Published:Updated:

நாணயம் லைப்ரரி : அதிகம் பாசிட்டிவ்வாக இருப்பது டேஞ்சர்!

நாணயம் லைப்ரரி : அதிகம் பாசிட்டிவ்வாக இருப்பது டேஞ்சர்!

நாணயம் லைப்ரரி : அதிகம் பாசிட்டிவ்வாக இருப்பது டேஞ்சர்!

நாணயம் லைப்ரரி : அதிகம் பாசிட்டிவ்வாக இருப்பது டேஞ்சர்!

Published:Updated:

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ஆலிவர் பர்க்மன் எழுதிய 'தி ஆன்ட்டிடோட்’ எனும் பாசிட்டிவ் எண்ணங்களில் திளைக்க முடியாத மனிதர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் மாற்றுமருந்து என்னும் புத்தகத்தைத்தான். சாதாரண புத்தகங்களிலிருந்து சற்றே மாறுபட்டு முன்னுரை, அறிமுக உரை என எதுவும் இல்லாமல் நேரடியாக அத்தியாயம் ஒன்று என்று ஆரம்பித்துள்ள வித்தியாசமான ஸ்டைலைப் போலவே, வித்தியாசமான, ஆனால், நிஜத்தில் உதவுகிற கருத்துகளைச் சொல்லி இருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ஆலிவர் பர்க்மன்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பது குறித்த சிறப்புக் கூட்டம் நடக்கும் ஸ்டேடியத்தில் பங்குபெறும் 15,000 பேரில் ஒருவராக ஆசிரியர் அமர்ந்துள்ள இடத்தில் இருந்து விவரிக்க ஆரம்பிக்கிறார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றுபவர் 80 வயது நபர். 35 செல்ஃப் ஹெல்ப் புத்தகங்களை எழுதியுள்ள டாக்டர் ராபர்ட் ஹெச் ஸ்கல்லர். எடுத்த எடுப்பிலேயே, நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள், இல்லையா? என்று பேச்சில் ஏற்ற இறக்கத்துடனும், வார்த்தைகளுக்கு இடையே சரியான இடைவெளியுடனும் கேட்க, மொத்தக் கூட்டமுமே 'ஆமாம், ஆமாம்’ என்று சப்தமிட்டதாம் - இந்தப் புத்தக ஆசிரியரைத் தவிர!

நாணயம் லைப்ரரி : அதிகம் பாசிட்டிவ்வாக இருப்பது டேஞ்சர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உங்கள் வாழ்க்கையில் 'முடியாது’  என்ற வார்த்தையை அடியோடு வெட்டி வீசிவிடுங்கள்’ என்றாராம் பேச்சாளர். 'உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். பெரியதாக கனவு காணுங்கள், சாதியுங்கள். பாசிட்டிவ்வாக நினையுங்கள்; வெற்றி உங்களைத் தொடர்ந்து வரும்’ என்றெல்லாம் பேச்சாளர் அடுக்கிக்கொண்டே போக, ஆசிரியர் அதெப்படி பாசிட்டிவ் நினைப்புகள் வெற்றியைக் கொண்டுவரும் என்று கேட்க நினைத்தாராம். கேட்டால், இதோ பாருங்கள், இதுதான் நெகட்டிவ் நினைப்பு என்று பேச்சாளர், ஆசிரியரை ஓர் உதாரணமாக காண்பித்துவிடும் வாய்ப்பு இருப்பதால் அதை தவிர்த்தேன் என்கிறார்.

