Published:Updated:

நாணயம் லைப்ரரி : நீங்கள் நேர்மையானவரா, ஏமாற்றுக்காரரா?

நாணயம் லைப்ரரி : நீங்கள் நேர்மையானவரா, ஏமாற்றுக்காரரா?

பிரீமியம் ஸ்டோரி

ஒரு மனிதன் நேர்மை ஆனவன்தானா என்று தெரிந்துகொள்ள ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது, நீங்கள் நேர்மையானவர்தானா என அவரிடமே கேட்டுவிடுவது. இந்தக் கேள்விக்கு அவர் 'ஆம்’ என்று சொன்னால், அவர் பித்தலாட்டக்காரர் என்பது உறுதி எனும் கிரௌகோ மார்க்ஸின் பொன்மொழியுடன் ஆரம்பிக்கிறது டேன் எரிலி எழுதிய இந்தப் புத்தகம்.

பள்ளியில் மற்றொரு மாணவனிடமிருந்து பென்சிலை எடுத்துக்கொண்டுவிட்டான் என்பதற்காக டீச்சர் அந்த மாணவனின் அப்பாவிடம் புகார் சொல்ல, அப்பாவோ வீட்டுக்கு வந்தபின் மகனை பின்னியெடுத்துவிட்டாராம். 'என்ன சின்ன புத்தி உனக்கு. எப்படி நீ அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படலாம். என்னிடம் கேட்டிருந்தால் ஆபீஸிலிருந்து ஒன்றுக்கு பத்தாய் பென்சில்களை எடுத்துக்கொண்டு வந்து தந்திருப்பேனே’ என்று கடிந்துகொண்டாராம். மகன் செய்தால் திருட்டு; அப்பன் ஆபீஸிலிருந்து எடுத்தால் அது திருட்டு இல்லையா? என்று கேட்கிறார் ஆசிரியர்.

நேர்மையின்மை என்பது ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும் பிரச்னையா? அல்லது நம்மில் பலரிடம் இருக்கும் பெரும் பிரச்னையா என்று சந்தேகம் எழுப்பும் ஆசிரியர், அது ஒரு சிலரிடம் இருக்கும் பிரச்னை எனில், வேலைக்குச் சேரும் முன்பே அவர்களை நன்கு விசாரித்து, அவர்களுக்கு வேலை தராமல் விட்டிருக்கலாமே, என்கிறார்.  

நாணயம் லைப்ரரி : நீங்கள் நேர்மையானவரா, ஏமாற்றுக்காரரா?

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் கேரி பெக்கர், பகுத்தறிவு பயன்படுத்தப்படும் சூழலில் மனிதன் ஒவ்வொரு சூழ்நிலை யிலும் இருக்கும் லாபநஷ்டங் களை ஆராய்ந்தே குற்றங்கள் செய்கிறான் என்கிறார். குற்றம் செய்து மாட்டிக்கொண்டால் என்ன நஷ்டம் வரும்?, மாட்டிக்கொள்ளாவிட்டால் என்ன லாபம்? என்பதை மனத்தில் வைத்தே மனிதன் பொய்பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறான் என்கிறது கேரி பெக்கரின் சிம்பிள் மாடல் ஆஃப் ரேஷனல் க்ரைம்.

ஆனால், கேரி பெக்கரின் இந்தக் கருத்தை சிலர் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். சத்தியமா நான் யாரையும் ஏமாத்தினது கிடையாது என்பார் என்று சொல்லும் ஆசிரியர், இதை பரிசோதித்துப் பார்க்க நினைத்து மாணவர்களிடையே ஓர் ஆய்வினை நடத்தினாராம்.

நாணயம் லைப்ரரி : நீங்கள் நேர்மையானவரா, ஏமாற்றுக்காரரா?

இருபது கணக்குகளை தந்து இதனை நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் போட்டு முடிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 50 செண்ட் (நம்மூர் கணக்கில் 50 காசு மாதிரி) சன்மானமாகக் கிடைக்கும் என்றாராம்.

முதல் பரிசோதனையில் கணக்குகளைப் போட்டு முடித்தபின் ஒருவரிடம் காண்பிக்க வேண்டும். அவர் சரிபார்த்துச் சொன்னபின், பணம் வழங்கப்படும்.

இரண்டாவது பரிசோதனை யில், கணக்குகளைப் போட்டுவிட்டு, விடைகளை கணக்குப் போட்டவர் தானாகவே சரிபார்க்க வேண்டும். அதற்குபின், அந்த பேப்பரை வகுப்பின் பின்னால் இருக்கும் பேப்பர் ஷ்ரெட்டரில் (துண்டுதுண்டாய் பேப்பரை கிழிக்கும் இயந்திரம்) போட்டுவிட்டு, ஆசிரியரிடம் போய், நான் இத்தனை கணக்குகளை சரியாகப் போட்டேன் என்று சொல்லி, பணம் பெற்றுக்கொள்ள வேண்டும்.  

வகுப்பாசிரியர் சரிபார்த்தபோது சரியாகப் போட்ட கணக்குகளின் எண்ணிக்கையைவிட மாணவர்கள் தானே சரிபார்த்துச் சொன்ன  கணக்கு களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்ததாம். கண்டுபிடிக்க மாட்டார்கள் எனில் பொய் சொல்ல நினைப்பது சகஜம்தானே, என்கிறார் ஆசிரியர்.

சரியான பதிலுக்கான தொகையினை (50 செண்டில் இருந்து ஒரு டாலர், இரண்டு டாலர் என உயர்த்திக்கொண்டே போனால்) என்னவாகிறது என்று சோதித்துப் பார்த்தார் ஆசிரியர். சரியான விடை ஒன்றுக்கு 10 டாலர் என்ற நிலைக்கு கொண்டு சென்ற போது ஏமாற்றுதல் சற்றே குறைய ஆரம்பித்ததாம். காரணம், மனச்சாட்சி உறுத்த ஆரம்பித்ததுதான். ரொம்பத்தான் ஏமாற்று கிறோமோ என்று நினைக்கத் தொடங்கிவிடுகிறார்களாம்.

இதனாலேயே சின்னத் திருட்டுகளும் பொய்யும் சரளமாக நாட்டில் இருக்கிறது. ஆபீஸில் இருந்து ஒரு பென்சில், ஒரு பேனா, ஒரு ஸ்டேப்ளர் என்று வீட்டுக்கு எடுத்துப்போகும்போது  மனத்தில் இருக்கிற திடநிலை ஒரு பாக்ஸ் பேனா, ஒரு ரீம் பேப்பர், ஒரு டஜன் ஸ்டேப்ளர் என்று எடுக்கும்போது இருப்பதில்லை என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : நீங்கள் நேர்மையானவரா, ஏமாற்றுக்காரரா?

இதற்கு அடுத்தபடியாக,  கணக்குப்போட்ட மாணவர் களிடம் பேப்பரை பாதி கிழித்து விட்டு மீதியை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும், முழுதாக கிழித்து பாக்கெட்டில் வைத்துகொள்ளுங்கள் என்றும், ஷ்ரெட்டரில் கிழித்துவிட்டு போய் ஒரு பெட்டியில் உள்ள பணத்தில் உங்களுடைய சரியான கணக்குக்கு எவ்வளவு பணம் வரவேண்டுமோ அதை நீங்களே எடுத்துக்கொள்ளலாம் என்றும் பல்வேறுவிதமான சோதனைகளை செய்து பார்த்தாராம் ஆசிரியர். இந்த மாறுபட்ட கண்டிஷன்களைக் கொண்ட சோதனைகள் எதிலுமே ஏமாற்று பெரிய அளவில் அதிகரிக்கவில்லையாம்.

இப்படி பலவிதமான சோதனைகளை செய்ததில், ஆசிரியர் கண்டுகொண்ட விஷயம் இதுதான். அதாவது,  யாரும் ஒரேயடியாக ஏமாற்ற விரும்புவதில்லை. இமேஜ் கெட்டுவிடக்கூடாது என்பதில்  தீவிரமாக மனிதர்கள் உள்ளனர்.  

நாணயம் லைப்ரரி : நீங்கள் நேர்மையானவரா, ஏமாற்றுக்காரரா?

இந்தப் புத்தகம் முழுவதுமே இதுபோன்ற சுவாரஸ்யமான பல ஆய்வுகளின் முடிவுகளை தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர்.

இறுதியாக, எல்லா மனிதனுக்குமே ஏமாற்றுவதால் கிடைக்கும் லாபமும் வேண்டும்; நம்முடைய நாணயஸ்தன் என்ற இமெஜும் கெட்டுவிடக்கூடாது என்ற இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை இருக்கவே செய்கிறது. கொஞ்சமாக ஏமாற்றும்போது, நாம் கொஞ்சம் பேலன்ஸ் செய்துகொள்ள முடிகிறது. அதுவே, அதிகமாக ஏமாற்றும்போது பலருக்கு மனச்சாட்சி உறுத்துகிறது என்கிறார் ஆசிரியர்.

''என் இருபது கணக்குப் பரிசோதனையில் நிறையபேர் ஒன்றிரண்டு கணக்குகளை கூட்டிச் சொல்லியே பணம் பெற்றனர். ஆனாலும், அவர்கள் அனைவருமே எட்டு அல்லது பத்து கணக்குகள் சரி என்றே சொன்னார்கள்.

16, 18 என்று பெரும்பாலானோர் சொல்லவில்லை. ஆனால், மிகச் சிலர் 20 கணக்குகளும் சரி என்று சொல்லி கிடைக்கிற பணத்தை லவட்டிக்கொண்டு செல்லவும் தவறவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது? கிரிமினல் குணம் கொண்டவர் கள் சமூகத்தில் மிகச் சிலரே இருக்கின்றனர். ஆனாலும், லாப நோக்கம் கருதி சிறிய ஏமாற்றுதல்களைச் செய்ய பலரும் முயல்வதாலேயே சமூகத்தில் பொய் பித்தலாட்டம் மிகவும் மலிந்துகிடப்பதைப் போன்ற தோற்றம் இருக்கிறது'' என்கிறார் ஆசிரியர்.

நமக்குள் இருக்கும் பொய் பித்தலாட்டங்களை களையவும் பொய், பித்தலாட்டக்காரர்களை இனம் கண்டு ஒதுங்கவும் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கலாம்!

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில்
விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு