Published:Updated:

நாணயம் லைப்ரரி : பணியாளர் To தொழில் அதிபர்!

நாணயம் லைப்ரரி : பணியாளர் To தொழில் அதிபர்!

வேலைக்குப் போகும் ஒருவர் தொழிலதிபராக மாறும்போது எதிர்கொள்ளும் விஷயங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும் புத்தகத்தைத் தான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம். 'வேலையில் இருக்கும் நபர் தொழிலதிபராக மாறுவது என்பது ஒரு மறுபிறவியைப் போன்றது. அந்த மாற்றம் நிகழும்வேளையில் நடக்கும் ரசவாதம்தான் என்னை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியது’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சூசன் முல்வெஹில்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான சூசன், சிறுதொழில் வளர்ச்சிக்கான ஒரு மையத்தில் புதிய தொழில்முனை வோருக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜிகளைச் சொல்லித்தரும் ஒரு கவுன்சிலராக நியமிக்கப்பட்டாராம். ஆனால், பெரும்பான்மையான நேரம் அவர் அந்த வேலையைச் செய்யாமல், புதிய தொழில்முனைவோர்கள் தங்கள் மனஉறுதியை வளர்த்துக்கொள்வது எப்படி என்பதைச் சொல்லித் தருவதிலேயே செலவழித்தாராம். ஒவ்வொருநாளும் பல்வேறு தொழில்முனைவோர்கள் அவர்களுடைய பணம் மற்றும் மனரீதியான பலவீனங்களையும், அதனால் ஏற்படும் அவர்களுடைய பயத்தையும் சொல்லிப் புலம்ப, அந்த இரண்டையும் போக்குவதற்கான கவுன்சிலிங்கையே பெரும்பாலும் செய்யவேண்டியிருந்தது என்கிறார். அந்த அனுபவத்தை அடிப்படையாகவைத்து, வேலை பார்க்கும் ஒருநபர் தொழில்முனைவோராக மாறும்போது எதிர்கொள்ளும் ஏழு சவால்களையும், அந்தச் சவால்களில் எப்படி வெற்றி காண்பது என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் சூசன்.

நாணயம் லைப்ரரி : பணியாளர் To தொழில் அதிபர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சவால் 1: திறனும் துணிச்சலும் தொழில் செய்ய முனைவோருக்கு மிகவும் அவசியம். திறனையும் துணிச்சலையும் வரவேற்கும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். துணிச்சலுடன் வாழப்பழகுங்கள். துணிச்சலுடன் நன்கு யோசித்து ஒருதொழிலை தேர்ந்தெடுங்கள். ஒரு தொழில் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் ஆரம்பத்திலேயே விடை தேட முயலாதீர்கள். அது செய்யச் செய்யத்தான் தெரியும்.

தொழில் ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கிறீர்களா? தொடங்கிவிடுங்கள். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய நினைக்கிறீர்களா? விரிவாக்கம் செய்ய ஆரம்பித்துவிடுங்கள். சரியான நாள், நேரம் என்றெல்லாம் ஒன்றுமே இந்த உலகத்தில் இல்லை. காலம் கருதி செய்வது என்பது புதிதாய்த் தொழில்முனைவோருக்கு கொஞ்சம் பொருத்தமில்லாதது. ஏனென்றால், காலம் கருத ஆரம்பித்தால் எல்லாவற்றையும் நாம் சுலபமாக வாழ்நாள் முழுவதற்குமே தள்ளிப்போட்டுவிடுவோம்.

நாணயம் லைப்ரரி : பணியாளர் To தொழில் அதிபர்!

உங்களுக்குள் தொழிலதிபர் ஒருவர் ஒளிந்துகொண்டிருக்கிறாரா, சிறுவயதிலிருந்தே ஒரு பிசினஸ்மேன் போன்ற அணுகுமுறை உங்களிடம் இருந்துவந்துள்ளதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அந்த எண்ணம் எனும் தீயை அணையாமல் அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டேயிருங்கள். துணிச்சலை வளர்த்துக்கொள்ளுங்கள். அழையா விருந்தாளியாக எப்படி ஒருவரிடம் சென்று வியாபாரம் பற்றிப் பேசுவது என்று நினைக்காதீர் கள். அடுத்தவேளை உணவு வேண்டுமென்றால், நான் போய் விற்பனை செய்தேயாகவேண்டும் என்ற சூழல் நிலவுவதாக நினைத்துக்கொண்டே செயல்படவேண்டும்.

சவால்  2: நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படும் விஷயத்தையே தொழிலாக்குங்கள். ஈடுபாட்டுடன்கூடிய விஷயத்தைச் செய்யும்போது சந்தோஷத்தை நாம் அனுபவிக்கிறோம். அந்த சந்தோஷ அனுபவிப்பே நமக்கு வெற்றியை சுலபமாகக் கொண்டுவந்து தருகிறது. இந்த ஈடுபாட்டுடன்கூடிய விஷயத்தில் மட்டுமே நமக்கு நாமே உண்மையாக இருப்போம். நம்மால் எதுமுடியும், எது முடியாது என்பதில் தெளிவாக இருப்போம். உண்மையான நம்முடைய திறமை குறித்த எடைபோடுதலே நம்மைத் தொழில்ரீதியான வெற்றியை நோக்கி எடுத்துச்செல்லும்.

சவால் 3:  நம்முடைய மூளை, உடல் மற்றும் மனம் மூன்றையும் தொழில்முனைவோராகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில்முனைவு என்பது ஒலிம்பிக்கில் ஓடுவதைப்போன்றது. அதற்கான பயிற்சியானது மனம், உடல் மற்றும் மூளை என்ற மூன்றுக்குமே தேவை. இந்த ஓட்டப்பந்தயம் என்பது முதலில் நம்மையே நாம் ஓடி ஜெயிப்பதில் ஆரம்பிக்கிறது. ஏனென்றால், வேலையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் நாம் அந்தப் பாதுகாப்பு நிலையைவிட்டு விலகி வெளியேறும்போது முதலில் நம்முடைய பழைய மனநிலையைத் தாண்டி ஓடவேண்டும். நம்முடைய நம்பிக்கைகளைக் கண்டுபிடித்து, அதைத் தொழில்முனைவுக்கு ஏற்றாற்போல் மாற்றி எழுதவேண்டும். ஏனென்றால், நம்முடைய நம்பிக்கைதான் நம்முடைய பயணத்தை முழுமையாக ஆதரவு செய்யப்போகிறது என்கிறார்.

சவால் 4:  தொழில்முனைவு என்பதே தடைகள் பல கொண்ட பாதைதான். சில தடைகள் ஆரம்பிப்பதற்கு முன்னால்; பல தடைகள் ஆரம்பித்த பின்னால். தடைகளைத் தகர்த்தால்தான் நாம் யாரென்று நமக்கே புரிய ஆரம்பிக்கும்.

சவால் 5: எத்தனைமுறை கீழே விழுந்தாலும் அதிலிருந்து மீண்டு எழுந்து வருவதில்தான் வெற்றியே இருக்கிறது. அதிலும், பயத்தை முழுவதுமாக உணர்ந்துகொள்வதிலேயே நம் வெற்றி இருக்கிறது. பயத்தை உணர்வதால் மட்டுமே நாம் மேலும் பலம்பெற முடியும்.

நாணயம் லைப்ரரி : பணியாளர் To தொழில் அதிபர்!

சவால் 6: தொழில்முனைவோராக முயலும் கணத்திலேயே சௌகரிய வாழ்கையைவிட்டு வெளியேவரத் தயாராகிக்கொள்ளவேண்டும். வேலையிலிருந்து தொழில் முனைவோராகும்போது பாதுகாப்பை யும் சந்தோஷமற்ற நிலையையும் விற்று, உறுதியில்லாத அதேநேரம் உயிர்த்துடிப்புடைய வாழ்க்கையை வாங்குகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள்.

சவால் 7: பணம் வருமுன் உங்களை நீங்களே நம்பிப் பழகுங்கள். உங்களால் முடியும் என்பதை நீங்களே நம்புங்கள். வெற்றியும் பணமும் எப்படி ஒன்றையொன்று கட்டிப்பிடித்துப் பிணைந்திருக்கிறது என்பதனை உணர்ந்துகொண்டு செயல்படுங்கள். பணம் சம்பாதிக்கும்போதெல்லாம் நான் பெரிய ஆள் என்று நினைப்பீர்கள். தோல்வியுற்றுப் பணத்தை இழக்கும்போதெல்லாம் பயந்து நடுங்குவீர்கள். வெற்றி என்பது உங்களுடைய பிராசஸில் நீங்கள் வைக்கும் நம்பிக்கையில் இருக்கிறது. உங்கள் பிராசஸ் சரி என்று நீங்கள் அபரிமிதமான நம்பிக்கைகொள்ள ஆரம்பிக்கும் வேளையிலேயே பணம் உங்களை நோக்கிவர ஆரம்பித்துவிடும். நீங்களே நம்பிக்கைகொள்ளாத அளவுக்கு உங்கள் பிராசஸ்கள் இருந்தால் பணம் வரவே செய்யாது என்கிறார் சூசன்.

நம்மில் தொழிலதிபராக விரும்பாதவர்கள் மிகச் சிலரே. சூசனின் இந்தப் புத்தகத்தை என்றாவது ஒருநாள் நான் தொழிலதிபராவேன் என்று மனத்தின் ஓரத்தில் ஒரு சிறு ஆசையை வைத்திருப்பவர்கள்கூட வாங்கிவைத்து அவ்வப்போது படித்துப் பயன்பெறலாம்.

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)