ஓ.பி. முன்ஜால் - சைக்கிள் உலகின் 'ஹீரோ’. இன்றைக்கு இருசக்கர வாகன உலகில் கொடிகட்டிப்பறக்கும் ஹீரோ மோட்டார்ஸ் என்கிற நிறுவனம் பிறப்பதற்கு அடிப்படையாக இருந்தவர் இந்த ஓ.பி.முன்ஜால்தான். 1956-ல் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் சைக்கிள் தயாரிப்பில் இறங்கியபோது நாளன்றுக்கு 25 சைக்கிள்கள் மட்டுமே தயாரித்து விற்றது ஹீரோ நிறுவனம். ஆனால், இன்றைக்கு நாளன்றுக்கு 18,500 சைக்கிள்களை தயாரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது (வருடத்துக்கு ஏறக்குறைய 60 லட்சம் சைக்கிள்கள்!). குடும்பத்தினர் நிர்வகிக்கும் நிறுவனங்களும் சாதனை படைக்கலாம் என்பதற்கு முன்ஜால் குடும்பத்தினரின் ஹீரோ நிறுவனம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
ஓ.பி.முன்ஜாலின் வாழ்க்கைப் பயணம் பற்றி ப்ரியா குமார் எழுதி, பிரபல வென்ச்சர் கேப்பிட்டலிஸ்டான ராம் சரணின் முன்னுரையுடன் சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் 'தி இன்ஸ்பைரிங் ஜர்னி ஆஃப் எ ஹீரோ’ (The Inspiring Journey of a Hero -Learning from the life of O.P. Munjal). .
1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்த கமாலியா என்கிற ஊரில் பிறந்தவர் ஓம் பிரகாஷ். இவருடைய அப்பா, தானியங்கள் விற்கும் மொத்தவிலைக் கடை நடத்திவந்தார். இவருடைய சகோதரர்கள் மொத்தம் ஆறுபேர், ஒரு சகோதரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1940-களில் இவர்கள் கமாலியாவிலிருந்து அமிர்தசரஸ் நகருக்கு குடிபெயர்ந்தார்கள். இவர் பத்தாம் வகுப்புக்குமேல் படிக்கவில்லை என்றாலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவருடன் பேசும்போது தனது குழந்தைகளை ஆங்கிலத்தில் பேசும்படி கூறுவார். இதன்மூலம் தானும் நன்றாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தார்.
இவர் பத்தாவது முடித்தவுடன் இவருடைய சகோதரர் வியாபாரத்தில் சேர்ந்துகொள்ளுமாறு கூறியதும் அவருடைய பேச்சைத் தட்டமுடியாமல் வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தொடர்ந்து படிக்க முடியவில்லையே என அவர் வருத்தப்படவில்லை. 'கல்வி கற்பதை யாராலும் தடுக்க முடியாது. வாழ்க்கை ஒரு மிகப் பெரிய ஆசான், உலகம் ஒரு பிரமாண்டமான பள்ளிக்கூடம்’ என்றுதான் நினைத்தார். ஏதாவது தவறு செய்ய நேர்ந்தால் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்; எனக்கு ஏதேனும் புரியாவிட்டால் அதுகுறித்து நான் கற்றுக்கொள்ள முடியும், நெருக்கடியான சூழ்நிலையில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எனவே, பள்ளிக்கூடம் என்கிற எல்லைக்குள் மட்டும்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதே அவரது எண்ணவோட்டமாக இருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது அமிர்தசரஸ் நகரம் அகதிகளின் கூடாரமாக மாறியிருந்தது. பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் இந்தியாவை நோக்கியும், இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் பாகிஸ்தானை நோக்கியும் இடம்பெயர்ந்துகொண்டு இருந்தனர். அமிர்தசரஸில் ஓம் பிரகாஷ் சிறிய அளவில் சைக்கிள்களைத் தயாரித்து விற்க, அதற்கான உதிரிபாகங்களை சப்ளை செய்தவர் கரம் தீன். இவர் அமிர்தசரஸைவிட்டுச் செல்ல முடிவெடுக்க, ஓம் பிரகாஷிடம் தனது நிறுவனத்தின் பெயரான 'ஹீரோ’ என்கிற பெயரை பயன்படுத்திக்கொள்ளும்படி கூறினார்.

1956-ம் ஆண்டு சைக்கிள் தயாரிக்கும் நிறுவனத்தை முன்ஜால் குடும்பத்தினர் லூதியானாவில் தொடங்கினர். அன்றைக்கு சிறிய நிறுவனமாகத் தொடங்கிய ஹீரோ, இன்றைக்கு இந்திய சைக்கிள் மார்க்கெட்டில் 48 சதவிதத்தைப் பிடித்திருக்கிறது. இப்போது ஓ.பி.முன்ஜாலுக்கு 87 வயதாகிவிட்டது. ஹீரோ நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஓம் பிரகாஷ். அவர் கடைப்பிடித்த பல விஷயங்களை இந்தப் புத்தகம் முழுக்க விளக்கமாக சொல்லியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர். அவற்றிலிருந்து சில:
உங்கள் வேலை உங்களை வடிவமைக்கும். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் செய்யக்கூடிய வேலை சொல்லும். பொறுப்பு என்பது தங்களது கதவைத் தட்டும்போது அதை வரவேற்று வெற்றிகரமாகச் செய்து முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தால் நீங்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள்.
தரம், விலை, பண்புகள் இதில் எதிலும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். உங்கள் பொருள் தரத்தில் சிறந்தது என்கிற நம்பிக்கை இருந்தால் எந்தக் காரணம் கொண்டும் விலையில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
விற்பனையாளருக்குத் தேவை தன்னம்பிக்கையும், விற்கும் பொருள் மீதான கர்வமும்தான். வாடிக்கையாளர் உங்கள் கடைக்கு வரும்போது, நீங்கள் அவர் மீது கவனம் செலுத்துகிறீர்களா, தேவையைப் புரிந்துகொள்கிறீர்களா, மரியாதை கொடுக்கிறீர்களா என்பதையும் எதிர்பார்ப்பார் என்ற புரிதல் அவசியம்..
வெற்றி பெறும்வரை முயற்சியைக் கைவிடாதீர்கள். கதவு திறக்கும் வரை தட்டிக்கொண்டிருங்கள்.
உங்களது தொழிலாளர்கள், உடன் பணிபுரிவோர், டீலர்கள் மற்றும் வாடிக்கையாளரை மதிக்கக் கற்றுக்கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு எங்கும் செல்ல மாட்டார்கள்.
தோல்வி என்பது முடிவு அல்ல. அதுதான் வெற்றிக்கான முதல் படிக்கட்டு. நெருக்கடிதான் ஒருவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிக்கும். தொழிலில் தொடர்ந்து இருக்கவும், சிறக்கவும் வளர்ச்சியும், விரிவாக்கமும் அவசியம்.
ஒழுக்கமும், அர்ப்பணிப்பும்தான் வெற்றிக்கான அடிப்படை. உங்களிடம் வேலை செய்பவர்கள்தான் உங்கள் சொத்து. அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவர்களை நம்பி எந்த ரிஸ்க்கும் எடுக்கலாம். உங்கள் வெற்றிக்காக அவர்கள் உழைப்பார்கள். எளிமை உங்களை வெற்றியின் எல்லைக்கு இட்டுச் செல்லும்.
'ஒர்க்லைஃப் பேலன்ஸ்’ பற்றி சொல்லும் ஓம் பிரகாஷ், 'குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் என்பது இரண்டாம்பட்சம்தான். பெற்றோர்களின் கவனமும் அவர்கள் தங்களுடன் செலவிடும் நேரத்தையும்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகையால், வேலையை வீட்டுக்கு எடுத்துச் செல்லாதீர்கள்' என்கிறார். குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் அது வேலையிலும், செய்யும் தொழிலிலும் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும் என்பது அவர் நம்பிக்கை மட்டுமல்லாமல் அப்படியே வாழ்ந்தும்கொண்டிருப்பவர்.
முன்ஜால் தொழில் செய்யும் நேர்த்தியும், அந்த குழுமத்தின் செயல்பாடும், நன்னடத்தையும்தான் ஹோண்டா நிறுவனத்தை அவர்களுடன் மோட்டார் சைக்கிள் உற்பத்திக்கு கூட்டுசேர வைத்தது. பல பெரிய நிறுவனங்கள் அவர்களுடன் கைகோக்க ஆசைப்பட்டும் அவர்கள் ஹீரோ குழுமத்தினருடன் கைகோத்தனர். காரணம், தொழிலில் நேர்மையும், பண்புகளுக்கு அவர்கள் கொடுக்கிற மரியாதையும்தான்.
நூலாசிரியர் இந்தப் புத்தகத்தை இன்னும் கோர்வையாக அமைத்திருந்தால், இந்த நிறுவனம் பற்றி மேலும் சில தகவல்கள் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)