Published:Updated:

நாணயம் லைப்ரரி : ஓய்வுக்குப் பிறகும் இருக்கு வாழ்க்கை..!

நாணயம் லைப்ரரி : ஓய்வுக்குப் பிறகும் இருக்கு வாழ்க்கை..!

இந்தப் புத்தகத்தை எழுதிய ஜெரி செட்லர் மற்றும் ரிக் மைனர்ஸ்  ஆகியோர் கணவன் - மனைவி ஆவர். கேரியர் அட்வைஸ் மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்திவரும் இவர்களுக்குத் திடீரென எதிர்பாராத ஒருவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர், ஃபார்ச்சூன் 100 கம்பெனியில் வேலை பார்க்கும் சீனியர் மேனேஜர், பில். 'நான் ரிட்டையராகப் போகிறேன். ரிட்டையர்மென்ட் என்பதை

வாழ்நாள் முழுக்க உழைத்ததற்கான பரிசு என நினைத்தேன். ஆனால், ரிட்டையர்மென்ட் நெருங்க நெருங்க எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. இதுகுறித்து எனக்கு அட்வைஸ் தேவை’ என்றாராம் பில்.

அவருடன் மனம்விட்டுப் பேசியபோது, 'என் தந்தை ரிட்டையரானபின் கோல்ப்

விளையாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். நான் அவர் மாதிரி இருக்க விரும்பவில்லை. ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும்’ என்றாராம் பில். ஆனால், அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதுதான் அவர் பிரச்னை.

நாணயம் லைப்ரரி :  ஓய்வுக்குப் பிறகும் இருக்கு வாழ்க்கை..!

'என் சௌகரியத்துக்குப்போய் வருகிறமாதிரி வேலை ஏதும் கிடைக்குமா?’ என்று பில் கேட்க, ஆசிரியர்களும் அவருக்காக வேலை தேடி பல பெரிய நிறுவனங்களின் எக்ஸிக்யூட்டிவ்களிடமும் பேச, அவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாய்ப் புரிந்ததாம். 'வேலையில் இருந்து ரிட்டையராகும்போது நீங்கள் எவற்றை அலுவலகத்தில் விட்டுச் செல்கிறீர்கள் என்று பாருங்கள். வேலையில் இல்லாமலேயே அவற்றை எப்படி பெறுவது என்பதைச் சிந்தித்துச் செயலாக்குங்கள். இந்த சிந்தனைதான்  இந்தப் புத்தகத்துக்கான அடிநாதமாக அமைந்தது’ என்கின்றனர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

ஓய்வு பெற்றபின் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ரிட்டையரான, ரிட்டையராகப் போகிறவர்கள் மத்தியில் தொடர்ந்து ஆய்வுகளையும், ஃபோகஸ் குரூப் இன்டர்வியூகளையும் நடத்தியுள்ளனர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். ரிட்டையர்மென்டுக்குப்பின் இருக்கும் லைஃப்ஸ்டைல் குறித்தே இந்த ஆய்வுகள் இருந்துள்ளது.

இந்தஆய்வில் பெரும்பாலானோருக்கு 'ரிட்டையர்மென்ட்’ என்ற வார்த்தையே பிடிக்கவில்லை. எனவே, இந்த வார்த்தையை 'ரீ-வயர்மென்ட்’ என்று மாற்றிக் கொள்வோம் என்கின்றனர் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி :  ஓய்வுக்குப் பிறகும் இருக்கு வாழ்க்கை..!

அது என்ன 'ரீ-வயர்மென்ட்’? 'வேலையில் இருக்கும்போது யாரோ ஒருவரோ/ஒரு நிறுவனமோ நிர்ணயித்த நேரம்/காலம்/சட்டதிட்டம் எனப் பலவிஷயங்களைப் பின்பற்றி நம்முடைய எனர்ஜியை அந்த இடத்தில் செலவிடுகிறோம். அதுவே ரிட்டையரான பின்னர் நாம் தேர்ந்தெடுக்கும் விதத்தில் நமக்கு நாமே வகுக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நம் மனம் விரும்பும் விஷயத்தைச் செய்ய விரும்புவதுதான் ரீ-வயர்மென்ட்’ என்கின்றனர் ஆசிரியர்கள். திருப்திகரமான வாழ்க்கை வாழ மனிதர்கள் ரிட்டையர்மென்டுக்குப் பதில் ரீ-வயர்மென்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

எப்படி 'ரீ-வயர்’ செய்துகொள்வது என்பதை விளக்கமாகச் சொல்லியிருக்கும் ஆசிரியர்கள், ரீ-வயர் செய்துகொள்ளும் பாதையில் ஐந்து படிநிலைகள் இருக்கிறது என்கின்றனர். முதலாவதாக, நம்முடைய எனர்ஜி தேவைப்படும் இடம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிவது. ஏனென்றால், ரிட்டையர்மென்ட் என்பது வேலையில் இருந்து விடுவித்துக்கொள்ளும் நிலை. ரீ-வயர்மென்ட் என்பது நாமாகவே தேர்ந்தெடுத்து சேர்ந்துகொள்ளப்போகும் புதிய நிலை என்கின்றனர் ஆசிரியர்கள். இரண்டாவதாக, நம்மை எது வழிநடத்திச் செல்கிறது? எது ஊக்குவிக்கிறது என்பதைக் கண்டறிவது. மூன்றாவதாக, அந்த வழிநடத்திச் செல்லும் காரணிகளை நம்முடைய புதிய நடவடிக்கைகளுடன் சேர்த்து இது தோதுப்படுமா என்று பார்ப்பது. நான்காவதாக, 'ரீ-வயரிங்’ செய்துகொள்வதன் மூலம் நான் சாதிக்கப்போவது என்ன என்பதைத் தெளிவாய்த் திட்ட மிட்டு நிலைப்படுத்திக்கொள்வது என்கின்றனர். ஐந்தாவதாக, அந்த நடவடிக்கையை எப்படி என திட்டமிடுவது.

'ரிட்டையரானவர்களால் எந்த பயனும் கிடையாது. அவர்களுடைய வேலை ரெஸ்ட் எடுப்பது மட்டும்தான். அவர்களால் புதியவை எவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதையெல்லாம் விட்டொழிக்க வேண்டும்’ என்கின்றனர் ஆசிரியர்கள். இந்தமாதிரியான எண்ணங்கள் வரக் காரணம், மனிதர்கள் தங்களுடைய கேரியரை திட்டமிடுகின்றனரோ, அதேபோல் ரிட்டையர்மென்ட் பற்றித் திட்டமிடுவதில்லை. இந்தத் திட்டமின்மையும், தயாராகாததும்தான் ரிட்டையரானதும் பலரை நட்டாற்றில் இருப்பதைப்போல் நினைக்க வைக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

ரீ-வயரிங்கில் உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் சாந்தப்படுத்தும் செயல்களைச் செய்யலாம். எங்கே போகிறோம், என்ன செய்யப்போகிறோம் என்பதை நமக்கு நாமே முன்னதாகவே தெளிவு படுத்திக்கொள்வதன் மூலம் இந்த நிலையை எட்டமுடியும் என்கின்றார்கள் ஆசிரியர்கள். பணத்துக்காகச் செலவு செய்த எனர்ஜியை ரிட்டையர்மென்டுக்குப்பின் மன நிறைவுக்காகச் செலவிடப்போகிறோம் என்பதை அறிந்துகொண்டு செயல் படுவதுதான் 'ரீ-வயரிங்’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி :  ஓய்வுக்குப் பிறகும் இருக்கு வாழ்க்கை..!

ரீ-வயர் செய்துகொள்வது குறித்த பல்வேறு ஐடியாக்களைத் தந்துள்ள ஆசிரியர்கள், வாழும் உதாரணங்கள் மூலம் இதனை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வில் ஆசிரியர்கள் கண்ட சில சுவாரஸ்யமான விஷயங்களை வரிசைப்படுத்தியுள்ளனர். ரிட்டையரானபின் வரும் பணத்தேவைகளைக் கண்டறிந்து அதற்கான சரியான திட்டங்களைப் போட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வாழ்க்கைமுறை குறித்த திட்டங்கள் எதையும் வகுக்கவில்லையாம்.

ரிட்டையர்மென்ட் திட்டமிடல் என்பது ரிட்டையர்மென்டுக்குப் பின்னால் வரும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒவ்வொரு புது ஆரம்பத்தைக் கண்டு பிடிப்பதாகும். ஒருவருடைய வசதி, உடல் நிலை, இருப்பிடம் போன்றவற்றுக்கு ஏற்றாற்போல் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தவேண்டும். ரிட்டையர்மென்டுக்குப்பின் நாம் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் வேண்டும். அது என்ன என்பதைக் கண்டறிந்து கொள்ளுதலில்தான் வெற்றியே இருக்கிறது. அதேபோல், ரிட்டையர்டானபின் ஒரு சிறுவேலையிலாவது இருப்பது நல்லது. ஏனென்றால், மனித மூளை உபயோகியுங்கள் அல்லது இழந்துவிடுங்கள் (யூஸ் இட் ஆர் லூஸ் இட்) என்ற குணத்தைக் கொண்டது. ரிட்டையர்டானதற்குப்பின் நாம்தான் ரிட்டையர்டாகிவிட்டோமே? நமக்கு எதற்கு டெக்னாலஜி என்று நினைத்துவிடாமல் மாறிவரும் டெக்னாலஜியைப் புரிந்துகொண்டு உபயோகிக்கப் பழகிக்கொள்வதும் மிக மிக அவசியம் என்று சொல்லி முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.

நாம் எல்லோருமே ஒருநாள் ரிட்டையராகப் போகிறவர் கள்தான் என்பதால் நிச்சயமாக  படிக்க வேண்டிய புத்தகம் இது.

நாணயம் டீம்
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

அடுத்த கட்டுரைக்கு