Published:Updated:

குழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

குழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

நாணயம் லைப்ரரி

இந்த வாரம் நாம் அறிமுகப் படுத்துவது பால் டஃப் எழுதிய 'ஹெள சில்ட்ரன் சக்சீட்’ - குழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்ற புத்தகத்தை. பல குழந்தைகள் தோல்வியைச் சந்திக்கும்போது, சில குழந்தைகள் மட்டும் ஏன் வெற்றி பெறுகின்றன என்கிற கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விடையைச் சொல்லியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் டஃப்.

சிறு குழந்தையாய் நாம் இருக்கும் போது, நமக்குக் கிடைக்கும் அனுபவம்; நாம் வளரும் சூழல் போன்றவை, பெரிய மனிதனாக நாம் வளரும்போது எப்படி செயல்படவைக்கிறது என்பதைத்தான் இந்தப் புத்தகம் எடுத்துச் சொல்கிறது. ஒரு குழந்தையின் வெற்றியானது பரீட்சைகளில் வாங்கும் மதிப்பெண்களை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை என்று சொல்லும் ஆசிரியர், வாழ்வில் வெற்றி பெறத் தேவையான திறமைகளில் தலையாயதாக குறிப்பிடுவது விடாமுயற்சி, புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், கடமை உணர்ச்சி, உற்சாகத்துடன் எதையும் எதிர்கொள்ளும் திறன் மற்றும் சுயகட்டுப்பாடு போன்றவற்றைதான்.

குழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

சிறுவயது அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் எப்படி ஒரு குழந்தை, மனிதனாக மாறும்போது உதவவோ  அல்லது கேடு விளைவிக்கவோ  செய்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விவரித்துள்ளார் ஆசிரியர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை,  பெரியவர்களின் உலகத்துக்குள் படிப்படியாக நுழைய எப்படி தயார்படுத்துகிறார்கள் என்பது பற்றியும், சில பெற்றோர்கள் இப்படி தயார் செய்வதிலிருந்து எப்படி தவறு கிறார்கள் என்பதையும் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தைப் பின்வரும் ஐந்து பகுதிகளாகப் பிரித்துள்ளார் ஆசிரியர்.

1) எப்படி தோல்வியடைவது? (அல்லது தோல்வி அடையாமல் இருப்பது) 2) எப்படி நற்பண்புகளை வளர்ப்பது? 3) எப்படிச் சிந்திப்பது?

4) எப்படி வெற்றி பெறுவது 5) எப்படி சிறந்த பாதையில் செல்வது? இளமையில் வறுமை என்பது குழந்தைகளை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் பலவற்றின் முடிவுகளை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். வேலைதிறன் குறித்த ஓர் ஆய்வில் வாழ்வின் ஆரம்பத்தில் மிகவும் வறுமையில் இருந்தவர்களுக்கும், செழிப்பில் இருந்தவர்களுக்கும் இடையே இருக்கும் வேலைதிறன் வேறுபாடுகள், நீண்ட நாட்கள் (பத்து வருடம்) வறுமையில் உழன்ற குழந்தைகள் மற்றும் குறைந்த நாட்கள் (ஐந்து ஆண்டுகள்) வறுமையில் உழன்ற குழந்தைகள் போன்றவர்களின் இடையேயுள்ள வேலைதிறன் வேறுபாடுகள் போன்ற ஆய்வுகளின் முடிவுகளை தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர்.

18 வயது சிறுவர்கள் நடுவே நடத்தப்பட்ட வேலைதிறனுக்கு முக்கியமாகத் தேவைப்படும் திறனாகிய ஞாபகசக்தி குறித்த ஆய்வில், சிறுவயதில் பத்து ஆண்டுகள் வறுமையில் உழன்றவர்களைவிட ஐந்து ஆண்டுகள் வறுமையில் உழன்றவர்கள் நல்ல ஞாபகத்திறனைக் கொண்டவர்களாக இருந்தார்களாம். 'இந்த ஆய்வின் முடிவுகள் நம்பும்படி இல்லை. பிறவியிலேயே ஞாபகசக்தி அதிகம் கொண்டவர்களாக இருக்கலாமே? அவர்கள் அந்த ஐந்து வருட வறுமைக் குழுவில் இருந்தால், என்ன முடிவுகள் வரும்?’ என்று நீங்கள் கேட்கலாம்.

குழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

இந்தக் கேள்வியை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துபார்த்ததில் ஒரே வறுமை நிலை மற்றும் காலகட்டம் இருக்கும் குழந்தைகள் நடுவேயும்கூட ஞாபகத்திறன் வித்தியாசம் இருந்தது. ஆனால், ஐந்து வருடமே வறுமை யில் உழன்ற குழந்தைகளின் நடுவில் ஏன் இந்த வித்தியாசம் வருகிறது என்று ஆராய்ந்தபோது, வறுமையில் உழன்றாலும், குழந்தைகள் வேலை சுமையை சிறுவயதில் சுமந்திருந்தால் ஞாபகசக்தி குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர் என்று சொல்லியுள்ளார் ஆசிரியர். எனவே, வறுமையில் உழன்றாலுமே உடலால் செய்யவேண்டிய பணிகளைக் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். இதைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு முழுமனிதனாக அவர்களுடைய வேலைதிறன் பாதிப்படையாது என்கின்றார் ஆசிரியர். வேறு வழியே இல்லாமல் குழந்தைகளிடம் வேலை  தரவேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்தக் குழந்தைகளிடம் சில வார்த்தை களை  பரிவாகவும், கனிவாகவும் பேசுவதன் மூலம் அவர்கள் அந்த வகைப் பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் தடுக்கலாம் என்கிறார் ஆசிரியர்.

குழந்தைப் பருவத்தில் தரப்படும் அதிக உடல் உழைப்பு அவன் பெரியவனானதும் வேலைதிறனில் பாதிப்பைத் தருகிறது என்றால், பதின்பருவத்தின் பிரச்னைகள் வேறுமாதிரியானவை என்கிறார் ஆசிரியர். மனிதனின் வாழ்வில் மூன்று நிலைகளில் வெவ்வேறு மாதிரியான சூழ்நிலைகளை அவன் சந்திக்கிறான். சிறுகுழந்தையாக இருக்கும்போது மனத்தில் நிறையவே பயம் இருக்கிறது. அதுவே, பதின் பருவத்தில் நுழையும்போது துணிச்சலும், செய்துதான் பார்ப்போமே என்ற தைரியமும் பீறிடுகிறது. முழுமனிதனாக மாறும்போது உலகச் சூழலுக்கு ஏற்றாற்போல் பொறுப்பாக நடக்கும் பக்குவம் வருகிறது. பக்குவம் இல்லாமல் தைரியம் பீறிடும் பதின் பருவத்தில்தான் நிறைய சிக்கல்களைக் குழந்தைகள் சந்திக்கின்றன என்கிறார் ஆசிரியர்.

சிறுவயதில் குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்க்காதீர்கள். ரொம்பவுமே அரவணைப்பு காட்டாதீர்கள். அப்படி செய்தால், பின்னால் பெரிய மனிதர்களான பின்னர் அவர்களுக்கு நீங்கள் எப்போதுமே துணைபோக வேண்டியிருக்கும் என்ற கருத்துக்கு எதிரான ஆய்வு முடிவுகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கும் ஆசிரியர், மிகவும் கவனிப்புடன் வளர்க்கப்பட்ட குழந்தைகளே மிகச் சுலபமாக உலக நடைமுறைக்குத் தங்களை மாற்றிக்கொள்கின்றன. கொஞ்சம் கேட்பாரற்று / கவனிப்பற்று இருந்த குழந்தைகளால் அந்த அளவுக்கு சுலபமாய் உலக நடைமுறைக்குத் தங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை என்கிறார் ஆசிரியர். குணாதிசயம் என்பது திராணி, சுயக்கட்டுப்பாடு, ஆர்வம், பொதுவான புத்திசாலித்தனம், நன்றியுணர்வு, உற்சாகம், ஆர்வம் ஆகிய ஏழின் கலவைதான் என்று சொல்லும் ஆசிரியர், இவற்றை சரியான விகிதாசாரத்தில் குழந்தைகளுக்குள் உருவாக்குவது பெற்றோர்களின் கடமை என்கிறார்.

ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. குழந்தைகள் எப்படி வெற்றிகரமான பெரியவனாக/பெரியவளாக உருவெடுக்கிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதற்கான காரணிகளையும் தெரிந்துகொண்டு அதிகம் அலட்டிக் கொள்ளாமல் திட்டமிட்டு நீண்டநாள் அடிப்படையில் செயல்பட்டால் சுலபத்தில் அவர்களை வெற்றிகரமாகத் திகழச் செய்யலாம் என்பதுதான் ஆசிரியரின் வாதம்.

மகனோ, மகளோ இருக்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது!

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில்
விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)

அடுத்த கட்டுரைக்கு