இந்தப் பேச்சாளர் மோட்டிவேஷன் தொழிலைத் தவிர, சர்ச் ஒன்றினை நிறுவி நிர்வகித்தும் வருகிறார். இதுபோன்ற பேச்சாளர்கள் மற்றவர்களை மோட்டிவேட் செய்கிறார்களோ இல்லையோ, அவர்கள் மோட்டிவேட் ஆகிறார்கள் என்று சாடும் ஆசிரியர், இவர்களுடன் மேடையில் அமர்ந்து பெரும் உலகத் தலைவர்களும் உரையாற்றுகிறார்கள். இதெல்லாம் இந்த மோட்டிவேஷன் குருக்களுக்கு ஒரு விளம்பரமாக இருக்கிறதே தவிர, சாமான்யனுக்கு பிரயோஜனமாக இருப்பதில்லை.  ஒவ்வொரு பேச்சாளர் மேடையில் தோன்றும்போதும்,  பேச்சைக் கேட்கும்போதும் கேட்பவர்களுக்கு மனது உற்சாகத்தின் புது உயரங்களுக்கு போவதைத் தவிர, வேறு ஒரு பிரயோஜனமும் கிடையாது என்கிறார் ஆசிரியர்.  

கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ஸ்கல்லர், 'நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது சந்திரனுக்கு மனிதன் போக முடியாது என்றார்கள், மனிதனின் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றார்கள். இப்போதைய நிலை என்ன? முடியாது என்ற விஷயமே இல்லை’ என்று முழங்கினாராம். 'நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். கஷ்டகாலம் தொடர்ந்து இருக்கப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படி நினைத்தால், கஷ்டப்படும் மனிதர்கள்தான் தொடர்ந்து கஷ்டத்தில் இருப்பார்கள்’ என உணர்ச்சியைத் தூண்டி புல்லரிக்க வைக்கும் வாதங்களையும் வார்த்தைகளையும் உதிர்த்துக்கொண்டிருந்தாராம் பேச்சாளர். அவரைத் தொடர்ந்து பலரும் பல செய்திகளைச் சொல்ல, வாணவேடிக்கையுடன் கூட்டம் ஸ்கல்லருக்கு நம்பிக்கை தந்த வெற்றியாக முடிவடைந்தது என்று நக்கலடித்துள்ளார் ஆசிரியர்.

என்ன இது, ஒரு மோட்டிவேஷன் குருவைப் பற்றி இப்படி நேரடி தாக்குதலாக இருக்கிறதே என்று மேலும் படித்தால், சில மாதங்களுக்குப் பின்னால் ஸ்கல்லர் நடத்தி வந்த சர்ச் திவால் பெட்டிஷனை ஃபைல் செய்திருந்தது என பேப்பரில் செய்தியாக வந்தது என்று சொல்லும் ஆசிரியர், ஸ்கல்லர் எப்படி அவரது வேலையில் அவர் மற்றவர்களுக்கு சொன்ன உபதேசத்தையெல்லாம்  கோட்டைவிட்டார் என்று கேட்கிறார்.

நாணயம் லைப்ரரி : அதிகம் பாசிட்டிவ்வாக இருப்பது டேஞ்சர்!

பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது. எல்லாரும் நன்றாக சம்பாதிக்கிறோம், செலவழிக்கிறோம்.  ஆனால், மகிழ்ச்சி மட்டும் இல்லை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கும் ஆசிரியர், அப்படியென்றால் பொருளாதார வளர்ச்சி நமக்கு நல்ல கல்வியையோ, திறமையையோ தரவில்லை. காசைத் தந்துள்ளது. கல்வியும், சூப்பர் திறமையும் நமக்கு இருந்தால் மகிழ்ச்சியும் வரத்தானே செய்யும். வெறுமனே காசு மட்டும் வந்துசேர்வதால்தான் மகிழ்ச்சியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் ஆசிரியர்.

இங்கேதான் சுயஉதவிப் புத்தகங்கள் பெரும் ஏமாற்று வேலையைச் செய்கின்றன. மனிதன் இதை உணர்ந்துகொண்டு, புத்தகத்தை வாங்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை 18 மாதங்களுக்கு கடைப்பிடித்தால் வெற்றிவரும் என்கின்றன. அதற்குள் தேவையான புத்தகம் விற்றுவிடும் இல்லையா? மனிதனின் பிரச்னைகளுக்கு 12 ராசிக்கும் ஒரே புத்தகம் (ஒரே பலன்!) போன்ற ரெடிமேடு சொல்யூஷன்கள் கிடையாது என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் உள்ளவன். ஒரே பேக்கேஜிங்கில் அனைவருக்கும் அறிவுரை சொல்ல முடியாது என்று வாதம் செய்கிறார். இதையெல்லாம் மழுங்கடிக்கிறாற்போல் வெற்றி பெற்றவர்களின் ஏழு குணங்கள், நண்பர்களைப் பெறுவது எப்படி, தொழிலாளர்களை பாராட்டுவது எப்படி என்றெல்லாம் புத்தகம் எழுதியும் உரை நிகழ்த்தியும் ஒரு கூட்டம் காசு பார்த்துக்கொண்டிருக்கிறது என்று சாடும் ஆசிரியர், ஒரு புத்தகம் நல்ல தொழிலாளிகளுக்கு சிறிய மீன் பொம்மை கொடுத்தால் அவர் மிகவும் விசுவாசத்துடன் இருப்பார் என்ற கருத்தைச் சொல்லி விற்பனையின் உச்சத்தில் இருந்ததை கேலி செய்கிறார்.

நாணயம் லைப்ரரி : அதிகம் பாசிட்டிவ்வாக இருப்பது டேஞ்சர்!

சுயமுன்னேற்றக் கருத்துகளைப் பரப்பும் குருக்கள் சொல்வது எதுவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயங்கள் இல்லை. உலக நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் எவை என்ற சர்வேயை பார்த்தால் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்த சுயமுன்னேற்றம் குறித்த புத்தகங்கள் பெரிய அளவில் விற்பனையாவதே இல்லை. இதிலிருந்து தெரிவது என்ன என்று கேட்கும் ஆசிரியர், மகிழ்ச்சியைக் கூட்டுகிறோம் என்று சொல்லும் இந்த தொழில் செழிக்கும் நாடுகளில் மகிழ்ச்சி அழிந்துகொண்டல்லவா இருக்கிறது என்கிறார். என்ன நடந்தாலும் பாசிட்டிவ்வாக இருப்பது என்பது ரொம்பவுமே அபாயகரமான நிலைமையில் கொண்டுபோய் விட்டுவிடும் என்கிறார் ஆசிரியர்.

'பாசிட்டிவும் வேண்டாம், நெகட்டிவும் வேண்டாம். சிந்தித்து சூழ்நிலைக்கு ஏற்ப செயலாற்றி மகிழ்ச்சியாக இருங்கள் என்கிறார் ஆசிரியர். சீனக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் 'சைனீஸ் பிங்கர் ட்ராப்’ என்ற ஒரு விளையாட்டு உண்டு. விரலை ஒரு குழலினுள்ளே விட்டு வெளியே எடுக்க வேண்டும். விரலை விட்டவுடன் விரலை அந்த குழல் பிடித்துக்கொள்ளும். எந்த அளவுக்கு வேகமாக வெளியே இழுக்க குழந்தைகள் முயற்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு கெட்டியாக பிடிக்க ஆரம்பிக்கும் வகையில் அந்தக் குழல் வடிவமைக்கப்பட்டிருக்கும். மிகவும் நேர்த்தியாகவும் அலட்டிக்கொள்ளாமலும் மெதுவாக வெளியில் எடுப்பதிலேயே அந்த விளையாட்டில் வெற்றி பெற முடியும். அதேபோல்தான் வாழ்க்கையும். ஒரு பாதையை கெட்டியாக பிடித்தால், அதைவிட்டு வெளியே வருவதே  சிரமமாகிவிடும் என்கிறார் ஆசிரியர்.

நம் வாழ்வில் நாம் சென்று சேரவேண்டிய எல்லையாக வைத்துக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியை அடைவது எப்படி என்பதை தெளிவாய்ச் சொல்லியிருக்கும் இந்த புத்தகத்தை  அனைவரும் படிக்கலாம்.

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism