Published:Updated:

நாணயம் லைப்ரரி -முன்னேற்றத்தைத் தடுக்கும் கெட்டப் பழக்கங்கள்!

நாணயம் லைப்ரரி -முன்னேற்றத்தைத் தடுக்கும் கெட்டப் பழக்கங்கள்!

##~##

அலுவலகப் பணியில் வெற்றிபெற சிறந்த பல விஷயங்களைச் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை வேலைக்குச் செல்பவர்களும், ஆட்களை வேலைக்கு வைத்திருப்பவர்களும் தவறாமல் படிக்கவேண்டும்.

இந்த வாரம் நாம் அறிமுகப் படுத்தும் புத்தகம் ஜேம்ஸ் வால்ட்ரூப் மற்றும் திமெத்தி பட்லர் எனும் இருவர் எழுதிய 'திறமையான மனிதர்களை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தும் 12 கெட்டப் பழக்கங்கள்’.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த இருவரும் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ கேரியர் டெவலப்மென்ட் பிரிவில் பணிபுரிபவர்கள். அவர்களுடைய அனுபவத்தைவைத்து அறிந்த விஷயங்களைத்தொகுத்து இந்தப் புத்தகத்தில் தந்துள்ளனர்.

திறமையான நிர்வாகிகள் தங்களுக்கே உரிய சிறப்புக் குணங்களை இன்னமும் கூர்மைப்படுத்தி வெற்றி காண்பதைவிட, தங்களுடைய தனிப்பட்ட நிர்வாக முறையில் இருக்கும் குறைகளை அறிந்து அதனைக் களைந்துச் செயல்படுவதன் மூலமே அதிகப் பலன்களை அடைகின்றனர் என்கின்றனர் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி -முன்னேற்றத்தைத் தடுக்கும் கெட்டப் பழக்கங்கள்!

என்னதான் நல்ல பல குணாதிசயங்களைக் கொண்டு கடுமையாக உழைத்தாலும், ஒரு மேனேஜரிடம் இருக்கும் இந்தக் கெட்டப் பழக்கங்கள் அவருடைய உழைப்புக்கான பலனைப் பெருமளவுக்குக் குறைத்துவிடும் என்று அடித்துச் சொல்கின்றனர். இந்தக் கெட்டப் பழக்கங்களை அறிந்து செயல்படுதல் என்பது இரண்டுவகையில் ஒரு நிர்வாகிக்கு உதவும் என்கிறார்கள். ஒன்று, தன்னுடைய குறைகளைக் களையலாம். இரண்டாவது, தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களின் குறைகளை அறிந்து அதற்கேற்ப தன்னுடைய மேலாண்மை முறைகளை மாற்றியமைத்து வெற்றிபெறவும் செய்யலாம் என்கின்றனர். இனி, அந்த 12 கெட்டப் பழக்கங்களைப் பார்ப்போம்.

1. ஒருபோதுமே நாம் இந்தப் பதவிக்குத் தகுதியானவர்தான் என்ற எண்ணத்துடன் செயல்படாமை. இதனை 'கேரியர் அக்ரோபோபியா’ என்று குறிப்பிடுகின்றனர் ஆசிரியர்கள். நம்ம தகுதிக்கு இவ்வளவு சம்பாதிக்கிறோமே? இந்தப் பதவியில் இருக்கிறோமே? வேலை போயிடுமோ? என்பது போன்ற பயங்கள் சில தகுதியானவர்களுக்குக்கூட வந்துவிடும் என்கிறார்கள். இது தனிமனிதனையும் கம்பெனியையும் சேர்த்தே பெருமளவுக்குப் பாதித்துவிடும் என்கின்றனர். இந்தக் கெட்டப்பழக்கம் கொண்டவர்கள் நீண்டநாளைக்கு அந்த வேலையில் தங்கமாட்டார்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

2. உலகத்தை ரொம்ப நியாயமான இடமாகப் பார்ப்பது. திறமையானவனுக்கு வேலை கிடைக்கணும். உழைக்கிறவனுக்கு ப்ரமோஷன் கிடைக்கணும் என்பதெல்லாம் சரிதான். ஆனால், நிஜத்தில் இதுவா நடக்கிறது? வேண்டியவனை வேலைக்குச் சேர்ப்பதும், ப்ரமோட் செய்வதும், சரியான ஜால்ராக்களுக்குச் சம்பளம் உயர்வதும்தானே நிதர்சனமாக இருக்கிறது. இவர்களை 'மெரிட்டோகிராட்’ என்று சொல்லும் ஆசிரியர்கள், இவர்களுடைய முடிவுகள் எல்லாமே ஓர் எடைபோடும் மெஷினின் உதவியுடனேயே எடுக்கப்படுவதாக இருக்கும் என்கின்றனர். இவர்கள் வேறொரு உலகத்திலேயே வசித்துவருவார்கள். ப்ரமோஷன் என்பது இவர்கள் கேரியரில் தொலைதூரத்தில் இருப்பதாகவே எப்போதும் இருக்கும் என்கின்றனர்.

3. ஹீரோத்தனமும் ஒரு கெட்டப் பழக்கமே. ஹீரோ என்றால் சினிமா ஹீரோ அல்ல. வியாபார நிர்வாக ரீதியாக நிறைவேற்ற முடியாத விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய முயலும் குணத்தைத்தான் ஆசிரியர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றனர். இன்னும் அதிகமாக, இன்னமும் பெட்டராக, இன்னமும் சீக்கிரமாக, டுவென்டி-போர்-பை செவன் போன்ற வார்த்தைகளை இவர்கள் வேலை செய்யும் இடத்தில் கேட்கலாம் என்கின்றனர் ஆசிரியர்கள். பெரிய வெற்றி எல்லைகளை வைத்துக்கொண்டு செயல்படுவதில் தப்பொன்றும் இல்லை. ஆனால், எங்கும் சவால், எதிலும் சவால் என்று புறப்பட்டால் அது அவர்களுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம். ஆனால், கூட வேலை பார்ப்பவர்களுக்கு ரொம்பக் கஷ்டமாச்சே என்கின்றனர். வேலை கிடைக்காத காலத்தில் இந்த வகை மேனேஜர்கள் ரொம்பவும் பிரகாசிப்பார்கள். வேலைக்கு ஆள் இல்லை என்ற காலத்தில் இந்தவகை மேனேஜர்களுக்கு வேலை போய்விடும் என்கின்றனர்.

4. எந்தச் சூழலிலும் சண்டை/சச்சரவுகளைத் தடுக்க நினைக்கும் சமாதானப் போக்கு. சண்டையைத் தவிர்க்க நாம் அனைவருமே விரும்பினாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சண்டை போட்டேயாக வேண்டுமல்லவா? சண்டை ஒரு வலி நிறைந்ததாக இருந்தாலும், சிலசமயம் அது உபயோகப்படும் என்பதை அனைவரும் உணரவே செய்யவேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். சண்டையைத் தவிர்க்க அலுவலகத்தின் சட்டத் திட்டங்களெல்லாம் ஒதுக்கிவைப்பார்கள். அலுவலகம் நிறைய நஷ்டப்படும்.

5. பேச்சு, நடவடிக்கையில் எல்லாமே கறாராக இருப்பது. சொன்னதைச் செய் பாணி இது. உடல் உழைப்புத் தேவைப்படும் இடங்களில் இந்தக் குணமுடைய நபர்களை அதிகமாகச் சந்திக்கலாம் என்கின்றனர். இவர்கள் எல்லாவற்றையுமே வெற்றி-தோல்வி மனப்பான்மையிலேயே கையாள்வார்கள் என்கின்றனர்.

6. கலகக்காரர் குணாதிசயம் கொண்டவராக இருப்பது. கலகக்காரர் குணம் என்பது எப்படியிருக்கும் என்று ஓர் உதாரணமும் சொல்கின்றனர் ஆசிரியர்கள். நிறுவனத்தின் தலைவர் என்னுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது; ஒரு பின்னூட்டம் கொடுங்கள் என்று சொன்னால், ஒரு புத்திசாலி தொழிலாளி, ஐயா, குழப்பமா இருக்குதுன்னு சொல்லிவிடுவார். எனவே, உங்கள் பாத்திரத்தை மட்டும் நீங்கள் செய்தால், யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது.

நாணயம் லைப்ரரி -முன்னேற்றத்தைத் தடுக்கும் கெட்டப் பழக்கங்கள்!

7. எனக்குச் சின்ன வெற்றியெல்லாம் பிடிக்காது. பெரிசா உலகமே என்னைத் திரும்பிப் பார்க்கும்படி எதையாவது செய்யணும். அதுவும் உடனடியா, எனும் குணம் என்று சொல்கின்றனர்.

8. எதிலும் நம்பிக்கை வைக்காத பயந்தாங்கொள்ளித்தனம். பொருளாதாரச் சுணக்கம் இருக்கும்போது பயந்தால் சரி, நாட்டு நிலைமை சூப்பராகப் போகும்போதுகூட எதிலும் நம்பிக்கை வைக்காமல் இது தோத்துடும், அது அம்பேல் எனப் பயப்படும் குணம் என்கின்றனர். உலகமே ஊத்தி மூடிக்கும் என்ற முடிவுடனேயே இவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்கின்றனர்.

9. உணர்வுகளே இல்லாத மனிதர்களைச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். பயம், பாசம், கோபம், பொறாமை, பேராசை, பரிவு என எந்தவிதமான உணர்வுகளுமே இவர்களுக்கு இருக்காது. அடுத்தவர்களுடைய இந்த உணர்வையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஏறக்குறைய மெஷின் மாதிரி செயல்பாட்டைக் கொண்டவர்கள் இவர்கள் என்கின்றனர்.

10. எந்த வேலையும் என் தகுதிக்குச் சரியானதில்லை என்று நினைக்கும் ரகம். இவர்களுக்குக் கஷ்டப்படவும் பிடிக்காது; பொறுமையும் இருக்காது. கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும் என்ற கான்செப்டே இவர்கள் மனதில் ஏறாது என்கின்றனர் ஆசிரியர்கள்.

11. எல்லைக்கோடு இல்லாதவர்களைச் சொல்கின்றனர். ஆபீஸிலும் எல்லைக்கோடுகள் இருக்கிறது என்பது தெரியாமல் விளையாடுவார்கள். வீட்டிலும் அப்படியே இருப்பார்கள்.

12. பாதைத் தெரியாமல் தொலைந்துபோகும் குணத்தைச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். நம்ம கையில ஒன்றுமில்லை, நம்மை யாரு கேட்கிறா, என்னத்தச் சொல்லி- என்னத்தைச் செஞ்சு, நம்மையெல்லாம் மதிப்பாங்களாப்பா, என்னை மாதிரி வேலை பார்க்குறவனுக்கு வேலையை நிறையக் கொடுக்கிறாங்க என்று புலம்புகிறவர்களே பாதைத் தவறிய மனிதர்கள் என்கின்றனர் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி -முன்னேற்றத்தைத் தடுக்கும் கெட்டப் பழக்கங்கள்!

மொத்தப் புத்தகத்தையும் இரண்டாகப் பிரித்து முதல் பகுதியில் 12 கெட்டப்பழக்கங்களைச் சொல்லியும், இரண்டாவது பகுதியில் இந்தப் பழக்கங்களைச் சரிசெய்வதற்கான நான்கு அடிப்படை முறைகளைச் சொல்லியும் தெளிவுபடுத்தியுள்ளனர் ஆசிரியர்கள்.

அலுவலகப் பணியில் வெற்றிபெற சிறந்த பல விஷயங்களைச் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை வேலைக்குச் செல்பவர்களும், ஆட்களை வேலைக்கு வைத்திருப்பவர்களும் தவறாமல் படிக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது.

- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)