Published:Updated:

நாணயம் லைப்ரரி : வெற்றிகரமான நிர்வாகியாக உயர 10 படிகள் !

நாணயம் லைப்ரரி : வெற்றிகரமான நிர்வாகியாக உயர 10 படிகள் !

நாணயம் லைப்ரரி : வெற்றிகரமான நிர்வாகியாக உயர 10 படிகள் !

நாணயம் லைப்ரரி : வெற்றிகரமான நிர்வாகியாக உயர 10 படிகள் !

Published:Updated:

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் 'வெற்றிகரமான நிர்வாகியாக உயர 10 படிகள்’ என்னும் (10 ஸ்டெப்ஸ் டு பி எ சக்சஸ்ஃபுல் மேனேஜர்) லிசா ஹனேபெர்க் எழுதிய புத்தகத்தைத்தான்.

ஒரு நிறுவனத்தின் வெற்றி எதனால் வருகிறது என்ற கேள்விக்குச் சரியான பதில், திறமையான நிர்வாகி களால்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. கஷ்டப்பட்டும் நீண்ட நேரம் உழைப்பதும்தான் ஒரு திறமையான நிர்வாகிக்கு அழகு என்று நினைப்பது தவறு'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியான ஒரு கருத்தை சொல்லி நம்மை வியக்க வைக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் லிசா.

'மேலாண்மை என்பது சிறந்த செயல்பாடு மற்றும் வேலைக்காகாத செயல்பாடு என்ற இரண்டுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை உள்ளடக்கியதுதானே! ஒரு நிறுவனத்தில் சிறப்பான செயல்பாடுகளைச் செய்யும் மேனேஜர்கள் கொண்டாடப் படுவார்கள். வேலைக்காகாத செயல்பாடுகளைக் கொண்ட மேனேஜர்கள் கழட்டிவிடப் படுவார்கள் என்பது நிதர்சனமான எல்லாருக்கும் தெரிந்த உண்மை.  ஆனாலும், சில மேனேஜர்கள் என்னதான் முயன்றாலும் தங்களுடைய முழுத்திறமைக்கு ஏற்றாற்போல் உபயோகமான செயல்பாடுகளைத் தரமுடிவதில்லையே, எதனால்’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாணயம் லைப்ரரி : வெற்றிகரமான நிர்வாகியாக உயர 10 படிகள் !

இந்தத் துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கு மேனேஜர்கள் நான்கு முக்கியக் காரணிகளாலேயே தள்ளப்படு கிறார்கள். முதலாவதாக, மேனேஜர்கள் பலசமயம் சூழ்நிலைக் கைதிகளாகச் செயல்படுவது. இரண்டாவதாக, எப்போது மேலாண்மை/நிர்வாகம் செய்யவேண்டும், எப்போது கட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் செயல்படுவது. மூன்றாவதாக, மேனேஜரின் பணி நிர்வாகம் செய்வது என்று தெரியாமல் பராமரிப்புச் செய்வது என்று நினைத்து செயல்படுவது? நான்காவதாக, தங்களுடைய மேனேஜ்மென்ட் முறைகளைப் புதுப்புது சூழ்நிலை களுக்குத் தேவையான அளவுக்குச் சிறுசிறு மாறுதல்களைக்கூடச் செய்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியான செயல்பாட்டு ஸ்டைலை கொண்டிருப்பது.

'மேனேஜர்கள் பல அற்புதமான காரியங்களைச் செய்யவேண்டிய கடமை உள்ளவர்கள். கையில் இருக்கும் நபர்களை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்ட வேண்டிய சூழலில் இருப்பவர்கள். என்னைச் சுற்றி கெட்ட பல செயல்கள் மற்றும் ஓயாத பாலிடிக்ஸ் எந்த நேரமும் நிறைந்துள்ளதே. இத்தனை கேடுகளை வைத்துக்கொண்டு எப்படி அற்புதங்களை நிகழ்த்துவது என்று கேட்கிறீர்களா? அதற்காகத்தானே உங்களை மேனேஜராக வைத்துள்ளோம்’ என்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகம் பத்து வழிகளைச் சொல்லித்தருவதன் மூலம் உங்களைச் சிறந்த மேனேஜராக மாற்ற முயற்சிக்கிறது.  

நாணயம் லைப்ரரி : வெற்றிகரமான நிர்வாகியாக உயர 10 படிகள் !

முதலாவதாக, எல்லா மேனேஜ்மென்ட் வேலையும் ஒரேமாதிரியானதல்ல. எனவே, உங்களுடைய வேலையை ஆராய்ந்து, அறிந்து, கேட்டுத் தெரிந்து, கலந்துபேசி இடர்களைக் களைந்தபின்னரே வேலையில் முழுஈடுபாட்டுடன் இறங்க வேண்டும்.

