Published:Updated:

நாணயம் லைப்ரரி :இந்தியாவுக்கேற்ப பொருளை மாற்று!

சித்தார்த்தன் சுந்தரம்,பிசினிஸ் கன்சல்டன்ட்

நாணயம் லைப்ரரி :இந்தியாவுக்கேற்ப பொருளை மாற்று!

சித்தார்த்தன் சுந்தரம்,பிசினிஸ் கன்சல்டன்ட்

Published:Updated:
##~##

''வி    ஆர் லைக் தட் ஒன்லி’ (சுருக்கமாக, WALTO) என்கிற புத்தகத்தைத் தொடர்ந்து ஐந்து வருடத்துக்குப் பிறகு, 'மார்க்கெட் ஸ்ட்ராடஜி கன்சல்டன்ட்’ ரமா பிஜாபுர்கர் எழுதியிருக்கும் புத்தகம் 'எ நெவர் பிஃபோர் வேர்ல்டு.’  இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு, மூன்றாவது பத்தாண்டில் நடைபோட்டுவரும் இந்த வேளையில் பல துறைகளில் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதில் மாறிவரும் நுகர்வுக் கட்டமைப்பு மற்றும் நுகர்வோர்களின் நடவடிக்கைகளும் ஒன்றாகும்.

நுகர்வுச் சமூகம் என்பதை மையப்படுத்தி மக்களின் வாழ்க்கை முறையில் அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, அதை எதற்காக, எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நுகர்வோர்களின் தேவைகளையும், ஆசைகளையும் பொருத்தமான முறையில் நிறைவேற்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன, என்ன செய்யவேண்டும் என்பதை பல புள்ளிவிவரங்களுடன் நூலாசிரியர் ரமா விளக்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தியா என்பது வித்தியாசமான பிரதேசம். உலகளவில் பெரிய இ-காமர்ஸ் (IRCTC) வர்த்தகம் நடத்தும் இந்திய ரயில்வேதான், அழுக்குபடிந்த, வசதியற்ற, தொழில்நுட்பம் குறைந்த ரயில் சேவையையும் நடத்திவருகிறது. எவ்வளவு விலை அதிகமான ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி, அதில் சாமியின் படத்தைத் தரவிறக்கி அதை 'வால் பேப்பரா’க்கி கோயிலுக்குப் போவதற்குப் பதில் போன் திரையைப் பார்த்து கும்பிடுகிறோம். உலகின் லேட்டஸ்ட் காஸ்ட்லி கார் வாங்கினாலும் எலுமிச்சம் பழத்தை டயரின் கீழ் வைத்து பூஜை செய்ய நாம் தவறுவதில்லை.

நாணயம் லைப்ரரி :இந்தியாவுக்கேற்ப பொருளை மாற்று!

பன்னாட்டு நிறுவனங்கள், வளர்ந்த நாடுகளில் அறிமுகப்படுத்தி வெற்றிபெற்ற பொருட்களையோ, சேவைகளையோ அப்படியே இந்தியாவில் அறிமுகப்படுத்த நினைத்தால் இனி ஜெயிக்க முடியாது. காரணம், அந்தக் காலகட்டத்திலிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இப்போதிருக்கிற சூழ்நிலைக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. இதை அறிந்த பல பன்னாட்டு

நாணயம் லைப்ரரி :இந்தியாவுக்கேற்ப பொருளை மாற்று!

நிறுவனங்கள் - ஹிந்துஸ்தான் யுனிலீவர், ப்ரெக்டர் அண்டு கேம்பிள், பெப்சிகோ, பிலிப்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், எம்டிவி, கார்கில், நோக்கியா போன்ற நிறுவனங்கள் தங்களின் பொருட்களையும், சேவைகளையும் இந்திய நுகர்வோர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்ததின் மூலம் இந்தியச்  சந்தையில் நன்கு கால் பதித்து நிற்கிறது' என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ரமா.

உதாரணமாக, ஹிந்துஸ்தான் லீவரின் 'ஃபேர் அண்டு லவ்லி’ க்ரீம். 1970-களில் இந்தியாவிற்கென்றே தயாரித்து அறிமுகப்படுத்திய பிராண்டு. இன்றைக்கு இதன் விற்பனை கிட்டத்தட்ட ரூ.1,000 கோடிக்கும் மேல். இந்த வெற்றிக்குப்பின் இந்த பிராண்டு பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

''ஒரே அளவு அனைத்துக்கும் பொருந்தும்’ (one size fits all approach) என்கிற அணுகுமுறையில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் வெளியே வரவேண்டும்'' என்கிறார் எம்.டி.வி இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அலெக்ஸ் குருவில்லா. இதற்கு மாறாக, 'டிஸ்னி’ சேனல் சுத்தமான, உலகளாவிய நேயர்களின் விருப்பத்திற்கேற்ப தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. இதற்கு இந்திய மக்களிடம் அவ்வளவு வரவேற்பு இல்லை. எனவே, இந்தியச் சந்தையில் காலூன்ற வேண்டுமெனில் பன்னாட்டு நிறுவனங்கள் 'டிரான்ஸ்ப்ளாண்டிங்’ அணுகுமுறையிலிருந்து 'டிரான்ஸ்லேட்’ என்கிற அணுகுமுறைக்கு மாற வேண்டும்'' என்கிறார் ஆசிரியர்.

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் இந்தியர்களின் சுவையறிந்து 'மெக் ஆலு டிக்கி பர்கரை’ அறிமுகப்படுத்தியதுடன் பல 'காரசாரமான’ பர்கர்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

நாணயம் லைப்ரரி :இந்தியாவுக்கேற்ப பொருளை மாற்று!

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஜெயிக்கவேண்டுமெனில், மாறிவரும் இந்திய நுகர்வோர்களைக் கவரவேண்டுமெனில், 1. அவர்கள் தேவையறிந்து அதற்குப் பொருத்தமான பொருள் மற்றும் சேவையை உருவாக்க வேண்டும்.

2. உலகளவில் பிரபலமான பொருள் 'உள்நாட்டு’ பொருளைவிட உசத்தி என்கிற முரட்டுப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். 3. இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தாலும் நுகர்வோர்களின் விருப்பு, வெறுப்புகள் ஊருக்கு ஊர் மாறுபட்டிருக்கிறது என்பதை நினைவில்கொண்டு அதற்கேற்றாற்போலத் தங்களது யுக்தியை வகுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரின் விருப்பு, வெறுப்பு ஒரேமாதிரியாக இருக்கும் என்று பொருட்களையும், சேவைகளையும் அறிமுகப்படுத்தினால் நுகர்வோர்களிடம் அவ்வளவாக வரவேற்பிருக்காது. காரணம், மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்களின் வருமானம் பலநிலைகளைக் கொண்டதால் அவர்களுக்குப் பிடித்தது / பிடிக்காததில் வித்தியாசம் இருக்கும் என்கிறார்.

பிராந்தியவாரியான நுகர்வோர்களைக் கவரும் பொருட்டுப் பல ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய மொழிகளில் 'டப்’ செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இது 'குளோக்கலைசேஷன் (Glocalization)’ என்று மார்க்கெட்டிங் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு சொற்றொடர் ஆகும். சிறிய மற்றும் பிராந்திய அளவிலான நிறுவனங்கள் நுகர்வோர்களின் தேவையறிந்து அவர்களின் விருப்பத்துகேற்ப நூதனமான பொருட்களைக் குறைந்த விலையில் தயாரித்து விற்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்றும் சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

அப்படி வெற்றி கண்ட சில பொருட்களின் பட்டியலை தருகிறார் ஆசிரியர். இன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், சினிமா மோகம்கொண்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்காகத் தொலைக்காட்சியுடன் இணைந்த விசிடி பிளேயர், குண்டும், குழியுமான சாலைகளில் காரில் செல்லும்போது முதுகுக்குப் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்ட ஸீட், ஆண்டுக்கு 21 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் பிறக்கிறார்கள். இவர்களுக்கென்று குறைந்த விலையில், மக்கிப் போகக்கூடிய டயப்பர்கள், 'ஹீட் - ஈட்’ சப்பாத்திகள், குறைந்த விலையில் கசிவை அடைக்க 'வாட்டர் புரூஃப்’ ஸ்பிரே, குறைந்த மின்சாரச் செலவில் இயங்கும் ஏர்கண்டிஷனர், பேட்டரியால் இயங்கும் மிக்ஸி (இது தமிழக இல்லத்தரசிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!), விலை குறைந்த குளிர்சாதனப் பெட்டி... என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

நாணயம் லைப்ரரி :இந்தியாவுக்கேற்ப பொருளை மாற்று!

இந்தப் புத்தகத்தில் ஏராளமான புள்ளிவிவரங்கள் தரப்பட்டிருக்கிறது. அது எல்லோராலும் சரியாக படித்துப் புரிந்துகொள்ள முடியுமா என்கிற ஒரு சந்தேகத்தைத் தவிர, மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பதில் சந்தேகமே இல்லை.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism