ஸ்பெஷல்
Published:Updated:

மதிப்பிற்குரிய மனிதராய் மாறும் சூட்சுமங்கள்!

மதிப்பிற்குரிய மனிதராய் மாறும் சூட்சுமங்கள்!

ந்த வாரம் நாம் அறிமுகப் படுத்தும் புத்தகம் 'அட்மையர்டு - 21 வேய்ஸ் டு டபுள் யுவர் வேல்யூ’ எனும் மார்க் தாம்சன் மற்றும் போனிட்டா தாம்சன் என்ற இருவர் எழுதிய மதிப்பிற்குரிய நபராய் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகத்தை.

மதிப்பிற்குரிய மனிதராய் மாறும் சூட்சுமங்கள்!

'நான் என்னதான் உழைத்தாலும் என்னுடைய பாஸ் என்னை மதிப்பதில்லை. குடும்பத்துக்காக நான் ஓடி ஓடி உழைக்கிறேன்,  என் குடும்பத்தில் யார் என்னை மதிக்கிறார்கள்?’ என்று சொல்பவர்கள் பலர் நம்மிடையே இருக்கின்றனர். பார்த்த வேலைக்கும், உழைத்த உழைப்புக்கும், செய்கிற தியாகத்துக்கும் சரியானதொரு மரியாதையையும் பாராட்டையும் பெறுவது எப்படி என்று யாரும் யோசிப்பதில்லை. பொதுவாக, இந்தப் பாராட்டை யும் மதிப்பையும், நமக்கு யார் முக்கியமானவர்கள் என்று நினைக்கிறோமோ, அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதில் கொடுமை என்னவென்றால் யாரப்பா உன்னை மதிக்க வேண்டும்? யார் உனக்கு முக்கியமானவர்கள் என்று ஒரு கேள்வியை நம்மிடம் யாராவது கேட்டால் அதற்கான சரியான பதிலை நம்மில் பெரும் பாலானோருக்குச் சொல்லத் தெரியாது. நம் ஊரில் நாம் அடிக்கடி சொல்லும் நாலுபேர் என்பவர்களும்கூட இந்த முக்கிய மானவர்களின் பட்டியலில் இருக்கலாம். யார் நம்மை மதிக்க வேண்டும் என்றே நம்மால் அறுதி யிட்டுக் கூறமுடிவதில்லை.ஆனால், இந்த உலகத்தில் யாரும் என்னை மதிப்பதோ, பாராட்டுவதோ இல்லை என்று மட்டும் கேஷ§வலாகச் சொல்லித் திரிகிறோம்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் களான மார்க் மற்றும் போனிட்டா தாம்சன் என்ற இருவரும் முப்பது வருடத்துக்கும் மேலான கார்ப்பரேட் அனுபவம் கொண்டவர்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் எப்படி மதிப்பும், மரியாதையும் மிக்க போற்றப்படும் நபராய் ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை, ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவத்தில் கண்ட நிஜவாழ்க்கையில் செயல்படுத்தகூடிய 21  எளிமை யான யுக்திகளை இந்தப் புத்தகத்தில் விளக்கமாகச் சொல்லியுள்ளார்கள்.

அமெரிக்கா முழுவதும் ஏறக்குறைய 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு முழுமையான ஆய்வின்

மதிப்பிற்குரிய மனிதராய் மாறும் சூட்சுமங்கள்!

முடிவில் ஆசிரியர்கள் கண்டறிந்து சொல்லும் பல விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துவதாய் இருக்கிறது. 'எனக்கும், என் உழைப்புக்கும் மதிப்பில்லை’ என்று சொல்லும் நபர்களிடம் எல்லாம் ஆசிரியர்கள் கேட்ட ஒரு கேள்வி, 'உங்கள் மதிப்பை உயர்த்த உதவும் காரியங்களைச் செய்வதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?’ என்பதுதான். இந்தக் கேள்விக்குப் பதிலும், 'குறிப்பிடும்படி நேரத்தை செலவிடுவதில்லை’ என்பதுதான். இப்படி யார் நமக்கு முக்கியமானவர் என்பதும் நமக்குத் தெரியவில்லை! நாம் மதிக்கப்படுவதற்கான விஷயங்களைச் செய்வதற்கு நேரமும் ஒதுக்குவதில்லை என்றிருந்தால், எப்படி நம்முடைய மதிப்பு கூடும் என்கின்றார்கள் ஆசிரியர்கள்.

நீங்கள் முக்கியப் புள்ளியாகத் திகழ வேண்டும் எனில், நீங்கள் மதிக்கும் நபர்களின் கண் பார்வையில் எது மதிப்புமிக்கது என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் பார்வையில் மதிப்புள்ளது என்பது அவர்கள் பார்வையில் மதிப்புள்ளதாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. உங்களுக்கு மதிப்புமிக்கவர்கள் மதிப்பது எது என்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு ஆசிரியர்களின் ஆய்வில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலானோர்கள் எங்களுக்குத் தெரியாது என்றார் களாம். நாம் செய்வதுதான் முக்கியமானது என்ற கற்பனையில் திளைப்பதால், நமக்கு மற்றவர்கள் மதிப்பது என்ன என்பது தெரியாமலேயே போய்விடுகின்றது.

பெரும்பாலும் மனிதர்கள் மதிப்பது எதை என்று பட்டியலிட்டால் அவை பின்வருவன என்கின்றனர் ஆசிரியர்கள். புத்திக்கூர்மை, அக்கறை, கடின உழைப்பு, நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் தகுதியுடைமை போன்றவை தான் மதிக்கப்படுகிறது. இவற்றை செக்லிஸ்ட்டாக வைத்துக்கொண்டு உங்களுடைய ஒவ்வொரு அசைவிலும் இவை இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள். இதைப் புரிந்து கொள்வதன்மூலம் நீங்கள் உங்கள் மதிப்புமிக்கவர்கள் வாங்க விரும்புவதையே விற்க முடியும். இல்லாவிட்டால் நீங்கள் விற்பது ஒன்றாகவும், உங்கள் மதிப்புமிக்கவர்கள் வாங்க நினைப்பது ஒன்றாகவும் ஆகிவிடும். அதனாலேயே உங்கள் செயல்கள் எதுவுமே போணியாகாது என்கின்றனர்.

பெரும்பாலானவர்கள் வெற்றி பெறுவதில் அவர்களுடைய பிரச்னைகளை விலாவாரி யாகப் புரிந்துவைத்திருப்பதைப் போல், வெற்றி என்றால் என்ன என்ற கேள்விக்கு அவர்களால் விலாவாரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த நிலைக்குக் காரணம்,  நாம் எப்போதுமே அடுத்தவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்காமலேயே பேசித்தீர்க்கிறோம். நம் பேச்சைக் கேட்பவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்று கொஞ்சம் யோசித்தால் இந்த நிலை சுலபமாக மாறிவிடும்.

ஒரு வேலை பார்க்கும் போதே இந்த நிலை என்றால், பத்து வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் நபர்கள் முக்கியத்துவம் பெற முடிவதில்லை. வேலை பளு அவர்களை அழுத்துகிறது. அந்த வேலையை மதிப்பீடு செய்பவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே அவர்கள் வேலை பளுவில் உழல்கின்றனர் என்கின்றனர் ஆசிரியர்கள்.

மதிப்பிற்குரிய மனிதராய் மாறும் சூட்சுமங்கள்!

இன்றைய சூழலில் நாம் செய்யும் வேலையிருந்து அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவது மிகவும் சுலபம். ஏனென்றால் ஒருநாளில், பெரும்பாலான வேளைகளில் தொடர்ந்து நாம் கவனத்தை மாறச்செய்யும் விஷயங்கள் நடுவிலேயே பயணிக்கிறோம் என்கின்றனர்.

இருப்பினும் ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்யும் விஷயம் ஒன்றும் இருக்கிறது. நீங்கள் உங்கள் மதிப்பிற்குரியவர்கள் மதிக்கும் விஷயத்தைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள் எனில், உங்கள் கனவுகள் மற்றும் ஆசைகள் எதையுமே தொடர முடியாது என்பதுதான் அது.  

என்னதான் உண்மையான கருத்துகளைச் சொல்லுங்கள் என்று கேட்டாலும், குறை சொல்வதை நாம் தவிர்க்கவே வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர்கள், குறைசொல்லும் பழக்கம் என்பது ஓர் உப்புப் போட்டு வறுத்த கடலையைச் சாப்பிடுவது போன்றது. ஒரே ஒரு குறையைச் சொல்ல ஆரம்பித்து பல கிளைக் கதைகளையொட்டி ஒரு குற்றச்சாட்டுப் பட்டியலையே படித்து முடித்துவிடுவோம். அதனாலேயே நாம் மதிப்பையும் இழந்துவிடுவோம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

மதிப்பைப் பெறுவதற்காக நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் பலவற்றில் உங்கள் கையிலிருக்கும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் செய்யும் செயலில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதுதான் அது என்கின்றனர் ஆசிரியர்கள். அப்படி செயல்படும்போதுகூட தனிநபராய் நான் சாதித்துவிடுவேன் என்று சொல்லவோ, செய்யவோ முயலாதீர்கள். உலகில் தனியாளாய் எந்த விஷயத்தையும் சாதித்தவர்களே கிடையாது எனலாம்.

அனைவரையும் அனுசரித்து, கூடச்சேர்த்து இவர்களால்தான் இது நடக்கிறது என்று சொல்லிப்பழகுங்கள். உங்கள் மதிப்பு தானே கூடும். வெறும் வாய்ப்பேச்சாய் மட்டும் இல்லாமல், செயலிலும் நீங்கள் மற்றவர்களுடைய ஒத்துழைப்பை மதிப்பதை வெளிக்காட்டுங்கள் என்கின்றனர்.

அதேபோல் அடுத்தவர்கள் உங்களுடைய நிலைப்பாட்டைக் கேட்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஏனென்றால், பெரும்பான்மையான சமயங்களில் மதிப்புக் கூடாமல் போவது நீங்கள் உங்கள் பக்கத்து நியாயத்தை சரிவரச்சொல்லாமல் போவதால் தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.

உங்கள் நட்புவட்டதிலும்கூட நிறைய நண்பர்களைப் பெற்றுத்திகழ்வதைவிட, குறை வான நண்பர்கள் இருந்தாலும் ஆழ்ந்த நட்பைப்  பெற முயற்சிப்பதே நீங்கள் மதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அளிக்கும். மதிப்பும் மரியாதையும் தானாகத் தேடிவரும்படி செய்யவேண்டுமே தவிர, அதனைக் கேட்டுவாங்க முடியாது. எனவே, நாங்கள் சொல்லியுள்ள இந்த வழிவகைகளைக் கடைப்பிடித்தால் மதிப்பும் மரியாதையும் உங்களைத் தேடிவரும் என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

மதிப்பையும் மரியாதையையும் விரும்பாத வர்கள் இந்த உலகத்தில் யாருமில்லை. கொஞ்சம் கடினநடையில் எழுதப்பட்டிருந்தாலும் இந்தப் புத்தகம் தரும் பலன்களைக் கருத்தில்கொள்ளும் போது, இதைப் படிப்பதில் தவறேதுமில்லை எனலாம்.

(நாணயம் டீம்)

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்

வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)