Published:Updated:

நாணயம் லைப்ரரி : உலகின் முதல் கம்பெனி!

நாணயம் லைப்ரரி : உலகின் முதல் கம்பெனி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய வணிகம் பற்றி பெங்குவின் நிறுவனம் வெளியிட்ட மூன்று புத்தகங்களில் ஒன்றுதான், 'தி ஈஸ்ட் இண்டியா கம்பெனி: தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் பவர்ஃபுல் கார்ப்பரேஷன்’ (The East India Company: The World’s Most Powerful Corporation). இந்தப் புத்தகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறையைச்  சேர்ந்த தீர்த்தங்கர் ராய் புதிய கண்ணோட்டத்துடன் எழுத, பிரபல எழுத்தாளர் குருசரண் தாஸ் முன்னுரையுடன் வெளிவந்திருக்கிறது.

200 வருடங்களுக்கும் மேலாக பிரிட்டன் மற்றும் ஆசிய நாடுகளில் செயல்பட்டுவந்த சக்தி வாய்ந்த, மிகப் பெரிய நிறுவனம் கிழக்கிந்திய கம்பெனி (சுருக்கமாக, கம்பெனி). ஆசியாவில் கிடைக்கும் பொருட்களான பருத்தி, பட்டு, தேயிலை, நறுமண மசாலா பொருட்கள், அபினி போன்றவை களை பிரிட்டனைச் சேர்ந்த நுகர்வோர் களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதற்காக இந்திய மண்ணில் கால் பதித்தது இந்த கம்பெனி. பிறகு எப்படி இந்திய வணிகத்தை மாற்றியது, வியாபாரம் செய்யவந்த இந்த கம்பெனி எப்படி இந்தியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.

நாணயம் லைப்ரரி : உலகின் முதல் கம்பெனி!

நவீன நிறுவனங்களை கிழக்கிந்திய கம்பெனியின் குழந்தைகள் என்று சொன்னால், அது மிகையில்லை. கம்பெனியின் வெற்றி, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன. உதாரணமாக, ரிஸ்க்கை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது, எப்படி முதலீட்டைத் திரட்டுவது, வாடிக்கையாளர் களிடமும், விற்பனையாளர்களிடமும் நம்பிக்கையை எப்படி உருவாக்குவது, தொழிலாளர்களை ஊக்குவிப்பது எப்படி, பங்குதாரர்கள் மகிழ்ச்சியடைய என்னென்ன செய்யவேண்டும் மற்றும் சமூகத்துடன் அனுசரணையாக எப்படி நடந்துகொள்வது போன்ற பல விஷயங் களை வரலாற்று, பொருளாதாரரீதியில் ஆதாரங்களுடனும், உதாரணங் களுடனும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

16-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட சார்ட்டர்டு நிறுவனத்தில் வணிகர்கள், மாலுமிகள்,  தீரச்செயல்களில் நாட்டமுள்ளவர்கள் (Adventurers) மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களின் நோக்கம்,  பொருட்களை வாங்கி விற்பதுதான். இவர்கள் அனைவரின் உதவியும் ஒரு கடற்பயணத்துக்குத் தேவைப் பட்டது. சார்ட்டர்டு நிறுவனம் கடற் பயணம் மேற்கொள்ளத் தேவையான பொருளாதார ரிஸ்க்கை எடுத்துக் கொண்டது. ஆனால், கம்பெனி மூன்று பெரிய பிரச்னைகளை எதிர்கொண்டது.

நாணயம் லைப்ரரி : உலகின் முதல் கம்பெனி!

1. முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை யாரும் எடுக்கத் தயாராக இல்லை. கம்பெனி பங்குதாரர்கள் யாரும் முழுமையாக முதலீட்டுக்கான பணத்தைத் தரவில்லை. 2. விலை உயர்ந்த பொருட்களுக்கான டிமாண்டில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருந்தன. நறுமண மசாலா பொருட்கள் அதிக விலை என்பதால் யாரும் அவ்வளவாக வாங்கவில்லை.  3. தனிப்பட்ட கடற்பயணம். கம்பெனி பங்குதாரர்கள், தங்களுக்குள்ளே ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்தனர். இதனால் கம்பெனியின் பிடி தளர்ந்ததுடன், வருமானமும் குறைய ஆரம்பித்தது.