இரண்டாவதாக, உங்களிடம் இருந்து நிர்வாகம் எதனை எதிர்பார்க்கிறது என்று தெளிவாகத் தெரிந்துகொண்டபின்னர் செயலாற்ற ஆரம்பியுங்கள். அடுத்த மாதம், அடுத்த ஆறு மாதத்தில், அடுத்த வருடத்தில், அதற்குப் பின்னால் எந்தவிதமான செயலாற்றலை, ரிசல்ட்களை உங்களிடமிருந்து நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

மூன்றாவதாக, உங்கள் நிறுவனத்தில் உங்களுடைய பிசினஸ் என்ன என்பதைத் தெளிவாக்கிக்கொண்டு செயல்படுங்கள். இதனைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்தால் உங்களுடைய நேரமும் சக்தியும் சரியான செயல்களுக்காகச் செலவிடப்படும்.

நான்காவதாக, ஒரு நல்லதொரு குழுவை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்தக் குழுவை உருவாக்கும்போது ஒவ்வொரு பணியாளரின் பலத்தையும், நிறுவனத்துக்கு அவர் மனதார எதைச் செய்ய நினைக்கிறார் என்று புரிந்துகொண்ட பின்னரே குழுவில் அவரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாவதாக, பணியாளர்களைச் சேர்க்கும்போது மிகவும் புத்திசாலித்தனமான தேர்ந்தெடுக்கும் டெக்னிக்குகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனென்றால், வேலைக்குச் சேர்க்கும் ஒவ்வொரு பணியாளரும் உங்களுடைய தலையெழுத்து மாற்றியெழுதப்படக் காரணமாகிவிடலாம்.

ஆறாவதாக, சிறப்பான நிர்வாகி மற்றும் செயல்பாடு எது என்பதற்கு உதாரணப் புருஷனாக நீங்கள் செயலாற்ற வேண்டும். நீங்கள் சொல்வதும் செய்வதும் எந்த அளவுக்குச் சிறப்பு மிகுந்தது என்பதனைப் பொறுத்தே உங்கள் குழு சொல்வதும் செய்வதும் இருக்கும்.

ஏழாவதாக, வேலையைத் திட்டமிடுங்கள். அதேசமயம் அந்தத் திட்டத்தைச் செயலாக்கும்போது தேவைப்பட்டால் எளிதில் வளைந்து கொடுக்கும் வண்ணம் செயல்படுங்கள்.

எட்டாவதாக, தடைகளை உடைத்தெறியுங்கள். உங்களுடைய குழு மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை பார்க்கும்போது மிகச் சாதாரணமாக நிறையத் தடைகளை எதிர்கொள்வார்கள். அந்தத் தடைகளை உடைப்பதற்கான அதிகாரமும் / புத்திக்கூர்மையும் அவர்களிடம் இல்லாதுபோகலாம். அதனால், ஒரு மேனேஜராக நீங்கள்தான் முன்னின்று இந்தத் தடைகளை உடைத்தெரிய வேண்டும்.

ஒன்பதாவதாக, மாறுதல்களை எந்தத் தொழிலிலும் தவிர்க்க முடியாது. உங்களுடைய துறை, மாறுதல்களைத் தவிர்க்கவே இயல்பாக முயற்சி செய்யும். அந்த நிலையை மாற்றி மாறுதல்கள் நல்லது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படும் அளவுக்கு மாறுதல்களின் அருமைபெருமைகளையும், நாமே முன்னின்று மாறுதல்களைச் செய்வதன் அவசியத்தையும் உங்கள் குழுவுக்கு உணர்த்துங்கள்.

பத்தாவதாக, எந்தவிதமான பண்புகளை நீங்கள் உங்கள் துறையில் நிலைநிறுத்திச் செல்ல விரும்புகிறீர்கள் என்பதனைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் அஸ்திவாரங்களை நீங்கள் உங்கள் செயல்பாட்டில் போட்டுக்கொண்டே வாருங்கள்.  

''இந்தப் பத்து வழிகளையும் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும், உங்கள் பிசினஸின் எல்லைகள் மாற்றப்படும் போதும் மறுபரிசீலனை செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் உங்களுடைய கடின உழைப்பு உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்குச் சிறந்த பலனையும், உங்களுக்கு நீங்கள் பார்க்கும் வேலை குறித்து நல்ல திருப்தியையும் கொடுக்கும்'' என்று உறுதி கூறுகிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு வழியைப் பற்றியும் பல உதாரணங்களைச் சொல்லியும் பல தவறுகளையும், நம்முடைய தவறான யூகங்களைப் பற்றியும் விரிவாக அலசியுள்ளார் ஆசிரியர்.

முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு மேனேஜரும் புரிந்து படித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய கருத்துக்களைக்கொண்ட புத்தகம் இது.

- நாணயம் டீம்
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism