Published:Updated:

நாணயம் லைப்ரரி : முதல் வேலை... விறுவிறு வளர்ச்சி... வெற்றி ரகசியங்கள்!

நாணயம் லைப்ரரி : முதல் வேலை... விறுவிறு வளர்ச்சி... வெற்றி ரகசியங்கள்!

நாணயம் லைப்ரரி : முதல் வேலை... விறுவிறு வளர்ச்சி... வெற்றி ரகசியங்கள்!

நாணயம் லைப்ரரி : முதல் வேலை... விறுவிறு வளர்ச்சி... வெற்றி ரகசியங்கள்!

Published:Updated:

முதல்முதலாக சேர்ந்த வேலை யில், முதல் இரண்டு வருட காலத்தில் அலுவலகத்தில் நல்ல  முன்னேற்றத்தை அடைவது எப்படி என்பதை விரிவாகச் சொல்லும் ஹுஹ் கர்ஸெரஸ் எழுதிய 'ஃப்ரம் நியூ ரெக்ரூட் டு ஹை ஃப்ளையர்’ என்கிற புத்தகத்தைத்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்.

இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் முதல்முதலாக வேலைக்கு போனபோது கை,கால் உதறல் எடுத்த தாம். அவருடன் சேர்ந்த 25 பேரையும் 19-வது மாடியில் ஒரு மீட்டிங் ரூமில் அமரச்சொல்ல, ஒவ்வொருவரும் கல்வித்தகுதி அடிப்படையில் ஒருவரையொருவர் விஞ்சுபவர்களாக இருந்தார்களாம். இத்தனை திறமை இருந்தும் இவர்களில் பலர் அலுவலக வேலைகளில் ஜொலிக்கவில்லை. காரணம், கணக்கில் புலியாக இருந்தவர் எல்லாருடனும் சண்டை போட்டார். நுனிநாக்கு ஆங்கிலம் பேசியவர் அகந்தையோடு நடந்துகொண்டார்.

இந்த மாதிரி பிரச்னை பேர்வழி என்று பெயர் எடுக்காமல், முதல் வேலையில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என்பது குறித்த புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று ஆசிரியர் தேட, அப்படி எந்தவொரு புத்தகமும் ஆசிரியரின் கண்ணில் தென்படவில்லையாம். எனவே, ஆசிரியரே நூற்றுக்கணக்கான எக்ஸிக்யூட்டிவ்களின் கேரியரை ஆய்வுசெய்து தனது கேள்விக்குப் பதிலைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை எழுதியதாகச் சொல்லியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாணயம் லைப்ரரி : முதல் வேலை... விறுவிறு வளர்ச்சி... வெற்றி ரகசியங்கள்!

முதல் வேலையில் முன்னேற்றத் துக்கான ஏணிப்படியில் ஏறுவது எப்படி என்பதைச் சொல்லித் தருவது கட்டாயம் என்கிறார் ஆசிரியர். அவருடைய ஆய்வில் பங்கெடுத்துக்கொண்ட அத்தனை எக்ஸிக்யூட்டிவ்களுமே, என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்கிறார்கள். வெற்றிப்பாதையில் பலரும் பயணிப்பது முக்கியமில்லை. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்வதே முக்கியம். அதற்குத் தேவையான சூட்சுமங்களை நிச்சயமாக யாராவது கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்களாம்.

மேலும், ஆசிரியரின் ஆய்வில் தெரியவந்தது, திறமைக்குறைவால் யாரும் முதல் இரண்டு வருடத்தில் தோல்வியைச் சந்திக்கவில்லை. சிலபல சூத்திரங்களை அறியாததனால்தான் பெரும்பான்மையினர் முதல் இரண்டு வருடத்தில் தோல்வியைச் சந்திக்கிறார் களாம்.

முதல் வேலையில் வெற்றி என்பது மூன்று வகைப்படும் என்கிறார். வேகமான சம்பள வளர்ச்சி மற்றும் பதவி உயர்வு, தொழிலின் நாசுக்குகளை வேகமாகக் கற்றுத்தேர்தல், மனநிறைவுடன் வேலை பார்ப்பது என்ற மூன்றும்தான் முதல் வேலையில் வெற்றி என்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தில் இந்த மூன்றையும் அடைவது எப்படி என்று சொல்லித் தந்துள்ள ஆசிரியர் புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளார்.

முதலாவது பாகம், முதல் வேலையில் வெற்றிபெறத் தேவையான மனப்பாங்கு (ஆட்டிட்டியூட்). இரண்டாவது பாகம், மிகவும் பிராக்டிக்கலான தினசரி அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த டிப்ஸ்கள். மூன்றாவதாக, அலுவலக அரசியலில் பயணிப்பது எப்படி என்பதற்கான அறிவுரைகள். ஏனென்றால், என்னதான் நிறுவனங்கள் செயல்பாட்டின் மூலமே சம்பளம் மற்றும் பணஉயர்வு பெறமுடியும் என்ற கொள்கையைக்கொண்டிருந்தாலும், பார்த்த வேலையை அளவீடு செய்வது மனிதர்கள்தானே. எனவே, வேலையில் வெற்றிபெற கொஞ்சம் அலுவலக அரசியலையும் கையாளத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

வேலையில் வெற்றிபெற மனப்பாங்கு (ஆட்டிட்டியூட்) மட்டுமே முக்கியமானது. பெரும்பாலான வேலைதிறன் வாய்ந்த நபர்கள் தோல்வியைச் சந்திப்பதற்குக் காரணமே மனப்பாங்குதான் என்கிறார் ஆசிரியர். ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த எக்ஸிக்யூட்டிவ் களின் பர்ஃபார்மென்ஸ் ரெவியூ மீட்டிங் பற்றிச் சொன்னாராம்.

நாணயம் லைப்ரரி : முதல் வேலை... விறுவிறு வளர்ச்சி... வெற்றி ரகசியங்கள்!

ஒவ்வொருவரின் ஃபைலாக டேபிளுக்கு வரவர, அவர்களின் குறைநிறைகள், எதில் அவர்கள் தங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேச்சு வந்ததாம். இறுதியாக வந்த ஒரு நபரின் ஃபைல் வந்தவுடனேயே பல சீனியர் மேனேஜர்கள், ஆளோ திறமையில் சூப்பர். ஆனால், மனப்பாங்கோ சுத்த மோசம். காரணம், அவன் ஒரு லூசுப்பயல் (ஜெர்க்) என்றார்களாம். டாப் மேனேஜ்மென்ட் அதிகாரி ஒருவர், ஆள் திறமைசாலி என்கிறீர்கள், உங்களில் யாராவது ஒருவர் அவரை ஷேப்-அப் பண்ணுங்கள் என்று சொல்ல, இவனையெல்லாம் திருத்த பெரிய திறமை ஒண்ணும் வேண்டியதில்லை. லூசுத்தனமாக நடந்துகொள்ளாதே என்று நேரிடையாகச் சொல்லிவிட்டால் போதும் என்றார்களாம். இது ஜெனரல் எலெக்ட்ரிக் ஜாக் வெல்ச் 2001-ல் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் மாணவர்களுக்கு எப்போதும் லூசு ஆகிவிடாதீர்கள் என்ற அறிவுரை சொன்னதை ஆசிரியருக்கு நினைவுபடுத்தியது என்கிறார்.

''கம்பெனியை உயரஉயரக் கொண்டு போக வேண்டும் என்று உற்சாகமாக இருங்கள். ஆனால், எதற்கெடுத்தாலும் புகார் செய்யாதீர்கள். வேலை பார்க்கும் சூழ்நிலையில் பலரும் பலமாதிரிதான் வேலை செய்வார்கள். இதற்காக எதற்கெடுத்தாலும் குறைசொல்லி புகார் பெட்டி ஆக்கிவிடாதீர்கள்.

கஷ்டமோ/சுலபமோ எல்லா வேலையையும் சந்தோஷத்துடன் நான் செய்வேன் என்று முனைப்போடு செயல்படுங்கள். விட்டுக்கொடுத்துச் செல்கிற, உதவி செய்யும் மனப்பாங்குடனும் இருங்கள். எதையுமே ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் இருங்கள். பணிவுடனும் மற்றவர்களை மதித்து நடக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்'' என்கிறார் ஆசிரியர்.

மனப்பாங்குக்கு அடுத்தபடியாக அனுபவஸ்தர்கள் சொல்வது கம்யூனிகேஷன் ஸ்கில்லை என்று சொல்லும் ஆசிரியர், கம்யூனிகேஷன் ஸ்கில்லை எப்படி வளர்த்துக்கொள்வது என்று பல உத்திகளைச் சொல்கிறார். இதற்கு அடுத்தபடியாக வேலை பார்க்கும் இடத்தில் குருவை (மென்டர்) கண்டறிந்துகொள்வது எப்படி என்று சொல்லித்தரும் ஆசிரியர், இறுதியாக அலுவலக அரசியலில் நீச்சலடித்து ஜெயிப்பது எப்படி என்று பல டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார்.

புதிதாக வேலைக்குச் சேரும் அலுவலகத்தின் கலாசாரத்தை முதல்நாளன்றே முழுவதுமாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டியதன் அவசியத்தையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார் இந்தப் புத்தகத்தில்.

கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வேலைக்குப்போகும் காலம் இது. வெற்றிபெற நினைக்கும் அனைவருமே புதிதாக வேலையில் சேரும்முன் வாங்கிப் படிக்கவேண்டிய முக்கியப் புத்தகங்களில் இதுவும் ஒன்று.

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)