Published:Updated:

உங்களுக்கு நீங்களே டாக்டர்!

நாணயம் லைப்ரரி

உங்களுக்கு நீங்களே டாக்டர்!
##~##

ல்ல ஆரோக்கியமான உணவை உண்டு, சரியான உடற்பயிற்சிகளைச் செய்து, சரியான உயரம் மற்றும் எடையைக் கொண்டிருந்து, எட்டு மணி நேரம் தூங்கி, சரியான வைட்டமின்களை எடுத்துக்கொண்டு, ஹார்மோன்களை பேலன்ஸ் செய்துகொண்டு, சரியான இடைவெளியில் உங்களது டாக்டரை சந்தித்து உடலை செக்-அப் செய்து என எத்தனைவிதமாக நீங்கள் உடல்நலத்தைப் பேணினாலும், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என ஒரு டாக்டரே விரிவாக எழுதிய 'மைண்டு ஓவர் மெடிசின்’ என்கிற புத்தகத்தைதான் இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறோம்.

''டாக்டர்களாகிய எங்களுக்கு அவ்வப்போது சில அதிர்ச்சிதரும் விஷயங்களும் நடக்கும். மருத்துவ ரீதியாக வியாதி குணமாகவே வாய்ப்பில்லாத ஒரு நோயாளிக்கு வியாதி குணமாகும். நாங்கள் தலையைப் பிய்த்துக்கொள்வோம். 'இட்ஸ் எ மெடிக்கல் மிரகிள்’ என்று சொல்லிவிடுவோம். இதுபற்றி நோயாளிகள் முன்பு டாக்டர்கள் பேசமாட்டார்கள் என்றாலும், பெரிய கான்ஃப்ரன்ஸ்களில் பேசுவார்கள். அதைக் கூர்ந்து கவனித்தால், இதுமாதிரியான மெடிக்கல் மிரகிள்கள் அடிக்கடி நடப்பது தெரியும்'' என மருத்துவ உலகின் ரகசியங்களைப் போட்டுடைக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

பல்வேறு விநோதமான நோயாளிகளுடனான அனுபவத்தைப் பற்றி கதைகதையாக பல டாக்டர்கள் சொல்லக்கேட்டதை நமக்கு ஆச்சர்யத்தோடு திரும்பச் சொல்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

உங்களுக்கு நீங்களே டாக்டர்!

ஒரு கேன்சர் பேஷன்டுக்கு ரேடியேஷன் கொடுத்த மெஷின் பல நாட்களாக வேலை செய்யவில்லை என்பதை ட்ரீட்மென்ட் முடிந்த பின்னரே கண்டுபிடித்தார்களாம். ஆனால், அந்த கேன்சர் நோயாளியோ, கேன்சர் நோயிலிருந்து முற்றிலும் குணமாகிவிட்டாராம். இன்னொரு பெண்ணுக்கு  ஹார்ட் அட்டாக் வந்து இருதய அறுவை சிகிச்சை செய்தார்களாம். அதன்பின்னர் அந்தப் பெண்மணியின் கிட்னி செயலிழந்தது. டாக்டர்கள் டயாலிஸிஸ் செய்ய முயற்சிக்க, முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாராம் அந்தப் பெண். ஒன்பது நாட்கள் சிறுநீரகம் வேலை செய்யாமலேயே இருந்ததாம். பத்தாவது நாளில் இருந்து தானாகவே சிறுநீரகம் இயங்க ஆரம்பித்து இருதய அறுவை சிகிச்சைக்கு முன்னர் இருந்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டதாம்.

இன்னொரு நோயாளியோ விபத்து ஒன்றில் கழுத்தை உடைத்துக் கொண்டாராம். டாக்டர்கள் எவ்வளவு சொல்லியும் அவர் சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டாராம். ஒரு மாதத்துக்குப் பின்னர் அவர் ஜாக்கிங் போவதை டாக்டர்கள் பார்த்து வியந்தார்களாம்!

''இதுபோன்ற பல ஆச்சர்யமான கதைகளைக் கேட்டபின்னரே நான் மனம் என்னும் மாயமருந்தின் எஃபெக்டை தெரிந்துகொள்ளும் ஆராய்ச்சியில் இறங்கினேன்'' என்கின்றார் ஆசிரியர். பலதடவை மருந்துக்கு உடம்பு கட்டுப்படாமல் போவதற்கு காரணம், மனதுக்கு உடம்பின்மேல் பெரும் கன்ட்ரோல் இருப்பதனாலேயே என்பதைத்தான் முதலில் நான் தெரிந்துகொண்டேன் என்கிறார் ஆசிரியர்.

''1957-ம் வருடம் உடலின் பல பாகங்களைப் பாதித்த கேன்சருடனான ஒரு நோயாளியைக் காப்பாற்ற பெரும்பாடுபட்டார்களாம் அமெரிக்க டாக்டர்கள். சீக்கிரத்தில் போய் சேர்ந்துவிடுவார் என்கிற நினைப்பில் அவரை கவனிக்காமலேயே விட்டுவிட்டார்களாம் டாக்டர்கள். ஆனால் நோயாளியோ,  புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கேன்சருக்கான மருந்து ஒன்றைச் சொல்லி, அந்த மருந்தை எனக்குக் கொடுங்கள், நான் குணமாகிவிடுவேன் என்று டாக்டரை நச்சரித்தாராம். டாக்டர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நோயாளி கேட்காமல் போகவே, அந்த மருந்தை அவருக்கு தந்தார்களாம். வெள்ளிக்கிழமை அந்த மருந்தைக் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வேலைக்கு வந்த டாக்டர், அந்த நோயாளி படுக்கையை விட்டு இறங்கி நடந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்களாம். கேன்சர் கட்டிகள் தானாக கரைந்துபோக ஆரம்பித்தனவாம்.

உங்களுக்கு நீங்களே டாக்டர்!

டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப்போன நோயாளி ஒரு செய்தித்தாளில், அவருக்கு அளிக்கப்பட்ட மருந்து சரியாக வேலை செய்வதில்லை என்று வெளிவந்திருந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து டாக்டரிடம் வந்தாராம். அவருக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது, மறுபடியும் கேன்சர் கட்டிகள் வர ஆரம்பித்திருந்ததாம். டாக்டரோ சற்று புத்திசாலித்தனத்துடன், ஏற்கெனவே தந்த மருந்து சரியான வெப்ப நிலையில் வைக்கப்படாததாலேயே சக்தி இழந்தன. இப்போது வருவது சிறந்த மருந்து என்று சொல்லி ஒரு சிரிஞ்சில் ட்ரிப்ஸ் போடும் தண்ணீரை செலுத்த, மறுபடியும் கேன்சர் கட்டிகள் கரைந்துபோனதாம். சில நாட்கள் கழித்து அமெரிக்கன் மெடிக்கல் அஸோஸியேஷன், கிரிபியோசென் எனும் அந்த மருந்து கேன்சருக்கு ஓர் உருப்படியில்லாத மருந்து என்று விமர்சிக்க, அதை அறிந்த நோயாளிக்கு மீண்டும் கேன்சர் வந்து இரண்டு நாளில் இறந்தே போனாராம்.

இதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது, அட மருந்தில்தான் மாயம் என்றால் அறுவை சிகிச்சையிலும் மாயம் இருக்கிறது என்று சொல்லும் ஆசிரியர், இங்கிலாந்தில் நடந்த பொய்யான மூட்டுமாற்று அறுவை சிகிச்சை பற்றி சொல்கிறார்.

ஒரு டாக்டர் தன்னிடம் மூட்டுவலி என்று வரும் நோயாளிகளில் சரிபாதி பேருக்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சையும் பாதிப்பேருக்கு அறுவை சிகிச்சையே செய்யாமல் வெறுமனே ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோய் மூட்டில் சில சிராய்ப்புகளைச் செய்து வேறொருவருக்கு நடந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வீடியோவில் பேஷன்டுக்கு காட்டி ஒரு பொய்யான அறுவை சிகிச்சையைச் செய்தாராம். இப்படி செய்ததில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் ஒரே மாதிரியான முன்னேற்றம் தெரிந்ததாம். எனக்கு வியாதி என்று நினையுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், எப்படி வெற்றிகரமாக வியாதியஸ்தராக மாறுவது என்பதைச் சொல்லும் ஒரு தனி அத்தியாயத்தை இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார்.

மனது வைத்தால் உங்களை நீங்களே வியாதியிலிருந்து குணப்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான ஆறு வழிகளைச் சொல்கிறார். முதலில் உங்களால் உங்களை குணப்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புங்கள். இரண்டாவதாக, இதற்கு சரியான உறுதுணையைக் கண்டுபிடியுங்கள். மூன்றாவதாக, உங்கள் உடல் மற்றும் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டுப் பழகுங்கள்.

நான்காவதாக, உங்கள் நோய்க்கான ஆதார விஷயத்தைக் கண்டுபிடியுங்கள். ஐந்தாவதாக, உங்களுக்கான ப்ரிஸ்கிரிப்ஷனை (மனரீதியான மருந்துச்சீட்டை) நீங்களே எழுதுங்கள். ஆறாவதாக, குணமாகுதல் என்ற நம்பிக்கைக்கு முழுமையாக சரண்டராகுங்கள் என்கிறார் ஆசிரியர்.

இந்த ஒவ்வொரு வழிக்கும் நிறைய உதாரணங்களைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். நிஜ வாழ்க்கையின் உதாரணங்கள் நிறைந்துள்ள இந்தப் புத்தகத்தை வியாதியின் வயப்படாமல் இருக்க நினைக்கும் அனைவருமே ஒருமுறை படித்து பின்பற்ற முயற்சிக்கலாம்.

 - நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

நாஸ்காமுக்கு புதிய தலைவர்!

நாஸ்காம் அமைப்பின் புதிய தலைவராக ஆர்.சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். முன்பு இவர்  தொலைத்தொடர்புத் துறையின் செயலாளராக இருந்தபோதுதான் நாஸ்காம் என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஐ.டி துறையானது வருகிற 2020-க்குள் சுமார் 300 பில்லியன் டாலர் வருமானம் தரும் துறையாக மாறுவதற்கான அத்தனை வேலைகளையும் செய்வேன் என்று சொல்லி யிருக்கிறார் சந்திரசேகர். தயவு செஞ்சு செய்யுங்க, சார்!

அடுத்த கட்டுரைக்கு