அவரை பெர்ஃபெக்ஷனிஸ்ட்டாக ஆக்க முயற்சிக்கிறது. பயமே அவரிடம் தோல்வி மனப்பான்மையை (பெசிமிஸம்) வளர்க்கிறது. பயமே அவரை ஏக்கம்கொள்ளச் செய்கிறது. பயமே அவருடைய ஊக்கத்தைக் குறைத்து அவ்வப்போது சோர்வுறச் செய்கிறது (டிப்ரஷன்). பயமே அவரைத் தனிமைப்படுத்தியும்விட்டது'' என்று சொல்கிறார்.

''ஓகே., உங்களுக்கு ஒரு மருந்து இருக்கிறது. கொஞ்சநாளைக்கு ஒரு குழந்தைகள் மருத்துவமனையில் கேன்சர் பிரிவில் ஒரு சேவையாளராக சேவை செய்யுங்கள்'' என்றாராம் ஆசிரியர். மில்லியனரோ, ''அதில் ஒன்றும் கஷ்டமில்லை'' என்று சொல்லிச் சென்றாராம்.

கொஞ்சநாள் குழந்தைகள் கேன்சர் வார்டில் சேவை செய்துவிட்டு வந்து ஆசிரியரைச் சந்தித்த மில்லியனர், ''மை காட். என்னங்க இது வாழ்க்கை. குழந்தைகளின் ஒவ்வொரு அங்கத்திலும் ஒரு ட்யூப்; கம்ப்யூட்டர்களுடன் போராடி குழந்தையைக் காக்க முயலும் டாக்டர்கள்; வாழ்வா, சாவா என்ற பிரச்னை யிலும் நம்பிக்கையுடன் ஓடியாடி குழந்தைகளைக் கவனிக்கும் பெற்றோர்கள். இந்த வாழ்வா, சாவா பிரச்னைக்கு முன் என் பிசினஸ் எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை'' என்று சொன்னாராம்.

''சாவுதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழச் சொல்கிறது. சாவு மனித வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக்கிவிடும் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். அதனால் நான் இதுவரை பணத்தைத் தவிர வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று நினைத்து வாழ்ந்துவிட்டேன்'' என்றாராம் மில்லியனர்.

''நீங்கள் பணக்காரராக வாழ வேண்டும் என்ற கவலை உங்களுக்கு இல்லை. ஏழையாகிவிடக்கூடாது என்ற பயம்தான் உங்களின் பிரச்னை'' என்று ஆசிரியர் சொன்னதை ஒப்புக்கொண்டு மகிழ்ச்சியோடு வீட்டுக்குப் போனாராம் அந்த மில்லியனர்.

இந்த மில்லியனருடனான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு புத்தகத்தை ஆரம்பிக்கும் ஆசிரியர் மகிழ்ச்சிக்கான பன்னிரண்டு குணங்களை அழகாய்ச் சொல்லியுள்ளார். உள்ளார்ந்த அன்பு, இனிய நம்பிக்கை (ஆப்டிமிஸம்),  மனோதைரியம், சுதந்திர உணர்வு, முனைப்பு, பாதுகாப்பு, உடல்நலம், ஆன்மிகம், பொதுநலப் பண்பு, இயல்பான மனப்பாங்குடைய பார்வை, நகைச்சுவை, காரணகாரியம் போன்றவற்றின் கலவைதான் மகிழ்ச்சி.

''மகிழ்ச்சி என்பதுஒருநாளைய நிலையல்ல. தொடர்ந்து வாழ்ந்து சென்றடையக்கூடிய எல்லைக்கோடு. மகிழ்ச்சியில்லாமல் இருந்தாலும் ஒருநாள் நாம் சாகவே போகிறோம். நினைவில்கொள்ளுங்கள் - வாழாமலேயே வருவதுதான் அந்தச் சாவு'' என்கிறார் ஆசிரியர்.

''உங்கள் மனம் சொல்வதைக்கேளுங்கள். நிறைவான பணத்துடனோ / பணமில்லாமலோ மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்'' என பல விஷயங்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை, பணக்காரர், ஏழை என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் படிக்கலாம்!

- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism