Published:Updated:

வாழ்க்கையைச் சொல்லித் தாருங்கள்!

நாணயம் லைப்ரரி

பிரீமியம் ஸ்டோரி

புத்தகத்தின் பெயர்: 50 ரூல்ஸ் கிட்ஸ் வோன்ட் லேர்ன் இன் ஸ்கூல்
(50 Rules Kids Won’t Learn in School) 
 

ஆசிரியர்: சார்லஸ் ஜே.சைக்ஸ் (Charles J. Sykes)

பதிப்பாளர்: Martin Paperbacks

##~##

ந்தப் புத்தகத்தின் ஆசிரியர் 1990-களில் ஒரு டெலிவிஷன் ஷோவில் சில விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாராம். அந்த விஷயங்கள் அப்படியே பரவி இன்டர்நெட் உலகில் வெவ்வேறு ரூபம் எடுத்து கடைசியில், பில்கேட்ஸ் சொன்ன ப்ரில்லியன்ட் விஷயங்கள் என இந்தப் புத்தகத்தின் ஆசிரியருக்கே மெயில் வந்ததாம்! இனிமேலும் தாமதிக்கவேண்டாம் என்று நினைத்துதான் இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்தாராம் புத்தகத்தின் ஆசிரியர் சார்லஸ் ஜே.சைக்ஸ்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கட்டாயம் ஃபாலோ செய்யவேண்டிய பல விதிகளை இந்தப் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் சொல்லும் முதல் ரூலே அதிரடியானது. உலகம் நியாயமானது இல்லை. அநியாயமான இந்த உலகத்தில், உங்கள் குழந்தையை வாழப் பழக்குங்கள் என்பதுதான் அது.

நிஜவாழ்க்கையில் நல்லவனும்  திறமையான வனும் ஜெயிப்பதில்லை. இப்படி சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் இல்லையா? உங்கள் குழந்தையின் பள்ளியில் வேலை பார்க்கும் திறமையான கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் அத்தனைபேரின் சம்பளத்தையும் சேர்த்து ரியாலிட்டி ஷோவில் வரும் கெக்கே-பிக்கே தொகுப்பாளர் ஒரு ஷோவில் வாங்கிக்கொண்டு போகிறார்.

வாழ்க்கையைச் சொல்லித் தாருங்கள்!

உங்களால் உலகத்தை நியாயமாகச் செயல்படவைக்க ஒருநாளும் முடியாது. ஆனால், இந்த அநியாய உலகின் செயல்பாடுகளுக்கு நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர்.

உங்கள் பள்ளி உங்கள் சுயமரியாதையை எந்த அளவுக்கு காப்பாற்ற நினைக்கிறதோ, அந்த அளவுக்கு உலகம் காப்பாற்ற நினைக்காது. உதாரணத்துக்கு, என்னதான் படிக்கவில்லை  என்றா லும், அட, இவனுக்குன்னு ஏதாவது ஒரு திறமை இருக்கும் என்று சொல்லி சப்பைக்கட்டுகட்டி பள்ளிகள் குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றும். ஆனால், வேலைக்குப் போனாலோ டார்கெட்டை முடிக்கலையா? அடுத்தமாசம் வேலைக்கு வராதே என்பார்கள்.

பள்ளி வாழ்க்கை முழுவதும் உன்னால் முடியும் என்று வீண் நம்பிக்கையை அள்ளித்தெளித்து வளர்த்துவிட்டு சந்தைக்கு வந்தபின் நீ ஒரு வெத்துவேட்டு என்று பொட்டிலடித்தாற்போல் சொல்வது தான் உலகம் என்கிறார் ஆசிரியர். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது நிதர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்பதைக்  குழந்தை நிச்சயம் புரிந்துகொள்ளவேண்டும்.

பள்ளியில் குழந்தை கனவு காண்பதையெல்லாம் அடைய முடியாது என்பதைப் புரியவைக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், பள்ளிக்கூடத்தில் வேண்டுமென்றால் ஃபெயில் போடுவதை நிறுத்திவிட்டு, ரீ-அப்பியரன்ஸ் என்று போட்டு சர்ட்டிஃபிகேட் தரலாம். ஆனால், வாழ்க்கையில் பாஸ்/ஃபெயில் என்ற இரண்டே நிலைதான். ரீ-அப்பியரன்ஸுக்கு சான்ஸே இல்லை என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.  

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, எல்லோரிடமும் ஒரு திறமை இருக்குதுன்னு சால்ஜாப்பெல்லாம் சொல்லி வழியனுப்பிவிடுவார்கள். ஆனால், வேலையில் நீங்கள் போட்டிபோடப்போவது பெரும் புத்திசாலிகளுடன் என்பதை நினைவில்கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

மிக முக்கியமாக அவமானத்தைப் பற்றி ஆசிரியர் சொல்லும்போது, பள்ளியில் அவமானத்தை எதிர்கொள்ளாதக் குழந்தை முழுமனிதனானபின் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் என்கிறார். அவமானத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை குழந்தைகள் தெரிந்துவைத்துக் கொண்டேயாக வேண்டும் என்று ஆணித்தரமாக வாதிடுகிறார்.

பதின்வயதில் வரும் முட்டாள்தனமான எண்ணங்களாகிய 'நான் சின்னப்பிள்ளையாவே இருந்திருக்கலாமோ’, 'அந்த வீட்டில் பிறந்திருக்கலாமோ’, ’என் தம்பியா அவன் இருந்திருக்கலாமோ என்ற அகராதித்தனமான எண்ணங்களை அகற்ற கற்றுத்தர வேண்டும்’ என்கிறார் ஆசிரியர்.

வாழ்க்கையைச் சொல்லித் தாருங்கள்!

மிகவும் சுவாரஸ்யமாகச் செய்யும் மற்றொரு ஒப்பீடு, வாழ்க்கையும் படிப்பும். வாழ்க்கையில் தொடர் ஓட்டம்தான். பள்ளி, கல்லூரியில் செமஸ்டர் விடுமுறைபோல வாழ்க்கையிலும் இதே சிஸ்டம்தான் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஓய்வுக்கே வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

உங்களுக்கு கோபம் வருதா? அதனால் என்ன? என்றுதான் உலகம் நினைக்கவும் செயல்படவும் செய்யும். கோபம் வந்தால் சமாதானப்படுத்த உலகத்தில் யாருமிருக்கமாட்டார்கள் என்பதை யும், பெரிய ஆளாகும்போது இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூலாகக் குழந்தைகளிடம் சொல்லுங்கள் என்றும் சொல்கிறார் ஆசிரியர்.

உன்னை யாராவது அல்லது எதாவது எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்/இருக்கும். இன்டர்நெட், க்ளாஸ் ரூம், ஆபீஸ், சிக்னல் என்று எல்லா இடத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது. ரகசியமாகச் செய்கிறேன் என்பது இந்த உலகில் எதுவுமில்லை என்பதையும் விளக்கிச் சொல்லவேண்டியதன் அவசியத்தை நிறைய உதாரணங்களின் மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

இவற்றையெல்லாம்விட அதிமுக்கியமாக ஏமாற்றுத்தனத்தை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசுவோர்கள் தொடர்பு இல்லாமல் வாழ ஆசைப்படலாம். ஆனால், முடியாது. எனவே, இவர்களைக் கையாளும் திறனை குழந்தைகளுக்குச் சொல்லித்தந்தேயாக வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

என்னால் தப்பைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது என்று சொல்லி வளர்க்காதீர்கள். அதேமாதிரி, உங்கள் குழந்தையும் பெரியவனாகி சிறுதவறையும் பொறுத்துக்கொள்ளும் தன்மை யில்லாமல் புகைந்தால் அவனை ஒரு காமன்சென்ஸ் இல்லாதவனாகத்தான் உலகம் பார்க்கும் என்கிறார். நிர்வாகம் என்றால் கொஞ்சம் முன்னேபின்னேதான் இருக்கும் என்பதைப் புரியவையுங்கள் என்கிறார் ஆசிரியர்.

டெலிவிஷன் வாழ்க்கையல்ல என்பதைப் புட்டுப்புட்டு வைக்கும் ஆசிரியர், உங்கள் பிரச்னைக்கு முப்பது நிமிடம் (மைனஸ் கமர்ஷியல் ப்ரேக் டைம்) போதவேபோதாது. ரியாலிட்டி டிவி என்பதே ரியாலிட்டி இல்லை. பல டேக்குகள் வாங்குகிறார்கள் என்பதைக் கடைசியில் காண்பிக்கிறார்களே பார்த்ததில்லையா என்கிறார்.

மனிதர்களைச் சந்திக்கும்போது கண்ணைப் பார்த்து கணிக்க சொல்லிக்கொடுங்கள் என்கிறார். அடுத்தவரின் வெற்றி உங்களை ஒருபோதும் சோர்வடையச் செய்யாமல் இருக்கவேண்டும் என்று சொல்லிப் பழக்குங்கள் என்கிறார்.

நண்பர்கள், குடும்பம் ஆகியவற்றுக்கு இருக்கவேண்டிய எல்லைகளை சுத்தமாகச் சொல்லுங்கள் என்கிறார் ஆசிரியர். 'நீ ஒன்றும் பெர்ஃபெக்ட் இல்லை. அப்படி இருக்கவேண்டும் என்று எந்தக்  கட்டாயமும் உலகத்தில் இல்லை என்று சொல்லித்தாருங்கள்’ என்று சொல்லும் ஆசிரியர், கடைசி ரூலாய் ஒரேமுறை வாழும் வாழ்வில் இன்றைய நிஜத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை அனுபவிக்கச் சொல்லித் தாருங்கள் என்று சொல்லி முடிக்கிறார்.

இது குழந்தைகளுக்கான புத்தகம் என்றாலும், குழந்தையாக இருக்கும்போது நாம் படிக்காதக் கருத்துகள் பலவற்றைச் சொல்கிறது. நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லவேண்டிய நல்ல விஷயங்கள் பலவற்றைக்கொண்ட இந்தப் புத்தகத்தை நிச்சயம் விரும்பிப் படிக்கலாம்.

- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

 சிறு கடன்களுக்கும் சிபில்!

இதுநாள்வரை வங்கி மூலம் அளிக்கப்படும் பெரிய கடன்களை மட்டுமே சிபில் அமைப்பு கண்காணித்து வந்தது. இனிமேல், சிறிய அளவில் தரப்படும் மைக்ரோ கடன்களையும் கண்காணித்து அதற்கான ஸ்கோர்களை அளிக்க சிபில் அமைப்பு திட்டமிட்டு வருகிறது. ஏறக்குறைய 32 கோடி வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்கள் சிபில் அமைப்பிடம் ஏற்கெனவே இருக்கின்றன. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களையும் கண்காணிக்க தொடங்கும்பட்சத்தில் இன்னும் 7 கோடி கணக்குகள் சிபில் அமைப்பின் கீழ் வருமாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு