Published:Updated:

இ-காமர்ஸும் இன்றைய நுகர்வோர் சந்தையும்!

சித்தார்த்தன் சுந்தரம்

நாணயம் லைப்ரரி

ஆன்லைன் வர்த்தகம் பற்றி சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் 'The Mouse Charmers: Digital Pioneers of India'. . அனுராதா கோயல் என்பவர் எழுதிய இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருப்பவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதுமைகளைக் கொண்டுவர காரணமாக இருந்த சாம் பிட்ரோடா (Sam Pitroda) இன்டர்நெட் வருகையால் உருவான 'ஆன்லைன்’ வர்த்தகம் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நுகர்வோர்களையும், அவர்களின் பொருட்கள் வாங்கும் முறைகளையும் எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பதை அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறது இந்தப் புத்தகம்.

''ஒருகாலத்தில் 'ஸ்நேக் சாமர்ஸ்’ (Snake Charmers),அதாவது, 'பாம்பாட்டிகளின் தேசம்’ என்று சொல்லப்பட்ட நம் இந்திய நாடு, இன்றைக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுநர்களின் புண்ணியத்தில் 'மௌஸ் சாமர்ஸ்’(Mouse Charmers) என பெருமையாகச் சொல்கிற அளவுக்கு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆன்லைன் தொழில்முனைவோர் களையும், நுகர்வோர்களையும் கொண்ட நாடாக வளர்ந்து வருகிறது'' என இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கான காரணத்தைச் சொல்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் அனுராதா கோயல்.

சுமார் 120 கோடி மக்களுக்கு மேல் உள்ள இந்தியாவில் சுமார் 24 கோடி பேர் இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் 10 கோடி பேர் மொபைல்போன் மூலம் இணையத்துடன் தொடர்பு கொள்கிறார்கள். இன்றைக்கு 'இ-காமர்ஸ்’ சந்தையின் மொத்த மதிப்பு சுமார் ரூ.63,000 கோடி. இதில் 71 சதவிகித வருமானத்தை ஈட்டுவது 'ஆன்லைன்’ டிராவல் துறை. ஆரம்பத்தில் விமான, ரயில் டிக்கெட்டுகள் விற்பதில் ஆரம்பித்த 'இ-காமர்ஸ்’ நிறுவனங்கள் இன்றைக்கு ஏறக்குறைய அனைத்துப் பொருட்களையும் நமது வீட்டில்/அலுவலகத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே வாங்கக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இ-காமர்ஸும் இன்றைய நுகர்வோர் சந்தையும்!

பொதுவாக, நுகர்வோர்களாகிய நமக்கு சில பொருட்களைத் தொட்டுப் பார்த்து, பேரம் பேசி வாங்கினால்தான் வாங்கிய மாதிரி இருக்கும். ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்க்கையில், ஒவ்வொரு பொருளையும் 'தொட்டுப் பார்த்து’ வாங்கிற அளவுக்கு பலருக்கு நேரமில்லை.  சிலருக்கு கடைக்குப் போய் வீட்டுக்குத் தேவையான பலசரக்கு வாங்கக்கூட நேரமில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு உதவவே வந்திருக்கின்றன பல 'ஆன்லைன்’ நிறுவனங்கள். இன்றைக்கு தங்க நகைகள், வைரம், புத்தகங்கள், காய்கறி, பலசரக்கு என அனைத்துப் பொருட் களையும் 'ஒரு க்ளிக்’கில் வாங்கிவிட முடியும்.  

இந்த மாற்றத்துக்கான காரணங்கள் என்னென்ன என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் அனுராதா.

''இணையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மொபைல் போன் உபயோகத்தின் அதிகரிப்பு, கைவசம் அதிகப் பணம் வைத்திருக்கும் இளைய சமுதாயம், பலசரக்குக் கடைகள் மற்றும் பாரம்பரியமான கடைகளுக்கு ஒருமாற்றாக 'ஆன்லைன்’ வர்த்தகத்தை மக்கள் ஏற்றுக்கொண்டது, பலமுறைகளில் பணம் செலுத்தும் வசதி (குறிப்பாக கேஷ் ஆன் டெலிவரி), வாங்கிய பொருட்கள் பிடிக்கவில்லையெனில், அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதி, சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களை ஒரு பொருளோ அல்லது சேவையோ சென்றடைய ஆகும் நேரம் மற்றும் செலவுடன் ஒப்பிடும்போது தயாரிப்பாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் உதவியாக இருப்பது என இந்தத் துறையின் வளர்ச்சிக்கு பல காரணங்களைச் சொல்ல முடியும்'' என்கிறார்.

ஆன்லைன் வர்த்தகத் துறையில் உள்ள நிறுவனங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார் ஆசிரியர்.  

1. வர்த்தகம் (உதாரணம், ஃப்ளிப்கார்ட், மேக் மை ட்ரிப், பிக் பாஸ்கெட், கராட்லேன் போன்றவை)

2. உள்ளடக்கம் (உதாரணம், ஷொமேட்டோ, கேம்ஸ்2வின், இமேஜஸ் பஜார், சாட் வித் லஷ்மி போன்றவை)

3. தொடர்பு (உதாரணம், ஷாதி, காமன் ஃப்ளோர் போன்றவை)

இ-காமர்ஸும் இன்றைய நுகர்வோர் சந்தையும்!

இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிவரும் சில இணையதளங்கள் பற்றி விரிவாகச் சொல்கிறார் ஆசிரியர். இந்தியாவின் அமேசான் என அறியப்படுகிற ஃப்ளிப்கார்ட் முதலில் புத்தகங்களை மட்டுமே விற்றுவந்தது. ஆனால், நாளடைவில் எலெக்ட்ரானிக்ஸ், மொபைல் போன், குழந்தைகளுக்கான பொருட்கள், ரெடிமேடு துணிகள் என பல பொருட்களை விற்க ஆரம்பித்தது. இதன் வெற்றிக்குக் காரணம், குறைந்த விலை, அற்புதமான வாடிக்கையாளர் சேவை. முதன்முதலில் 'கேஷ் ஆன் டெலிவரி’யை அறிமுகப்படுத்திய வலைதளம் இதுதான். இன்றைக்கு இந்த வலைதளம் மூலம் விற்பனையாகும் பொருட்களில் 60-70 சதவிகிதமான பொருட்கள் இந்த முறையில்தான் விற்கப்பட்டு வருகிறது.

இன்றைக்கு நீங்கள் எங்காவது ஒரு ஊருக்கு செல்கிறீர்கள் எனில், அங்கே ஹோட்டலைத் தேடி அலைய வேண்டியதில்லை. அந்த ஊரில் எங்கு சாப்பிடுவது, நமக்கேற்ற உணவு எங்கு கிடைக்கும் என்பதை நொடிப் பொழுதில் சொல்கிறது ஜுமோட்டோ.காம் (zomoto.com). 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைதளத்தில் 19 நாடுகளில் 2,32,800 ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கும். ஹோட்டல்கள் இருக்கும் இடம், பரிமாறப்படும் உணவுவகைகள் மற்ற வசதிகள், இருவர் சாப்பிட ஆகும் செலவு, அங்கு ஏற்கெனவே சாப்பிட்ட வாடிக்கையாளர்களின் கருத்து என பல விஷயங்கள் உள்ளன. இந்த வலைதளத்தில் பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 16 லட்சம். ஒரு மாதத்துக்கு இந்த வலைதளத்துக்கு 'விசிட்’ அடிப்பவர்களின் எண்ணிக்கை 6 கோடி. இதை ஆரம்பித்தவர்களில் ஒருவர் பங்கஜ் செட்டா, தனது அலுவலக கேன்டீனில் மதிய உணவுக்காக வரிசையில் நின்றபோது, இந்த வலைதளத்துக்கான ஐடியா அவருக்கு வந்ததாம்.  

திருமணத்துக்குப் பெண்ணையும், பையனையும் தேர்ந்தெடுக்கும் வலைதளங்கள் இன்றைக்கு பல இருந்தாலும், இதன் முன்னோடி 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஷாதி.காம். இதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடி. இதன் மூலம் நடந்திருக்கும் திருமணங்கள் எண்ணிக்கை சுமார் 20 லட்சம்.

இ-காமர்ஸும் இன்றைய நுகர்வோர் சந்தையும்!

'காரட்லேன் டாட்காம்’ (CaratLane.com) என்கிற வலைதளத்தில் நகையை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர் அதை வீட்டிலிருந்தபடியே 'ட்ரையல்’ பார்க்க 'ட்ரை அட் ஹோம்’ என்கிற ஒருவசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் ஐந்து பொருட்கள் வரை வீட்டுக்கு  வரவழைத்து, போட்டுப்பார்த்து அதற்குப்பிறகு ஆர்டர் செய்யலாம்.

வீடு, மனை போன்றவற்றை வாங்கவும் தனித்தனி வலைதளங்கள் வந்துவிட்டன. ஆக, இனிவரும் ஆண்டுகளில் 'ஆன்லைன்’ இல்லை என்றால் வாழ்வே செயலிழந்து 'ஆஃப்’ ஆகிவிடக்கூடும்.

'இ-காமர்ஸ்’ நிறுவனங்களின் இன்றைய செயல்பாடுகள் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் அவசியம் ஒருமுறை படிக்கலாம்.

  (குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடும்)