இந்தப் பிரச்னைகளுக்கு முடிவுகட்டும் பொருட்டு 1612-ம் ஆண்டு கம்பெனி தன்னை ஒரு 'கூட்டுப் பங்கு நிறுவனமாக’ பிரகடனப்படுத்திக்கொண்டது. இதன்மூலம் 4,29,000 பவுண்ட்கள் மூலதனமாகப் பெறப்பட்டது. கொல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை துறைமுகங்களை தங்களின் வணிகத்துக்கு கம்பெனி பயன் படுத்திக்கொண்டது. போர்த்துக்கீசியர் களினால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு இந்த கம்பெனி, இந்தியாவில் தங்களது ஏஜென்ட்களை நியமிக்க ஆரம்பித்தது. அதோடு முகலாயப் பேரரசுகளுக்கு 'தரவேண்டியதை’த் தந்து ('புல்டாக்’ இனநாய்கள் உட்பட) தங்களது நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. மன்னர் ஜஹாங்கீர் அனுமதியின்பேரில் சூரத்தில் தங்களுக் கென்று ஒரு தொழிற்சாலையை கட்டிக்கொண்டனர்.

போர்த்துகீசிய நாட்டு இளவரசியை திருமணம் செய்துகொண்டதற்கு சீதனமாக அவரது கட்டுப்பாட்டில் இருந்த பம்பாய் இரண்டாம் சார்லஸுக்குக் தரப்பட்டது. அதற்கு ஏழு வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் சார்லஸ் அதை கம்பெனிக்குக் கொடுத்தார். இந்த நேரத்தில் முகலாயர்களுக்கும், சத்ரபதி சிவாஜி தலைமையிலான மராத்தியப் படைக்கும் கடும் சண்டை நடைபெற்றது. சூரத் முகலாயர்களின் வசம் இருந்துவந்தது. சிறிது சிறிதாக கம்பெனி தனது செயல்பாடுகளை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றிக் கொண்டது.

இந்தியாவில் பணக்கஷ்டம் அதிகம் இருந்தது. இதனால் வங்கியாளர்கள் (பேங்கர்ஸ்) செல்வத்தில் கொழித்தனர். இந்தக் காலகட்டத்தில்தான் டிராஃப்ட் அல்லது உண்டியல் (Hundi) போன்றவை வழக்கத்துக்கு வந்தது. பேங்கர்களுக்கு அடுத்து முக்கியமாக கருதப்பட்டவர்கள் வணிகர்கள், ஏஜென்ட், அதிகாரிகள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் சிறு வியாபாரிகள். இந்தச் சமயத்தில்தான் 'கான்ட்ராக்ட்’ மற்றும் ஒப்பந்தமுறைகள் வழக்கத்துக்கு வந்தன.

நாணயம் லைப்ரரி : உலகின் முதல் கம்பெனி!

1707-ம் ஆண்டு ஒளரங்கசீப்பின் மரணத்துடன், 180 ஆண்டு கால முகலாய சாம்ராஜ்ஜியம் சிறிது சிறிதாக தனது ஆதிக்கத்தை இழந்து வந்தது. இதை கம்பெனியினர் நன்கு பயன்படுத்திக்கொண்டு இங்கிலாந்து அரசியின் அதிகாரிகளை நியமிக்க ஆரம்பித்தனர். இதன்பிறகு 1833-ம் ஆண்டிலிருந்து கம்பெனி, வியாபாரம் செய்யும் அமைப்பாக இல்லாமல் இங்கிலாந்து மன்னருடன் சேர்ந்து இந்தியாவை நிர்வகிக்கும் நிர்வாகியாக மாறியது. 1780-லிருந்து 1850 வரை மிகவும் சக்தி வாய்ந்த ராணுவத்தையும், நீதிமன்றங்களையும் அமைத்து தங்களது கவனத்தை நிர்வாகத்தின் பக்கம் திருப்பியது.

இந்திய நிறுவனங்கள் தங்களது கணக்குவழக்குகளை முறைப்பட வைத்துக்கொண்டது இல்லை, அப்படியே இருந்தாலும் அவையனைத்தையும் தங்கள் குடும்ப உறுப்பினர் களிடம் மட்டும் பகிர்ந்துகொண்டன. ஆனால், கம்பெனி 'கூட்டுப் பங்கு நிறுவனம்’-ஆனபின் முறையாக தங்களது கணக்குகளை வைத்துக்கொள்ள ஆரம்பித்தன. தினசரி தொழிற்சாலையில் நடக்கும் நிகழ்வுகளை 'கன்சல்டேஷன் புக்’-ல் குறித்து வைத்தனர். இதன்மூலம் கப்பல் வருகை, ஏஜன்ட்களின் வருகை, அவர்களுடனான பேச்சுவார்த்தை, பேங்கர்களுடனான பேச்சுவார்த்தை மற்றும் 'ரேட் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்’ ஆகியவற்றை எந்த நேரத்திலும் தெரிந்துகொள்ள முடிந்தது.  

இதுமாதிரியான பல விஷயங்களை இந்தப் புத்தகம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. முன்னுரையுடன் ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புத்தகம், ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் பன்முகங்களை நமக்கு காட்டுகிறது!

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு