Published:Updated:

நாணயம் லைப்ரரி - நீங்களும் ஜீனியஸ்தான்!

நாணயம் லைப்ரரி - நீங்களும் ஜீனியஸ்தான்!

##~##

நேரம் மிகவும் மதிப்பு மிக்கது. அதை நிர்வாகம் செய்வதைவிட சரியாக உபயோகப்படும் வகையில் செலவழிக்க கற்க வேண்டும்.

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், உங்களுடைய உண்மையான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திப் பயன்பெற உதவும் ஸ்மார்ட்டான ஐடியாக்களைச் சொல்லும் 'ப்ராக்டிகல் ஜீனியஸ்’ எனும் கினா அமரோ ருடான் எழுதியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம்மில் பலரும் ஜீனியஸ் எனில், அந்தக் குணம் பிறவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இது உண்மையில்லை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு ஜீனியஸ் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறான். அந்த ஜீனியஸை செய்யும் தொழிலிலோ, பார்க்கும் வேலையிலோ திட்டமிட்டு வெளியே கொண்டுவந்து வெற்றிகளை ஈட்டுவது பற்றிச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

நாணயம் லைப்ரரி - நீங்களும் ஜீனியஸ்தான்!

எப்போதாவது நீங்கள் ஆபீஸில் உங்களைக் காண்பித்துக்கொள்ளும் விதமும், நீங்கள் ஆபீஸ் தவிர வேறு இடங்களில் ஒரிஜினலாக  இருக்கும்/சிந்திக்கும்/செயல்படும் நிலையும்  வெவ்வேறாக இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளீர்களா?

அட, ஆபீஸுக்கு வெளியே இவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறோமே? அது ஏன் ஆபீஸுக்குள் போனவுடன் என் செயல்பாடுகள் மாறிவிடுகிறது என நீங்கள் ஆச்சர்யப்படுவதுண்டா? எல்லோருடைய மனதிலும் இந்த எண்ணங்கள் அவ்வப்போது வந்துதானே போகிறது என்கிறீர்களா?

வரத்தான் செய்யும். எல்லோருமே பிறவியில் ஜீனியஸ்தான்! ஆனால், பிழைப்புக்காக நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே நமக்குள் இருக்கும் ஜீனியஸை ஒளித்துவைக்கவும், தொலைத்துவிடவும் கட்டாயப்படுத்து கிறது என்கிறார் ஆசிரியர்.

ஆசை, துக்கம், ஏக்கம் எனப் பல்வேறு உணர்வுகளையும் உள்ளடக்கியபடியே ரொட்டீன் வேலைகளைச் செய்யும் பிஸியானதொரு கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்வாக வேலை பார்த்துவந்த ஆசிரியர், அவருக்குள்ளே இருக்கும் ஜீனியஸை எப்போது கண்டுணர்ந்தார் என்று முதலில் விளக்குகிறார் இந்தப் புத்தகத்தில்.

மூக்குக் கண்ணாடி அணிவதைத் தவிர்க்கும் பொருட்டுக் கண்ணுக்கு ஒரு லென்ஸ் கரெக்டிவ் சர்ஜரி செய்யப்போனாராம் ஆசிரியர். ஆசிரியரிடம் டாக்டர், 'உங்களுக்கு நான் சிகிச்சை செய்து முடித்தபிறகு நாளை காலை முதல் கடிகாரத்தைப் பார்க்க  மூக்குக் கண்ணாடி தேவைப்படாது’  என்றாராம்.

இரவு தூங்கி காலையில் எழுந்தால்,  கண் சுத்தமாகத் தெரியவில்லையாம். டாக்டரிடம் போனால், 'ஒருவாரம் மருந்து போட்டால் சரியாகிவிடும்’ என்றாராம் டாக்டர்.

ஆனால், அந்த வாரமும் முழுக்கக்  கண் தெரியாமலேயே இருந்தாராம் ஆசிரியர். இரவு முழுவதும் பயத்தில் தூங்காமல் இருந்தபோது அவருடைய சிறுபிராயத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் மனதில் ஓடினவாம். முதல்நாள் இரவு, அவரது சிறுவயது ஞாபகங்கள் மனதில் ஓடியதாம். இரண்டாம் நாள், உலகம் முழுவதும் பயணம் செய்து ஒரு பெரும்கூட்டத்தில் உரையாற்றுவதைப் போன்ற பிம்பங்கள் ஓடியதாம். மூன்றாவது நாள், டெட் (ஜிமீபீ)  இணையதளத்தில் ஜில் போல்ட் டெய்லர் என்ற பெண்மணியின் உரையைக் கேட்டாராம்.  

ஜில் போல்ட் டெய்லர் மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிபுணர். அவருக்கே 1996-ம் ஆண்டு வாதம் (ஸ்ட்ரோக்) வந்ததாம். அந்த வாதத்தில்  இருந்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் மீண்டுவரும்போதுதான் அவருக்கே அதுவரை கண்டறியாத மூளை குறித்த பெரும்பான்மையான செயல்பாட்டு விஷயங்கள் புரிய ஆரம்பித்தது என்று சொன்னாராம்.

அதேபோல், புத்தகத்தின் ஆசிரியரும் கண்பார்வை மீள்வதற்காகக் காத்திருக்கும்போது அவர் எந்தப் பாதையில் போகவேண்டும் என்பது அவருடைய கண்முன்னே தெரிந்ததாம். பெரிய மாறுதல் தனது  வாழ்க்கையில் வரப்போகிறது என்பதை உணர்ந்த ஆசிரியரின் மனதில், ஒரே ஒரு வார்த்தை மட்டும்  மீண்டும் மீண்டும் உதித்ததாம். அந்த வார்த்தை, 'ஜீனியஸ்’ எனும் மந்திர வார்த்தை என்கிறார்.

ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ஜீனியஸ் என்கிற ஒரு தீப்பொறி இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தப் தீப்பொறியை அறிந்து செயல்பட்டால் அது கொழுந்துவிட்டு எறியும் ஜுவாலையாக மாறி; அவனுக்கும் உலகத்துக்கும் பலனளிக்கும் என்று சொல்லும் ஆசிரியர், எப்படி நம்முள்ளே இருக்கும் ஜீனியஸைப் பகுத்து அறிவது என்றும் விளக்குகிறார்.

உங்களுக்குள் இருக்கும் ஜீனியஸை நீங்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று அடித்துச் சொல்லும் ஆசிரியர், உங்களுக்குள் இருக்கும் ஜீனியஸை முதலில் அறிந்துகொள்ளுங்கள். நம்மால் எது முடியும்?, எது அறவே முடியாது? எதை வெகு சிறப்பாகச் செய்யமுடியும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து கண்டறியுங்கள் என்கிறார்.

பெரும்பாலானோர் தங்களின் உள்ளேயுள்ள சிறப்புத் திறமையைக் கொஞ்சகாலம் முயற்சித்தவுடனேயே கண்டறிந்துவிடுவார்கள். அடுத்து,  கண்டறிந்த சிறப்புத் தன்மையை உலகத்துக்குச் சொல்வதுதான் மிகக் கடினமான விஷயம் என்கிறார் ஆசிரியர். இதற்கான வழிகள் சிலவற்றையும் சொல்கிறார். உதாரணமாக, முன்பின் அறியாத ஒருவரிடம் சென்று இரண்டே நிமிடம் மட்டுமே அவருடன் நீங்கள் பேசி உங்களை அவர் கவனத்தில் கொள்ளச் செய்ய முயற்சிக்கவேண்டும் என்கிறார். இது சாதாரண விஷயமாகத் தெரிந்தாலும் அவ்வளவு சுலபமில்லை என்றும் சொல்கிறார்.  

அடுத்தபடியாக, உங்கள் சிறப்புத் தன்மையை மேலும் பாலிஷ் செய்ய உதவும் நபர்களுடன் பழக ஆரம்பியுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், உங்களுடைய சிறப்புத் திறமையை வளர்க்கவும் கூர்மைப்படுத்தவும் அவர்கள் மிகவும் உதவுவார்கள் என்கிறார்.

நாணயம் லைப்ரரி - நீங்களும் ஜீனியஸ்தான்!

முதலில் உங்கள் உற்றார், உறவினர், நண்பர் எனப் பலரையும் வரிசைப்படுத்திப் பாருங்கள். உங்களுடைய எனர்ஜி லெவலுக்கு மேட்ச் ஆகும் விதத்தில் அவர்கள் எனர்ஜி இருக்கிறதா?, அவர்கள் உங்களுடைய திறமைகளை வளர்க்கவும், செம்மைப்படுத்தவும் தேவையான விஷயங்களை அறிந்துதெரிந்தவர்களா என்று பாருங்கள் என்கிறார். டல்லான நம் எண்ணத்துக்கு மாறான கூட்டாளிகளை வைத்துக்கொண்டு ஜீனியஸாக நாம் ஒருபோதும் திகழ முடியாது என்கிறார்.

அடுத்தபடியாக, தொடர்ந்து ஜீனியஸாக இருப்பது எப்படி என்பதை விளக்கும் ஆசிரியர், உச்சத்தை அடைவது சுலபமாக இருக்கும். ஆனால், அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்வது என்பது மிக மிகக் கடினமாக இருக்கும் என்கிறார்.

நேர நிர்வாகம் பற்றிக் கிண்டல் செய்யும் ஆசிரியர், நேரம் மிகவும் மதிப்புமிக்கது. அதை நிர்வாகம் செய்வதைவிடச் சரியாக உபயோகப்படும் வகையில் செலவழிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எத்தனை வேலையை முடித்தோம் என்பதில் இல்லை பெருமை;

அந்த வேலையால் என்ன பயன் என்பதில்தான் மேட்டரே இருக்கிறது என்கின்றார்.

கடைசியாக நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் சிறப்புத் தன்மையை மார்க்கெட் செய்வது என்று சொல்லும் ஆசிரியர், உங்கள் தனித்திறமையைக் கண்டறிந்து அதைத் தொடர்ந்து செயலாக்க முடியும் என்ற நிலையை அடையும்போது, வெற்றிபெற உங்கள் தனிச் சிறப்பை மார்க்கெட்டிங் செய்வது என்பது அத்தியாவசியமான ஒன்று என்று சொல்கிறார்.

மார்க்கெட்டிங் என்றால் ஏதோ ஒரு எஃப்எம்சிஜி பொருளை விற்பதுபோல் மாஸ் மார்க்கெட்டிங் இல்லை. ஒவ்வொருவராகத் தெரிந்தெடுத்த நம்முடைய தனித்திறமைக்கு மதிப்பு கூட்டும் நபர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாய் மார்க்கெட் செய்யவேண்டும் என்கின்றார் ஆசிரியர் கினா.

நம்முள் இருக்கும் சிறப்புத் திறமையைக் கண்டறிந்து முன்னேற நிச்சயமாக இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

                               - நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

கமாடிட்டி வர்த்தகம் 36% வீழ்ச்சி!

கமாடிட்டி வர்த்தகம் 2013-14 ஏப்ரல் - டிசம்பர் வரை 36.62% வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு, கமாடிட்டி பரிவர்த்தனை வரிக் கட்டணம், ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கம் போன்றவை  காரணம். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது,  தங்கம், வெள்ளியின் மீதான வர்த்தகம் 40.32% குறைந்துள்ளது. அக்ரி கமாடிட்டிகளுக்கு இந்தப் பரிவர்த்தனை வரி இல்லை என்றாலும், அந்தப் பொருட்களுக்கான வர்த்தகமும் 23.87% குறைந்துள்ளது. உலோகங்கள் மீதான வர்த்தகம் 35.09% குறைந்தும், எனர்ஜி துறைகள் 44.02% குறைந்தும் உள்ளதாக ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் கூறியுள்ளது.